தமிழ் சினிமா?



சினிமா வேறு நாம் வேறு இல்லை என்றாகி விட்டவர்கள் தமிழர்கள். கதைகள் சினிமாவாக மாறும் பொழுது நம்மை உள்ளே இழுக்கின்றன. சொல்லப்போனால் கதை அல்ல, கதையைச் சொல்வதுதான் வசீகரம். கிட்டத்தட்ட நிஜமும் கனவும் ஒன்று சேர்கிற இடத்திலேயே கதைகள் ஆரம்பிக்கின்றன.

அப்படி விரும்பிப் பார்த்த சினிமாவும் சினிமா தியேட்டர்களும் எட்டாக் கனிகள் ஆகியிருக்கின்றன. கொரோனாவின் பயங்கரம் எல்லா இடங்களிலும் ஊடுருவி தமிழர்களின் கொண்டாட்டங்களை கேள்விக்குறியாக்கிவிட்டது. லாக்டவுன் விலக்கப்படும் வேளை நெருங்கிக்கொண்டிருக்க, தமிழ் சினிமாவின் எதிர்காலம் புதுவகையான மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

மக்கள் அமேசான், நெட்பிளிக்ஸ் தளங்களுக்கு பயணப்பட்டுவிட கிடைத்த நேரத்திற்கு தக்கவாறு சினிமா பார்க்கப் பழகி விட்டார்கள்.இதை புரிந்து கொண்ட தன்மை எதிர் வரும் சினிமாவுக்கு என்ன வகையான மாற்றத்தை அளிக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது.


இந்த இருமாத காலத்தில் பிற மொழி சினிமாக்களின் புதுமைகளை உணர்ந்து புரிந்த தமிழ் மக்கள் அடுத்து நம் கதாநாயகர்கள், இயக்குநர்களிடம் என்ன எதிர்பார்ப்பார்கள்? கொரோனாவிற்கு பிறகான தமிழ் சினிமாவின் அசல் நிலை என்ன என ஆராயப் புகுந்தோம். இயக்குனர் கரு. பழனியப்பனிடம் கேட்டால் பிரச்னைகளின் உள்ளே போய் பேசுகிறார்.

“மக்களின் மனப்பாங்கு, ரசனை என பெரும்போக்கில் நிறைய மாற்றம் இருக்கிறது. தனித்திருந்தது, வீட்டிற்கே வந்து குவிந்த சினிமா, வகை வகையாக பார்க்க அமேசான், நெட்பிளிக்ஸ் கொண்டு சேர்க்கின்ற படங்கள் புது வகையில் கிடைத்துவிட்டன. அதில் மக்கள் என்னை போலவே ருசி கண்டிருப்பார்கள் என நம்புகிறேன்.

ஆனால், இந்த லாக்டவுனில் உடைக்கப்பட போகிற கடைசிப் பூட்டு சினிமா தியேட்டர்களுக்கானது. நிச்சயம் தியேட்டர்களை கடைசியாக திறப்பதாகவே அரசுக்கு எண்ணம் இருக்கிறது. ஏகப்பட்ட பணம் புழங்கினாலும், அரசுக்கு வருமானம் கிடைத்தாலும் அரசு சினிமாவை அத்தியாவசியமானதல்ல என்றுதான் கருதுகிறது. இதுவே உண்மை. கிராமத்தில் விளைகிற காய்கறிகளைக் கூட இங்கு கொண்டுவர முடியாத சூழலில் சினிமா இப்போதைக்கு அவசியம் இல்லைதான்.

அமேசான் தளங்களில் வெளியாகும் படங்களில் கண்டன்ட் வேறுபடுகிறது. நாம் 1947ல் சுதந்திரம் பெற்றுவிட்டு 48ல்தான் சட்டங்களை மெதுவாக உருவாக்கினோம். கட்டற்ற சுதந்திரம் கொடுத்து விட்டு, அப்புறம்தான் நாம் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவோம். எது எப்படி இருந்தாலும் இங்கே பெரும் நட்சத்திரங்களின் மதிப்பு குறையாது. பெரும் வெற்றி பெற்ற அனிமேசன் படங்களில் மிருகங்களுக்கு டப்பிங் பேசக் கூட ஷாருக்கான் போன்ற பெரும் நடிகர்கள்தான் தேவைப்பட்டார்கள். அடிப்படை எதுவும் மாறாது. ஆனாலும் மக்கள் புதுமையை விரும்ப தலைப்பட்டு விட்டார்கள்...” என்கிறார் கரு. பழனியப்பன்.  

