நான்...ராஜேஷ் குமார்



இதுவரை என்ன எழுதறது, எப்படி ஆரம்பிக்கிறதுனு எல்லாம் ஒருபோதும் யோசிச்சு நான் உட்கார்ந்ததேயில்ல. ஒருவேளை இதுதான் ராஜேஷ்குமார் என்னும் நான் கண்ட வெற்றியோ என்னவோ... ரொம்ப சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். தாத்தாவுக்கு நெசவுத் தொழில். அப்பா பெயர் ரங்கசாமி. அம்மா பெயர் கிருஷ்ணவேணி. தாத்தா வழில அப்பாவும் ஜவுளித் தொழிலுக்கு வந்துட்டார். சாதாரண நடுத்தர குடும்பத்துக்கான அத்தனை அம்சங்களையும் எங்க வீட்ல பார்க்கலாம். எல்லா கஷ்டத்திலும் பெரிய அளவுல பெரிய குடும்பமாகதான் வாழ்ந்தோம்.

அப்பா எனக்கு வைத்த பெயர் ராஜகோபால். கோவைதான் பிறந்து வளர்ந்த ஊர். எங்க வீட்டைச் சுற்றி இருந்தவங்க எல்லாரும் நெசவாளிங்கதான். நான் மூத்த பையன். எனக்கு அப்புறம் தம்பி சதானந்தம். அப்புறம் மகாலட்சுமி, வனஜா, ராஜேஷ்வரினு மூணு தங்கைங்க. எங்க வீட்ல என்று இட்லி சுடறாங்களோ அன்று திருவிழா. அஞ்சாம் வகுப்பு வரை சிஎஸ்ஐ பள்ளி. பிறகு தேவாங்க மேல்நிலைப்பள்ளில படிச்சேன். ஜாஸ் கல்லூரில பியூசி. கவர்மென்ட் ஆர்ட்ஸ் கல்லூரில பி.எஸ்சி. ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்தியாலயால விளையாட்டு ஆசிரியருக்கான படிப்பு.

குடும்பத்துல நான்தான் முதல் பட்டதாரி. இதையே எங்க சமூகத்துலயே நான்தான் முதல் பட்டதாரினு சொல்லலாம். ‘கல்லூரி ஆண்டு மலருக்கு யார் கதை கொடுக்கறீங்க’னு எங்க தமிழ் பேராசிரியர் கேட்டப்ப எனக்கு முன்னால இருந்த பிரபாகரன் என்னும் மாணவன், ‘இவன் நல்லா கதை சொல்வான் சார்’ அப்படின்னு சத்தமா என்னை மாட்டி விட்டான்.

உடனே பேராசிரியர் ஒரு கதை எழுதச் சொன்னார். அதை பெருசா எடுத்துக்காம மறுநாள் கதை எழுதாம கல்லூரிக்கு போனேன். ‘கதை எங்க’னு கேட்டார். ‘எழுதலை’னு சொன்னதும் கோவப்பட்டு திட்டி க்ளாஸை விட்டு வெளிய அனுப்பிட்டார். இத்தனைக்கும் அவர் கோவப்
படாத மனுஷன்.

இந்தப் புள்ளிதான் கதை என் வாழ்க்கைக்குள்ள நுழையக் காரணம். அப்ப எல்லாம் நிறைய பத்திரிகைகள் கிடையாது. மிகச் சிலர் மட்டும்தான் கதைகள் எழுதுவாங்க. ‘ஆனந்த விகடன்’, ‘குமுதம்’, ‘கல்கி’ வாங்கற அளவுக்கு வீட்ல வசதி இல்ல. அதனால மாத, வாரப் பத்திரிகைகளை படிக்கற வாய்ப்பு அப்ப எனக்கு குறைவாதான் இருந்தது.

