காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்குகிறதா மத்திய அரசு? கொதிக்கும் விவசாயிகள்
கொரோனா தொற்று நோயால் இந்தியாவே ஸ்தம்பித்து கிடக்கிறது. இன்னும் ஊரடங்கு முடியவில்லை. மக்களும் வீடே கதியென இருந்து வருகிறார்கள். இந்நேரத்தில், தமிழகம் போராடி பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஜல்சக்தி எனப்படும் நீர்வளத் துறையின் கீழ் கொண்டு வந்திருக்கிறது.  தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை என்பது நூற்றாண்டு காலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் ஒன்று. இந்நிலையில்தான் கடந்த 2018ல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  ஆனாலும், நீண்ட இழுபறிக்குப் பிறகே காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. இதிலும் வாரியம் என்பதை ஆணையமாக மாற்றியது. கூடுதல் அதிகாரம் என்பதால் ஆணையம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்றும், இதனால் அதிகாரம் எதுவும் குறையாது என்றும் அப்போது மத்திய அரசு ெதரிவித்தது. ஆனால், இன்று அந்த ஆணையம்தான் ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், ‘‘இதை ஆணையத்தை முடக்கும் மறைமுக நடவடிக்கையாவே பார்க்கறோம். கொரோனா நோய் தாக்குதல்ல உலகமே முடங்கி கிடக்கு. இந்நேரம் பார்த்து அரசியல் சுயலாபத்திற்காக தமிழகம் போராடி பெற்ற உரிமையை குழிதோண்டி புதைக்க மத்திய அரசு முயற்சிக்குது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கிறதை ஆரம்பம் முதலே ஏற்க மறுக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு துணை போகுது...’’ என வருத்தத்துடன் பேசத் தொடங்கினார்.
‘‘ஏற்கனவே ஆணையம் அமைக்கிறது குறித்து உச்சநீதிமன்றம் தெளிவான வரையறையை உருவாக்கியிருக்கு. அதன்படி, ‘ஆணையம் உச்சநீதிமன்றத்தின் நேரடி பார்வையில செயல்படும். சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களும், நீர் பாசனத்துறை செயலாளர்களும், தலைமைப் பொறியாளர்களும் ஆணையத்துல உறுப்பினர்களா இருப்பாங்க. நீர் பாசனத்துல நிபுணத்துவம் வாய்ந்த ஓய்வு பெற்ற உயர் அதிகாரி ஒருவரை ஆணையத் தலைவரா மத்திய அமைச்சரவை தேர்ந்தெடுத்து உச்சநீதிமன்ற அனுமதியோடு பணியமர்த்தணும்.
ஜல்சக்தி துறையின் செயலாளர் மத்திய அரசின் பிரதிநிதிங்கிறதால ஆணையத்துல நிரந்தர உறுப்பினரா மட்டுமே இருக்கலாம். எந்த வகையிலும் ஜல்சக்தி துறை அலுவலக நிர்வாக பட்டியலில் ஆணைய அலுவலக செயல்பாடு இடம் பெற முடியாது. ஆணையத்திற்கான அலுவலகம் மத்திய அமைச்சரவை செயலாளரின் அலுவலக பட்டியலில் மட்டுமே இடம்பெற முடியும். ஆணையம் எடுக்கும் முடிவுகள நிறைவேற்றுவதற்கு தேவையான உதவிகளை மட்டுமே மத்திய அரசு செய்திடணும்.
இதற்கு மத்திய அரசோ, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளோ கட்டுப்பட மறுத்தால், ஆணையம் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு காணணும்...’ இப்படி இறுதி தீர்ப்புல உச்சநீதிமன்றம் மிகத் தெளிவா வரையறுத்த பிறகும் எப்படி ஜல்சக்தி துறையின் கட்டுப்பாட்டுல ஆணையத்தைக் கொண்டு போறாங்கனு தெரியல. காவிரி ஆணையத்தை கோதாவரி ஆணையத்துடன் ஒப்பிட்டு ஜல்சக்தி துறை முடிவெடுக்குது. இந்தக் கோதாவரி மேலாண்மை ஆணையம் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருது. காவிரி ஆணையமோ உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுது.
அதனால், ரெண்டையும் ஒப்பிட்டு முடிவெடுக்குறது பொறுத்தமில்லாதது. மட்டுமல்ல, உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பதும் கூட. ஆனா, ஜல்சக்தி துறை அதிகாரிகள் இது சாதாரண அலுவலக நடைமுறைனு சொல்றாங்க. அப்படின்னா, இதற்கான அரசாணையை ஏன் குடியரசுத் தலைவர் பிறப்பிக்கணும்?
