அப்பா வந்தான்



முட்டை ஓடு உடைந்த மாதிரி பனி உடைந்தது. ஏலகிரி மலையில் சூரியக்குஞ்சு எட்டிப் பார்த்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் பகல் விரிந்து பூத்து விடும், ராஜாத்தி குடிசையை விட்டு வெளியே வந்து கிழக்கைப் பார்த்து நின்றாள். கூந்தலை உதறி முடிந்து கொண்டாள், சேலையை அவிழ்த்து சரியாக உடுத்தி கொண்டாள். காலமெல்லாம் வளைவதற்கு பழகி விட்ட உடம்பை வளைத்து குடிசைக்குள் நுழைந்தாள். “அப்பு… அப்பு…” தூங்கிக் கொண்டிருந்த பயலை எழுப்பினாள்.அப்புவை இப்போது எழுப்பினால்தான் குளிப்பாட்டி, தலைவாரி பழையது போட்டு ஆறு மணிக்குள் கொண்டு போய் மிட்டாய் கம்பெனியில் சேர்க்க முடியும்.

பத்து வயது அப்பு குளிருக்கு உடம்பை குறுக்கி பணக்காரர்களின் ஜீன்ஸ் போல் கிழிந்திருந்த கம்பளிப் போர்வைக்குள் சுருண்டிருந்தான். முடியுமான அளவு கிழிசல்களுக்கு ஒட்டும் போடப்பட்டிருந்தது. கீழே போடப்பட்டிருந்த துண்டுத் துண்டு பாய்கள் வேற்றுமையிலும் தற்காலிகமாக ஒற்றுமை கண்டிருந்தது. ரத்தம் குடித்த கொசுவும் இன்னும் ரத்தம் குடிக்காத சில கொசுக்களும் கூட்டணி சேர்ந்து இருந்தது.“அப்பு, அப்புக் குட்டி...

எழு ராசா!” உலுக்கினாள்.“ம்… ம்…” திரும்பி படுத்துக் கொண்டான். என்னத்தையோ முனகலாக சொல்லி விட்டு குறட்டை விட்டான்.மகனின் தூக்கத்தை அறுப்பதற்காக தாயின் மனம் அறுந்தது. என்ன செய்வது... எழுப்பியே ஆக வேண்டும். நேரம் கழித்து போனால், மிட்டாய் கம்பெனி முதலாளி நாயாகக் குலைப்பார்.

“அப்பு... அப்புக் குட்டி…” அப்புவை தூக்கி மடி மீது வைத்துக் கொண்டாள். தலையை கோதி விட்டாள் “அப்பு... எழு ராசா!”
சட்டென்று கால் தடுக்கி விழுந்தவன் எழுந்த மாதிரி துள்ளி எழுந்தான். தலையை திருப்பித் திருப்பி பார்த்து கண்களை மிரள மிரள உருட்டினான். மிட்டாய் கம்பெனி ஞாபகம், முதலாளி எதிரில் நிற்கிற பயம், பதைபதைப்பு அம்மாவின் புன்னகைத்த முகத்தைப் பார்த்த பின்தான் நிம்மதியாய் மூச்சு வந்தது. அம்மாவின் மடியில் மறுபடியும் தலை வைத்து படுத்தான்.

“எவ்வளவு நேரம்டா எழுப்பறது அப்பு!” கன்னத்தில் முத்தம் வைத்து முந்தானையால் கோட்டு வாயைத் துடைத்தாள்.“ரொம்ப நேரம் எழுப்பினியா?”“ஆமான்டா…”“நல்லா தூங்கறப்போ வாயில கூப்பிட்டா எழ முடியாதும்மா... முதுகுல எட்டி உதைக்கணும்... இல்லன்னா ஜில் தண்ணியை மூஞ்சில ஊத்தணும், எங்க ஓனர் அப்படிதான் எழுப்புவார்ம்மா…” மனதில் ஒளித்து வைக்கும் பக்குவம் வராத அப்பு சாதாரணமாக கூறினான்.

ராஜாத்திக்கு நெஞ்சு துடித்தது. அதிர்ச்சி வாரி எடுத்தது. “என்ன சொல்ற அப்பு… முதுகுல உதைச்சி...’’
“ஆமாம்மா…”ராஜாத்திக்கு கண்ணீர் திரண்டது. அப்புவை மார்போடு இறுக்கி அணைத்துக் கொண்டாள். “வேலைக்கு போகாம நிண்டுக்கிறியா?”
“அதுக்குத்தான் யார்னா அடிச்சா உங்கிட்ட சொல்றதில்ல... ஓனர் உதைச்சா நோகாதும்மா....” அம்மாவின் கண்ணீரைத் துடைத்தான். எரிதழில் இட்ட மாதிரி ராஜாத்தி துடித்தாள்.