நூலகம் மாதிரி ‘தியாகராஜர் படிப்பகம்’ எங்க வீட்டுப் பக்கத்துல இருந்தது. அதுக்குள்ள என்னை விடலை. அதிகாரிகிட்ட கெஞ்சி உள்ள போனேன். அவ்வளவு புத்தகங்கள்! ‘ஆனந்த விகடன்’, ‘அம்புலிமாமா’, ‘கண்ணன்’, ‘கல்கி’, ‘குமுதம்’ எல்லாம் அங்கதான் படிச்சேன்.அங்கிருந்த வாரப் பத்திரிகைகள்ல கதைகளைப் பார்த்தேன். என் வயசுக்கு அப்ப தோன்றியது காதல் கதைதான். உயர் சாதி - தாழ்ந்த சாதிக்கு இடைல காதலை மையமா வைச்சு கதை எழுதி எங்க பேராசிரியர்கிட்ட கொடுத்தேன்.

படிச்சுப் பார்த்தவர், ‘பிரமாதமா எழுதியிருக்கே’னு புகழ்ந்து தள்ளினார். அந்த கதைக்கு ‘புதுவாழ்வு’னு பெயர் வைச்சிருந்தேன். அதுக்கு ஏத்தா மாதிரி என் வாழ்வும் புதுசா அந்த நொடில மலர்ந்தது.என்னை கதை எழுத வைச்சு மனசார பாராட்டின அந்த பேராசிரியர் பெயர், மீனாட்சி சுந்தரம். அவர் போட்ட விதைதான் இப்ப ‘குங்குமம்’ பத்திரிகைல ‘நான்...’ சொல்ற அளவுக்கு வளர்ந்திருக்கு! விஷயத்துக்கு வர்றேன். படிப்பு, நண்பர்களுடன் பொழுது போக்குவதுனு இருந்தேன். அப்ப வீட்ல தினமும் நாலணா கொடுப்பாங்க. அதை எடுத்துக்கிட்டு ‘இந்தியன் காபி பார்’ போய் நண்பர்களோடு பேசிட்டு இருப்பேன். ஒரு காபி வாங்கி குடிச்சுட்டு மூணு மணிநேரம் உட்கார்ந்தாலும் கடைக்காரர் ஒண்ணும் சொல்ல மாட்டார்.

இந்த நேரத்துல ‘மாலை முரசு’ல கதை போட்டி வைச்சிருப்பதாகவும் பரிசுத் தொகை 10 ரூபானும் நண்பன் ஒருத்தன் சொன்னான். நாலணா கிடைக்கறதே பெரிய விஷயமா இருக்கற சூழல்ல 10 ரூபா எவ்வளவு பெரிய தொகை!உடனே கதை எழுதி அனுப்பினேன். எம்ஜிஆரின் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்துல இடம்பெற்ற ஒரு பாடல் வரியை தலைப்பா வைச்சிருந்தேன். கதை பிரசுரமாகி பரிசுத்தொகையும் மணியார்டர்ல வந்தது. போஸ்ட்மேனுக்கு நாலணா கொடுத்தேன். அவர் சந்தோஷமாகி, ‘தொடர்ந்து நீங்க நிறைய எழுதி பரிசா வாங்கிக் குவிக்கணும்’னு வாழ்த்திட்டுப் போனார்.

வீட்ல எல்லாரும் சந்தோஷப்பட்டாங்க. அந்த பத்து ரூபாயை வீட்ல கேட்டு வாங்கிட்டு நண்பர்களைப் போய் பார்த்தேன். ஹோட்டல்ல சாப்பாடு, சினிமானு சந்தோஷமா கொண்டாடினோம். அடுத்தடுத்து ‘தினமணி கதிர்’, ‘குமுதம்’, ‘ஆனந்த விகடன்’னு எல்லாப் பத்திரிகைகளுக்கும் சிறுகதை எழுதி அனுப்பினேன்.

இதுக்கிடைல கடலூர் மாவட்டம் பண்ருட்டி பக்கத்துல ஒரு கிராமப் பள்ளில ஆசிரியர் வேலை கிடைச்சது. விளக்கு வசதி கூட இல்லாத குக்கிராமம் அது. என்னால அங்க காலம் தள்ள முடியலை. வேலையை விட்டுட்டு வந்தேன். வீட்லயும், உறவினர்களும் சத்தம் போட்டாங்க. அப்புறம் திரும்ப அதே ஆசிரியர் பணி நான் படிச்ச ஸ்கூல்லயே கிடைச்சுது. ஆனா, வேலைல ஈடுபாடு இல்ல. ‘இதுக்காக நான் பிறக்கலை’னு ஒரு குரல் உள்ள ஒலிச்சுகிட்டே இருந்தது. சரி... அப்பாவோட ஜவுளித் தொழிலை பார்க்கலாம்னு இந்தப் பணிக்கும் முற்றுப்பள்ளி வைச்சேன்.