தமிழக பொதுப்பணித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்க அறிக்கையும் அவசர கோலத்துல, ஜல்சக்தி துறை அதிகாரிகளிடமே விளக்கம் கேட்டு போடப்பட்டிருக்கு. இதனால, தமிழகத்தின் காவிரி உரிமை பறிபோய்விடுமோனு அச்சம் ஏற்படுது.
எனவே, தமிழக அரசு உரிய சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை செஞ்சு குடியரசுத் தலைவரை நேரில் சந்திச்சு அரசாணையை திரும்பப்பெற வலியுறுத்தணும். இல்ல, உச்சநீதிமன்றத்துல வழக்குத் தொடர்ந்து அரசாணையை ரத்து செய்ய முன்வரணும். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு புதிய தலைவரை நியமனம் செஞ்சு தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளணும்’’ என்கிறார் பி.ஆர்.பாண்டியன்.இதன் பின்னணி குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டார் சமூக விமர்சகரான கா.அய்யநாதன். ‘‘இந்தக் கொரோனா காலத்துல மத்திய அரசு பல விஷயங்களை வேகமா செய்திட்டு வருது. அதுல காவிரி மேலாண்மை ஆணையத்தை நீர்வளத்துறையுடன் இணைச்சது முக்கியமானது.
ஆரம்பத்துல நாம் காவிரி மேலாண்மை வாரியம் வேணும்னு கேட்டுதான் போராடினோம். அப்படி வாரியம்னு கொடுத்திருந்தா அது தனியான அதிகாரமுள்ள அமைப்பா இருந்திருக்கும். தவிர, காவிரியுடன் வரும் எட்டு அணைகளின் நிர்வாகம், பராமரிப்பு, நீர்வரத்துனு எல்லாத்தையும் கண்காணிக்கிற பொறுப்பும் அதன் கட்டுப்பாட்டுல வந்திருக்கும்.
ஆனா, கர்நாடகாவைத் தூண்டிவிட்டு வாரியமா இருக்கக் கூடாதுனு ஆணையமா மாத்தினாங்க. இதுவும் அதிகாரமுள்ள அமைப்புதானாலும் இந்த ஆணையத்தால வழிகாட்டுதல் மட்டுமே பண்ண முடியும். அதாவது, மாநில அரசுகிட்ட இவ்வளவு நீர் திறந்துவிடுங்கனுதான் சொல்ல முடியும். அதுவே, வாரியமா இருந்தா அவங்களே தண்ணீரை திறந்துவிடுற உத்தரவை போடலாம். வாரியத்தை ஆணையமா ஏன் மாத்தினாங்கனு இப்பதான் காரணம் புரியுது. இப்ப மத்திய அரசு தண்ணீரை வணிகமா ஆக்கிட்டு வருது. இந்த அணைகளைத் தனியார்மயமா ஆக்கவே இந்த ஆணையத்தை எடுத்திட்டுப் போய் ஜல்சக்தி துறையின் கீழ் கொண்டு வந்திருக்கு. இதனால அணைகளின் பராமரிப்பு, அணைகள மேம்படுத்துறது, ஆழப்படுத்துறதுனு எல்லாமே தனியார்கிட்ட போயிடும்.
அவங்க நீரை விற்கறது தொடர்பான விஷயங்கள பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க. ஆக, தண்ணீர் ரொம்ப தட்டுப்பாடு உள்ள பொருளா இருக்குதுனு சொல்லி விவசாயிகளிடம் நீரை அளந்து விற்கறதுக்கான நிலையை மத்திய அரசு ஏற்படுத்திருக்கு. இதன்மூலம் மாநிலங்களின் உரிமையும் பறிபோகும். நமக்குக் கிடைக்கக் கூடிய நீரும் சரிவர கிடைக்காது.
அணையை எப்ப தொறக்கறதுனு கேட்டா, ‘பராமரிப்புல இருக்கு; இப்ப தண்ணீரை திறந்துவிட முடியாது’னு தனியார் சொன்னா எல்லாமே முடிஞ்சி போச்சு. அவங்கள யாரும் கட்டுப்படுத்தவும் முடியாது.இதுல ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கு. அதனாலதான் நாம் எதிர்க்கிறோம்.
மாநிலங்களின் அதிகாரம், விவசாயிகள், தண்ணீர் தொடர்பான உரிமைனு எல்லாத்துக்கும் எதிரா இதுமுடியும். எதிர்காலத்துல இது பெரிய பிரச்னையா உருவெடுக்கும். ஆணையம் இருக்கும் போது உறுப்பினர்கள் கூட்டம் போட்டு இவ்வளவு நீர் திறந்துவிடுங்கனு சொல்வாங்க. இருப்பை வைச்சு திறந்துவிட்டாங்க. இனி அதுவும் போயிடும்...’’ என்கிறார் அய்யநாதன்! l
பேராச்சி கண்ணன்
|