தென்னிந்தியாவுலயே நாங்கதான் முதல்முறையா என்95 முகக்கவசத்துடன் பிபிஇ கிட்ட குறைந்த விலைக்கு தயாரிக்கறோம்...



ஆந்திரால எங்களுக்கு ஆர்டர் தர்றாங்க... ஆனா, தமிழக அரசு எங்ககிட்ட இருந்து வாங்காம இருக்காங்க...

வருத்தப்படுகிறார் கோவில்பட்டி இளைஞர்

ஒன்றோ... இரண்டோ அல்ல... சுமார் 15 ஆயிரம் பிபிஇ கிட்களை தயாரித்து தயாராக வைத்திருக்கிறார் சுந்தர். கூடவே என்95 முகக்கவசங்களும் அதைவிட கூடுதல்  எண்ணிக்கையில் அவரிடம் உள்ளன. ஆனால், அரசிடம் இருந்து  கொள்முதல் செய்வதற்கான ஆர்டர்தான் இன்னும் வந்தபாடில்லை! அதற்காக காத்துக் கொண்டிருக்கிறார் 26 வயதான இந்த இளைஞர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் Personal Protective Equipment (PPE) எனப்படும் இந்த பிபிஇ கிட்கள் நிறைய தேவை. ஆனால், அந்த கிட்கள் போதுமானதாகவும் தரமானதாகவும் இல்லை என்பதே இப்போது மருத்துவர்கள் வைக்கும் வருத்தமான குற்றச்சாட்டு. அதைத் தரமாக அதிகளவில் தயாரித்து வைத்திருக்கிறார் சுந்தர்.

இந்த இக்கட்டான காலத்தில் தமிழக அரசுக்குத் தேவைப்படும் என்பதற்காகவே இப்படி அதிகளவில் உற்பத்தி செய்திருக்கிறார், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வசிக்கும் சுந்தர். ‘‘எனக்கு கோவில்பட்டி பக்கத்துல நக்கலமுத்தான்பட்டினு ஒரு கிராமம். அப்பா விவசாயி. 2014ல் பிபிஏ முடிச்சேன். அப்புறம் நானும் என் அண்ணன் ஆனந்தும் மருத்துவமனை உபகரணங்கள் வாங்கி விற்கிற நிறுவனத்தை ஆரம்பிச்சோம். மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள் தவிர மருத்துவமனைக்குத் தேவையான எல்லா கருவிகளையும் வெளியிலிருந்து வாங்கி இங்க விற்பனை செய்திட்டு வர்றோம்.

இதுல தமிழ்நாடு மெடிக்கல் சர்வீஸ் கார்ப்பரேஷனுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள சீனா, தைவான், ஜெர்மன், அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகள்ல இருந்து இறக்குமதி செய்து கொடுக்கறோம்.இதேபோல கடந்த மூணு வருஷமா பிபிஇ கிட்களை கேரளாவுல இருந்து வாங்கி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்ககத்துக்குக் கொடுத்திட்டு இருக்கோம். குறிப்பா, இந்தக் கிட்கள் எய்ட்ஸ் பிரிவுல பயன்படுத்துவாங்க.

இங்க கொரோனா தாக்கம் அதிகரிச்சப்ப பிபிஇ கிட்களின் தேவையும் அதிகமாச்சு. இதனால, கேரளாவுல வாங்கி அரசுக்கு கொடுக்கலாம்னு பார்த்தா, அங்க பிபிஇ கிட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுடுச்சு. அதனால, அங்கிருந்து இந்தக் கிட்களை தருவிக்க முடியல. இங்கேயும் தரமா நிறைய கிட் தேவையா இருந்துச்சு. என்ன பண்ணலாம்னு யோசிச்சப்பதான் நாமே தயாரிக்கலாம்னு முடிவெடுத்தோம்...” என்கிறவர், பல்வேறு சிரமங்களைக் கடந்து இதற்கான பொருட்களை கொண்டு வந்திருக்கிறார்.

‘‘இந்த இக்கட்டான காலத்துலயும் இதுக்கான மெடீரியல்களை குஜராத், புனே உள்ளிட்ட நகரங்கள்ல இருந்து தருவிச்சோம். இத 90ஜிஎஸ்எம் ஸ்பன் மெடீரியல்னு சொல்வாங்க.  இந்த மெடீரியல் வந்ததும் முதல்ல இளையரசனேந்தல், சங்கரன்கோவில், திருவேங்கடம், கோவில்பட்டி பகுதிகளிலுள்ள கார்மென்ட்ஸ்ல ஜாப் வொர்க்கா இதுக்கான பணிகள மேற்கொண்டோம். இதுக்கு முன்னாடியே இந்தக் கிட்களை நாங்க வாங்கியிருந்ததால அது என்ன மெடீரியல், எப்படி உருவாக்கணும்ங்கிற ஐடியா எங்ககிட்ட ஏற்கனவே இருந்தது.

தவிர, ஒரு பிபிஇ கிட் மாடலும் வச்சிருந்தோம். அதை கார்மென்ட்ஸ் தையக்காரர்களிடம் காட்டி கிட்டை வேகமா உருவாக்கினோம். ஒருநாளைக்கு ஆயிரம் பீஸ் ரெடி பண்ணினோம். இதை இந்தியாவின் மத்த பகுதிகளிலும் தயார் பண்றாங்கதான். ஆனா, அவங்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம்னா நாங்க என்95 மாஸ்குடன் இந்த பிபிஇ கிட்டை கொடுக்கறோம்.

