ரத்த மகுடம்-98



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

சாளுக்கிய மன்னரை சுமந்து வந்த அந்தப் புரவி, வனத்துக்குள் நுழையவும் கூகை ஒருமுறை அலறவும் சரியாக இருந்தது.மெல்ல தன் வலது கையால் குதிரையின் வயிற்றைத் தட்டிக் கொடுத்தார். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக அப்புரவி தன் வேகத்தைக் குறைத்து பழக்கப்பட்ட ஒற்றையடிப் பாதைக்குள் நுழைந்தது.
செடிகளையும் மரங்களையும் ஊடுருவியபடி தன் பயணத்தைத் தொடர்ந்தது.கால் நாழிகை பயணத்துக்குப் பின் மீண்டும் கோட்டான்கள் இருமுறைக் கூவின. அரை நாழிகை கடந்ததும் ஒரு சிறிய வெட்டவெளியை அப்புரவி அடைந்தபோது மூன்று முறை கூகை அலறியது. புரவியை விட்டு இறங்கிய விக்கிரமாதித்தர், அதன் நெற்றியை முத்தமிட்டு தட்டிக் கொடுத்தார்.

தலையை அசைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அக்குதிரை, புற்களை மேயத் தொடங்கியது.நிதானமாக வெட்டவெளியைக் கடந்து தென்பட்ட பாறைகளை நோக்கி சாளுக்கிய மன்னர் நடந்தார்.ஐந்து முறை கோட்டான்கள் அலறி முடித்ததும் பாறை இடுக்கில் இருந்து தீ பந்தத்துடன் சாளுக்கிய வீரன் ஒருவன் வெளிப்பட்டு மன்னரை வணங்கினான்.‘‘சந்தேகப்படும்படி யாரேனும் இந்தப் பக்கம் நடமாடினார்களா..?’’‘‘இல்லை மன்னா...’’‘‘பொருள்..?’’

‘‘பலத்த பாதுகாப்புடன் நீங்கள் வைத்த இடத்திலேயே இருக்கிறது...’’புருவத்தை உயர்த்தி அந்த வீரனை ஏறிட்டார் விக்கிரமாதித்தர்.‘‘உறுதியாகத் தெரியும் மன்னா... வனம் முழுக்க நம் வீரர்கள் கண்ணும் கருத்துமாக காவல் காக்கிறார்கள்... அவர்களை மீறி சிற்றெறும்புகள் கூட நுழைய முடியாது... உங்கள் வருகையைக் கூட அவர்கள்தான் கோட்டான்களின் அலறல் வழியே எனக்குத் தெரியப்படுத்தினார்கள்...’’தன் வலக்கரத்தை நீட்டினார் சாளுக்கிய மன்னர்.தன்னிடமிருந்த தீ பந்தத்தை அவரிடம் கொடுத்துவிட்டு விலகி நின்றான் அந்த காவல் வீரன்.

பந்தத்தைப் பிடித்தபடி பாறை இடுக்கில் நுழைந்த விக்கிரமாதித்தர், பத்தடிக்கு பின் இடதுபக்கம் திரும்பினார்.பாறை ஒன்று அகற்றப்பட்டிருந்தது. பந்தத்தின் ஒளியில் இறங்குவதற்கு ஏதுவாக படிக்கெட்டுகள் குடையப்பட்டிருந்தன. ‘‘இறங்கி நேராகச் செல்லுங்கள்... எங்கும் திரும்ப வேண்டாம்... முடியும் இடத்திலேயே சிவகாமி அடைக்கப்பட்டிருக்கிறாள்!’’ அமைதியாகச் சொன்னான் பாண்டிய இளவரசன்
கோச்சடையன் இரணதீரன்.

