நான்... பாலம் கல்யாணசுந்தரம்



என் வாழ்க்கையை திரைப்படமா எடுக்கறாங்க. அமிதாப் பச்சன் அதுல நடிக்கறார். இதுக்காக எங்கூடவே அவர் தங்கியிருந்து என் மேனரிசங்களை தெரிஞ்சுக்கிட்டார். இந்தச் செய்தியை நீங்க பத்திரிகைகள்ல படிச்சிருப்பீங்க. அதே மாதிரி, தனது தந்தையா என்னை தத்தெடுத்து சிலகாலம் ரஜினி பார்த்துகிட்டார் என்பதும் உங்களுக்குத் தெரியும். இதுக்கெல்லாம் நான் தகுதியானவனா..? தெரியலை.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பஞ்சாயத்து களக்காடு மேலக்கருவேலங்குளம். இது ஒரு தொகுதின்னு கூட சொல்லலாம். 1940 மே மாதம் பத்தாம் தேதி அங்கதான் பிறந்தேன். பிறக்கும்போது பண்ணையார் குடும்பத்துல சின்னையாவா பிறந்தவன். அப்பா பெயர் பால்வண்ணநாதன். அம்மா பெயர் தாயம்மாள். தாத்தாதான் ஊர் தலைவர். கோயில் தர்மகர்த்தாவும் அவரே.

வசதிக்குக் குறைச்சலே கிடையாது. அந்தக் கிராமத்துல 35 முதல் 40 வீடுகள். அதுல படிப்புன்னு வெளியே வந்தது என் அண்ணன்களும், நானும் மட்டும்தான். ஸ்கூலுக்கு தனியா போயி தனியா வீடு திரும்புவேன். எங்க கிராமத்துல பள்ளிக்கூடமோ, பெரிய பலசரக்கு கடைகளோ, சரியான போக்குவரத்து வசதிகளோ கிடையாது. ஏன் பெட்டிக்கடைகள் கூடக் கிடையாது.

பதினைந்து கிலோமீட்டர் வரைக்கும் பயணம் செஞ்சுதான் படிக்க முடியும். என் கூட பிறந்தவங்க ஒரு அக்கா இரண்டு அண்ணன்கள். அக்கா பெயர் பொன்னம்மாள். ராமஸ்வாமி, மாணிக்கம்னு இரண்டு அண்ணன்கள். அவங்களெல்லாம் காலமாகி பல வருஷங்களாச்சு.

இந்துக் கல்லூரி, மதுரை தியாகராயர் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம்னு படிச்சு என் பெயருக்குப் பின்னால் M.A(Litt)., M.S.(His)., M.A.(GT)., B.Lip.Sc., DCT, DRT, DMTI, FNCW, DS என 36 எழுத்துகள் பட்டங்களா இருக்கு. எல்லா படிப்பிலும் பல்கலைக்கழகத்துலயே முதல் மாணவனா வந்தேன்.
ஒரு சின்ன சுயநலம்தான் எனக்குள்ள இந்த மாற்றத்தை ஏற்படுத்துச்சு.

அதாவது எங்க ஊர்ல நான் மட்டும்தான் ஒரே ஆளா பள்ளிக்கு போயிட்டு வந்துட்டு இருந்தேன். எனக்கு முன்னாடி அக்கா, அண்ணன்கள். எங்களைத் தவிர வேறு யாருமே படிப்புக்காக ஊரை விட்டு வெளியே போனதில்லை. ஒருவேளை என் கிராமத்து பிள்ளைகளும் என் கூட பள்ளிக்கு வந்தா பேச்சுத் துணைக்கு நண்பர்கள் கிடைப்பாங்களேனு நினைச்சுதான் அவங்களையும் ஸ்கூலுக்கு கூட்டிட்டு போகணும்னு நினைச்சேன்.

அப்ப எல்லாம் ஸ்கூலுக்கு போறப்ப அம்மாவும் பாட்டியும் நிறைய காசு கொடுத்து அனுப்புவாங்க. அந்த காசை எல்லாம் சேர்த்து வைச்சு கிராமத்து பசங்களை பள்ளிக்கூடத்துக்கு கூட்டிட்டு போனேன். அப்படித்தான் என்னுடைய கல்விக்கான முதல் பணி ஆரம்பிச்சது. ஆனா, என்கிட்ட இருக்கற குறை என் குரல். கீச்சுக் குரலா இருக்கும். பலரும் கிண்டல் செய்வாங்க. அதையெல்லாம் பொருட்படுத்தவே மாட்டேன். மன உளைச்சல் அதிகமாகி தற்கொலை எண்ணம் கூட வந்திருக்கு.