“வேணாண்டா அப்பு... நின்னுக்கோ...”“நின்னுட்டா ஓனர்கிட்ட வாங்கின அட்வான்ஸை எப்படி கழிப்பே…? லட்சுமி லவுடி கிட்ட வாங்கின கடனை எப்படி அடைப்ப…? லட்சுமி லவுடி உன் தலைமயிரைப் புடிச்சி உலுக்கி சண்டை போடுவா… நான் அடி வாங்கினா பரவால்லம்மா. சின்னவன். நீ அடிப்பட்டா எல்லாரும் பாக்கறாங்க….” மேலடுக்காக சொன்ன வார்த்தைகள் என்றாலும் ஆழத்திலிருந்து உருகி பொங்கி பெருகின நெருப்பு குழம்பாய் சுட்டது. குழந்தைகள் ஞானியாக, அரசனாக, பெரியோனாக சுடர் விட்டான் புத்தியில்.

பிள்ளை பேசினதுக்கு பெருமையில் பொங்குவதா, இப்படியொரு பரமாத்மாவை பெற்றெடுத்ததுக்காக ஆனந்தம் கொள்வதா, பள்ளிக்கு போக வேண்டிய, துள்ளி விளையாட வேண்டிய வயதில் பாரம் சுமக்க வைத்து விட்ட கொடுமைக்கு துக்கமுற்று அழுது மடிவதா... செயல் பட முடியாமல்
புரியாமல் தவித்தாள். வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி, “உங்கப்பன் ஒழுங்கா வீடு தங்கி சம்பாதிச்சி போட்டா உனக்கு இந்த நிலைமை வருமாடா என் கண்ணு... மூக்குத்தி அடமானம் வைச்ச மாதிரி உன்னை வைச்சுட்டனே என் தங்கம்...” என்றாள்.

அப்புறம்தான் அப்புவுக்கு அந்த ஞாபகம் வந்தது. இரண்டு தினங்களுக்கு முன்பு அவனுடைய அப்பா கம்பெனிக்கு வந்து முதலாளியிடம் வெகு நேரம் பேசி இருந்து விட்டு போனான். அப்பு குறித்து என்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள். அடிக்கடி அப்புவை முதலாளியும் அப்பாவும் திரும்பி திரும்பிப் பார்த்தார்கள். அப்பாவின் பார்வை தன் மீது விழுந்த போதெல்லாம் தலையைக் கவிழ்த்துக் கொண்டான் அல்லது முகத்தை வேறு திசைக்கு மாற்றினான்.

கொதித்துக் கொண்டிருந்த மிட்டாய் பாவை அப்பாவின் முகத்தில் ஊற்றி விடலாமா என்கிற ஆத்திரம் கூட வந்தது. அப்பா நீட்டிய சோளக் கதிரை வாங்கவில்லை. முகத்தில் மட்டும் அல்ல உடம்பையும் வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.அப்பா கம்பெனிக்கு வந்த விசயத்தை அம்மாவிடம் சொல்ல நினைத்து, சடக்கென்று மூடி வைத்துக் கொண்டான்.

அப்புறம் அம்மா பெரிதாகக் கத்தி அப்பாவை திட்ட தொடங்கி விடுவாள். அழுது வெடிப்பாள். அப்பாவைப் பற்றி பேச்சு வருகிற போதெல்லாம் அப்படித்தானே செய்கிறாள்? அப்பா என்கிற நாய்க்கு வேறு ஒருத்தியோடு வாழ்க்கை.அப்புவுக்கு ஞாயிறு மட்டும் விடுமுறை. விடுமுறை என்றாலும் யாரையும் வீட்டுக்கு அனுப்புவதில்லை. அனுமதி பெற்று ராஜாத்தி மட்டும் திங்கட்கிழமை காலையே எட்டு மணிக்கெல்லாம் கொண்டு வந்து விடுவதாக உத்திரவாதம் தந்து அழைத்து வருவாள். வெந்நீர் வைத்து குளிப்பாட்டி உடைகளை துவைத்து கிழிந்ததை தைத்து மாட்டி, அழைத்து போய் விடுவாள்.

