சூப்பர் மேன் அல்ல... செவிலியரே சூப்பர் ஹீரோ!



கொரோனா லாக்டவுனிலும் களமிறங்கி அடித்து ஆடியிருக்கிறார் உலகப் புகழ்பெற்ற மர்ம ஓவியர் பான்ஸ்கி. அரசியலை விமர்சிக்கும் விதமாக இவர் வரைந்த சுவரோவியங்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் பாய்ச்சலை கிளப்பியிருக்கின்றன.
தன்னைப்பற்றி அதிகமாக வெளிப்படுத்தாமல் ரகசியமாகவே இருப்பவர். சமீபத்தில் ஒரு ஓவியத்தை வரைந்திருக்கிறார். அந்த ஓவியம்தான் டுவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சகல சமூக வலைத்தளங்களிலும் ஹாட் டாக்.

ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் போன்ற சூப்பர் ஹீரோக்களின் பொம்மைகளுடன் விளையாடிய சிறுவன் ஒருவன், அந்த சூப்பர் ஹீரோ பொம்மைகளைக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு செவிலியர் பொம்மையைக் கையில் ஏந்துகிறான்.

அந்தச் செவிலியர் பொம்மையின் கரங்கள் பறக்கும் நிலையில் உள்ளன. செவிலியர்தான் உண்மையான சூப்பர் ஹீரோ என்று விளையாட்டையே மாற்றிவிட்டார் பான்ஸ்கி. ஒரு சதுர மீட்டர் பரப்பளவில் வரையப்பட்ட இந்த ஓவியத்தை இங்கிலாந்தில் உள்ள சௌதாம்டன் பொது மருத்துவமனைக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார்பான்ஸ்கி.

மருத்துவமனையை அலங்கரிக்கும் இந்த ஓவியம் லாக்டவுன் முடிந்தபிறகு ஏலம் விடப்படும். ஏலத்தில் வரும் தொகை தேசிய சுகாதாரப்பணியில் இருப்பவர்களின் நலனுக்காக ஒதுக்கப்படும் என்று அறிவித்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.