வடிவேலுக்கு வலிக்கலைனா நமக்கு வலிக்கும்!



திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியாக இருக்கும் சுந்தர்காளியின் பெயர் தமிழியல் ஆய்வுத்துறைகளில் பிரபலம். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக தமிழ் சினிமா, நாடகம், இலக்கியம், சமயம், நாட்டுப்புறக்கலை தொடர்பாக பல்வேறு ஆய்வுகளைச் செய்து கட்டுரைகளைப் படைத்திருக்கிறார்.

தொண்ணூறுகளில் இவர் கமல் நடித்த ‘குணா’ திரைப்படம் குறித்து எழுதிய கட்டுரை சினிமா ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்து, சமயம் தொடர்பாக இவர் தமிழறிஞர் தொ.
பரமசிவனுடன் கண்ட பேட்டி புத்தகமாக வந்தபோது பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. அண்மையில் இவர் சென்னை லயோலா கல்லூரியின் ஊடகத்துறை மாணவர்களுக்கு ‘தமிழ் சினிமாவில் நகைச்சுவை’ குறித்து வாசித்த ஆய்வுக் கட்டுரை மேலும் தமிழ் சமூகத்தின் மீது ஒளியைப் பாய்ச்சியிருக்கிறது.

அந்தக் கட்டுரையில் இடம்பெற்ற சில ஆழமான கருத்துகளைத்தான் இங்கே சுருக்கமாகப் பதிவு செய்துள்ளோம். மெளனப் படக் காலத்தில் நம்மிடையே நகைச்சுவைப் பாத்திரங்கள் இருந்தனவா என்று கண்டுபிடிப்பதற்கான திரைப்பட ஆதாரங்கள் இல்லை. என்றாலும் பேசும் படம் ஆரம்பமான (1930 - 1940) காலத்தில் நகைச்சுவைக் காட்சிகள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன.

* பேசும்படக் காலத்தில் படத்தின் மையக் கதையிலிருந்து எந்தவிதச் சம்பந்தமும் இல்லாமல் தனித்து விலகியே நகைச்சுவைக் காட்சிகள் இருந்தன. இது சில படங்களில் இன்றும் தொடர்வதைக் காணலாம்.u தொடக்க காலப் படங்களில் ஒரே படத்தில் நகைச்சுவை நடிகர்கள் பட்டாளமே பங்குபெற்றது. அதேபோல அந்தப் பட்டாளத்தில் கணவன் - மனைவி என ஒரு குடும்பமும் கட்டாயம் இடம்பெற்றது. இது அடுத்தடுத்த காலத்தில் இல்லாமல் போனது சிந்திக்க வேண்டியது.

* ஆரம்பக் காலப் படங்களிலிலிருந்தே ஒரு காமெடியனின் உடல் தோற்றம் வித்தியாசமாகவே உருவாக்கப்பட்டது. இது இன்றுவரை தொடர்கிறது என்பது ஆச்சரியமானதுதான். அதேபோல அந்த தோற்றத்தை வைத்துக் கேலி செய்யும் நகைச்சுவைகளும் அன்று முதல் இன்று வரை தொடர்கின்றன.

* காமெடியன்கள் ஹீரோவாக நடிப்பதும் ஆரம்பக்கட்ட சினிமாவிலேயே தொடங்கிவிட்டது. உதாரணம் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த ‘நல்ல தம்பி’, ‘நவீன தெனாலிராமன்’, ‘சந்திரஹரி’, ‘நவீன விக்கிரமாதித்யன்’.

 1950களுக்குப் பிறகு மிகைப்படுத்தப்பட்ட உடல்மொழியுடன் சேர்த்து, பேசு முறையில் வித்தியாசம் காண்பிப்பது என்னும் அடிப்படையில் நகைச்சுவையை ஏற்படுத்த நடிகர்கள் முயற்சித்தனர். உதாரணமாக சந்திரபாபு, நாகேஷ் மற்றும் எம்.ஆர்.ராதா.

 50க்குப் பிறகு ஆண் நகைச்சுவை நடிகர்களின் உடல் நளினமான பெண்மைத்தனத்தையும், பெண் நடிகைகளின் உடல் விறைப்பான ஆண் தன்மையையும் பெற்றன. இரண்டுக்கும் உதாரணம் சந்திரபாபு மற்றும் மனோரமா. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகைகளின் எண்ணிக்கை மிகச் சொற்பம். மனோரமா மட்டுமே சுமார் 1300 படங்களில் தோன்றினார். காரணம், நகைச்சுவை நடிகைகள் திரையில் ஆண்மைத்தன்மையுடன் தோன்றியது. இது எல்லாராலும் முடியாது போகவே பெண் காமெடியன்களின் எண்ணிக்கை தமிழ் சினிமாவில் அருகிவரும் நிலைக்குப் போனது.