இன்றும் அப்புவை தயார் செய்து புறப்பட ஆயத்தமான போது, துளியும் எதிர்பாராத வண்ணம் அப்புவின் அப்பா வந்து நின்றான். அவனோடு மீசைக்கார கவுண்டரும், தலைப்பா கட்டி பெரியவரும், சினிமா போஸ்டர் ஒட்டும் ரஜினியும் வந்தார்கள். ரஜினி அப்புவின் கன்னத்தைக் கிள்ளினான்.
எம்எல்ஏ கணக்காய் சரியாய் ஐந்தாண்டுகள் காணாமல் போனவன், மனைவியும், பையனும் செத்தார்களா, பிழைத்தார்களா என்று கூட கண்டு கொள்ளாது இருந்தவன் வோட்டு கேட்க வந்த வேட்பாளர் மாதிரி வெள்ளையும் சொள்ளையுமாய் வந்திருந்தான்.

“அப்பு…” என்றழைத்தான்.
அப்பு தலையை உயர்த்த வில்லை.
“அப்பு...” கையில் முகத்தை ஏந்தினான். அப்பு முகத்தை வெடுக்கென்று பிடுங்கிக்
கொண்டான்.
பிஞ்சு மனம் முழுவதும் கோபம் கொதிப்பெடுத்தது.

ராஜாத்தி அப்புவின் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினாள். அழுகையும் கோபமும் புயலும் மலையுமாய் முறுக்கிற்று.
“என்ன ராஜாத்தி நாங்க வந்திருக்கோம் நீ பாட்டுக்கு போறியே...” மீசைக்கார கவுண்டர் கேட்டார்.பதில் கொடுக்கவில்லை. நடையில் வேகம் காட்டினாள்.ரஜினி ஓடி வந்து ராஜாத்திக்கு முன்பு இரண்டு கைகளையும் விரித்து நின்றான். “அக்கா! நீ உன் புருசனுக்கு மரியாதை தர வேண்டாம். நாலு பேர் வந்திருக்கோம் எங்களுக்கு மரியாதை தர வேணாமா?”

“பெரியவங்க என்னா பேச போறீங்க ரஜினி… அந்த ஆளுக்கு வக்காளத்து வாங்கப் போறீங்க… பஞ்சாயத்து வேணாம். என் பையன் வாழ்க்கை பாழாயிடுச்சி. அந்த ஆளு வருவாரு ஆறு மாசம் பொழப்பு பண்ணுவாரு, ஊரைச் சுத்தியும் கடன் வாங்குவாரு, என்னையும் பையனையும் வட்டிக்கு பலி தந்துட்டு ஓடிப் போவாரு...” மேலும் பேசினால் அழுகை வரும் போலிருந்தது. “தாமதமா போனா கம்பெனில சேக்க மாட்டாங்க. வழி உட்ரு ரஜினி...” ராஜாத்தி அப்புவை இழுத்துக் கொண்டு வேகமாக நடந்தாள்.

வந்தவர்கள் நாலைந்து முறை ராஜாத்தியை கூவி பார்த்துவிட்டு மவுனமானார்கள். மழைக்கு பயந்து ஓடும் பறவைகள் போல ஓடினார்கள் அப்புவும் அம்மாவும்.‘‘என்னா விறைச்சிட்டு போறா... வேற ஆள பார்த்துட்டாளா?’’“யோவ் திமிர் பேச்சு வைச்சுக்காதே… எங்க ஊர் மாடுங்க பட்னியா கெடந்தாலும் வேலி தாண்டி போய் பயிரை மேயாதுங்க...” மீசைக் கார கவுண்டர் மீசையை நீவிக் கொண்டே கூறினார்.

“ஆமா மாமா... உங்க ஊரு பொண்ணுங்க கண்ணகி வம்சம்தான். ஆனா கோவலன் வந்தா சிலுப்பிகினு போறாளே…”
“அப்படிதாம்பா... கொஞ்சம் உட்டு புடிக்கலாம், வரட்டும் அதுக்குள்ள ஒரு ரௌண்டு போய் வந்துடுவோம்...” சாராயத்துக்கு அழைத்தார் தலைப்பா கட்டி.ராஜாத்தி புலம்பிக் கொண்டே நடந்தாள், “நாசமா போக... வாந்தி பேதி வந்து தூக்கினு போக...”
“அம்மா! நான் ஒண்ணு பண்ணட்டுமா?” என்று கேட்டான் அப்பு.

