கொரோனா உயிரிழப்பைத் தடுக்கும் மருந்து!



மதுரை நோய் எதிர்ப்பியல் வல்லுனரின் சாதனை

கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டறிய உலகம் முழுவதும் தீவிர முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் இறப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதுவரை உலகில் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான பேர்களை காவு வாங்கியிருக்கிறது கொரோனா! இதனால், உலகமே செய்வதறியாமல் திகைத்து போய் நிற்கிறது.

இந்நிலையில்தான் இப்படியான உயிரிழப்புகளை மோனோ குளோனல் ஆன்டிபாடி என்னும் மருந்து மூலம் தடுக்க முடியும் என்பதைக் கண்டறிந்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த நோய் எதிர்ப்பியல் நிபுணரான கௌதமி பாலசுப்ரமணியன். இவர், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நோய் எதிர்ப்பியல் பிரிவில் மாஸ்டர் டிகிரி முடித்தவர். தவிர, அமெரிக்காவிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்திலும் சிறிது காலம் பயின்றுள்ளார்.  

‘‘இது கொரோனாவை குணப்படுத்துற மருந்தில்ல. கொரோனாவால ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கான மருந்து! அதாவது, இந்த மருந்து மூலம் அதீத வீக்கம், காய்ச்சல், மூச்சுத்திணறலால் ஏற்படும் இறப்புகளைத் தடுத்து நிறுத்தலாம்...’’ என்கிறவர், விரிவாக பேசினார்.

‘‘பொதுவா, DNA அல்லது RNAவுக்கு அடிப்படையா ஒரு கட்டமைப்பு உண்டு. இந்தக் கட்டமைப்பு மாறுவதை மியூடேஷன்னு சொல்றோம். இதுவரை வந்த ஃபுளு வைரஸ் எல்லாம் பத்து வருஷங்களுக்கு ஒரு முறையே மியூடேஷன்னு சொல்லப்படுற மாற்றம் அடைஞ்சிருக்கு. ஆனா, இந்த கொரோனா வைரஸ் ஒரே மாசத்துல ரெண்டு முறை மியூடேஷன் ஆகியிருக்கு. அதனாலதான் இதுக்கு மருந்து கண்டுபிடிக்கிறதுல இவ்வளவு சிக்கல்.

நான் முதுநிலை படிக்கும் போது டிஎன்எஃப் ஆல்பானு (TNF - alpha) ஒரு புரோட்டீன்ல ஆராய்ச்சி செய்தேன். இதன் பயன்பாடு கேன்சர், எச்ஐவி, முடக்குவாத நோய்களில்  இருந்துச்சு. அதனால, குறிப்பா அதை எடுத்து படிச்சேன். அதன் வழியாதான் இப்ப கொரோனாவால ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்குற மருத்துவ முறையை பரிந்துரைக்கிறேன்.

நம் உடல்ல இந்த TNF - alpha வின் வேலை ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுவா, ஒரு வைரஸ் நம்ம உடலுக்குள்ள போகும்போது அதை வெளியே தள்ள நம்ம உடல்ல வலி மற்றும் வீக்கம் ஏற்படும். வெப்பநிலையும் அதிகரிக்கும். அதனாலயே நமக்கு காய்ச்சல் வரும். இப்படி வைரஸ் வர்றதை தெரிஞ்சு இந்த வேலைகளைச் செய்ய தூண்டுறதே TNF - alpha புரோட்டீனும் மற்றும் சில புரோட்டீன்களுமே.

ஆனா, இந்த கொரோனா நோய்ல TNF - alpha புரோட்டீன் அதிகமாக வேலை செய்யுது. அதாவது, இந்த வைரஸ் உள்ள வந்ததும் TNF - alpha ஓவர் ரியாக்‌ஷன் பண்ணி வீக்கம், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலை அதிகமாக்குது.

