இந்தியன் விபத்து கமல், ஷங்கர் இன்னும் உதவவில்லை!



கமல் - ஷங்கரின் காம்பினேஷனில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ விபத்தை இன்னும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அப்படி ஒரு கோர விபத்து அது.

அந்த விபத்து நடந்த அடுத்த கணமே படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா, ரூ. 2 கோடி நஷ்ட ஈடு வழங்குவதாக அறிவித்தது. பதறிய கமலும், ‘எனது குடும்பத்தில் நடந்த விபத்தாகவே பார்க்கறேன். இது ஒரு சுனாமி போல...’ என்றவர், உடனே ஒரு கோடி உதவித்தொகை அளிப்பதாக அறிவித்தார். இயக்குநர் ஷங்கரும் தன் பங்கிற்கு ‘இந்த அதிர்ச்சியில் இருந்தும் வேதனையில் இருந்தும் மன உளைச்சலிருந்தும் இன்னும் மீளவில்லை...’ என்று சொன்னதோடு அவரும் ஒரு கோடி உதவுவதாக அறிவித்தார்.

விபத்து நடந்து 80 நாட்களாகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு, உதவித் தொகை சென்றடைந்ததா... என்ற கேள்வி கோலிவுட்டில் எழுந்துள்ளது. இறந்தவர்களின் குடும்பங்கள், மற்றும் விபத்தில் காயம்பட்டவர்கள் உட்பட அத்தனை பேரும் இப்போது பெரும் சிரமத்தில் உள்ளனர். இந்த லாக் டவுனில் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி நிற்கிறது. உதவி செய்வதாக அறிவித்தவர்கள் இன்னும் ஏன் உதவித்தொகையை வழங்காமல் உள்ளனர்..?

ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த படப்பிடிப்பில் கிரேன் விழுந்து உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மது, உணவு சப்ளையர் சந்திரன் ஆகிய மூவரும் பலியானார்கள். பத்து பேர் படுகாயம் அடைந்தார்கள். உடனே, தயாரிப்பு நிறுவனமான லைகா, இயக்குநர் ஷங்கர், கமல் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிய தொகை அளிப்பதாக அறிவித்தார்கள். இன்னொரு பக்கம், கமலுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. கிரேன் உரிமையாளர், ஆபரேட்டர், லைகா நிறுவனம், தயாரிப்பு மேலாளர் என நான்கு பேர் மீது வழக்கு போடப்பட்டு, விசாரணையும் நடந்து வருகிறது.

‘‘படப்பிடிப்புத் தளத்தில் விபத்து நடந்தது எப்படி தெரியுமா?’’ என்ற கேள்வியோடு, பேச ஆரம்பித்தார் ‘இந்தியன் 2’ யூனிட்டில் இருந்த ஒருவர்.
‘‘ஷங்கர் படம்னாலே பிரமாண்டம்தானே... அதனால ரெண்டு செகண்ட் வரும் காட்சிக்கு கூட தேவையில்லாத பிரமாண்டமும், செலவும் வைப்பார் என பேச்சு இருக்கிறது.

சம்பவம் நடந்த அன்னிக்கு ஓப்பன் பிளேஸ்ல ஆயிரக்கணக்கான மக்கள் பங்கு பெறும் காட்சிக்காக சுமார் 20 கிரேன்கள் வரவழைக்கப்பட்டன. திறந்த வெளியில் ஷூட் செய்யப்படும் காட்சி. அதனால லைட்டிங் அரேஞ்சுமென்ட்ஸும் செய்திருந்தாங்க. அந்த லைட்டிங்கை உயரத்தில் தூக்கி நிறுத்தவே கிரேன்கள் வரவழைக்கப்பட்டன. 18 கிலோ வாட் லைட் ஒவ்வொன்னும் முப்பது நாப்பது கிலோ வெயிட்டுக்கு மேல் இருக்கும்.

அத்தனை லைட்டையும் ஒரு சதுர ஃப்ரேம்ல பொருத்தி, கிரேன்ல தூக்கி இருக்காங்க. இதுபோல ஹெவி வெயிட்டை தூக்கறப்ப அதிக எடையை தாங்கும் சக்தி கொண்ட பிரமாண்ட கிரேன்களைத்தான் பயன்படுத்தணும். ஆனா, அப்படி செய்யலை.

இதனால லைட்டிங் ராடுகள் வெயிட் தாங்காம கிரேன் சரிந்து முறிந்து விழந்ததுலதான் கிருஷ்ணா, மது, சந்திரன் பலியானாங்க. பலரும் படுகாயமடைந்தாங்க. இதுல ஸ்ரீகிருஷ்ணா, கமலோட ஒரு படத்துல துணை இயக்குநராகவும் பணிபுரிஞ்சவர்...’’ என்கிறார் அந்தத்
தொழிலாளர்.‘‘படப்பிடிப்பை இன்ஷூர் செய்திருந்தா இது மாதிரியான எதிர்பாராத சூழல்கள்ல உடனடி நிவாரணம் கிடைச்சிருக்கும்...’’ என்கிறார் பழம் பெரும் தயாரிப்பாளர் ஒருவர்.

