தழும்பு ஏற்படாது... ஒரு மாதம் பயன்படுத்தலாம்..!



சென்னை இளைஞர்கள் தயாரித்திருக்கும் ஃபேஸ் ஷீல்ட் மாஸ்க்

கொரோனா தொற்று பரவாமல் இருக்க மாஸ்க் அணிய வேண்டும். ஆனால், ஆறு மணி நேரங்களுக்கு ஒருமுறை மாஸ்க்கை மாற்றிக் கொண்டே இருக்கவேண்டும். தவிர மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் மெடிக்கல் மாஸ்க்குகள் அதிகம் அணிந்தால் முகத்தில் வடுக்கள் அல்லது தழும்புகள் ஏற்படும்.

‘‘இதற்கு தீர்வு எங்களிடம் இருக்கு...’’ என பெருமையாக சொல்கிறார்கள் ரோஸு ரெட்டி தலைமையில் ஷீல்ட் மாஸ்க் தயாரித்திருக்கும் பத்மஜா, சாய்குமார் மற்றும் ஜெய பிரியா உள்ளிட்ட மூவர் குழு. இவர்கள் முழு முகத்தையும் கவர் செய்து கொள்ளும்படியான ஃபேஸ் ஷீல்டை
உருவாக்கியிருக்கிறார்கள்.

செமி ஹெல்மெட் பாணியில் ஹேட் பேண்ட் உடன் பிவிசி முக கவசம் உள்ளிட்டவை அடங்கிய மாஸ்காக உருவாக்கியிருக்கிறார் கள். இதை ஒரு மாதம் வரையிலும் பயன்படுத்தலாம். ‘‘NEXTGen3D சர்ஜிக்கல் கருவிகள், உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் செய்யறதுதான் எங்கள் பணி. முதலில் அப்போலோ மாதிரியான தனியார் நிறுவனங்கள் நேரடியாக இந்த ஷீல்ட் மாஸ்க் வாங்க முன்வந்தாங்க...” என சொல்லத் தொடங்கினார் பத்மஜா.

‘‘இவை அசிட்டோன் கொண்டு பிவிசி முறைப்படி தயாரிக்கப்படுவதால் திரவ துகள்களை முகத்துக்கு நெருங்க விடாது. பெரும்பாலும் திரவப் பொருட்களை லீக் ஆக விடாமல் பார்த்துக் கொள்வதே பிளாஸ்டிக்கின் குணம்தான்.

ஆனாலும் என்னதான் நாம சாதாரண மாஸ்குகள் அணிந்தாலும் கண்களுக்குனு தனியா நாம எவ்வித மாஸ்களும் அணியறதில்ல. இந்த மாஸ்க் ஷீல்ட் காது, மூக்கு, கண்கள், வாய்னு முழு முகத்தையும் மறைப்பதால் சாதா மாஸ்கை விட தொற்றிலிருந்து அதிக பாதுகாப்பு தரும்.மார்ச் முதல் வாரத்தில்தான் இந்த ஷீல்டு குறித்த ஐடியாவை சாய்குமார் எங்களிடம் சொன்னார். முதலில் 3d பிரின்டர்ல இதை உருவாக்கினோம். 3டி பிரின்டர்ல இதை உருவாக்க 30 நிமிடங்களும் அதை ஃபிக்ஸ் செய்ய கூடுதலா 10 நிமிடங்களும் ஆகும்.

தவிர 3-டி பிரின்டர்ல இங்க், எடுத்துக்கொள்ளும் நேரம் உட்பட அனைத்துமே அதிகம். ஸோ, இதுக்கான மோல்டை உருவாக்கி இன்ஜெக்‌ஷன் மோல்ட் முறைப்படி தயாரிக்க ஆரம்பிச்சோம். இப்ப ஒரு நாள்ல குறைஞ்சது 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை ஷீல்டுகள் உருவாக்கறோம்.
எங்க ப்ராடெக்ட்டை கேள்விப்பட்டு பலரும் நிதி உதவி செய்ய முன்வந்திருக்காங்க. அதுல சோழமண்டலம் பெருமளவில் எங்களுக்கு நிதியுதவி கொடுத்திருக்காங்க. இதுக்கு சென்னை ஐஐடி உறுதுணையா இருந்தது.

இதுவரைக்கும் 35 லட்சம் ரூபாய் வரை இந்த ஷீல்ட் தயாரிக்க எங்களுக்கு நிதி கிடைச்சிருக்கு. தனியார் நிறுவனங்களுக்கும், பொது மக்களுக்கும் தயாரிப்பு விலையான ரூ.60க்கே வழங்கறோம். சுமார் 45 ஆயிரத்துக்கும் மேலான ஷீல்டுகளை உருவாக்கி முதல்கட்டமா 25 ஆயிரம் காவல் துறை பணியாளர்களுக்கு இலவசமா வழங்கியிருக்கோம். அடுத்தகட்டமா மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், அம்மா உணவக பணியாளர்களுக்கு வழங்கினோம்.

ஊரடங்கு காரணமா நினைத்த அளவுல தயாரிச்சு கொடுக்க முடியலை. மோல்ட் செய்ய ஒரு குறிப்பிட்ட கல் தேவை. அதை வாங்கறதுலயும் சிக்கல் ஏற்பட்டது. மருத்துவர்களுக்கு அல்லது சுகாதார ஊழியர்களுக்கு கொடுக்கணும்னா அரசின் அனுமதி வேணும். அதை வாங்கவும் சற்று தாமதமாச்சு. ஏன்னா இதுக்கும் மருத்துவ அல்லது சுகாதார ஊழியர்கள்தான் சான்றிதழ் கொடுக்கணும். அவங்க அவசரகால பணில இருக்கறதால சான்றிதழ் கிடைக்க தாமதமாச்சு.

எங்க ஃபேக்டரி கோட்டூர்புரத்துல இருக்கு. சென்னைல கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதில கோட்டூர்புரமும் ஒண்ணு. இதனால டெலிவரி தாமதமாகுது.இப்படி நிறைய சிக்கல்களும் சவால்களும் இருந்தாலும் 50 ஆயிரத்துக்கும் மேலான ஃபேஸ் ஷீல்ட் மாஸ்குகளை உருவாக்கியிருக்கோம்...’’ பெருமையுடன் சொல்கிறார் பத்மஜா.   

ஷாலினி நியூட்டன்