“என்னடா ராஜா?”
“ஒரு கல்லு எடுத்துனு போய், குறி பார்த்து அந்த ஆளு தல மேல போட்டுட்டு ஓடி
வந்துர்றேன்...”மகனை இருக்கி அணைத்து நெற்றியில் முத்தம் வைத்தாள். “இப்போ வேணாம்டா கண்ணு... அந்த ஆளை உதைக்கறத்துக்கு ஒரு நாள் வரும்...” அவளுடைய கண்களில் ஆனந்தம் நீராய் கொட்டிற்று.அப்புவை கம்பெனியில் விட்டபோது முதலாளி ராஜாத்தியிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தான். அப்புவுக்கு போனதுமே கடலை உருண்டை உருட்டுகிற வேலை இருந்ததால் என்ன பேசுகிறார்கள் என்பதை கேட்டுக் கொள்ள முடியவில்லை.

அம்மா போன பிறகு அப்புக்கு ஒரே கவலையானது. ‘அப்பா மறுபடியும் வந்து அம்மாவிடம் கலாட்டா செய்வாரா? அப்படினா நான் கிட்டத்தல இருந்தா கெடைக்கிற கட்டையை எடுத்து மண்டைல போடுவேன். அம்மா பாவம் என்னா செய்யும்?’ என்று மனதில் உறுத்தல் அதிகரித்தது. கம்பெனியில் போடுற கொஞ்சம் சோத்தை கூட சாப்பிட முடியவில்லை.

மூன்றாம் நாள் அவன் எண்ணங்களுக்கு மாறாக விடிந்தது. அப்புவை பார்க்க அவனுடைய அம்மா அப்பா இருவருமே ஒன்றாக வந்தார்கள்.பார்த்ததும் காய்ச்சல் வருகிற மாதிரி ஆகி விட்டது. அப்பா மீது இருந்த கோபம் அப்படியே அம்மா மீதும் தாவிற்று. அம்மா வித்தியாசமாக தெரிந்தாள். படிய எண்ணெய் வைத்து தலை வாரி இருந்தாள். தலையில் பூவும் தொங்கிக் கொண்டிருந்தது. காலில் கறுப்பும் வெள்ளையும் கலந்த செருப்பு போட்டிருந்தாள். புடவை கூட புதுசு. அம்மாவும் புதுசாகத் தெரிந்தாள். அம்மாவை பார்ப்பதற்கு அவனுக்கு கூச்சமாக இருந்தது. அம்மா கிட்டே வந்த போது எரிச்சல் கூடியது.

“அப்பா ரொம்ப மாறிட்டார்டா அப்பு... திருந்தி வந்திருக்கார்... பாவம்னு வீட்ல சேர்த்துகிட்டேன்...” என்றாள் ராஜாத்தி.
முன்பு ஒரு முறை அப்பா காணாமல் போய் வந்த போது கூட அம்மா இப்படி சொன்னதாக ஞாபகம். அம்மாவை அவனுக்கு புரியவில்லை, பிடிக்கவில்லை.“இன்னும் ரெண்டு மாசம்தான் நீ இங்க செய்வ அப்பு. அப்பா அதுக்குள்ள கடன அடைச்சிட்டு உன்னை கூட்டியாந்து ஸ்கூல்ல சேத்துடுவார்...”

‘அப்பா இன்னும் ரெண்டு மாசம்தான் இருப்பான்... அப்புறம் ஓடிடுவான்...’ என்று சொல்ல தோன்றிற்று. சொல்லவில்லை.முதலாளியிடம் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். முதலாளி கொஞ்சம் பணத்தை எண்ணி அம்மாவிடம் கொடுத்தார்.தன்னை அடமானம் வைத்து வாங்கின பணம் என்பது நெருப்பில் சுட்ட மாதிரி புரிந்தது.

அம்மா அதை அப்பாவிடம் கொடுத்தாள், அவன் அதை உள் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.அப்புவுக்கு பயம் ஏனோ வந்தது. கண்கள் கலங்கிற்று. அவர்கள் போகும் போது அம்மாவிடம் சொன்னான். “அந்த ஆளு மறுபடியும் ஓடிப் போற வரைக்கும் என்னைப் பார்க்க வராதம்மா. ஞாயித்துக்கிழமை கூட நான் இங்கேயே தங்கிடறேன். நானே துணி துவைச்சி நானே தண்ணி ஊத்திக்கிறேன்...”                   

நா.கோகிலன்