கதையை ஒட்டிதான் ஒளிப்பதிவு போகணும்...ஒளிப்பதிவாளர் ராம்ஜி பளிச்



‘‘கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலே கட்டாய ஓய்வு மாதிரி ரெஸ்ட். கொரோனாவின் பாதிப்பு அப்படி. நம்ம கையில் எதுவும் இல்லைன்னு அப்பட்டமாகப் புரியுது. ரொம்ப நாளைக்கு பிறகு மனசுக்குப் புடிச்ச மனுஷனைப் பாத்தா காரணமில்லாம அழுகை வர்ற மாதிரி கஷ்டமாக இருக்கு.

என்னதான் கடல் எல்லையே இல்லாம பெருசா தெரிஞ்சாலும் அந்தப்பக்கம் கரை இருக்கும் இல்லையா... அது மாதிரி இந்த வைரஸுக்கும் ஒரு விடிவு இருக்கும். மறுபடியும் புத்துணர்வு அடைஞ்சிடுவோம்னு நம்பிப் பேசுவோம்...” ஆகக் கருணையுடன் பேசுகிறார் பிரபல ஒளிப்பதிவாளர் ராம்ஜி. ‘ராம்’, ‘பருத்திவீரன்’, ‘தனி ஒருவன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ என பயணம் வந்து ஜனநாதனின் ‘லாபம்’ வரைக்கும் வந்து நிற்கும் இவர் பிரத்யேகமான ஒளிப்பதிவு பாணிக்கு புகழ் பெற்றவர். பி.சி.ஸ்ரீராமின் சீடர்.

எப்படி ஒளிப்பதிவுன்னு முடிவுக்கு வந்தீங்க..?

இதுல திட்டமே இல்லை. திடீர்னு அமைஞ்சது. சினிமாவின் மீது ஆர்வம் இல்ல. பாஸ்கட்பால் ப்ளேயர் ஆகணும்னு மட்டுமே கனவு. பத்து வருஷங்களுக்கு மேலே இதுலதான் போச்சு. அப்படி விளையாடுவதில் பாரபட்சம் வந்ததும் ஒதுங்கிட்டு வெளியே வந்துட்டேன். பி.சி. சார் கிட்ட சேரும் போது சினிமான்னா எதுவும் தெரியாது. என்னோட எவர்கிரீன் குரு அவர்தான்.

சூரியன்லேருந்து ஒளியைக் கடன் வாங்கி நிலா ஒளிருகிற மாதிரி, அவர்கிட்ட வாங்கின வெளிச்சம்தான் தலைமுறை தாண்டி நிறையபேர் கையில பாயுது! நல்ல வேளை… எனக்குக் கிடைச்சதெல்லாம் நல்ல நல்ல படங்கள்… மனசுக்கு பக்கமா இருந்த டைரக்டர்கள். எதையும் செய்வதற்கும் அதை பார்த்து அனுபவிச்சு சரின்னு சொல்றதுக்கும் தயாரா இருந்தாங்க.

எங்கே பார்த்தாலும் பி.சி. ஸ்கூல்தான்…
ஒரு காலத்துல உதவியாளர்களை வெளியே படம் பண்ண அனுப்பவே மாட்டாங்க. இதுல சார் வேற மாதிரி. அஸிஸ்டென்டுக்கு படம் பண்ண தகுதி வந்திருச்சுன்னா, அவங்களை தன்கிட்ட வச்சுக்க மாட்டார். அவருக்கு ஏதோ ஒரு கட்டத்தில் நாம் பயிற்சி முடிச்சிட்டோம்னு தெரியும். க்ளாஸ் எடுத்து எதுவும் சொல்ல மாட்டார். அவர் பேசும்போது சில விஷயங்களை நாமே சேகரிக்கணும்.

அவருக்கு வந்த விளம்பரங்களை ‘இந்தா நீயே பண்ணிக்கோ’னு தூக்கிக் கொடுத்திடுவார். அந்த இடத்துக்கு அவர் வரவே மாட்டார். எனக்கு போட்டி நீங்கதான்டான்னு சொல்வார். ‘உங்க ஒவ்வொருத்தரையும் சொல்லி அடிப்பேன்’னு அவர் புன்னகையோடு சொல்லிட்டுப் போறது அவ்ளோ அழகா இருக்கும்.

யாரும் கேட்டா ‘என் அஸிஸ்டென்ட். என்னைவிட அருமையா வொர்க் பண்ணுவான்னு’ பளிர்னு சொல்லுவார். என்கிட்ட ஸ்டில் கேமரா கூட இல்லாமல் அவர்கிட்ட சேர்ந்தேன். ஜீரோவாக வந்தவனை மாத்திக் காட்டினார். நாம் எங்கே போனாலும் பின் தொடர்வார். ‘ராம்’ பாத்துட்டு என் கழுத்து மேல கைய வச்சு அழுத்திட்டு, ‘பின்னிட்ட… சரி… அந்த ஒரு ஷாட்டை ஏன் விட்டாய்’னு கேட்டார். இதையே வேறு விதமா ‘என்னடா, என் பையன் உன் படத்தை பாத்துட்டே இருக்கான்னு’ எங்கே பார்த்தாலும் சொல்லுவார்.