‘‘எங்களுடன் நீங்கள் வரவில்லையா..?’’ சாளுக்கிய இளவரசனான விநயாதித்தனின் குரலில் ஆச்சர்யம் வழிந்தது.‘‘அவசியமில்லை...’’‘‘ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா..?’’ ராமபுண்ய வல்லபர் தன் புருவத்தை உயர்த்தினார்.‘‘பெரியதாக ஒன்றுமில்லை சாளுக்கிய போர் அமைச்சரே! நீங்கள் இருவரும் தனிமையில் சிவகாமியுடன் உறவாடுவீர்கள்... இடையில் நான் எதற்கு..?’’
‘‘இல்லை... பாண்டிய மன்னர்...’’ இழுத்தான் விநயாதித்தன்.

‘‘தந்தைதான் என்னை உடன் இருக்க வேண்டாம் என்றார்...’’ பதிலை எதிர்பார்க்காமல் இரணதீரன் சென்றான்.
‘‘குருதேவா...’’‘‘நேரமில்லை... வா...’’ பாதாள சிறையின் படிக்கெட்டுகளில் ராமபுண்ய வல்லபர் இறங்கத் தொடங்கினார். தரையைத் தொட்டதும் சொன்னார். ‘‘எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது விநயாதித்தா... நம்முடன் விளையாடுகிறான் கரிகாலன்..!’’
‘‘கரிகாலா... தாயம் விளையாடலாமா..?’’தன் அத்தையான பாண்டிய அரசியுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த கரிகாலன் துள்ளி எழுந்தான். ‘‘இந்த
நேரத்திலா மன்னா...’’

‘‘ஆட்டத்துக்கு நேரம் காலம் இருக்கிறதா என்ன..?’’
கேட்ட பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மரை உற்றுப் பார்த்தான்.
மன்னரின் நயனங்கள் நகைத்தன.பதிலுக்கு தன் கண்களால் சிரித்தான் கரிகாலன். ‘‘இரவில் தாயம் ஆடக் கூடாது என்பார்களே..?’’
‘‘அது மக்களுக்கு... மன்னர்களுக்கல்ல!’’

‘‘நான் மன்னன் இல்லையே மன்னா... பல்லவர்களின்
உபசேனாதிபதிதானே..?’’
‘‘ஆனால், சோழர்களின் பிற்கால மன்னனாயிற்றே!’’
‘‘தேசமற்ற தேசத்தின் மன்னன்!’’

‘‘இல்லை... தேசத்தை விரிவுப்படுத்தப் போகும் மன்னன்! உன் குருதியின் ஆட்டம் என்னவென்று பார்க்க ஆசைப்படுகிறேன்...’’ என்ற அரிகேசரி மாறவர்மர், தன் மனைவியை நோக்கினார். ‘‘உன் பிறந்த வீட்டுப் பெருமையை நாளை பேசிக் கொள்... இன்றிரவு உன் சகோதரனின் மகன் என்னுடன் விளையாடட்டும்!’’‘‘என்னிடம் எதற்கு அனுமதி..? மாமனாயிற்று... மருமகனாயிற்று...’’ என்ற பாண்டிய அரசி, தன் கணவரின் பார்வையைப் புரிந்து கொண்டு, ‘‘எனக்கும் உறக்கம் வருகிறது...’’ என்றபடி நகர்ந்தாள்.அத்தை செல்வதையே இமைக்காமல் பார்த்த கரிகாலன், பாண்டிய மன்னரை நோக்கித் திரும்பினான். ‘‘கேளுங்கள் மன்னா...’’

‘‘எதைக் கேட்க வேண்டும்..?’’‘‘அதை தாங்கள்தான் சொல்ல வேண்டும்! தனிமையில் என்னுடன் உரையாடத்தானே அத்தையை அகற்றினீர்கள்..?’’
வாஞ்சையுடன் அவன் தோளில் கைபோட்டார் அரிகேசரி மாறவர்மர். ‘‘எதிர்பார்த்ததை விட புத்திசாலியாக இருக்கிறாய்... உண்மையிலேயே தாயம் ஆடத்தான் அழைத்தேன்...’’கண்கொட்டாமல் அவரைப் பார்த்தான் கரிகாலன்.தன்னை மீறி புன்னகைத்தார் அரிகேசரி மாறவர்மர்.

