நம்முடன் படிக்கும் மாணவியை எப்படி கூட்டு பலாத்காரம் செய்யலாம்..?ஆன்லைனில் திட்டமிட்ட 15 / 16 வயதுள்ள பள்ளி மாணவர்கள் இந்தியாவை உலுக்கிய பாய்ஸ் லாக்கர் ரூம்

கொரோனா லாக்டவுனுக்கு நடுவில் வைரலாகி பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது ‘பாய்ஸ் லாக்கர் ரூம்’. தெற்கு தில்லியில் உள்ள பிரபல பள்ளியைச் சேர்ந்த 11, 12ம் வகுப்பு மாணவர்களால் உருவாக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் குழு இது. இதில் உறுப்பினர்களாக இருக்கும் மாணவர்கள் தங்களுடன் பயிலும் சக மாணவிகளைப் பற்றி அசிங்கமாக உரையாடுவது, அவர்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து பகிர்வது என ரகசியமாக இயங்கி வந்தனர்.

இதன் அடுத்த கட்டமாக குழுவில் கூட்டுப் பாலியல் வன்கொடுமையைப் பற்றி பதிவிட ஆரம்பித்தனர். குழுவைப் பற்றி அறிந்த மற்ற பள்ளி மாணவர்களும் இதில் இணைந்தனர். இந்தக் குழுவில் அடிக்கடி குரூப் சாட்டிங் நடக்கும். அது ரொம்பவே ஆபாசமாக பாலியல் சார்ந்து இருக்கும்.
சமீபத்தில் அந்த உரையாடல்களின் ஸ்கிரீன் ஷாட்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வை ஏற்படுத்தி இருக்கின்றன.

இந்தக் குழுவிற்கு நாலாப்பக்கமும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. தில்லி சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து குழுவைச் சேர்ந்தவர்களைத் தேட ஆரம்பித்தனர். இறுதியில் இதன் அட்மின் எனக் கருதப்பட்ட மாணவன் கைது செய்யப்பட்டான். இப்போது இன்னொரு தகவல் வெளியாகி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம்; பாய்ஸ் லாக்கர் ரூம் குரூப் அம்பலப்பட காரணம் ஒரு சிறுமியால் உருவாக்கப்பட்ட போலி கணக்கு என்பது தெரியவந்துள்ளது.

சித்தார்த் என்ற கற்பனையான பெயரில் ஒரு போலி ஐடியை உருவாக்கி ஸ்னாப்சேட் மூலம் ஒரு பையனிடம் அந்தச் சிறுமி சாட் செய்துள்ளார். அந்தப் பெண்தான் கூட்டுப் பாலியல் வன்கொடுமை பற்றிய உரையாடலை ஆரம்பித்துள்ளார். இந்த உரையாடல் எதற்குத் தெரியுமா? தன்னைப் பற்றி ஆண்கள் என்ன நினைக்கிறார்கள்? அவர்களுடைய கேரக்டர் என்ன? என்பதை அறிந்து கொள்வதற்கு. இந்த விஷயம் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அந்த சிறுமியும் பையனும் பாய்ஸ் லாக்கர் ரூம் அக்கவுன்ட்டுடன் சேர்க்கப்படவில்லை. ஆனால், அவர்களின் ஸ்னேப்சேட்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பாய்ஸ் லாக்கர் ரூம் குரூப்பில் ஷேர் செய்துள்ளனர். இதுதான் சமூக வலைத்தளங்களில் பரவிவிட்டது என்கிறார்கள் போலீசார். இதுகுறித்து நிபுணர்களிடம் பேசினோம்.

‘‘இன்று குழந்தைகளின் ஆன்லைன் வேகத்திற்குப் பெற்றோர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. டிராக்கிங் ஆப்கள், சைல்ட் லாக் இருந்தாலும் அதை எப்படி உடைத்து உள் நுழைய வேண்டும் என சொல்லிக் கொடுக்க அவனுக்கு நண்பர்கள் உள்ளனர். இனி பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நண்பர்களாக மாறித்தான் ஆகவேண்டும். உங்கள் பிரச்னைகளை பிள்ளைகளிடம் பகிரத் தொடங்கினாலே அவர்கள் பிரச்னை தானாக உங்களிடம் வரும்.

