நியூஸ் நூடுல்ஸ்!



இன்றும் உலகின் பல பகுதிகளில் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அன்புக்குரியவர்களின் முகம் பார்க்க டிஜிட்டல் மட்டுமே உதவிசெய்கிறது. திருமணம் முதல் மரணம் வரை எல்லாமே வீடியோ காலில்தான்.
இந்நிலையில் அயர்லாந்தின் லைக்காவிற்கு தூரத்திலிருந்து நண்பன் ஹென்றியைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. ஹோவார்டு என்பவர் தனது டேப்லெட் மூலம் ஹென்றியை தொடர்புகொள்ள லைக்காவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். வீடியோ காலில் லைக்காவின் முகத்தைப் பார்த்ததும் ஹென்றி மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்திருக்கிறது. லைக்காவும் ஹென்றியும் மனிதர்கள் அல்ல; நாய்கள்!

சமூக வலைத்தளங்களில் நண்பர்கள் தங்களுக்குள் பல்வேறு விதமான சவால்களை விட்டுக்கொண்டிருக்கின்றனர். இதில் உலக அளவில் ஹிட் அடித்த ஒரு சவால் ‘Tiny Face Makeup challenge’. கொரோனா காலத்தில் எல்லோரும் மாஸ்க் அணிந்து பாதி முகத்தை மூடியிருக்கிறோம். மூடப்படாமல் இருக்கும் இடத்தில் ஒரு குட்டி முகத்தை வரைய வேண்டும்.

இந்தச் சவாலில் பங்குபெற்று வாகை சூடியிருக்கிறார் மேக்-அப் கலைஞர் ஜேமி பிரெஞ்ச். மூக்கின் மேல் அவர் வரைந்திருக்கும் உதடுதான் மேற்கத்திய இளசுகளுக்கு சவாலான மேக்-அப்.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனரான எலன் மஸ்கிற்கும் அவரது காதலியான கிரிம்ஸிற்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனது மகனுக்கு எலன் சூட்டிய பெயர்தான் இப்போது டுவிட்டரில் டிரெண்ட். பெயருக்கான அர்த்தத்தைத் தேடி இணையவாசிகள் தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கின்றனர். விரைவில் பெயருக்கான அர்த்தத்தை எலனே வெளிப்படுத்துவார் என்று ஆறுதல் கமெண்டுகளும் அள்ளுகின்றன. டிரெண்டான பெயர் - அந்தக் குழந்தையின் பெயர் - X AE A-12!

துருக்கியின் வடக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள முக்கிய நகரம் சாம்சன். சுமார் 14 லட்சம் பேர் வாழக்கூடிய நகரம் இது. இதன் சாலைகள் எப்போதுமே வாகனங்களால் நிறைந்து காணப்படும். லாக்டவுனால் வெறிச்சோடி கிடக்கும் சாம்சன் சாலைகளில் செம்மறி ஆடுகள் கூட்டமாக பயணிக்கின்றன. சாலையின் ஓரத்தில் அழகுக்காக வளர்க்கப்படும் புற்களை மேய்கின்ற செம்மறி ஆடுகள் வைரலாகிவிட்டன.

இங்கிலாந்தில் அதிவேகமான ரயில் பயணத்துக்கான திட்டத்தின் பெயர் ‘ஹைஸ்பீடு 2’. இதற்காக ரயில்பாதை அமைக்கும் பணிகள் நடந்துவருகிறது.
பல ஆயிரம் கோடி செலவில் உருவாகும் இத்திட்டத்தின் கீழ் இயங்கும் ரயில்கள் மணிக்கு 330 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை.
விஷயம் இதுவல்ல. ரயில் பாதை அமைக்க வேண்டுமானால் மரங்களை வெட்டுதல் உட்பட பலவிதமான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால் இதற்கு எதிராக இயற்கை ஆர்வலர்கள் போராடிவருகின்றனர். அந்த ஆர்வலர்களில் சிலர் மரங்களில் பரண் அமைத்து தங்கி லாக்டவுன் காலத்தை கழித்துவருகின்றனர்.

அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தன் அம்மாவிடம் லம்போர்கினி கார் கேட்டிருக்கிறான். அம்மா மறுத்துவிட்டார்.
கலிபோர்னியாவில் இருக்கும் அக்கா வாங்கித் தருவார் என்ற நம்பிக்கையில் வீட்டிலிருந்த காரை எடுத்துக் கிளம்பிவிட்டான் அந்தச் சிறுவன்!
வாகன ஓட்டம் இல்லாத சாலையில் அவன் காரை ஓட்டிச்சென்றபோது காவல்துறையிடம் மாட்டிவிட்டான். காவல்துறையால் நம்பமுடியவில்லை. ஆம்; அந்தச் சிறுவனுக்கு வயது 5. அவன் கார் வாங்க வைத்திருந்த தொகை 3 டாலர்!எந்த வாகனத்தின் மீதும் பொருட்களின் மீதும் மோதாமல் காரை ஓட்டியிருக்கான்.

பெருவின் ராக் ஸ்டாராக மாறிவிட்டார் மரியா. இவரை மக்கள் அன்புடன் டோனி என்று அழைக்கின்றனர். குழந்தைகளும் பெண்களும் மரியாவுடன் செல்ஃபி எடுக்க போட்டிப் போடுகின்றனர். தொலைக்காட்சி சேனல்கள் இவரது நேர்காணலுக்காக காத்திருக்கின்றன. கலைஞர்கள் மரியாவின் ஓவியத்தை வரைந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளுகின்றனர்.

யார் இந்த மரியா? அப்படி அவர் என்ன செய்துவிட்டார்?

பெருவின் நிதி அமைச்சர்தான் இந்த மரியா. கொரோனா காலத்தில் இவர் தீட்டிய திட்டங்கள் சாதாரண மக்களுக்கும் சின்னதாக தொழில் செய்துகொண்டிருந்தவர்களுக்கும் பெரும் பலனைத் தந்திருக்கிறது. இத்தனைக்கும் மரியாவின் வயது 35. இவர் மட்டும் இப்போது நிதி அமைச்சராக இல்லாமலிருந்தால் அந்நாடு பெரு ஆட்டம் கண்டிருக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

கரீபியன் கடலில் உள்ள ஒரு குட்டித்தீவு பொனேயர். சுமார் 3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருடந்தோறும் இங்கே வந்து போகின்றனர்.
ஸ்கூபா டைவிங் மக்களைக் கவர்ந்தாலும் இங்கே வந்து இறங்கியவுடன் கடலும் காற்றும்தான் முதலில் வசீகரிக்கின்றன. அடுத்து முக்கியமாக தீவின் தென் கிழக்குப்பகுதியில் வரிசையாக வீற்றிருக்கும் உப்பு பிரமிடுகள். ஒவ்வொரு பிரமிடும் 50 அடி உயரமுடையவை. 99.6 சதவீதம் தூய்மையான உப்பால் ஆன இந்த பிரமிடு 10 ஆயிரம் மெட்ரிக் டன் எடை கொண்டது.

கொரோனா காலத்தில் ஏற்பட்ட லாக்டவுன், வாகனங்களைப் பயன்படுத்தாமை போன்ற பல்வேறு காரணங்களால் ஓசோன் படலத்தில் இருந்த ஓட்டை அடைந்துள்ளது, காற்று மாசுபாடு குறைவு போன்ற பல நல்ல விஷயங்கள் நடந்தது. ஆனால், 2070ல் சுமார் 300 கோடி பேர் கடுமையான வெப்பச்சூழலில் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இப்போது 100 கோடிக்கும் குறைவானவர்களே இச்சூழலில் இருக்கின்றனர்.

தாய்லாந்தில் செல்லப்பிராணிகளுக்கான அழகு நிலையத்துக்கு தனி மவுசு. அதனால் இந்தத் தொழிலில் பல இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலால் இந்த பிசினஸும் லாக்டவுனுக்குள் மாட்டிவிட்டது. லாக்டவுன் தளர்வில் சில கட்டுப்பாடுகளுடன் செல்லப்பிராணிகள் அழகு நிலையத்தை திறக்கலாம் என்று அரசு அறிவிக்க, கூட்டம் அலைமோதுகிறது.

இது மனிதர்களுக்கான அழகு நிலையத்துக்குச் செல்பவர்களைவிட அதிகம். உலகப்புகழ்பெற்ற ஷாங்காய் டிஸ்னிலேண்ட் பார்க்கும் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டது.

தொகுப்பு: த.சக்திவேல்