நாம முதல் ஷாட்ட சுடுகாட்டுல வச்சு ஆரம்பிக்கிறோம்!



சினிமாவில் நேர்த்தியைத் தேடும் இயக்குநர்களின் முதல் சாய்ஸ்… ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம்.  இயக்குநர்கள் பாலா, பாண்டிராஜ், ராஜேஷ், பொன்ராம் போன்ற முத்திரை இயக்குநர்களின் அணியில் தவறாமல் இடம் பிடிப்பவர். பி.சி.ஸ்ரீராமின் சீடர், 37 படங்களை கடந்து இன்னும் பயணம் மேற்கொள்கிறார்.
“ஒளிப்பதிவாளர்கள் வெளியே தெரிய வேண்டிய அவசியம் இல்லை. நல்ல படத்தில் ஒளிப்பதிவு வெளியே தெரியாது. இயக்குநரின் ரசனை, காட்சிப்படுத்துதல், அவர் சொல்ல விரும்பியதை வேகமும், தரமும் குறையாமல் எடுத்து தருவதுதான் ஒளிப்பதிவாளரின் வேலை.

கேரக்டரின் தன்மை, அவர்கள் எப்படி வெளிப்பட வேண்டும் என்று ஒருங்கிணைப்பதில் எங்களது பங்கும் இருக்கிறது. ஒளியின் தன்மையை எந்த அளவுக்கு ரசிகர்கள் உணர தொடங்கிவிட்டார்கள் என்பதற்கான அடையாளம் அவர்களின் வார்த்தைகளிலேயே தெரிகிறது.

ஒளிக்கு ஏது மொழி? எனக்கு எல்லாமே ஒன்றுதான். மனதிற்குப் பிடித்திருந்தால் எங்கேயும் போய் வேலை பார்ப்பேன். எந்த கதையிலும் டைரக்டரின் துணையோடு சேர்ந்து இறங்கி வேலை செய்வேன். காரைக்குடியில் ‘நாயகன்’ படத்தை நூறு தடவைக்கு மேல் பார்த்து ரசித்ததெல்லாம் ஒரு பரவசம். அன்றிலிருந்து அந்த நெகிழ்ச்சியும் சினிமாவின் அழகும் என்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. உலகம், மனிதர்கள், சினிமா எல்லாம் எவ்வளவோ மாறிவிட்டது. ஆனால், மனசு அதேதானே!” மாடி அறையில் ஜன்னல் திரையை விலக்கி இளம் வெயிலை ரசிக்கிறார் பாலா.

தென்கோடியில் இருந்து வந்து சினிமாவில் வலுவாக காலூன்றியது எப்படி..?
எப்போதும் போட்டோகிராபியில் ஆர்வம் இருந்தது. ஆனால், ஒரு கேமரா வாங்க முடியாத சூழல். காரைக்குடி ஏரியாவில் கல்யாணத்துக்கு படம் எடுப்பதில் இந்த பாலா ரொம்பவும் ஃபேமஸ். கொஞ்சம் காசு சேர்ந்ததும் சென்னைக்கு வந்து பி.சி.சார் பார்வை படாதா என அவர் வீட்டு வாசலில் காத்துக்கிடந்ததும், அப்புறம் எனது சினேகிதி வைஷாலி பி.சி.யை பேட்டி எடுக்க உடன் நானும் சென்றதும், அவரை நாலடிக்கு பெரிய ஓவியமாக வரைந்து அவரிடம் காண்பித்ததும், அவர் கண்ணாடியை விலக்கி என்னைக் கண்டுகொண்டதும் அப்படியே சினிமா மாதிரி போகிறது.

இன்னமும் அவர் ஆபீசில் வந்து நிற்கிற எல்லோருக்குள்ளும் நான் என்னைத்தான் பார்க்கிறேன். அவரிடம் வந்து சேர்ந்துவிட்டால் எங்காவது ஒரு வெளிச்சம் கிடைக்குமென்ற ஒரு நம்பிக்கைதான் என்னைக் காப்பாற்றி அழைத்துக் கொண்டு வந்திருக்கிறது.

சாரிடமிருந்து நாற்பது பேருக்கு மேல் புறப்பட்டு வந்து இந்தியா முழுவதும் பரவியிருக்கிறார்கள். எனக்கும் அதில் சின்ன பங்கு என்பதில் பெரிய சந்தோஷம்! ‘நாயக’னாக விரும்பிப் பார்த்த கமல் சாரே எனக்கு முதல் வாய்ப்பு கொடுத்ததும் எனக்கான பரிசே! உங்களின் ‘பிதாமகன்’ ஒளிப்பதிவு இன்றைக்கும் பேசப்படுகிறது...

