உலகை உலுக்கிய உயிர்கொல்லி நோய்கள்!



மினி தொடர் 3
 
ரோமானிய பேரரசை உலுக்கிய சைபீரிய பிளேக்


பிளேக் என்ற சொல் தாக்குதல், காயம்படும்படி அடித்தல் எனப்படும் கிரேக்கச் சொல்லில் இருந்து வருவது. கொள்ளை நோய்கள் தாக்கியபோது கண்ணுக்குத் தெரியாத எதிரியால் தாங்கள் தாக்கப்படுகிறோம் என்றே பண்டைய கிரேக்கர்கள் கருதினார்கள். கிரேக்கத்திலிருந்து லத்தீனுக்குச் சென்ற அச்சொல் அங்கிருந்து ஆங்கிலம் உள்ளிட்ட எல்லா ஐரோப்பிய மொழிகளுக்கும் சென்றது.

பிளேக் என்ற சொல்லால் பழங்கால ஐரோப்பியர்கள் பலவிதமான கொள்ளை நோய்களையும் அழைத்தார்கள். வைரஸ் காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல், மர்மக் காய்ச்சல்கள், சின்னம்மை, பெரியம்மை, எபோலா போன்ற வைரஸ் காய்ச்சல்கள் ஆகிய அனைத்தையுமே பிளேக் என்ற சொல்லால் விளித்தார்கள்.

அந்தோனின் பிளேக்குக்கு பிறகு ஒட்டுமொத்த ஐரோப்பிய கண்டத்தையும் குறிப்பாக ரோமானிய சாம்ராஜ்யத்தை அலற வைத்தது ‘சைப்பீரியன் பிளேக்’ என்ற கொடூர நோய்தான்.கி.பி. 249 முதல் 262 வரை பதினான்கு ஆண்டுகள் ரோமானிய சாம்ராஜ்யத்தில் ருத்ர தாண்டவமாடியது சைப்பீரியன் பிளேக்.

யோசித்துப் பாருங்கள். இத்தனை மருத்துவ முன்னேற்றங்கள் இருந்துமே இந்த மூன்று நான்கு மாதங்களில் கொரோனா நம்மை இப்படி படுத்தியிருக்கிறது என்றால், எந்தவிதமான மருத்துவ முன்னேற்றங்களும் இல்லாத பழங்காலத்தில் பதினான்கு ஆண்டுகள் ஒரு கொடூர தொற்றோடு எப்படிப் போராடியிருப்பார்கள் ரோமானியர்கள்? நினைக்கவும் அச்சமாக இருக்கும் கொடூரன் அல்லவா இது...

மூன்றாம் நூற்றாண்டு, ரோமானிய சாம்ராஜ்யத்துக்கு மிகப் பெரிய சோதனை காலமாக இருந்தது. மூன்று நூற்றாண்டுகள் ஒட்டுமொத்த ஐரோப்பிய கண்டத்தையும் கட்டியாண்டு, ரஷ்யா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகள் வரை தங்கள் எல்லையை நீட்டித்துக் கொண்டு வந்த ரோமானி யர்களின் செல்வாக்கு சரியத் தொடங்கிய காலம் அது.

எல்லையோரங்களில் வசித்த பார்பாரியன்கள் எனப்படும் பூர்வகுடிகள் கொடுத்த தொல்லைகள் ஒருபுறம் என்றால், உள்நாட்டிலேயே விவசாயிகள் கிளர்ச்சி, வீரர்களுக்கிடையே ஒற்றுமையின்மை, வெளிப்பகுதிகளிலிருந்து குடியேறியவர்களால் வந்த முரண்பாடுகள், அரசியல் படுகொலைகளால் ஏற்படும் ஸ்திரமற்ற தன்மை என்று ரோமானிய சாம்ராஜ்யமே ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் சூழலில்தான் இந்த சைப்பீரிய பிளேக் சூறாவளியாக நுழைந்தது. தீப்பட்ட காயத்தில் தேள் கொட்டியதாகத் தவித்தது ரோமானிய பேரரசு.

பாதிரியார் புனித சைப்பீரியன் என்பவர் இந்தக் கொடூரத் தொற்றைப் பற்றி விளக்கமாக எழுதியிருப்பதால் இதனை சைப்பீரியன் பிளேக் என்று அவரின் பெயராலேயே அழைக்கிறார்கள். அந்நாட்களில் கார்த்தேஜ் என்றொரு மத்தியதரைக்கடல் நகரம் இருந்தது. ரோமானிய சாம்ராஜ்யத்தின் முக்கியமான தொழில் நகரங்களில் பிரதானமானது கார்த்தேஜ். புனித சைப்பீரியன் அந்த கார்த்தேஜ் நகரத்தைச் சேர்ந்தவர்தான். தன் நகரத்தை இந்தக் கொள்ளை நோய் எப்படி சூறையாடியது என்று கண்ணீர் மல்க விவரிக்கிறார் சைப்பீரியன்.