விநியோகஸ்தரும், தியேட்டர் உரிமையாளருமான திருப்பூர் சுப்ரமணியன் கொஞ்சம் ஆதாரத்தை அசைத்துப் பார்க்கிறார். “அய்யா, சினிமாவை மக்கள் மறக்க மாட்டார்கள். இப்பொழுது வீட்டில் இருக்க வேண்டி இருப்பதால் கைக்கு கிடைக்கும் படங்களை பார்க்கிறார்கள்.

தியேட்டர் திறந்துவிட்டால், போக்குவரத்தை அனுமதித்துவிட்டால், இந்த நோய் உக்கிரமும் போய்விட்டால் உடனே முதல் வேலையாக திரையரங்குகளுக்குத்தான் வருவார்கள். நம் கலாசாரம் கூடி பேசி ரசிக்கிற கலாசாரம். நிச்சயம் இந்த வைரஸ் அழிந்துவிடும். இதிலேயே இருக்கப்போகிறோம் என நினைக்க வேண்டியதில்லை.

இப்பத்தான் எல்லோரும் உக்காந்து பேசி, பிணக்குகள் சரியாகி, உறவுகள் புரிந்து வெளியே வந்திருக்கோம். ஆளுக்கு ஆள் ஒவ்வொரு அறையில் உட்கார்ந்திருந்தோம். மக்கள் இனிமேல் சென்டிமென்ட், ஆக்‌ஷன், குடும்ப நலன் ரசிக்கப் போறாங்க. அடுத்தடுத்து பெரும்படங்கள் ஆரம்பிச்சும், முடிஞ்சும், தொடங்கியும் நிறைய இருக்கே! வரட்டும். உற்சாகமாக மறுபடியும் தமிழ் சினிமா நல்லா வந்திடும்...” என நம்பிக்கையூட்டுகிறார் சுப்ரமணியன்.

இயக்குநர் வசந்தபாலன் வேறு வகையில் பேசுகிறார். “நான் சினிமாக்காரன்தான். ஆனாலும் இது சினிமாவைப் பற்றி பேச வேண்டிய நேரம் இல்லை. சினிமாவைப் பொறுத்தவரை 2020 என்ற வருடத்தையே சினிமாவில் இருந்து எடுத்துவிடலாம் என நினைக்கிறேன். அப்படி இருக்கிறது இங்கே நிலைமை.

நாட்டில் சேமித்து வைத்திருக்கின்ற உணவுப் பொருட்களின் அளவு குறைந்துவிட்டது. விவசாயிகள் அடுத்த சாகுபடிக்கு இந்நேரம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனாலும் அவர்களையும் லாக்டவுனில் சேர்த்து அடைத்து வைத்திருக்கிறோம். இந்த கொரோனா வைரஸுக்கு அடுத்து வரப்போகும் பயமுறுத்தும் உணவுப்பஞ்சமே என் கண்முன் வந்து நிற்கிறது.

வைரஸில் கூட தனித்திருந்து வெற்றி பெறலாம். பஞ்சம் பிழைப்பது எப்படி? இப்பொழுது சினிமாவைப் பற்றி பேசுவது அதீதமாகப்படுகிறது. நாம் இருந்தால்தானே சினிமா என்கிற போது அதை எப்படி இப்போதைக்கு புரிந்துகொள்வது..?” என கூறி மெளனமாகிறார் வசந்தபாலன்.ஆக, தமிழ் சினிமாவின் நிலை இப்படித்தான் இருக்கிறது. இதற்கான மாற்றத்தின் அறிகுறி சிறிது தெரிந்தாலும் வரவேற்போம். வரப்போகும் நல் விடியலுக்காக
காத்திருப்போம்.

நா.கதிர்வேலன்