‘‘விளையாடிக் கொண்டே பேசலாம், வா!’’
தாங்கியில் தீ பந்தத்தை செருகிய விக்கிரமாதித்தர், சில கணங்கள் அங்கேயே நின்றார். தன் பார்வையை சுழற்றினார்.
குறிப்பிட்ட இடைவெளியில் பந்தங்கள் எரிந்துக் கொண்டிருந்தன. கூர்மையான முனைகள் மழுங்கடிக்கப்பட்டு பாறைகள் குடையப்பட்டிருந்தன.
தன் முன் நீண்ட பாதையைப் பார்த்தார். இரு பக்கங்களிலும் அறைகள் போல் ஆங்காங்கே பாறைகள் உள்வாங்கியிருந்தன. இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்டிருந்த கதவுகள் அவற்றை மூடியிருந்தன. ஆனால், அவைகள் காலியாக இருந்தன.

பலத்த சிந்தனையுடன் நேராக நடந்தார். பாதையின் முடிவில் இருந்த அறையை நெருங்கினார். அறைக்குள் எரிந்து கொண்டிருந்த பந்தங்களின் ஒளியில் ஒரு பெண் தரையில் குப்புறப்படுத்திருப்பது தெரிந்தது.கம்பிகளைப் பிடித்தபடி உற்றுக் கவனித்தார்.‘‘ஒவ்வொரு வேளையும் இந்த குளிகையில் ஒன்றை உணவில் கலந்து கொடுங்கள். அப்பொழுதுதான் பாதி மயக்கத்திலேயே இவர் இருப்பார். உறக்கமும் எந்நேரமும் இவரை ஆக்கிரமிக்கும்...’’ அன்று தலைமை மருத்துவர் சொன்ன வாசகங்கள் அப்படியே சாளுக்கிய மன்னரின் செவியில் இன்றும் எதிரொலித்தன.

சிறைக் கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே சென்றார். படுத்திருந்தப் பெண்ணை சுற்றி வந்தார். குனிந்து அவள் முகத்தை ஆராய்ந்தார்.
மெல்ல ஒலி எழுப்பாமல் வெளியே வந்து சிறைக்கதவைத் தாழிட்டார்.ஆலமரத்தின் வேர்களைப் போல் விக்கிரமாதித்தரின் முகமெங்கும் சிந்தனை
ரேகைகள் படர்ந்தன.‘‘சிந்திப்பதற்கு அவகாசமில்லை ராமபுண்ய வல்லபரே...’’ அழுத்தமாகச் சொன்னாள் சிவகாமி.
‘‘ஆனாலும்...’’ சாளுக்கிய போர் அமைச்சர் மென்று விழுங்கினார்.

‘‘வேறு வழியில்லை. இதை நாம் செய்தே ஆக வேண்டும்... இல்லையெனில் சாளுக்கிய மன்னர் நம்மை மன்னிக்க மாட்டார்!’’
சிவகாமி சொல்வது சரியென்றே விநயாதித்தனுக்கும் தோன்றியது. பார்வையை தன் குருநாதர் மீது திருப்பினான்.
ராமபுண்ய வல்லபரின் புருவங்கள் முடிச்சிட்டன. ‘‘இன்னும் ஏன் யோசிக்கிறீர்கள்..?’’
‘‘பாண்டிய மன்னரைப் பற்றி நினைக்க வேண்டாமா சிவகாமி..?’’ எரிச்சலுடன் கேட்டார் ராமபுண்ய வல்லபர்.
‘‘ஏன்... அவருக்கென்ன..?’’