‘பருத்திவீரன்’ பாத்துட்டு ‘ஏன்டா… அந்த மண்ணோட புழுதிய, வெயிலை தியேட்டருக்கே கொண்டு வந்துட்டியே’ன்னு ஒரு வார்த்தையில சொல்லிட்டு போனை வைச்சார். அதெல்லாம் ஒரு மனப்பக்குவம். அந்த நிலையெல்லாம் நான் அடைய முடியுமான்னு தேடிக்கிட்டு
இருக்கேன்.

உங்க பார்வையில் ஒளிப்பதிவு எப்படியிருக்கணும்னு சொல்லுங்க…ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு தினுசு. சிலருக்கு ஃப்ரேம் பளிர்னு தொடச்சு விட்ட மாதிரி அழகா இருக்கணும். இன்னும் பலர் அழகியலை வடிச்சு கொண்டு வந்து சேர்ப்பாங்க. எனக்கு என்ன பிடிக்கும்னா, ஒளிப்பதிவு கதையை ஒட்டிதான் போகணும். எந்த ஒரு விஷயமும் கதையைத் தாண்டி போகக் கூடாதுன்னு கவனமா இருப்பேன். ‘Available lights’ இருந்தால் அதையே பயன்படுத்துவேன்.

படத்தோட நடைமுறைக்கு அணுக்கமான வண்ணம் பூசுறதுதான் ஒளிப்பதிவு. ஒவ்வொரு சமயத்திலும் இந்த இருட்டையும் வெளிச்சத்தையும் பார்க்கும் போது தனித்துவம் தெரியும். கோயில் கருவறையில் இருக்கிற இருட்டு வேற மாதிரி இருக்கும். அதிலேயே அகல் விளக்கு ஏத்தி வைச்சா, அந்த ஒளியில் சாமி மட்டுமே மின்னுறது இன்னும் வசீகரமா இருக்கும்.

உச்சி வெய்யிலில் நடந்தால் ‘இந்த தெருவில மனுஷன் நடமாடுவானா’ன்னு தோணும். அதே தெருவில மாலை கடந்தால் ‘அடடே, இவ்வளவு அழகா இந்தத் தெரு’ன்னு நெனப்போம். மனசுதான். அதுக்கு எப்படி புடிக்குதோ அப்படிதான் புடிக்கும். அதுதாங்க… படத்துக்கு ஏத்த மாதிரி உணர்வுகளை ரசிகர்களின் மனதில் விதைக்கிறதுதான் நல்ல ஒளிப்பதிவு.

தமிழ் சினிமா எப்படியிருக்கு..?

நல்லாயிருக்கு. நல்ல டைரக்டர்கள் ரசனையோட வர்றாங்க. அப்படி வர்றவங்களுக்கு ஒளிப்பதிவாளர்களோட இணக்கமான உறவிருக்கு. இப்ப பாருங்க… மோகன் ராஜாவோட ‘தனி ஒருவன்’, ‘வேலைக்காரன்’ ரெண்டு படம் சேர்ந்தாற்போல் பண்ணிட்டேன். அடுத்ததும் இதோ செய்யப் போறேன். ஜே.ஜே.ப்ரடெரிக்னு ஒரு புது இளைஞனுக்குப் ‘பொன்மகள் வந்தாள்’னு ஒரு நல்ல படம் முடிச்சிருக்கேன்.

பரஸ்பரம் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் ஒருவரையொருவர் நம்பறோம். இங்கே நான்தான் பெரிய ஆளு, நீதான் பெரிய ஆளு என்ற சர்ச்சையே இப்ப நடக்கிறது இல்லை.வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் பொழுது என்ன தோணுது..?

இப்ப ஃபீல்டுக்கு வந்திருக்கலாம்னு மனசுல படும். தொழில் நுட்பத்துல கேமராவோட நேர்த்தி எங்கேயோ போய் நிக்கிது. டிஜிட்டல் டெக்னாலஜியில் இது அசரடிக்கிற கட்டம். உட்கார்ந்து இருக்கிற இடத்தில எல்லாத்தையும் விஞ்ஞானம் கொண்டு வந்து சேர்த்துவிட்டது. அதை நாம் நல்லா பயன்படுத்திக்கிட்டா அழகு. உழைப்பு மட்டும்தான் என்னை இவ்வளவு தூரம் தூக்கிட்டு வந்திருக்கு. எல்லாத்தையும் தாண்டி மனித நேயம் முக்கியம்னு புரியுது.

மனைவி பாமா, எனக்கு அற்புதமான தோழி. ரித்விகா, கிருத்திக் ஷான்னு இரண்டு அருமையான குழந்தைகள். இவங்களுக்கு நேரம் ஒதுக்குறதுதான் என் பெரிய சந்தோஷம்…    

நா.கதிர்வேலன்