எனக்கும் ‘கல்கண்டு’ ஆசிரியர் தமிழ்வாணன் ஐயாவுக்கும் கடிதப் போக்குவரத்து இருந்த நேரம் அது. அவர் கிட்டவே போனேன். ‘உனக்கு முன்னாடி உன் அண்ணங்க பள்ளிக்குப் போனாங்க. ஆனா, அவங்க தங்க கூட கிராமத்து பசங்களும் படிக்கணும்னு நினைக்கல. நீ அப்படி யோசிச்சிருக்க. அதுதான் நீ’ அப்படின்னு சொன்னார்.  

‘நீ என்ன குரல்ல பேசுறேங்கறது உனக்கு அடையாளம் இல்ல. உன்னைப் பற்றி இந்த ஊரும் உலகமும் என்ன பேசுது..? அதுதான் உன் அடையாளம். ஊருக்கு போய் முதல்ல நீ செய்துகிட்டு இருக்கிற காரியத்தை சீரான முறைப்படி செய். ‘நடராஜன் நகர் இளையோர் சங்கம்’னு ஆரம்பிச்சு உன்னால் முடிந்த உதவிகளை படிக்கிற பிள்ளைகளுக்கு தொடர்ந்து செய்’ அப்படின்னு சொன்னார். அதை அப்படியே தொடர்ந்து செய்தேன்.  

என் குரலை வைச்சுக்கிட்டு என்னால ஆசிரியர் பணிக்கு எல்லாம் போக முடியாது. ஆனா, என் கனவு ஆசிரியரா ஆகணும் என்பதுதான்.
இதுக்கிடைல ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் எங்க ஸ்கூலுக்கு வந்து பல குரல்கள்ல பேசி அசத்தினார். அவர் கிட்ட, ‘என்னாலயும் இந்த மாதிரி பல குரல்ல பேச முடியுமா’னு கேட்டேன்.

‘நிச்சயமா முடியும்’னு எனக்கு டிரெயினிங் கொடுத்தாரு. சொன்னா நம்ப மாட்டீங்க. பயிற்சி எடுத்துக்கிட்ட பிறகு கல்லூரில பேராசிரியரானேன். நான் வேலைப் பார்த்த அத்தனை வருடங்களும் என்கிட்ட படிச்ச மாணவர்களுக்கு என் உண்மையான குரல் தெரியாத அளவுக்கு மாறினேன். கம்பீரமான குரல்ல பேசி வகுப்பு எடுத்தேன்.

ஒரு முறை என்னைத் தேடி வந்தவங்க, ‘கல்யாணசுந்தரம் சாரை பார்க்கணும்... அவர் குரல் கூட கீச்சுக்குரலா இருக்கும்’னு கேட்டாங்க. ‘கல்யாணசுந்தரம் சார் இருக்காரு. ஆனா, அவர் கம்பீரமான குரலாச்சே...’னு மாணவர்கள் சொல்லியிருக்காங்க!

30 வருடங்கள் பேராசிரியரா இருந்துட்டு அப்புறம் புத்தகங்களுடன் வேலை செய்யற லைப்ரரி அதிகாரியா மாறினேன்.
பேராசிரியர்களுக்கான அரியர் பணம் வந்தது. ஒவ்வொருவருக்கும் சுமார் ஒன்றரை லட்சம் வரை கிடைச்சது. எங்க ஏரியா கவுன்சிலரை சந்திச்சு கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு செலவு செய்யும்படி மொத்தப் பணத்தையும் கொடுத்தேன்.  