‘‘என்ன இப்படி கேட்டுவிட்டாய்..?’’ விநயாதித்தனின் நாசி துடித்தது. ‘‘குருநாதர் சொல்வது சரிதானே..? பாண்டிய மன்னரின் விருந்தினராக நாம் மதுரைக்கு வந்திருக்கிறோம்...’’‘‘நாம் என என்னையும் சேர்க்க வேண்டாம்... நான் கைதியாக பாதாளச் சிறையில் அடைப்பட்டிருக்கிறேன்...’’ சிவகாமி
இடைமறித்தாள்.  ‘‘இதற்கு முழுக்க முழுக்க நீதானே காரணம்..?’’சொன்ன சாளுக்கிய போர் அமைச்சரை சிவகாமி உற்றுப்
பார்த்தாள். ‘‘நானா..?’’‘‘பின்னே... நாங்களா..? கரிகாலன் அடுக்கடுக்கடுக்காக உன் மீது குற்றம் சுமத்தியபோது எந்தப் பதிலும் பேசாமல் நின்றவள் நீதானே..?’’

‘‘அப்படி நின்றதால்தானே ‘இதை’ சாதிக்க முடிந்தது..?’’ என்றபடி தன் சிகையில் முடிச்சிட்டிருந்த சுருளான பட்டுத் துணியை எடுத்து ராமபுண்ய வல்லபரின் கரங்களில் திணித்தாள்.என்னவென்று அதை பார்க்க சாளுக்கிய போர் அமைச்சர் முற்பட்டார்.‘‘இங்கே பிரிக்காதீர்கள்! உங்கள் மாளிகைக்குச் சென்று சாளரங்களை அழுத்தமாக மூடிவிட்டு பிரித்துப் பாருங்கள்...’’‘‘இது...’’ விநயாதித்தன் இழுத்தான்.‘‘புறா வழியே வந்த உண்மையான செய்தி!’’ சிவகாமி கண்சிமிட்டினாள்.‘‘அப்படியானால் கரிகாலன் உன் மீது குற்றம் சுமத்தக் காரணமாக இருந்த புறா வழியே வந்தச் செய்தி..?’’ ஆச்சர்யத்துடன் ராமபுண்ய வல்லபர் கேட்டார்.

‘‘அவனை ஏமாற்ற நான் நடத்திய நாடகம்!’’
‘‘அதற்காக நீ சிறைப்பட வேண்டுமா..?’’
‘‘அப்பொழுதுதானே இந்தச் சிறையில் இருக்கும் மர்மத்தை கண்டறிய முடியும்!’’ராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.‘‘எதற்கு ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்கிறீர்கள்..?’’ சிவகாமி உதட்டைச் சுழித்தாள். ‘‘இந்நேரம் காஞ்சி கடிகையில் இருந்து சிறைச்சாலை தொடர்பான சுவடிகள் காணாமல் போய்விட்டதாக செய்தி வந்திருக்குமே!’’
‘‘சிவகாமி...’’

‘‘எதற்காக சத்தம் போடுகிறீர்கள் ராமபுண்ய வல்லபரே..? உங்கள் முன்தானே நிற்கிறேன்! என்ன... நமக்கு நடுவில் கம்பிகள் இருக்கின்றன!’’
‘‘விளையாடாதே!’’ ராமபுண்ய வல்லபரின் உதடுகள் துடித்தன. ‘‘இந்தச் சிறையில் என்ன மர்மம் இருக்கிறது..?’’
‘‘காஞ்சி சிறையில் இல்லாத மர்மம்!’’‘‘சிவகாமி...’’‘‘எதற்கு என் பெயரை திரும்பத் திரும்ப மனனம் செய்கிறீர்கள்..?’’ சிவகாமி சிரித்தாள். ‘‘மர்மத்தை முழுமையாக அறிந்த பின் நானே உங்களுக்கு சொல்கிறேன்.

என்னை பரிபூரணமாக நம்புங்கள். தேவையில்லாமல் நான் பல்லவர்களின் பக்கம் சாய்ந்துவிட்டதாக நினைத்து உங்களை நீங்களே வருத்திக் கொள்ள வேண்டாம்! சென்று வாருங்கள். இன்றிரவு மதுரையின் மேல் புறாக்கள் பறக்கும். அப்பொழுது நான் சொன்னதை செய்யுங்கள்!’’‘‘நீ சொன்னதை அப்படியே சொற்கள் மாறாமல் ராமபுண்ய வல்லபரிடமும் விநயாதித்தனிடமும் இந்நேரம் சிவகாமி சொல்லியிருப்பாள் அல்லவா..?’’ தாயத்தை உருட்டியபடியே அரிகேசரி மாறவர்மர் கேட்டார்.

