மாஸ்க் ஃபேஷன்!



மனிதன் உயிர் வாழ அடிப்படைத் தேவைகள் எவை?
நீர், காற்று, உணவு, உடை, இருப்பிடம் - இது பழசு.
எனில், புதுசு?நீர், காற்று, உணவு, உடை, இருப்பிடம், மாஸ்க்!
அந்த அளவுக்கு மாஸ்க் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது.

சாதாரண டிரெண்டையே ஃபேஷன் உலகம் சும்மாவிடாது. அப்படியிருக்க அடிப்படைத் தேவையாக மாறிப் போன மாஸ்க்கை விட்டுவிடுமா என்ன?!
ஆம்… எப்படி எல்லாம் விதவிதமான மாஸ்குகளை உருவாக்கலாம் என தலையை பிய்த்துக் கொண்டு வேலை செய்கிறது ஃபேஷன் உலகம். உடைக்கு மேட்சிங்காக மாஸ்க், அனிமல் மாஸ்க், டூடில் மாஸ்க், கார்ட்டூன் மாஸ்க்... என ரகம் ரகமாக தினம் தினம் மாஸ்குகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த மாஸ்க் ஃபேஷன்தான் சீனாவுக்கு இன்னொரு வகையில் குடைச்சல் கொடுத்திருக்கிறது!சீனாவில் முதல் கொரோனா (Covid-19) வைரஸ் தொற்று கடந்த டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சீனா ஃபேஷன் வீக் நடத்தியது செப்டம்பர் 2019ல். அதில் பிரதான தீம் கேஸ் மாஸ்க் மற்றும் மாஸ்க்!அப்படியானால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே மாஸ்க் என்பது இவ்வளவு பெரிய டிரெண்டாகும் என்பதை சீனா எப்படி கணித்தது? சீனா ஃபேஷன் உலகம் இதற்கென தனி ஃபேஷன் ஷோ நடத்தியது எப்படி?

இப்படி எண்ணற்ற வினாக்கள் சீனாவை நோக்கி வீசப்பட்டு வருகின்றன. இதற்கெல்லாம் ஒரே பதிலாக ‘நாங்கள் கேஸ் மாஸ்க்கைதான் பிரதானமாக வைத்தோம். மெடிக்கல் மாஸ்கை அல்ல...’ என சீனா சமத்துப் பிள்ளையாக சொல்லி வருகிறது. இந்நிலையில் இந்த வருட ஆரம்பத்தில் பாரீஸ், லண்டன், நியூயார்க் என பல இடங்களில் நடத்தப்பட்ட ஃபேஷன் ஷோக்களின் அடிப்படை ஐடியாவாக மாஸ்குகளே இருந்தன என்பதை ‘தற்செயல்’ என்றே ஒதுக்கி விட்டு மாஸ்க் ஃபேஷன் பக்கம் கவனத்தை திருப்புவோம்!  

கடந்த மார்ச் 2ம் தேதி பாரீஸில் நடந்த ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில், மெடிக்கல் சர்ஜிக்கல் மாஸ்க்... அதில் மெட்டீரியல் கொண்டு செய்யப்பட்ட டிசைன்... அதற்கு மேட்சிங்காக உடைகள் சகிதமாக மாடல்கள் ரேம்ப் வாக் செய்தனர்.பல டிசைனர்கள் குழு தொற்று காரணமாக அறிவித்திருந்த ஃபேஷன் ஷோக்களை ரத்து செய்த நிலையில் இந்த பாரீஸ் ஃபேஷன் ஷோ, ஆட்கள் யாருமின்றி ஆன்லைனில் நடந்தது.  

