ஊரடங்குக்குப் பின் பேருந்துகள் எப்படி இயங்கப் போகின்றன..?



கொரோனாவால் உலகம் முடங்கி கிடக்க, உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை ரத்த நாளங்களாக செயல்படும் எந்த ஒரு போக்குவரத்தும் இயங்காத நிலையில் உள்ளது. Work from home, Love in the time of CORONA போன்ற புதிய சொல்லாடல், சூழல் எல்லோர் வாழ்க்கையையும் ஆக்கிரமித்துள்ளது. மனிதர்கள் தங்களை தாங்களே கண்டு கொள்ள ஒரு வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கை ஓர் உள்ளரங்க விளையாட்டை போல் மாறியுள்ளது. இதையெல்லாம் விட்டு மீண்டும் பழைய உலகத்தினுள் நுழைய ஒரு கருவி போக்குவரத்து.

கடந்த மே ஒன்றாம் தேதி மத்திய அரசு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து போக்குவரத்து துறையில் சில தளர்வுகளை கொண்டு வந்தது. ஆனால், நீண்ட நாட்களாக இயங்காமல் இருந்த பேருந்துகள் இயங்குமா, சொந்த ஊர் சென்றவர்கள் ஊரடங்கு நீங்கும் போது மீண்டும் வேலைக்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா, பேருந்து பயணங்களில் எந்த மாதிரியான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது… போன்ற கேள்விகளோடு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியூ) பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினாரை அணுகினோம்.

“பேருந்துகள் நிறுத்தி வைத்திருப்பதால் பெரிய கோளாறு ஏதும் ஆகாது. அதற்கான முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் வண்டியை உடனே எடுக்க முடியும். ஆனால், பேருந்துகளை எப்படி ஓட்ட வேண்டுமென்பதை அரசுதான் தீர்மானிக்கப் போகிறது.

அரசு, நாம் என்ன சொன்னாலும் கேட்காது. பேருந்துகள் இயங்கக் கூடிய சூழல் வந்தாலும், சமூக இடைவெளி கடைபிடிக்க சொல்கிறார்கள். அதனால், ஒரு பேருந்தில் 20 நபருக்கு மேல் ஏற்றக் கூடாது. மக்களும் இதை உணர வேண்டும். அங்கு வந்து சண்டையிடக் கூடாது.
அரசு தன்னிடமிருக்கும் எல்லா பேருந்துகளையும் இயக்கினால்தான் இது சாத்தியம். ஓட்டுனர், நடத்துனர் வேலை நேரத்தை குறைத்து ஷிஃப்ட் கணக்கில் கொண்டு வந்தால், 24 மணி நேரமும் ஓட்ட நாங்கள் தயார். இப்போது அரசே குழம்பிப் போய் உள்ள நிலையில், இதை எப்படி இயக்க போகிறார்கள் என்பதை திட்டவட்டமாக சொல்வது கடினம்.

சொந்த ஊருக்கு சென்றவர்கள் எல்லோரையும் உடனடியாக வரவைக்க முடியாது. எப்படியும் பத்து, இருபது நாட்கள் ஆகும். அதற்கேற்றார் போல் அரசு திட்டமிட வேண்டும். அந்த திட்டங்களுக்கு முன் எங்களை போன்றவர்களோடு ஆலோசனை செய்தால் நன்றாக இருக்கும். அதேநேரம் நாங்கள் பேருந்துகள் இயக்கும்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசாங்கம் எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்...” என்கிறார் கே.ஆறுமுக நயினார்.

தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் மொஹமத் அப்சல் கூறுகையில், ‘‘கொரோனா காலத்தில் போக்குவரத்தும், சுற்றுலாவும் அதிக அளவில் பாதித்துள்ளது. சில நிறுவனங்களுக்கு இயங்கிக் கொண்டிருந்த பேருந்துகளுக்கு பணம் செலுத்த முடியாத சூழல் மார்ச் மாதத்திலேயே
உருவானது.