மொபைல் அல்லது கணினி பயன்பாட்டில் உடன் இருந்து வழி நடத்துங்கள். பிரவுசிங் ஹிஸ்டரிகளை அவ்வப்போது அழிக்கிறார்களா எனக் கண்காணியுங்கள். அவர்களுக்கென தனி மொபைல் கொடுத்துப் பழக்காதீர்கள். நீங்களும் மொபைல் பயன்பாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள். தானாகவே அவர்களும் தங்களைக் கட்டுக்குள் கொண்டு வருவார்கள்...’’ என்றார் கிரைம் துறையைச் சேர்ந்த எஸ்பி ஜெயகுமார்.

‘‘செக்ஸ்… இது ஏதோ கெட்ட வார்த்தை போல் ஆகிவிட்டது. பெற்றோர்களும் சரி, ஆசிரியர்களும் சரி இதற்கான போதிய அறிவைக் கற்பிக்க தவறிவிடுகிறார்கள். வயதுக்கே உரிய ஆசைகள், உணர்ச்சிகள் எழுகையில் கிடைக்கும் வழியில் அவர்களின் அறிவைப் பெருக்கிக் கொள்கிறார்கள். குறிப்பாக ஆபாச தளங்கள், 18+ சமூக வலைதள குழுக்கள், பிரைவேட் சாட்கள்.

உயிர்களின் அடிப்படைத் தேவையே உணவும், இனப்பெருக்கமும்தான். அந்தந்த வயதில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து பெற்றோர்களே முன்வந்து, குழந்தைகளிடம் பேசி அவர்களை வழிநடத்தலாம். பெற்றோர்களே தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு குழந்தைகளைக் கவனிக்காமல் விடுவதும், பிள்ளைகள் எங்கே போகிறார்கள், என்ன செய்கிறார்கள், மொபைலை எப்படி பயன்படுத்துகிறார்கள் என எதுவுமே தெரியாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.

தவறு நடந்த பின் ரியாக்‌ஷன்கள் கொடுப்பதுதான் நாம் செய்துகொண்டிருக்கும் மிகப்பெரிய தவறு. அடுத்து தவறு செய்துவிட்டாலும் கூட தண்டனை, தகாத வார்த்தைகள் என போகாமல் சரியான முறையில் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து வழிநடத்த வேண்டும்...’’ என்று முடித்த மன நல நிபுணர் எஸ்.வந்தனாவைத் தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் சைபர் கிரைம் துறைப் பேராசிரியர் லதா சுப்பிரமணியன் பேச ஆரம்பித்தார்.

‘‘குழந்தைகளைத் தன்வசப்படுத்தி அவர்களை பொம்மை போல் ஆட்டுவிக்க ஆன்லைனில் தனி குழுக்களே இயங்கிக் கொண்டிருக்கின்றன. குழந்தைகள் மட்டுமல்ல, பெண்கள், ஆண்கள் என யாவரும் இவர்களிடம் தப்பிப்பதில்லை. குழந்தைகள் எதற்கும் தங்களைச் சுலபமாக மாற்றிக்கொள்வார்கள்.
முதலில் உங்கள் மொபைலில் பாஸ்வோர்ட் போட்டு லாக் செய்வதை விடுங்கள். பிள்ளைகளிடம் ஓபனாக இருங்கள்; கண்காணியுங்கள். கணினிகளில் உள்ள கேமராக்களை சீல் செய்யுங்கள். திடீரென மொபைலில் அதிக நேரம் செலவிடுகிறார்கள், கணினி முன்பே உட்காந்திருக்கிறார்கள் எனில் அவர்களின் ஸ்கிரீன் டைம், பயன்பாட்டு தளங்கள், எல்லாவற்றையும் கவனிப்பில் கொண்டு வாருங்கள்.