ஸ்லோவாக்கியா அதிபர் சூசனா கேபுசுவா கடந்த மார்ச் 21ம் தேதி நடந்த அரசு நிகழ்வில் உடைக்கு மேட்சிங்காக மாஸ்க் அணிந்து வர... இணைய வாசிகளும், ஃபேஷன் விரும்பிகளும் அதைப் பகிர்ந்து பாராட்டினர். எதையும் தனித்துவமாக செய்யும் அதிபர் இதிலும் தன் ஃபேஷன் விருப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பதாக பாராட்டுகள் குவிந்தன. மேண்டி என்னும் அமெரிக்கப் பெண் தனது அறக்கட்டளைக்கு பணம் திரட்ட ஒரு வித்தியாசமான மாஸ்க் டிசைனை உருவாக்கி அதை ஆன்லைனில் விற்பனை செய்ய அரம்பித்திருக்கிறார். அதேநேரம் இந்த மாஸ்க் சர்ச்சைக்கும் ஆளாகியிருக்கிறது.

அதாவது மாஸ்க்கில் ஆணின் பிறப்புறுப்பின் கார்டூன் படங்களை அச்சிட்டிருக்கிறார்! இதை டிரெண்டி காமெடியாக ஒரு குழு பாராட்ட, இன்னொரு குழு உயிர்க் காக்கும் ஒரு விஷயத்தை இப்படி ஆபாசமாக காட்டலாமா என முஷ்டியை உயர்த்தியிருக்கிறது. இந்த மாஸ்குக்கு ‘பெனிஸ் மாஸ்க்’ என்று பெயர்! ETSY என்னும் ஆன்லைன் ஷாப்பிங் தளம், ஸ்டார் வார்ஸ் ரசிகர்களைக் குஷி படுத்தும் விதமாக ‘பேபி யோடா’ என்னும் ‘ஸ்டார் வார்ஸ்’ பட ஏலியன் கதாபாத்திரத்தை மாஸ்க்கில் அச்சிட்டு விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

இந்த மாஸ்க்குகள் நியான் நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளதால் இரவில் ஒளிரும். இவை நம் இந்திய ரூபாயில் 60 முதல் விற்பனைக்கு உள்ளன. அதே தளத்தில் ஜாலி கவாய் ஆர்டிஸ்டின் உருவாக்கத்தில் குட்டி குட்டி எமோடிகள் போடப்பட்ட மாஸ்குகளும் விற்பனைக்கு உள்ளன.இவை தவிர பூனை, நாய், போன்ற மிருகங்களின் முகம், அதன் காது மட்டும் தனியே நீட்டிக் கொண்டு இருப்பது போன்ற மாஸ்க்...

அரேபிய பெல்லி டான்ஸ் ஆடும் பெண்கள் பெரும்பாலும் விதவிதமான மாஸ்குகளை அணிவார்கள். அவர்களும் தங்கள் பங்குக்கு ஜமிக்கி, கற்கள் பதித்த மாஸ்குகள், எம்பிராய்டரி செய்யப்பட்ட மாஸ்குகள்...என கைத்திறமையைக் காட்டி வருகிறார்கள். மேலும் அமேசானில் 3டி சிரிப்பு வாய்கள் கொண்ட மாஸ்குகள், ஸ்மைலி மாஸ்குகள் என பலவாறு வரிசைக் கட்டி வருகின்றன.

இவற்றையெல்லாம் விட நம் வாட்ஸ் அப்பில் வந்து விழுந்த சட்டைகளுக்கு மேட்சிங்கான மாஸ்கே இப்போது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
பாண்டிச்சேரி ஆரோவில் பகுதியைச் சேர்ந்த உமா பிரஜாபதியின் ‘உபாசனா டிசைன் ஸ்டூடியோ’தான் இந்த சட்டைகளுக்கு மேட்சிங்கான மாஸ்குகளையும் ஜோடி சேர்த்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது. சுத்தமான ஆர்கானிக் காட்டனில் மூன்று லேயர்களில் டிசைன் செய்யப்பட்ட இந்த மாஸ்குகள் துவைத்து பயன்படுத்தும் வகையான ரீ யூசபிள் மாஸ்குகள்!

ஷாலினி நியூட்டன்