சட்டென்று கரிகாலன் நிமிர்ந்தான்.‘‘மதுரையின் மேல் புறாக்கள் பறக்க இன்னும் எத்தனை
நாழிகைகள் இருக்கின்றன?!’’

(தொடரும்)

கொரோனா ஊரடங்குக்கு முன் நிகழ்ந்தவை

திடீரென்று சாளுக்கியப் படைகள் காஞ்சியை முற்றுகையிடுகின்றன. இதை சற்றும் எதிர்பார்க்காத பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மர், காஞ்சி மக்களுக்கும் அந்நகரில் உள்ள கலைப்பொக்கிஷங்களுக்கும் எவ்வித ஆபத்தும் சேதாரமும் ஏற்படக் கூடாது என்பதற்காக இரவோடு இரவாக குடும்பத்தினருடனும், அமைச்சர் பிரதானிகளுடனும் படைத் தலைவர்களுடனும் தன் நாட்டைவிட்டு வெளியேறுகிறார். மறைந்திருந்து பல்லவ நாட்டை மீட்க படை திரட்டி வருகிறார்.

இதை முறியடிக்க சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரும் சாளுக்கிய போர் அமைச்சர் ராமபுண்ய வல்லபரும் ஓர் ஆயுதத்தை கண்டுபிடிக்கிறார்கள். அந்த ஆயுதத்தின் பெயர், சிவகாமி! பல்லவ இளவரசி சிவகாமி போலவே தோற்றம் கொண்ட தங்கள் நாட்டு ஒற்றர் படைத்தலைவியை பல்லவர்களுக்குள் ஊடுருவ வைக்கிறார்கள்.

பல்லவ இளவரசி போலவே நடமாடும் சிவகாமியை ஆரம்பம் முதலே சந்தேகத்தோடு அணுகுகிறான் சோழ இளவரசனும் பல்லவ
உபசேனாதிபதியுமான கரிகாலன். ஆனால், பல்லவ மன்னர் பரமேஸ்வரனும் பல்லவ இளவரசர் ராஜசிம்மனும் சிவகாமியை தங்கள் மகள் / சகோதரி என்றே முழுமையாக நம்புகிறார்கள்.

கரிகாலனும் சிவகாமியும் சாளுக்கியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட காஞ்சி மாநகருக்குள் பயணம் செய்துவிட்டு பாண்டியர்களின் தலைநகரான மதுரைக்கு வருகிறார்கள். எதற்காக காஞ்சிக்கு வந்தார்கள்... இப்பொழுது ஏன் மதுரைக்குள் நுழைந்திருக்கிறார்கள் என்றுத் தெரியாமல் பல்லவ, சாளுக்கிய, பாண்டிய தேசங்கள் திகைத்து குழம்புகின்றன.

இதற்கிடையில் கரிகாலனும் சிவகாமியும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். அதேநேரம் பரஸ்பரம் சந்தேகித்தபடியே இருக்கிறார்கள். கொஞ்சுகிறார்கள். குலாவுகிறார்கள். என்றாலும் சமயம் கிடைக்கும்போதெல்லாம் மற்றவரை எதிரிகளிடம் சிக்க வைக்கும் நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள்.

உண்மையில் சிவகாமி யார்..? அவள் சாளுக்கியர்களின் ஒற்றர் படைத் தலைவியா அல்லது பல்லவ இளவரசியா..? கரிகாலனும் சிவகாமியும் நிஜமாகவே காதலிக்கிறார்களா அல்லது நடிக்கிறார்களா..? எதற்காக ஒன்றாக தேசம் கடந்து பயணிக்கிறார்கள்..?ஒருவருக்கும் ஒரு கேள்விக்கும் விடை தெரியவில்லை. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக பாண்டியர்களின் சிறையில் சிவகாமி அடைக்கப்படுகிறாள்.
இனி...

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்