தனிநபர் கையில் ஏதும் இல்லை. இப்போது அரசையும், வங்கிகளையுமே நம்பி இருக்கிறோம். வங்கிகளுக்கும் ரிசர்வ் பேங்க் சரியான விதிமுறைகளை கொடுக்க வேண்டும். மூன்று மாத இஎம்ஐ கட்டுவதற்கு நேரம் கொடுத்தாலும் அதற்கு வட்டி போடுகின்றனர். அரசு நஷ்ட ஈடு கொடுக்கும் வரை ஏதும் நடக்காது. இந்தத் துறை இயல்பு நிலை வருவதற்கு எப்படியும் ஓராண்டு ஆகும். இதனால், வங்கிகளும் ஓராண்டிற்கு இஎம்ஐ, வட்டியை எல்லாம் தள்ளிப் போட்டால் நிம்மதி அடைவோம்.

சுங்க வரி, சாலை வரி போன்றவற்றுக்கு விலக்கு அளிக்க வேண்டும். குறைந்தபட்சம் இயல்பு நிலைக்கு மாறும் வரையிலாவது இதைச் செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு இஎஸ்ஐ, பிஎஃப் தொகையிலிருந்து கொடுத்து உதவ வேண்டும். நாம் கட்டும் வரிகள் எல்லாம் இது போன்ற நெருக்கடி காலங்களுக்குதானே... அரசு இப்போது முழுக்க முழுக்க கொரோனாவை மையம் கொண்டிருக்கிறது. கூடவே மக்களின் வாழ்வாதாரத்தையும், பசியையும் உணர வேண்டும்.

வாகனங்களை நிறுத்தியே வைத்திருப்பதால் பேட்டரி செயலிழந்து போகும். நாசில் எல்லாம் அடைத்திருக்கும். இதையெல்லாம் சரி செய்து மீண்டும் ஒவ்வொரு வண்டியையும் இயக்க குறைந்தது ஒரு லட்சம் வரை செலவாகும்...” என்ற மொஹமத் அப்சலிடம் இத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியில் மீண்டும் பேருந்துகள் இயங்கினால், டிக்கெட் விலை உயருமா என்று கேட்டோம்.

“அது அரசு கூறும் முடிவை பொறுத்தது. மக்களும் பொருளாதார நெருக்கடியில் இருக்கின்றனர். அதிகமாகவும் கட்டணம் வாங்க முடியாது. அரசு அதை உணர்ந்து வரி தளர்வுகள், வங்கி கடன்களுக்கான அவகாசத்தை வழங்கினால் மக்களின் தலையில் சுமை ஏறாது. 30% டீசல், 18% வரி. அரசு இதை எங்கள் மூலமாக மக்களிடம் மறைமுகமாக வாங்கிக் கொள்கிறார்கள். நாங்கள் இடைத்தரகள் போல் செயல்படுகிறோம். ஆனால், கெட்ட பெயர் மட்டும் எங்களுக்கு. இதில் 3% மிச்சமாவதே பெரிய காரியம்.

ஊரடங்கு நீங்கினாலும், சமூக இடைவெளி அவசியம் என்று அச்சமடைய வைத்துள்ளனர். பேருந்துகளில் 20 பேர் பயணித்தாலும், நேரடியாக ஒருவரை தொடவில்லை என்றாலும், கம்பிகள் இருக்கைகள் மூலமாக தொட்டுக்கொள்ள வாய்ப்புண்டு. இனி சந்தேகத்தோடும், பயத்தோடும்தான்
பயணங்கள் அமைய போகிறது. ஏசி பேருந்துகளில் ஜன்னல் அடைப்பட்டிருக்கும்.

இதையெல்லாம் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். பேருந்துகளை இயக்குவதற்கு முன் எங்கள் அனுபவங்களையும் பரிசீலிக்க வேண்டும். தனியார் பேருந்து தொடர்பான ஒருவருக்கு கொரோனா தொற்று வந்தால், அந்த நிறுவனத்தையே மூட ஆணை வரும். எனவே நாங்களும் கவன குறைவாக இருக்கப் போவதில்லை. எல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை அரசும் உணர்ந்து செயலாற்றினால் நன்றாக இருக்கும்...” என்கிறார் மொஹமத் அப்சல். இந்தக் கட்டுரை அச்சேறும் வரை பேருந்து இயக்குவது தொடர்பான எந்த ஆலோசனைக் கூட்டத்தையும் அரசு நடத்தவில்லை!                  
அன்னம் அரசு