இவர் டீச்சரல்ல... கொரோனா போராளி!‘கொரோனாவை எதிர்த்த போர் வீரர்கள்’ என்ற பட்டியலில் கேரள அமைச்சர் கே.கே.சைலஜா இடம்பெற்றிருக்கிறார். ம்ஹும். பட்டியலிட்டது இந்தியப் பத்திரிகை அல்ல! 120 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவிலும்; 23க்கும் மேற்பட்ட மொழிகளில் உலகம் முழுக்கவும் வெளியாகும் ‘வோக்’ (Vogue) பத்திரிகை! யார் இந்த சைலஜா?

2018ம் ஆண்டு வெள்ளத்தில் மூழ்கி இறந்தவர்கள், நிலச்சரிவில் புதையுண்டவர்கள் எனக் கேரளம் முழுக்கத் துயரக் காட்சிகள். பெரு மழை ஓய்ந்து அந்த பாதிப்பிலிருந்து விடுபடும் முன், வவ்வால்களிலிருந்து பரவிய நிஃபா வைரஸ் கேரள மக்களின் உயிர்களைக் காவு வாங்கி மிரட்டியது.
போலவே இந்த ஆண்டுத் தொடக்கம் முதல் உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் முதன் முதலில் குடியேறியதும் கேரளாவில்தான்.

ஆனால், எந்தக் காலத்திலும் கேரளா முற்றிலுமாக சீரழியவில்லை. எல்லா பேரிடர்களையும் எதிர்கொண்டு சமாளித்து வீறு கொண்டு எழுந்தது.
ஆம். எப்படி கடந்த காலங்களில் இயற்கைப் பேரிடர்களில் இருந்து கேரள மாநிலம் மீண்டு எழுந்ததோ, அப்படி இந்த கொரோனா தாக்குதலில் இருந்தும் அந்த மாநிலம் அதிக உயிர் இழப்பு இன்றி தன்னைத்தானே காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

எப்படி இது சாத்தியமானது..?

அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை மற்றும் சமூக நலத்துறை அமைச்சரான கே.கே.சைலஜா டீச்சர்தான் காரணம்! ஆம். டீச்சர் என்ற பின்னொட்டுடன்தான் இவரை கேரள மக்கள் அன்புடன் அழைக்கிறார்கள்.ஷைலஜா டீச்சருக்கு வயது 63. கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். குதுபரம்பா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். சிவபுரம் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக வேலைப் பார்த்தவர். 2004ம் ஆண்டு முழு நேர அரசியலில் தன்னை இணைத்துக் கொண்டவர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்; இருப்பவர்.

சிபிஎம் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர், ஜனாதிபத்திய மகிளா குழுவின் மாநிலச் செயலாளர் பொறுப்புகளில் வெளிப்பட்ட சைலஜா டீச்சரின் தலைமைப் பண்பு, 2016ல் பினராயி விஜயன் அமைச்சரவையின் இரண்டு பெண் அமைச்சர்களில் ஒருவராக இவரைத் தேர்வு செய்ய வைத்தது.
கொரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் உலகிற்கே இன்று முன்னுதாரணமாக கேரளா திகழ்கிறது. இதை எப்படி அந்த மாநிலம் சாதித்தது?

“வெளியிலிருந்து மாநிலத்திற்குள் வருகை தரும் அனைவரையும் கண்டுபிடிப்பதற்கே சிரமமாக இருந்தது. அவர்களை தனிமைப்படுத்தலில் வைப்பதும் ஒரு கடினமான பணி. இவ்வேலைகள் எளிமையானதாகத் தோன்றலாம், ஆனால், அதற்கான ஏற்பாடுகள் எளிதானதல்ல. தொடர்புள்ளவர்களைக் கண்காணித்தல், தனிமைப்படுத்துதல், பொருட்கள் கொண்டு வர,  நோயாளிகளின் மன ஆரோக்கியத்தைப் பேண, போக்குவரத்து, நிதி… என இதற்காக பதினெட்டு நிபுணர் குழுக்கள் அமைத்து வேலை செய்தோம்.  