ஜவுளி ஆர்டருக்காக மும்பை, புனேக்கு அப்பா போவார். இனி, நான் போறேன்னு கிளம்பினேன். ரயில் பயணத்துல கிடைச்ச, கேட்ட சம்பவங்களை எல்லாம் கதைகளா எழுதினேன்.

நான் கதை எழுத ஆரம்பிச்ச நேரத்துல இருந்த எழுத்தாளர்கள் குடும்பம், காதல், நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்க. ரொம்ப சிலர்தான் க்ரைம் கதைகள் எழுதிட்டிருந்தாங்க. நானும் க்ரைம் கதைகள்தான் அதிகம் எழுதினேன். ஆனா, மத்தவங்க கதைகள்ல இருந்து வித்தியாசப்பட்டு எழுதினேன்.
இதை சட்டுனு ‘கல்கண்டு’ ஆசிரியரா இருந்த தமிழ்வாணன் கண்டுபிடிச்சார். என்னை ‘மாலைமதி’க்கு ஒரு நாவல் எழுதித் தரச் சொன்னார். தந்தேன். அது பிரசுரமாச்சு. அப்ப ‘மாலைமதி’ல கதை வர்றது பெரிய விஷயம். புகழ்பெற்ற எழுத்தாளர்கள்தான் அதுல எழுதுவாங்க. இந்த சூழல்லதான் எனக்கு தமிழ்வாணன் சார் வழியா அதுல இடம் கிடைச்சது.

அடுத்து சாவி சார் ஒரு பத்திரிகைத் தொடங்க... அதுல எழுத வாய்ப்பு கிடைச்சது. நான் கதைகள் எழுத ஆரம்பிச்ச ராஜகோபாலன், பிரதிபா ராஜகோபாலன்னு ரெண்டு பேர் புகழ்பெற்று இருந்தாங்க. தவிர ராஜகோபால் என்கிற பெயர்ல நிறைய பேர் எழுத ஆரம்பிச்சிருந்தாங்க. பெயர் குழப்பம் வராம இருக்கவும், தனிச்சுத் தெரியவும் எனக்கு நானே பெயர் சூட்டிக் கொள்ள முடிவு செஞ்சேன்.

என் கடைசி தங்கை பெயர் ராஜேஸ்வரி. என் பெரிய தங்கையின் மகன் பெயர் அனந்த குமார். இந்த ரெண்டு பெயரையும் கலந்து ராஜேஷ்குமார்னு பெயர் வைச்சுக்கிட்டேன். பெயரை போலவே கதையையும் ஸ்டைலா எழுதினேன். பிசினஸ், கதை எழுதறதுனு இரண்டையும் பேலன்ஸ் பண்ணினேன்.
1975ல எனக்கு திருமணமாச்சு. வீட்ல பார்த்து முடித்த பெண்தான். அவங்க பெயர் தனலட்சுமி. என் கதைகளுக்கு எல்லாம் அவங்கதான் முதல் வாசகி. என் ஒவ்வொரு கதையையும் அவங்கதான் எடிட் செய்வாங்க. சில இடங்கள்ல ‘இந்த வரி பெண்களுக்கு பிடிக்காது... மாத்துங்க’னு ஆலோசனைகள் வழங்குவாங்க.