ரோமில் நாள் ஒன்றுக்கு ஐந்தாயிரம் பேரை வேட்டையாடியது இக்கொடிய நோய் என்கிறார் சைப்பீரியன். “வெறுக்கத்தக்க அந்த இரக்கமற்ற நோய் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழைந்தது. நடுங்கிக் கொண்டிருக்கும் மக்களில் ஒவ்வொருவராகப் பற்றியது. இது எண்ணிக்கையற்று நீண்டு கொண்டே போனது. மக்கள் அனைவரும் உயிருக்கு அஞ்சி வீட்டிலேயே இருந்தார்கள். பசியும் பஞ்சமும் தலைவிரித்தாடியது. உணவின்றி வீட்டில்
மரித்தவர்களும் ஏராளம்.

தங்கள் சொந்த உறவினர்கள், நண்பர்களைக் காணவும் அஞ்சினார்கள். நம் அன்புக்குரியவர்கள் நமக்கு மரணத்தைக் கொண்டு வரும் தூதர்களாக மாறிவிட்டார்கள் என்று அஞ்சினார்கள். எங்கும் மனிதர்களே இல்லை. உடல்கள் மட்டுமே இருந்தன. உயிரற்ற உடல்களுக்கு இடையே உயிருள்ள உடல்கள். அவை தம் தருணம் எப்போது என அஞ்சிக்கொண்டிருந்தன. மக்கள் கொத்துக் கொத்தாக மரணித்துக் கொண்டிருப்பதை கையறு நிலையாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள்...” என்கிறார்.

சைப்பீரியனின் இந்த துயரார்ந்த, கொடூர வரிகளைப் படிக்கும்போது நமக்கு இந்தக் கொரோனா காலத்துக் கொடூர சித்திரங்களே நினைவிலாடு
கின்றன. அன்று அந்நாளில் ரோமில் நடந்தது என்னவோ அதேதான் இன்று இத்தனை நூற்றாண்டுகள் கழித்து இத்தாலியிலும், ஜெர்மனிலும், அமெரிக்காவிலும் ஏன் நம் நாட்டிலுமேகூட நடந்துக் கொண்டிருக்கிறது என்று நினைக்கையில் வேதனையாக இருக்கிறது.

இயற்கையாக நடக்கும் விஷயங்களுக்கு மனிதர்கள் எப்போதுமே தங்கள் இஷ்டம்போல் அல்லது தங்கள் தேவைக்கு ஏற்ப விளக்கம் கொடுப்பது ஆதி கால வழக்கம் அல்லவா? அப்படித்தான் அந்நாட்களில் மதகுருமார்களும் மற்றவர்களும் இக்கொடூரத் தொற்று ஏற்பட்டதற்கு கடவுளின் கோபமே காரணம் என்றார்கள். ரோமானிய சாம்ராஜ்யத்துக்குள் இருந்துகொண்டு கிறிஸ்துவத்தைப் பின்பற்றாத சில பூர்விககுடிகளால்தான் இந்தக் கொடூர நோய் பரவியது என்றார்கள். கிறிஸ்துவம் தோன்றிய பிறகே இக்கொள்ளை நோய்கள் தோன்றியது (அது உண்மையல்ல. அதற்கும் முன்பிருந்தே இக்கொள்ளை நோய்கள் இருக்கின்றன) எனவே, இம்மதத்தைப் பின்பற்றாத கீழ்படியாமைக்குக் கடவுளின் கோபமே காரணம் என்பதை மதநூல்களில் இருந்தே ஆதாரங்கள் காட்டினார்கள்.

இன்றைய நவீன விஞ்ஞானம் இப்படியான எளிய நம்பிக்கைகளை எல்லாம் கடந்து வந்திருக்கிறது என்பதுதான் ஆறுதல். சைப்பீரியன் பிளேக் என்ற கொடிய நோயின் அறிகுறிகளைப் படிக்கவே கலக்கமாக இருக்கிறது. முதலில் இடையறாத வயிற்றுப்போக்கோடு தொடங்கும். தொடர்ந்து பேதியாவதால் ஒரே நாளில் நோயுற்றவர் உடல் சோர்ந்து எழுந்து நிற்கவியலாத நிலைக்குச் செல்வார்.

