வால்டர்குழந்தைகளைக் கடத்தும் கும்பலைக் கண்டுபிடித்து அதன் முதுகெலும்பை முறிக்கும் இளைஞனே ‘வால்டர்’.நகரில் எல்லாமே சுமுகமாக இருக்கிறது. அந்த சூழலில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் குழந்தைகள் காணாமல் போகிறார்கள். செய்வதறியாது திகைக்கிறது நிர்வாகம். சமுத்திரக்கனியின் வளர்ச்சியைப் பொறுக்காமல் அவரைத் திட்டமிட்டு என்கவுண்டர் செய்கிறார்கள். எதிர்ப்பவர்களை எல்லாம் ஒழித்துக் கட்டி பெரும் அரசியல்வாதியாக வளர்கிறார் பவா.

இத்தகைய நிலையில் தொடர் குழந்தைகள் கடத்தலை புலன் விசாரணை செய்ய சிபியை நியமிக்கிறார்கள். அவர் பொறுப்பேற்று குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதே க்ளைமேக்ஸ்.   புள்ளிகளை இணைத்து கோலம் போடுவது எளிது. அதற்கு, புள்ளிகள் சரியாக இருக்க வேண்டும். அந்த வகையில் தனக்கான புள்ளிகளைக் கொண்ட ஸ்கிரிப்ட்டை கண்டறிந்திருக்கிறார் சிபிராஜ். ஒரு சின்ன கேப்புக்குப் பிறகு மீண்டும் பழகிய கமர்ஷியல் களத்தில் இறங்கியிருக்கிறார்.

தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகு ‘இப்படி ஒரு ஆபரேஷன் நிஜத்தில் சாத்தியமா’ என சந்தேகம் எழுகிறது. ஆனால், உள்ளே இருக்கும் வரை அப்படியான சந்தேகமே எழாத வரையில் பரபர திரைக்கதையில் கொண்டு போகிறார் அறிமுக இயக்குநர் அன்பு.விறைப்பும், முறைப்பும், சமூகம் மீதான அக்கறையுமாக வால்டர் கேரக்டருக்கு உயிர் கொடுக்கிறார் சிபி. நிதானமாகப் பேசிக்கொண்டு புலனறிவது, அதிரடியாக கச்சித உடற்கட்டில் மொத்தப் பேரையும் அடித்து வீழ்த்துவது, பன்ச் வசனம் பேசாமல் அதேநேரம் ஸ்டைலை காட்டுவது... என சிபி ஆல் ரவுண்ட் அசத்தல்.

ஹீரோயின் ஷிரின் காஞ்ச்வாலா… ஜில்! ஆனால், படத்தில் வேலை இல்லாமல் பாடல்களுக்கும், கொஞ்சம் கவர்ச்சிக்குமே அழகு டெடிகேட்டட்!
புது அரசியல்வாதியாக படம் முழுவதும் வியாபிக்கிறார் பவா செல்லத்துரை. இனி இவர் தல, தளபதிகளை எதிர்ப்பார் என எதிர்பார்க்கலாம்!    
குறைவாக வந்தாலும் பளிச்சென்று இருக்கிறார் சமுத்திரக்கனி. அவரை வைத்து பதவிக்கான போராட்டங்கள் இருக்கும் போலிருக்கிறது என நினைக்கும் போதே என்கவுண்டரில் அவரை சாய்த்து விடுகிறார்கள். சிபிக்கு சவால் கொடுக்கும் செம கிளவர் ப்ளஸ் டெரர் வில்லனாக நட்டி பார்வையிலேயே மிரட்டுகிறார். அவரின் கடைசி நேரத் திருப்பங்கள் யூகிக்க முடியாதது.

செம பில்டப்போடு முடியும் முன்பாதியின் வேகம் பின்பாதியில் மிஸ்ஸிங். சில காட்சிகள் நினைத்த மாதிரியே நடப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
மொத்தக் கதையின் மீதும் தோளோடு தோளாக பயணிக்கிறது ராசாமதியின் ஒளிப்பதிவு. விறுவிறுப்பான திருப்பம் நோக்கி திரைக்கதை திரும்பும்போதெல்லாம் தடக்கென முளைக்கிறது பாடல்கள். ஆனால், பின்னணியில் ஸ்கோர் செய்கிறார் தர்ம பிரகாஷ்.ஆக்‌ஷன் ட்ரீட்டில், புது மெடிக்கல் க்ரைம் கதை என்ற வகையில் வால்டரை ரசிக்க முடிகிறது.

குங்குமம் விமர்சனக் குழு