என் கதைகள்ல பெண்களின் அங்கங்களை வர்ணிக்க மாட்டேன். கண்கள், உதடுகளை மட்டும்தான் வர்ணிப்பேன். இதுலயே கவர்ச்சி இருப்பதா நம்பறேன். சில கதைகளோட முடிவுகளை மனைவி சொல்லி மாத்தியிருக்கேன். ஒருபோதும் என் மனைவிகிட்ட ஈகோ பார்க்க மாட்டேன்.
இதுக்கிடைல ஜவுளித் தொழில் நஷ்டமாச்சு. தொழிலை விட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். விற்பனை பிரதிநிதியா இன்னொரு ஜவுளிக்கடைல சேர்ந்தேன். ஆர்டர் எடுக்க வட மாநிலங்களுக்கு பயணப்பட்டேன். கதைகள் எழுதறதை நிறுத்தவேயில்ல.

1988க்கு அப்புறம் என் கதைகள் கொஞ்சம் கொஞ்சமா பிக்கப் ஆக ஆரம்பிச்சது. திடீர்னு எல்லா கதவுகளும் திறந்தா மாதிரி ஏகப்பட்ட பத்திரிகைகள் இந்தக் காலத்துல வர ஆரம்பிச்சது. பல பத்திரிகை ஆசிரியர்கள் வீடு தேடி வந்து கதை கேட்டாங்க. சந்தோஷமா இருந்தது. எப்பவும் எளிமையான மக்களுக்கு புரியறா மாதிரி பெரிய விஷயங்களை எழுதணும்னு நினைப்பேன்; அப்படித்தான் எழுதிட்டும் வர்றேன். ஒருபோதும் ஆபாசமாகவோ, சமுதாயத்தை சீரழிப்பதாகவோ என் எழுத்து இருக்கக் கூடாதுனு ஆரம்பம் முதலே உறுதியா இருக்கேன்; இப்ப வரை அதை கடைப்பிடிக்கவும் செய்யறேன்.

கார்த்திக் குமார், ராம் பிரகாஷ்னு எனக்கு ரெண்டு பசங்க. கார்த்திக் குமார் வங்கி அதிகாரியா இருந்தவர். இந்தியாவின் சிறந்த 100 வங்கி அதிகாரிகளில் ஒருவரா தேர்வாகி ரோம்ல விருதும் வாங்கியிருக்கார். அப்படிப்பட்டவர் திடீர்னு ‘அப்பா... உங்க நாவல்களை எல்லாம் டிஜிட்டலாக்கி உலகம் முழுக்க எடுத்துட்டுப் போகப் போறேன்’னு வேலையை விட்டுட்டு முழுமையா புத்தகப் பணிகள்ல இறங்கிட்டார். சொன்னா மாதிரியே ஆயிரத்துக்கும் மேற்பட்ட என் நாவல்களை டிஜிட்டல் வெர்ஷனுக்கு மாத்தியிருக்கார்.

நல்ல வேலையை கார்த்திக் விட்டது வருத்தமா இருந்தாலும், என் எழுத்துக்காக இதை செய்திருக்கான்னு நினைக்கறப்ப சந்தோஷமாதான் இருக்கு! இப்பவரை ‘என்ன எழுதறது’னு யோசிச்சதே இல்ல. தலைப்பு எழுதின உடனே கதை தானா வந்துடும். இது இறைவன் கொடுத்த வரம்னுதான் நினைக்கறேன். என்னை எழுத்தாளர்னு ஏத்துக்கக் கூட சிலர் இப்பவும் தயங்கறாங்க. அது குறித்து எனக்கு எந்தப் புகாரும் இல்லை. என்னை நம்பி பாக்கெட் நாவலை வாங்கும் வாசகருக்கு நான் நேர்மையா இருக்கணும்னுதான் நினைக்கறேன்.

அந்த வாசகர் எனக்குத் தரும் அங்கீகாரம் போதும்.  உங்களுக்கு கிரைம் நாவல் எழுத விருப்பம் இருந்தா யோசிக்காம எழுதுங்க. அவங்க என்ன சொல்வாங்க... இவங்க என்ன நினைப்பாங்கனு தயங்காதீங்க. உங்களுக்குப் பிடிச்சதை உங்களுக்குப் பிடிச்சா மாதிரி எழுதுங்க. ஏன்னா, நீங்க வேற உங்க எழுத்தைப் படிக்கிற வாசகர் வேற இல்ல!

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்