‘‘பொதுவா மிகப்பெரிய பட்ஜெட் படங்களுக்கு இன்ஸூர் செய்வது தமிழ் சினிமாவின் வழக்கம்தான். சமீபத்துல கூட ‘மெர்சல்’ படத்தின் படப்பிடிப்பை இன்ஸூர் செய்திருந்தாங்க. ரிஸ்க்கான காட்சிகளை ஷூட் செய்யறப்ப ஆம்புலன்ஸ், ஒரு டாக்டர்னு அத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளணும். ‘இந்தியன் 2’ ஷூட்ல இப்படி கிரேன் பயன்படுத்தறப்பவே அது எவ்வளவு வெயிட் தாங்கும், லைட் எடை எவ்வளவுனு இன்ஸூர் நிறுவன ஆட்கள் கணக்கிட்டு படப்பிடிப்பை அனுமதிச்சிருப்பாங்க. இன்ஸூர் செய்யாததால, படப்பிடிப்புல இருந்தவங்களும் சரியா கணக்கிடாததால ‘இந்தியன் 2’ ஷூட்ல விபத்து ஏற்பட்டிருக்கு.

இதை நான் அழுத்தி சொல்லக் காரணம், ‘மெர்சல்’ படப்பிடிப்புல நடந்த சம்பவம்தான். அதோட ஷூட்டிங்ல ஒரு தொழிலாளி விபத்துல சிக்கினார். அவரோட முதுகுத் தண்டுல பாதிப்பு ஏற்பட்டது. உடனே படப்பிடிப்புல இருந்த ஆம்புலன்ஸ்ல ஏற்றி பக்கத்துல இருந்த ஆஸ்பிடலுக்கு கொண்டு போனாங்க.

அந்த தொழிலாளியோட சிகிச்சைக்கு மட்டும் 50 லட்சம் ரூபா செலவாச்சு. இந்தத் தொகையை குறிப்பிட்ட அந்த இன்ஸூரன்ஸ் நிறுவனமே கொடுத்தது.

தயாரிப்பாளருக்கு ஒரு பைசா கூட செலவில்ல.அதனாலதான் ‘இந்தியன் 2’வும் முறையா இன்ஸூர் செய்யப்பட்டிருந்தா இந்த விபத்தே ஏற்பட்டிருக்காது... அப்படியே நிகழ்ந்திருந்தாலும் நஷ்டஈடு உரியவர்களுக்கு போய்ச் சேர்ந்திருக்கும். கமலையும், லைகாவையும், ஷங்கரையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது...’’ என்கிறார் அந்தத் தயாரிப்பாளர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகை போய் சேர்ந்ததா என அவர்களிடம் விசாரித்தால், பதில் சொல்லவே தயங்குகிறார்கள். எங்கே ‘கிடைக்கவில்லை’ என்று உண்மையை சொன்னால், நமக்கு வரவேண்டிய தொகை வராமல் போய்விடுமோ என அஞ்சுகிறார்கள்.

இதற்கிடையில் லைகா நிறுவனர் லண்டனில் இருப்பதால், அவர் இந்தியா திரும்பியதும் நஷ்டஈடு வழங்கப்படும் என்று சிலர் சொல்கிறார்கள்;
நம்புகிறார்கள்.

லைகா, கமல், ஷங்கர் தயாரிப்பில் விசாரித்தால், மூவர் தரப்பிலும் இருந்தும் ஒரே பதில்தான் வருகிறது. ‘‘வழக்கு விசாரணைல இருக்கறதால நஷ்டஈடு, உதவித் தொகையை சம்பந்தப்பட்டவர்கள் நேரடியா வழங்க முடியாது. லைகா, கமல், ஷங்கர் அறிவிச்ச தொகையை அரசின் தொழிலாளர் துறை மூலமாத்தான் வழங்க முடியும்.

லைகால பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈட்டு தொகையை காசோலையா வழங்க ஃபார்மாலிடீஸ் எல்லாம் முடிஞ்சிருச்சு. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா அம்பது லட்சம், காயம்பட்ட பத்து பேர்களுக்கு தலா அஞ்சு லட்சம்னு ரெண்டு கோடிக்கு செக் போட்டு ரெடியா இருக்கு.

கமலும், ஷங்கரும் லாக் டவுன் முடிஞ்ச பிறகு தொழிலாளர் துறை பக்கம் கவனம் செலுத்துவாங்க. இப்ப தொழிலாளர் துறையின் அலுவலகமும் லாக் டவுன்ல மூடிதானே இருக்கு?’’ எது எப்படியோ... ஊரடங்கு சீரானதும் பாதிக்கப்பட்டவர் களின் துயர் துடைக்கப்படும் என நம்புவோமாக!

எம்.இக்னேஷியஸ்