சிலருக்கு தொண்டையில் புண் ஏற்பட்டு தொடர்ச்சியான வாந்தி ஏற்படும். கண்கள் நெருப்புக் கோளங்கள் போல் தகதகவென எரியும். பார்வைத்திறன் மங்கும். கேட்கும் திறன் மந்தமாகிவிடும். சுயநினைவை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருப்பார்கள். ஒரு கட்டத்தில் மரணத்தைத் தழுவி விடுவார்கள்.
கேட்கவே பீதியாக இருக்கும் இந்நோய் பதினான்கு ஆண்டுகள் ருத்ரதாண்டவம் ஆடிய பின் சற்று ஓய்ந்தது. ஆனால் மீண்டும் எட்டே வருடங்களில் திரும்ப வந்தது. இம்முறை வறியவர்களை மட்டும் அல்லாது செல்வந்தர்களையும் பிரபுக்களையும்கூட இரக்கமின்றி சூறையாடியது.

உச்சமாக, ரோமானிய பேரரசர் இரண்டாம் கிளாடியஸ் கோத்திக்கஸ் இந்நோய்க்குப் பலியானார். சில வரலாற்று ஆசிரியர்கள் இரண்டாம் முறை வந்தது வேறு கொள்ளை நோய் என்கிறார்கள். ஆனால், ஹிஸ்டோரியா அகஸ்த்தா என்னும் ரோம வரலாற்று நூல் இதனைப் பற்றி விரிவாகப் பதிவு செய்துள்ளது.

முன்பு வந்த அந்தோனின் பிளேக் ஆகட்டும் இந்த சைப்பீரியன் பிளேக் ஆகட்டும் இரண்டுமே முதன் முறையாக இவர்களைத் தாக்கியிருக்க வேண்டும் என்கிறார்கள். அதனால்தான் அதற்கான எதிர்ப்பு சக்தி இல்லாமல் கொத்துக் கொத்தாக மக்கள் மரித்திருக்கிறார்கள். வரலாற்றாசிரியர் வில்லியம் ஹார்டி மெக் நெயில் இவை இரண்டுமே விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குத் தொற்றியிருக்கலாம் என்று அனுமானிக்கிறார். இவை இரண்டும் சின்னம்மை மற்றும் பெரியம்மையாக இருக்க வேண்டும் என்றும் கணிக்கிறார்.

ஸ்ததகோபோலஸ் என்ற அறிஞர் இரண்டுமே பெரியம்மைதான் என்று சொல்கிறார். கைல் ஹார்ப்பர் என்பவரோ இது சின்னம்மையும் இல்லை பெரியம்மையும் இல்லை எபோலா போன்ற ஒரு மர்மக் காய்ச்சல் வகை என்கிறார்.சுமார் பத்து லட்சம் உயிர்களைக் காவு வாங்கிய இந்த சைப்பீரியன் பிளேக் என்ற கொள்ளை நோயால் ரோமானிய சாம்ராஜ்யமே சரிந்தது என்கிறார் ஹார்ப்பர். தேசத்தின் உட்கட்டுமானங்கள் முழுக்கச் சிதைந்தது. அடிதட்டு மக்கள் முதல் அரசர் வரை அனைவரையும் நோய் தாக்கியதால் பொருளாதாரம் முற்றிலுமாகச் சிதைந்தது.

நோயின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க ரோம், கார்த்தேஜ் நகரங்களில் இருந்து சொந்த கிராமத்துக்கு ஓடினார்கள் மக்கள். இதனால் அங்கும் நோய் பரவி கொத்துக் கொத்தாக செத்தார்கள். விவசாயம் உட்பட அனைத்து உள்நாட்டு உற்பத்தியும் பாதித்தது. வணிகம் சிதைந்தது. ஏற்கெனவே தடுமாறிக்கொண்டிருந்த ரோமானிய சாம்ராஜ்யத்தை இந்த சைப்பீரிய பிளேக் குழியில் தள்ளி மண்ணள்ளிப் போட்டு மூடியது.

கொள்ளை நோய்கள் மனிதர்களை மட்டும் அழித்ததில்லை. வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுந்து வந்த மானுட குல கனவுகளையும் பேரரசுகளையும் சேர்த்தே அழித்து வந்திருக்கிறது என்பதற்கு இந்த சைப்பீரியன் பிளேக் ஒன்றே கருப்பு சாட்சி.

(உயிர்கொல்லிகளுக்கு எதிரான போர் தொடரும்)

- இளங்கோ கிருஷ்ணன்