 எம்ஜிஆர். - சிவாஜி காலக்கட்டம் மறைந்து கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட மண்வாசனை சினிமா 1976லிருந்து ஆரம்பித்தது. இதில் கவுண்டமணி, செந்தில் ஜோடி சேர்ந்த காமெடி கோலோச்சியது. இதிலும் ஆரம்பத்தில் இருந்ததுபோல் காமெடியன்களின் உடலைச் சீண்டும் நகைச்சுவைக் காட்சிகள் தொடர்ந்தன.

 80களில் செந்திலின் உடலை வைத்து கவுண்டமணி நகைச்சுவையை ஏற்படுத்தினாலும் பலநேரங்களில் கவுண்டமணியின் அதிகாரத்தைச் சீண்டக் கூடியவராகவே செந்தில் இருந்தார். இதனால் அதிகாரத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்குச் செந்திலின் என்ட்ரி ஒவ்வொரு முறையும் நகைச்சுவையை ஏற்படுத்தியது.

 மண்வாசனை சினிமாக்களில் மையமான பாத்திரங்களில் சாதி ஒரு குறிப்பிட்ட அளவு வெளிப்படுவதாக இருந்தது. அது இந்தக் காமெடியன்களுக்கு இடையிலான நகைச்சுவைக் கிண்டல்களிலும் தொனிக்கக் கூடியதாக இருந்தது. சாதி ஏற்றத்தில் கவுண்டமணி மேலே இருந்தாலும் கீழ் மட்டத்தில் இருந்த செந்திலின் இடையீடுகள் சாதி ஏற்றத்தாழ்வைச் சமன் செய்வதாக இருந்தன.

உதாரணமாக, கவுண்டமணி - செந்தில் வாழைப்பழக் காமெடியில் இரண்டு பழத்தில் ஒரு பழம் செந்திலுக்கு உரியது என்று சொல்லாமல் சொல்லியதன் மூலம் கவுண்டமணியின் சாதி மேலாதிக்கப் பிடி தளர்கிறது. கவுண்டமணி, செந்தில் காலக்கட்டம் சமூக ஏற்றத்தாழ்வை இரு மனிதர்களுக்கு இடையிலான பிரச்னையாகப் பார்க்க, அடுத்துவரும் வடிவேலு காலக்கட்டம் ஒரு தனிமனிதனுக்கும், சமூகத்துக்கும் இடையிலான முரண்பாடுகளாகப் பார்த்தது.

 வடிவேலுவின் சமூகத்துடனான முரண்பாடு வெளி ஆட்கள் மூலம் மட்டும் இல்லாது ஒரு கட்டத்தில் தன்னோடு தொடர்ந்து இருந்த நண்பர்கள் மூலமும், இறுதியாகத் தன் சொந்த மனைவி மூலமும் வருவதாக இருப்பது முரண்களின் தீவிரத்தைக் காண்பிக்கிறது.

 சமூக முரண் ஒரு கட்டத்தில் எல்லை மீறும்போது அது வடிவேலுவுக்குப் பல நேரங்களில் இன்பமாக மாறுகிறது. ஒரு மனிதன் சமூக யதார்த்தத்தை எதிர்கொள்ளமுடியாமல் போகும்போது அதைத் தன் தோல்வியாக ஏற்காமல் அந்த தோல்வியின் வலியை இன்பமாக மாற்றுவதன் மூலம் தன் சுயத்துக்கான மருந்தாக மாற்றுகிறான்.

இதைத்தான் உளவியல் தற்காதல், தற்காமம் எனும் நோய்க்குறியாகப் பார்க்கிறது. வடிவேலுவின் சுய காதல், சுயகாமம் நம் பலரிடையேயும் இருப்பதால்தான் அவரின் நகைச்சுவை நம் எல்லோரையுமே தொற்றிக்கொள்கிறது.

இதனால்தான் வடிவேலு ஒவ்வொரு முறையும் ‘வலிக்கல’ எனச் சொல்லும்போது நமக்கு ஆழமான ஒரு வலி கடத்தப்படுகிறது. நாமும் சிரிப்பதன் மூலம் அந்த வலியைத் தற்காதலாக, தற்காமமாக மாற்ற முயற்சிக்கிறோம்!
                  
டி.ரஞ்சித்