இதே நேரத்துல நம் நோய் எதிர்ப்பு செல்களும் இந்தக் கொரோனா வைரஸை கொல்லாமல் உடலில் உள்ள நம் சொந்த செல்களையே கொன்னுடுது. இதை ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர்னு சொல்வோம். இதுக்குக் காரணம், நம்ம நோய் எதிர்ப்பு செல்கள்ல கொரோனா வைரஸ் குழப்பத்தை ஏற்படுத்துவதுதான்.  

அதனால, நான் முதற்கட்டமா TNF - alphaவின் ஓவர் ரியாக்‌ஷனைக் கட்டுப்படுத்தணும்னு நினைச்சேன். அதாவது அதன் ஒரு பகுதியை பிளாக் பண்ணிட்டா போதும். இதை நான் ஏற்கனவே, என்னுடைய முடக்குவாத நோய் ஆராய்ச்சியில செய்திருக்கேன்.

பொதுவா, TNF - alphaவை பிளாக் பண்ண ஆன்டி TNF-alpha தெரபி இருக்கு. இதுல என்னுடைய ஆய்வு குறிப்பா TNF - alphaவின் ஒரு பகுதியை மட்டும் பிளாக் பண்றது. அதை மோனோ குளோனல் ஆன்டிபாடி மூலம் செய்யலாம்.

இந்த மோனோ குளோனல் ஆன்டிபாடியை எப்படி தயாரிக்கணும்ங்கிற செயல்முறை எனக்கு தெரியும். கொரோனோ வைரஸில் பாதிக்கப்பட்ட  நபர்
களில் TNF - alphaவை கட்டுப்படுத்த தகுந்தவாறு மோனோ குளோனல் ஆன்டிபாடியை உருவாக்கணும். இதை அறிவியல் ரீதியாக
பெப்டைட் தொகுப்பு (Peptide synthesis) முறையில் செய்யணும்.

இதை கொரோனாவால பாதிக்கப்பட்டவங்களுக்குக் கொடுக்கும் போது TNF - alphaவின் ஒருபகுதியை பிளாக் பண்ணி, அதை அதிகமா செயல்படவிடாமல் தடுத்திடலாம். இதனால வீக்கம், காய்ச்சல், மூச்சுத்திணறல் குறையும். உயிரிழப்புகளும் இருக்காது...’’ என்கிறார் கௌதமி பாலசுப்ரமணியன்.இப்போது இவர் தன்னுடைய ஆய்வை உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு அனுப்பியிருக்கிறார்.‘‘கொரோனா வைரஸ் பத்தின எல்லா ஆய்வுகளையும் வச்சுதான், பயோ மெடிசன் லேபில் உள்ள தொழில்நுட்ப முறைகள் மூலம் கிடைக்கும் மோனோ குளோனல் ஆன்டிபாடியை மருந்தாக செலுத்த முடியும்னு பரிந்துரைக்கிறேன்.

இதை ஐசிஎம்ஆர்னு சொல்லப்படுற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், உலக சுகாதார நிறுவனம், எய்ம்ஸ் நிறுவனம், தமிழக சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கும் அனுப்பியிருக்கேன். ஆனா, இதுவரை யாரும் ரெஸ்பான்ட் பண்ணல...’’ என வேதனை தெரிவிப்பவர், ‘‘இந்த மோனோ குளோனல் ஆன்டிபாடி கான்செப்ட்டும் புதுசில்ல. நிறைய நோய்களுக்கு கொடுக்கக் கூடியதுதான். ஆனா, அந்த மருந்துகள் வெவ்வேறு புரோட்டீனை கட்டுப்படுத்தற மாதிரி இருக்கும்.

என்னுடைய மருந்து முற்றிலும் புதுசு. இது, TNF - alphaவை கட்டுப்படுத்துற மோனோ குளோனல் ஆன்டிபாடி மருந்து. இதுவரை இந்த மருந்து  மார்க்கெட்ல கிடையாது. இது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவங்களுக்கு நிச்சயம் நல்லா வேலை செய்யும்...’’ நம்பிக்கையுடன் சொல்கிறார் கெளதமி பாலசுப்ரமணியன்.

பேராச்சி கண்ணன்