SARS, MERS குடும்பத்தைச் சேர்ந்த வைரஸுக்கு கோவிட் 19 எனப் பெயரிட்டுள்ளதாக வுஹான் பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவல்களைப் படித்தேன். இந்த வைரஸ் ஆபத்தானது, மனிதர்களைத் தாக்கும் என்பதையும் தெரிந்து கொண்டேன். இதெல்லாம் படிக்கும் போது என் மனதில் முதலில் வந்தவர்கள் வுஹானில் படிக்கும் கேரளா மாணவர்கள்தான்.

உடனே சுகாதார செயலாளர் ராஜன் கோப்ராகடேவை தொடர்பு கொண்டேன். ராஜனும், ‘இதற்கு உடனடியாக நாம் தயாராகுவோம்’ என்றார். ஜனவரி 24ம் தேதி கண்ட்ரோல் ரூமை ஆரம்பித்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவ அதிகாரி களுக்கு இந்த வைரஸ் குறித்த ரிப்போர்ட்டுகளை அனுப்பினோம். ஜனவரி 27ம் தேதி வுஹானிலிருந்து ஒரு விமானம் கேரளாவிற்கு வந்தது. அதில் பயணித்த எந்த பயணிக்கும் நோய் அறிகுறி இல்லை. அவர்களை வீட்டிற்கு அனுப்பித் தனிமைப்படுத்தி, ஏதாவது அறிகுறி தெரிந்தால் தகவல் கொடுக்க அறிவுறுத்தினோம்.

அதன்படி, ஜனவரி 30ம் தேதி, ஒரு மாணவிக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவர் திருச்சூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 2ம் தேதி, ஆலப்புழாவைச் சேர்ந்த ஒரு மாணவரும், 3ம் தேதி காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இவர்கள் மூவருக்கும் ரிசல்ட் பாசிட்டிவாக வந்தது. ஆனால், அவர்கள் மூலம் யாருக்கும் பரவவில்லை.

நாங்கள் யாரையும் பின் பற்றவில்லை. நிறையப் பாடங்களை கற்றுக் கொண்டோம். உலக சுகாதார நிறுவனம் கூறும் வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலும், மாநிலத்திற்கென்று உருவாக்கப்பட்ட சில நெறிமுறைகளையும் பின்பற்றினோம். எங்கள் அறிவையும் அனுபவங்களையும் பயன்படுத்திக் கொண்டோம். இந்த சமயத்தில் கொரோனா தொற்று நோயாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இது ஒரு தொற்று நோயாக மாறும் என்று முன்கூட்டியே நாங்கள் கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டோம்.

மக்களை மையமாக வைத்துத் தீட்டப்படும் திட்டமே முக்கியமானது. அந்த வகையில் கேரளா முன்மாதிரியாக உள்ளது. 1957ம் ஆண்டிலிருந்தே மக்களை மையமாக வைத்துத்தான் கேரளா இயங்கிக் கொண்டிருக்கிறது. நம்மிடம் எவ்வளவு வளங்கள் இருக்கின்றன என்பது முக்கியமல்ல. இருக்கும் வளங்களை எப்படி பயன்படுத்துகிறோம்... எவ்வாறு பயன்படுத்துவது... என்பதுதான் முக்கியம். அதைதான் மாநில முதல்வரின் வழிகாட்டு தலுடன் கேரளா செய்கிறது; செய்யவும் போகிறது!‘வோக்’ பத்திரிகை என்னை கவுரவித்துள்ளதாக நான் நினைக்கவில்லை. மாறாக ஒட்டுமொத்த கேரளாவையும் பெருமைப்படுத்தி உள்ளது என்றே எண்ணுகிறேன்!’’ என்கிறார் ஷைலஜா டீச்சர்.

அன்னம் அரசு