அது பாலா சார் பெரிய அளவில் கொடுத்த தைரியம். என் கேரியரில் ‘பிதாமகன்’ எனக்கான விசிட்டிங் கார்டு. முதல் காட்சியாக உயர்ந்து நிற்கிற கோபுரம், சாமி பாட்டு, கூட்டமாக பறக்கிற புறாக்கள் என வைக்கிற சினிமாவில் ‘நாம முதல் ஷாட்ட சுடுகாட்டுல வச்சு ஆரம்பிக்கிறோம்’னு சொன்னதும் ஆச்சரியமாக போய்விட்டது.

விக்ரம், சூர்யாவோடு சேர்ந்து வேலை பார்த்ததும், விக்ரமுக்கு கிடைத்த தேசிய விருதும் இன்றைக்கும் என் சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படத்தை வேறு இடத்துக்கு எடுத்து செல்ல வேண்டுமென கேமராவைக் கையில் எடுத்தேன். ஆசைப்பட்டது நடந்தது. தேனி மீட்டர்கேஜ் ரயிலில் வைத்து ‘இளங்காத்து வீசுதே...’ எடுத்தது இவ்வளவு காலம் தாண்டி மனதில் நிற்கிறது. என்னைப் பார்க்கும்போதெல்லாம் யாராவது ஒருவர் இந்த பாடலை
நினைவூட்டுகிறார்கள்.

ஒரு ஒளிப்பதிவாளராகப் படம் பார்க்க வரும் ரசிகனை ஜட்ஜ் செய்ய நினைப்பேன். சமயங்களில் சில கேரக்டர்களில் ஃபீல் ஆனது கூட ஒளிப்பதிவில் தெரிந்திருக்கும். எனக்கு பீரியட் படம் எடுக்க ஆசை. ‘சீமராஜா’வில் ஒரு சிறு பகுதியை அப்படி எடுத்து திருப்தியடைந்தேன்.இங்கே தமிழ் சினிமாவும்,
ஒளிப்பதிவும் எப்படி இருக்கு..?

நல்ல இயக்குநர்கள் காணக் கிடைக்கிறார்கள். இன்னும் நாம் திரும்பிப்பார்க்காத கதையைக் கூட கொண்டு வருகிறார்கள். மனிதர்களின் மகிழ்ச்சியான கணங்கள் காட்டப்பட்டது போய், சாதாரண மனிதர்கள் ஹீரோக்களாக வர ஆரம்பித்துவிட்டார்கள். முன்னால் இருந்ததைவிட சுதந்திரம் இயல்பாய் கிடைக்கிறது. டிஜிட்டல் வந்த பிறகு நிறைய ஒளிப்பதிவாளர்கள் வந்து ஒளி விடுகிறார்கள்.

என்னைப் பொறுத்த வரை ஒரு சினிமாவுக்காகப் பாராட்டிய இடத்தில் இருந்து மூன்று தினங்களில் அடுத்த இடத்திற்கு போய்விடுகிறேன். அதுதான் நல்லது. நான் ஒன்றும் செய்யவே இல்லை என்ற நினைப்புத்தான் அடுத்தடுத்து நம்மை சோர்வில்லாமல் இயங்க வைக்கும்.இத்தனை நாள் அனுபவம் கற்று தந்ததென்ன?

இந்த வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் நேசிக்கிறேன். ஒவ்வொரு மனிதனிடமும் அன்பு செய்ய விரும்புகிறேன். அது ஒருசில நேரங்களில் முடியாமல் போவதுதான் யதார்த்தம். இந்த வைரஸ் வந்து எல்லோருக்கும் சில படிப்பினைகளைக் கொடுத்திருக்கிறது.

எல்லா வைப்ரேஷனிலும் நிறைந்து கிடக்கிறது உலகம். ‘வாட்டாகுடி இரணியன்’ படத்துக்கும் அதே ஃபீல்தான். இப்பொழுது ‘சக்ரா’ படத்துக்கும் அதே ஃபீல்தான். அடுத்த கட்டம்… அடுத்த டெக்னாலஜி… கைக்குச் சிக்காமல் இன்னும் ஆட்டம் காட்டிக்கொண்டே இருக்கிறது ஒரு லைட். அதையும் தேடணும்.

நிச்சயம் இப்ப ஒரு கனிவான மனநிலையை அடைந்திருக்கேன். என்னால் யாருக்கும் கெடுதல் பண்ண முடியாது. என்னிடம் இருக்கிற எல்லா பிரார்த்தனைகளும் இந்த உலகத்துக்கானதாக இப்பொழுது இருக்கிறது. என்னை நானாகவே இருக்க அனுமதிக்கிற மனைவி மாலா, நண்பர்கள் போல் அமைந்துவிட்ட மகன்கள்கவின், கருண் இருவரும் அற்புதமானவர்கள்l

நா.கதிர்வேலன்