இந்த தளம், இந்த கேம் ஏன் உனக்கு இவ்வளவு பிடித்திருக்கிறது என பேசுங்கள். குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையேனும் சின்ன நண்பர்கள் சந்திப்பு போல் ஏற்படுத்தி பிள்ளைகளின் நண்பர்களையும் உங்களுக்கு நண்பர்கள் ஆக்குங்கள். அடுத்த சந்திப்பில் வரும் புதிய நண்பர்களை அக்கறையுடன் கண்காணியுங்கள்.

எந்தெந்த நண்பர்கள் என்னென்ன டிவைஸ்கள் வைத்திருக்கிறார்கள் என்பதை எல்லாம் கவனிப்பதும் அவசியம். முதலில் நீங்கள் டிக்டாக்கில் கட்டிப்பிடித்து ஆடுவதையும், முகநூலில் நான் வாங்கிய புதுப்புடவை என பகிர்வதையும் விட்டாலே குழந்தைகள் நம்மைப் பார்த்து திருந்துவார்கள்...’’ என்றார் லதா சுப்பிரமணியன்.‘‘சமூக வலைத்தளங்கள் பொறுப்பாக இருக்கலாம். நாம் போடுகிற ஒரு ஸ்டேட்டஸில் இருக்கும் பாடலோ, காட்சியோ யாரோ ஒருவருக்கு உரிமையானது என கண்டறிந்து நீக்கும் அளவுக்கு கண்காணிக்கும் தொழில்நுட்பம் இருக்கையில் ஒரு நபர் மைனரா மேஜரா எனப் பார்க்கலாமே! குறைந்த பட்சம் நபரின் ஐடி, அல்லது பெற்றோர்களின் ஐடி கொடுத்தால் மட்டுமே ஒரு சமூக வலைத்தளத்தில் கணக்குத் தொடங்க முடியும் என்னும் வரைமுறையை கொண்டு வரலாமே.

கல்வி ஒரு காலத்தில் புனிதமாக பார்க்கப்பட்டது. கல்வியுடன் இணைந்தே நேர்மை, அந்தக் கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் மேல் மதிப்பு, அந்தக் கல்வியைக் கொடுத்த பெற்றோர்களுக்கு மதிப்பு பெண்கள் மீதான மதிப்பு என பலவிதமாக பொறுப்புகள் சேர்ந்தே வளர்ந்தன. கல்வியைச் சரியாக எடுத்துக்கொண்டாலே ஒரு மனிதன் பண்பட்டு விடுவான்.

படிப்பு என்றால் வெறும் டிகிரி மட்டுமே அல்ல. நமக்கு என்ன பிடிக்குமோ அதை தீவிரமாகப் படிப்பது. மார்க் ஸூகர்பெர்க், ஸ்டீவ் ஜாப்ஸ், சச்சின், ஏ.ஆர்.ரஹ்மான் எல்லாம் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்கள் என தவறான எண்ணம் உருவாக ஆரம்பித்துவிட்டது. மார்க், ஸ்டீவ் ஜாப்ஸுக்கு கணினி, சச்சினுக்கு கிரிக்கெட், ரஹ்மானுக்கு இசை, இதுவும் கூட படிப்புதான்.

ஏதேனும் ஒரு நல்ல திறமை மேல் ஆர்வம் சென்றாலே தீய எண்ணங்கள் எழாது. கல்வி மீதான மதிப்பு இல்லாமைதான் ஆசிரியர், பெற்றோர்கள், உறவுகள், குடும்பம், பெண்கள் என எதன் மீதும் மதிப்பில்லாமல் போவதும் சொற்ப ஆனந்தம் கொடுக்கும் மொபைல் மீது மனம் சென்று விடுவதும். இந்த நிலை மாறினால்தான் மாணவர்களின் வாழ்க்கை முறையிலும் மாற்றம் வரும்...’’ அழுத்தமாக சொல்கிறார் கல்வி ஆலோசகர் மற்றும் ஃபியூச்சர் காரிடர் நிர்வாக இயக்குநரான தாமோதரன்.

ஷாலினி நியூட்டன்