ஒருநாள் திடீர்னு கவுன்சிலர் என்னை அழைச்சார். போனா... பெரிய மேடை அமைச்சு எனக்குப் பொன்னாடை எல்லாம் போர்த்தி அவர்கிட்ட நான் கொடுத்தப் பணத்தை என்கிட்டயே கொடுத்து, ‘இப்ப கொடுங்க சார்... உங்களைப் பார்த்தாவது மத்தவங்க நல்லது செய்யட்டும்’னு சொன்னார். பத்து வருஷ காலம் என் சம்பளத்தை பைசா செலவழிக்காம அப்படியே கல்வில பின்தங்கிய குழந்தைங்க படிக்க கொடுத்தேன். பல பத்திரிகைங்க என்னைத் தேடி வந்து பேட்டி எடுத்து போட்டாங்க. அதுக்கு அப்புறம் பலரும் என்னைத் தொடர்பு கொண்டு ‘பணமாவோ பொருளாகவோ உங்ககிட்ட தர்றோம்... நீங்க அதை மத்தவங்களுக்கு கொடுங்க’னு சொன்னாங்க. நான் அதை வாங்க மறுத்து, நேரடியா அவங்களே உதவறா மாதிரி வழி செஞ்சேன்.  
கல்விக்கு மட்டுமில்ல சென்னை வெள்ளம் காலத்துல அடிப்படைப் பொருட்களை வாங்கி தேவைப்படுபவர்களுக்கு அந்தந்த குழுக்கள் வழியா விநியோகிக்கவும் செஞ்சேன். இதன் வழியா எங்க ‘அன்பு பாலம்’ அமைப்பு பரவலா மக்கள் மத்தில போய் சேர்ந்தது.  

35 வருடங்கள் பேராசிரியரா வேலை செஞ்சு அந்த சம்பளத்தை எல்லாம் ஏழைகளின் படிப்புக்கு கொடுத்தேன். என்னுடைய செலவுக்கு இரவு உணவு விடுதிகள்ல சர்வரா பணிபுரிஞ்சேன். நான் திருமணம் செய்துக்கலை. தனியாதான் இருக்கேன்.

ஒருமுறை எனக்கு உடல்நிலை சரியில்லாம போச்சு. அப்ப எனக்கு ‘ஒரு ரூபாய் அனுப்புங்க’னு மக்கள்கிட்ட கேட்டேன். என்னை மதிச்சு ரஜினி முதல் மேயர், சபாநாயகர், கவர்னர், குடியரசு தலைவரா இருந்த அப்துல் கலாம் ஐயா வரைக்கும் அனுப்பினாங்க! ‘இந்தியாவின் சிறந்த நூலகர் விருது’ கொடுத்து நம்ம அரசு என்னை கவுரவிச்சிருக்கு. இதுக்காக கிடைச்ச பரிசுத் தொகையையும், என் பங்கா வந்த சொத்தையும் ஏழைகளின் கல்விக்கே கொடுத்துட்டேன்.

ரஜினிக்கு என் மேல பிரியம் அதிகம். அதனாலயே தன் தந்தையா என்னை தத்தெடுத்து சில காலம் பார்த்துகிட்டார். இப்ப நினைச்சாலும் நெகிழ்ச்சியா இருக்கு. பில் கிளிண்டன் இந்தியா வந்தப்ப அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம். இன்னொருவர் நான்! ‘ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்’ அப்படீன்னு அமெரிக்க விருது (Man of Millinium) எனக்கு கிடைச்சிருக்கு. இதன் வழியா 6.5 மில்லியன் டாலர் (30 கோடி) பரிசா கிடைச்சது. அதையும் குழந்தைகள் நலனுக்காக கொடுத்துட்டேன்.

கல்லூரில நான் படிச்சப்பவே இப்படித்தான் இருந்தேன். சென்னை பல்கலைக்கழகத்துல நான் படிச்சப்ப இந்திய - சீன போர் வந்தது. அப்போதைய பிரதமர் நேரு, வானொலில பேசினார். அதைக் கேட்டுட்டு தேசியப் பாதுகாப்பு நிதிக்காக எட்டரைப் பவுன் மைனர் தங்கச் சங்கிலியை அன்றைய முதல்வர் காமராஜர்கிட்ட கொடுத்தேன். இதன் வழியா முதல் நிதியுதவி கொடுத்த மாணவனா என் பெயர் பரவிச்சு.

இப்ப கொரோனா காலத்துலயும் என்னால முடிஞ்ச உதவிகளை மக்களுக்கு செய்துட்டு இருக்கேன். என் பிறந்தநாள் அப்ப அன்பளிப்பா அரிசி கேட்பேன். அப்படி வந்த அரிசியே இப்ப 9 ஆயிரம் கிலோ இருக்கு. எல்லாத்தையும் சீரான முறைல மக்களுக்கு சேர்க்கறோம்.

எதற்காகவும் பேராசைப்படாதே... எது கிடைச்சாலும் அதில் பத்தில் ஒரு பங்கை தானமாக செய்... தினமும் ஓர் உயிருக்காவது நல்லது செய்... இந்த மூன்றும் எங்கம்மா எனக்கு சின்ன வயசுல சொன்னது. இப்ப வரை அதைக் கடைப்பிடிக்கறேன்!

ஷாலினி நியூட்டன்