மக்களிடம் பெற்று மக்களுக்கு வழங்குகிறோம்!



சென்னை பெருவெள்ளம் காலம் முதல் கொரோனா ஊரடங்கு வரை சேவை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இந்த வாட்ஸ் அப் குழு இயங்கி வருகிறது...

“கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில், சென்னையில் நான்கு நாட்கள் கடுமையான முழு ஊரடங்கு என அரசு அறிவித்த காலத்தில்தான் எங்கள் வேலைகள் சவாலாக மாறின. வழக்கமாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் உணவுகள் கொடுக்கும் இடங்களில் அது நான்கு மடங்காக அதிகமானது. இந்த முடக்கம் தொடரும் போது மக்களின் நிலை என்னவாகும் என்பதை கற்பனை செய்யக் கூட எங்களுக்கு சக்தியில்லை...’’ தழுதழுக்கிறார் ஆன்மன்.

சமூகம் சார்ந்து தொடர்ச்சியாக பல்வேறு வேலைகளை முன்னெடுத்து வரும் ஆன்மன், கடந்த சென்னை வெள்ளத்தின் போது ஒரு குழுவாக இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை மக்களிடமிருந்தே பெற்றுக் கொடுத்தார்.
ஆன்மனின் மீது வெளிச்சம் பாய்ந்தது அப்பொழுதுதான்.“2015 சென்னை வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக வேலைகள் செய்ய ஆரம்பித்தோம். அப்போது ஏற்படுத்தப்பட்ட வாட்ஸ் அப் குழு அப்படியே முகநூலிலும் தொடர்ந்தது.

வெள்ளப் பணிகள் நிறைவடைந்தப் பிறகும் எங்கள் குழுவை நாங்கள் கலைக்கவில்லை. வேறு என்ன செய்யலாம் என திட்டமிட்டோம். அது கஜா புயல், கேரள வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர் காலத்தில் கைகொடுத்தது. மக்களிடமிருந்து மக்களுக்கு வழங்குவது. இதுதான் எங்கள் குழுவின் நோக்கம். அதன்படியேதான் இதோ இப்பொழுது கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்தக் காலத்திலும் செயல்படுகிறோம்...’’ புன்னகைக்கும் ஆன்மன், கொரோனா காலத்தில் தங்கள் குழு மேற்கொண்டு வரும் பணிகளைக் குறித்து விளக்க
ஆரம்பித்தார்.

“எங்கள் மீது நம்பிக்கையுள்ள நபர்கள் பணமாகவோ, பொருளாகவோ கொடுக்கிறார்கள். அவற்றை சிந்தாமல், சிதறாமல் தேவைப்படும்
நபர்களுக்கு கொண்டு போய் சேர்க்கிறோம்.சாலையோரங்களில் வசிப்பவர்கள், மாற்றுத் திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஏழை எளியவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கே நாங்கள் முன்னுரிமை வழங்குகிறோம். கொரோனா முதல் கட்ட ஊரடங்கின் போது தேவைப்படுபவர்களுக்கு அருகில் உள்ள நண்பர்கள் மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ தேவையானதை கொடுத்து வந்தோம். வெளியே செல்ல முடியாத சூழலாலும், நோய் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தாலும் இந்த வகையில் எங்களால் முடிந்ததை செய்தோம்.

ஊரடங்கு அடுத்த கட்டமாக நீடித்து தொடர்ந்தபோது பலரது நிலை கேள்விக் குறியாக மாறியது. தங்களிடமிருந்ததை வைத்து நாட்களை ஓட்டியவர்கள், அடுத்தடுத்த தினங்களில் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறத் தொடங்கினர். எனவே அவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை கொடுக்க ஆரம்பித்தோம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எங்கள் குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை, நீலகிரி, திருவாரூர், வேலூர்… போன்ற பகுதிகளில் முழுமையாக இருபது நாட்களுக்கு மேலாக எங்கள் குழு இயங்கி வருகிறது. ஒரு சில இடங்களில் கம்யூனிட்டி கிச்சனை ஏற்படுத்தியிருக்கிறோம்.

சென்னையை பொறுத்தவரை கோயம்பேடு, திருவல்லிக்கேணி, பல்லாவரம், ராயபுரம்… ஆகிய இடங்களில் சமைத்து அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு விநியோகம் செய்து வருகிறோம். அரசு அறிவித்த நான்கு நாள் முழு ஊரடங்கின் போதுதான் கொஞ்சம் சிரமத்தை உணர்ந்தோம்.
பல இடங்களுக்கு செல்லவோ, போதிய உணவுகளை தயார் செய்ய பொருட்களை வாங்கவோ முடியாமல் அல்லாடினோம்.

உண்மையிலேயே பாதிக்கப்பட்ட மக்கள் மீது அன்பு கொண்ட பலர், தன்னெழுச்சியாக தன்னார்வலர்களாக இந்த ஊரடங்கு காலத்தில் மாறினார்கள். தங்களால் இயன்றதை செய்தார்கள். இந்த செய்திகளை வாட்ஸ் அப், முகநூல் பக்கங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம்.

ஆனால், இப்படிப்பட்ட தன்னார்வலர்கள் அரசு விதித்த கட்டுப்பாடுகளால் சோர்வடைந்து தங்கள் பணிகளை நிறுத்திவிட்டனர். ‘நல்லதுதானே செய்கிறோம். ஏன் இப்படி முடக்குகிறார்கள்...’ என்று மனமுடைந்தனர்.

இதனால் வழக்கமாக நாங்கள் உணவு வழங்கும் மக்களின் எண்ணிக்கை மூன்று, நான்கு மடங்காக அதிகரித்தது. இந்த பளுவை எங்கள் குழு தாங்கியது. ஏனெனில் ஐந்து வருடங்களாக நாங்கள் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இந்த முன் அனுபவம் இப்போது எங்களுக்கு கைகொடுத்தது. போலவே எங்கள் செயல்பாடுகளை தொடர்ச்சியாக கவனித்து வரும் பலர், இம்முறை தாங்களாகவே முன்வந்து எங்களுக்கு பணம் / பொருள் உதவிகளை செய்தனர்.

ஆனாலும் முழுமையாக மக்களின் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்தோம் என்று சொல்ல முடியாது. ஏனெனில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது...’’ வருத்தத்துடன் சொல்லும் ஆன்மன், இதுவரை தங்கள் குழு எந்த விமர்சனங்களையும் எதிர்கொள்ளவில்லை என்கிறார்.

‘‘பொதுவாக இது போன்ற வேலைகளைச் செய்யும்போது பல விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டி வரும். அப்படி எந்த எதிர்கருத்தையும் எங்கள் குழு இதுவரை எதிர்கொள்ளவில்லை. எங்கள் குழுவின் நடவடிக்கை மீது யாரும் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை. இனிவரும் காலங்களிலும் யாரும் எங்கள் குழுவினரை குற்றம்சாட்ட மாட்டார்கள் என நம்புகிறோம். இதற்கு வெளிப்படையாக எங்கள் குழு இயங்குவதும், கணக்கு வழக்குகளை துல்லியமாக நாங்கள் வைத்திருப்பதுமே காரணம்...’’ புன்னகைக்கிறார் ஆன்மன்.

செய்தி:அன்னம் அரசு

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்