அசத்தும் லண்டன் பேருந்து நிலையம்!



கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க லண்டனில் ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்பட்டது. வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்ததால் பெரியவர்களைவிட குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் சாரா என்ற ஆசிரியரின் மனதில் உதித்த யோசனை கொரோனா சூழலிலும் பாசிட்டிவ் எனர்ஜியை லண்டன் குழந்தைகளுக்கு அளித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் வழியாக குழந்தைகளிடமிருந்து ஓவியங்களைத் திரட்டி, ஓவியக் கண்காட்சியை நடத்தி ஆச்சர்யப்படுத்தியுள்ளார் சாரா. கண்காட்சியை நடத்த ஒரு கலைக்கூடத்தை தேடியபோது அவருக்குக் கிடைத்த இடம் தான் லண்டன் பேருந்துநிலையம்.

ஊரடங்கால் பேருந்து நிலையமும் காற்று வாங்கிக்கொண்டு இருந்தது. அதனால் எந்த சிரமமும் இல்லாமல் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடன் பேருந்து நிலையத்தையே கலைக் கண்காட்சிக்கூடமாக மாற்றிவிட்டார். சாராவிற்கு உதவியாக இருந்தவர் அவரது நான்கு வயதான மகள் ரோஸி என்பதுதான் இதில் ஹைலைட்.

வானவில், கார்ட்டூன் பொம்மைகள், மலர்கள் என குழந்தைகளின் கைவண்ணத்தில் மிளிரும் ஓவியங்கள் இனி லண்டனில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களையும் அலங்கரிக்கும். ஆம்; சாராவைப் பின்தொடர்ந்து பலரும் தங்களின் ஏரியாவில் ஓவியக் கண்காட்சியை நடத்த திட்ட
மிட்டுள்ளனர்!

த.சக்திவேல்