இந்த என்95 மாஸ்க் மட்டும் மும்பைக்கு ஒரு லாரியை அனுப்பி எடுத்துட்டு வந்தோம். இன்னைக்கு வெளிக்கடைகள்ல சாதாரணமா இந்த மாஸ்க் முந்நூறு ரூபாய் வரை வித்திட்டு இருக்காங்க. நாங்க 150 ரூபாய்க்கு தர்றோம். எங்க பிபிஇ கிட்டின் விலை 400 ரூபாய். என்95 முகக்கவசமும் சேர்த்து இதை 550 ரூபாய்க்குத் தர்றோம்.

தென்னிந்தியாவுலயே நாங்கதான் முதல்முறையா என்95 முகக்கவசத்துடன் இந்தக் கிட்டைக் வழங்கறோம். அதேமாதிரி இந்தக் கிட்டை வெல் க்ரோ மாடல்ல தயாரிச்சோம். இந்த மாடல்ல யாரும் இதுவரை உற்பத்தி பண்ணல. அதாவது, ஜிப் வைக்காமல் ஒட்டுறமாதிரியான மாடல் இது. ரொம்பப் பாதுகாப்பானது. இவ்வளவு வேலைகள் உள்ள இந்தக் கிட்டை நாங்க குறைஞ்ச மார்ஜின் வச்சுதான் விற்கிறோம்.

ஆனா, யாருக்காக தயாரிச்சமோ அந்த நோக்கம் நிறைவேறல. இதுவரை தமிழக அரசு எதுவும் வாங்கல. நானும் நிறைய மருத்துவக் கல்லூரிகளின் டீன்களுக்கும் மாவட்ட ஆட்சியர்களும் மெயில் போட்டுட்டேன். நேரடியா போயும் பேசிட்டேன். யாரும் வாங்க முன்வரல.

கேரளா, ஆந்திராவுல இருந்து ஆர்டர் வந்துச்சு. ஆந்திராவுல 9 ஆயிரம் கிட்கள் வரை வாங்கியிருக்காங்க. அப்புறம், ஒரு தனியார் சிமென்ட் நிறுவனம் எங்ககிட்ட இரண்டாயிரத்து 500 கிட்கள் வாங்கி நிறைய மருத்துவமனைகளுக்கு இலவசமா கொடுத்திருக்காங்க. இருந்தும், எனக்கு நம்ம தமிழகத்துக்குக் கொடுக்கணும்னுதான் ஆசை.   

ஆனா, நம்ம தமிழக அரசு ஆந்திராவுல இருந்து 250 ரூபாய்க்கு பிபிஇ கிட்கள வாங்கிட்டு இருக்காங்க. அவங்க நார்மல் முகக்கவசம் வச்சு கொடுக்குறாங்க. இந்த விலைக்கு எங்களால பிபிஇ கிட்டை கொடுக்க முடியாது. ரொம்ப நஷ்டமாகிடும். இப்ப எங்ககிட்ட 15 ஆயிரம் பிபிஇ கிட்கள் ஸ்டாக் இருக்குது. திரும்பவும் எல்லோருக்கும் மெயில் போட்டுட்டு காத்திட்டு இருக்கோம்.

தவிர, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்துக்கு முகக்கவசத்துடன் ஒண்ணும், முகக்கவசம் இல்லாம ரெண்டு மாதிரிகளும் கொடுத்திட்டு வந்திருக்கோம். இதுக்குப் பிறகாவது வாங்குவார்களானு தெரியல.இந்த என்95 முகக்கவசம் மட்டும் 22 லட்ச ரூபாய்க்கு வாங்கினோம். 20 ஆயிரம் பீஸ் இருக்கு. இந்தக் கிட் தயாரிக்க ஆன கூலி செலவு மட்டும் 16 லட்சம் ரூபாய். தவிர, துணி வாங்க பத்து லட்சம் ரூபாய் செலவாச்சு. மொத்தத்துல 50 லட்சம் ரூபாய் வரை செலவழிச்சிருப்போம்.

ஆனா, இதுவரை பிசினஸ்னு பார்த்தா 13 லட்சம் ரூபாய்க்கே நடந்திருக்கு. அதுவும் ஆந்திராவுல வாங்கினது. ஒருவேளை ஆர்டர் கிடைக்கலன்னா எங்களுக்கு 25 லட்சம் ரூபாய் நஷ்டமாகும்...” என வருத்தப்படும் சுந்தர், கிட் உற்பத்தி செய்வதை இப்போது நிறுத்திவிட்டார்.  ‘‘யாரும் வாங்க முன்வராததால இப்ப நாங்க இந்த பிபிஇ கிட்டுகளை ஸ்டாக் வச்சிட்டு அடுத்த பிசினஸுக்குப் போயிட்டோம். ஆனா, இந்த பிபிஇ கிட்டை அரசு எப்ப கேட்டாலும் நாங்க தர ரெடியாவே இருக்கோம்...” என்கிறார் சுந்தர்.              

பேராச்சி கண்ணன்