சூரிய ஒளியோ...மண்ணோ இல்லாமல் வீட்டுக்குள் செடி வளர்க்கலாம்...



ஸ்மார்ட் போன் வழியே செடியின் வளர்ச்சியை எந்த இடத்தில் இருந்தும் கண்காணிக்கலாம்!

மரங்களும் செடிகளும்தான் நம் வாழ்வாதாரம். ஆனால் பெருகி வரும் கட்டடங்களும் மக்கள் தொகையும் அவைகளுக்கு இடம் கொடுப்பதில்லை.
குறைந்தபட்சம் வீடுகளிலும், அலுவலகங்களிலும் சின்னச்சின்ன தோட்டங்கள், பூச்செடிகள், போடலாம் என்னும் ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், பல லட்சம் செலவிட்டு தளங்களும், சுவர்களும் அமைக்கும்போது அதில் களிமண் நிறைந்த தொட்டிச் செடிகளை வைக்க முடியுமா என்னும் கேள்வி, தடுத்து நிறுத்துகிறது.

இதற்குத் தீர்வாக வீட்டுக்குள்ளேயே காய்கறி தோட்டங்கள், மூலிகை செடிகள், கீரைத் தோட்டங்கள் அமைக்கலாம்... ஆனால். மண், சூரிய ஒளி, அதிகம் நீர் இது எதுவும் தேவையில்லை என்கிறது அக்ரோ2ஓ (Agro2O) குழு. ‘‘எது எதற்கோ ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகிறோம். இதோ இப்போது செடி வளர்க்கவும் ஸ்மார்ட்போன்கள் உதவும்...’’ புன்னகைக்கிறார் அக்ரோ2ஓ உரிமையாளர் யாஷ் வியாஷ்.  

‘‘Agriculture + H2O இணைந்து Agro2O! இது ஒரு இணையத்தள சொல்யூஷன் என்று கூட சொல்லலாம். அதாவது கொஞ்சம் தொழில்நுட்பமும் நவீனத்துவமும் கலந்த தோட்ட வளர்ப்பு முறை!பார்ப்பதற்கு ஒரு சின்ன டேபிள் லைட் போன்றோ பெட்ரூம் லைட்டுகள் போன்றோ இருக்கும். இதில் விதைகளை போடுவதற்கான துளைகள் இருக்கும். அதில் தேவையான விதைகளையும் அதற்குரிய ஊட்டச்சத்துக்களையும் செலுத்தி மிகக் குறைவான அளவில் நீர் அளித்தால் போதும். வீட்டுக்குள்ளேயே உங்களுக்கு தேவையான காய்கறி, மூலிகைகள், கீரைகள், பழங்கள் என அனைத்தையும் வளர்க்கலாம்.

சூரிய ஒளிக்குப் பதிலாக இதில் அமைக்கப்பட்ட லைட் போன்ற கருவி தேவையான வெப்பத்தை அச்செடிக்கு கொடுக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் என்ன பயிர்களை வளர்க்க வேண்டும் என்பதை தேர்வு செய்வது மட்டுமே. காய்கறிகளையும் மூலிகைகளையும் ஒன்றாக எப்போதும் கலக்கக் கூடாது. காரணம் பழங்களுக்கும் காய்கறிகளுக்கும் பொட்டாசியம் அதிகம் தேவைப்படும். அதே மூலிகை, கீரை வகை செடிகளுக்கு நைட்ரஜன் தேவைப்படும்.

இவை இரண்டையும் கலந்தால் ஊட்டச்சத்துகள் கொடுப்பதில் சிக்கல் ஏற்படும். தற்சமயம் இரண்டு விதமான டிவைஸ்கள் இருக்கின்றன. சின்ன டிவைஸில் நான்கு விதமான செடிகளை நடலாம். மற்றொன்றில் 12 வகையான செடிகள் வளர்க்கலாம்.  இதனுடன் ஒரு ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனும் இணைந்து வரும். இந்த அப்ளிகேஷனை உங்கள் ஸ்மார்ட் போனில் இன்ஸ்டால் செய்து உங்கள் செடி எந்த நிலையில் வளருகிறது, எவ்வளவு தண்ணீர் தேவை, ஊட்டச்சத்து போதுமா, எந்த இடைவெளியில் தண்ணீர் கொடுக்கவேண்டும்... உள்ளிட்ட அத்தனை விஷயங்களையும் போனிலேயே கண்காணிக்கலாம்.

ஒருவேளை நீங்கள் பணிநிமித்தமாக வெளியூருக்கோ அல்லது குடும்பத்துடன் சுற்றுலாவோ செல்ல வேண்டியிருந்தால் தேவையான அளவு தண்ணீரையும் ஊட்டச் சத்துக் களையும் உள்ளே நிரப்பி விட்டு நிம்மதியாக செல்லலாம். உங்கள் ஸ்மார்ட் போன் வசதி மூலம் எங்கு இருந்தாலும் அங்கிருந்தபடியே வீட்டில் வளரும் செடிகளை கண்ட்ரோல் செய்யலாம்...’’ என்று சொல்லும் யாஷ், அளவைப் பொருத்தும் செடிகளின் எண்ணிக்கையை பொருத்தும் ரூபாய் 15 ஆயிரம் முதல் இரண்டு லட்சம் வரை தாங்கள் செடிகளை விற்பதாகச் சொல்கிறார்.

‘‘இயற்கையான சூரிய ஒளியும் மண்ணும் இல்லாமல் வளரும் செடி என்பதால் இதில் ஊட்டச்சத்து குறைவாக இருக்குமோ என்ற அச்சம் தேவையில்லை. மண்ணில் இருந்தாலும் சூரிய ஒளி பட்டாலும் தாவரங்கள் அதிலுள்ள கனிமங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு வளரும். அதைத்தான் நாங்கள் பொருத்தியிருக்கும் லைட் மூலம் தாவரங்களுக்கு கொடுக்கிறோம்!’’ கட்டை விரலை உயர்த்துகிறார் யாஷ்!  

ஷாலினி நியூட்டன்