ரத்த மகுடம்-97பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘சிவகாமி நம்மைச் சேர்ந்தவள்தான் குருநாதா...’’ அழுத்தமாகச் சொன்னான் சாளுக்கிய இளவரசனான விநயாதித்தன்.‘‘இவ்வளவு தீர்மானமாக நீ சொல்லக் காரணம்..?’’ புருவத்தை உயர்த்தினார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.‘‘நடந்த விஷயங்கள்தான் குருநாதா...’’ அமைதியாகச் சொன்ன விநயாதித்தன் தொடர்ந்தான்:‘‘சாளுக்கியர்களின் போர் அமைச்சராக நீங்கள் இருப்பதாலும் ஒற்றர் படை உங்கள் கட்டுப்பாட்டில் இயங்குவதாலும் ஒவ்வொரு சம்பவத்தையும் சந்தேகத்துடனேயே நீங்கள் அணுகுகிறீர்கள்...’’‘‘அது தவறு என்கிறாயா விநயாதித்தா..?’’

‘‘நிச்சயமாக இல்லை குருநாதா... கனவிலும் தங்களைக் குறித்து அப்படி நான் எண்ண மாட்டேன்...’’‘‘பிறகு ஏன் எனக்கு இவ்வளவு விளக்கம் அளிக்கிறாய்..?’’‘‘தங்களுக்கு பதில் சொல்லத்தான்... குருநாதா... சிவகாமி நம்மைச் சேர்ந்தவள்தான் என்று அழுத்தமாக நான் சொல்லக் காரணம், அவள் கைது செய்யப்பட்ட சூழல்தான்...’’புருவத்தை சுருக்கிய ஸ்ரீராமபுண்ய வல்லபர், தன் சீடனை உற்றுப் பார்த்தார்:

‘‘பாண்டிய இளவரசருக்கு நாம் இரவு விருந்து அளித்தோம். அப்போது நடந்த சம்பவங்களை தங்களுக்கு நினைவுபடுத்த விரும்பவில்லை... ஐந்து புறாக்கள் பறந்தன... அதில் ஒன்று அவள் மீது அமர்ந்தது... அதன் இறகில் இருந்து கரிகாலன் செய்தி ஒன்றை எடுத்தான்... சந்தேகத்தின் சாயை சிவகாமி மீது படரவே பாண்டிய இளவரசர் அவளை சிறையில் அடைத்திருக்கிறார்... இன்னும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை... இப்போது சிவகாமி குற்றம்சாட்டப்பட்டவள்தான்...’’

‘‘அதற்குள் என்னை தீர்ப்பு எழுத வேண்டாம் என்கிறாய்... அப்படித்தானே..?’’

மெல்ல தலையசைத்தான் சாளுக்கிய இளவரசன்: ‘‘குருநாதா... நீங்கள் சந்தேகப்படுவதுபோல் ஒருவேளை கரிகாலனும் சிவகாமியும் ஒரே நாட்டின் ஒற்றர்களாக இருந்தால்... அதாவது பல்லவர்களின் பக்கம் சிவகாமி இருந்தால்... கரிகாலன் எதற்காக சிவகாமியை சிக்க வைக்க வேண்டும்..?’’
‘‘...’’
‘‘இரவு விருந்துக்கு அவன் முன்னதாகவே பாண்டிய இளவரசன் கோச்சடையன் இரணதீரனுடன் வந்துவிட்டான். அப்பொழுதே என் மனதில் எச்சரிக்கை மணி அடித்தது. அதற்கேற்ப சிவகாமி நுழைந்தது முதலே அவளைப் பற்றி அலட்சியமாகத்தான் பேசத் தொடங்கியிருக்கிறான்... அவள் சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தலைவி என்றும் அவளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் திரும்பத் திரும்ப சொல்லி இரணதீரனின் மனதில் சந்தேகத்தை விதைத்திருக்கிறான்... அங்கிருந்த நம் ஆட்கள் அனைவரும் சொல்லி வைத்ததுபோல் இதைத்தான் நம்மிடம் தெரிவித்திருக்கிறார்கள்...’’
‘‘ம்...’’

‘‘இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது பொறி வைத்துப் பிடிப்பதுபோல் சிவகாமியை சிக்க வைத்திருக்கிறான்... நமக்காக அவள் பணிபுரிந்து வருவதைத் தடுத்திருக்கிறான்... என தங்களுக்குத் தோன்றவில்லையா..?’’‘‘இல்லை விநயாதித்தா...’’ ‘‘எப்படிச் சொல்கிறீர்கள்..?’’ என்று கேட்காமல் கையைக் கட்டி அமைதியாக நின்றான் விநயாதித்தன்.அருகில் வந்து அவன் தோளில் கையைப் போட்டார் ராமபுண்ய வல்லபர்: ‘‘இரவு விருந்தில் நடந்ததை மட்டும் நீ ஆராய்கிறாய் விநயாதித்தா... தொடக்கம் முதலே நாம் ஏமாந்து வருகிறோமோ என நான் இப்போது யோசிக்கிறேன்...’’

சாளுக்கிய இளவரசனை விட்டு விலகி இரண்டடி தள்ளி நின்றார் சாளுக்கிய போர் அமைச்சர்: ‘‘மற்ற எல்லோரையும் விட சிவகாமியை எனக்கு நன்றாகத் தெரியும்... வாயாடுவதில் அவளை அடித்துக் கொள்ள ஆளில்லை... எவ்வளவு லாவகமாக அவளைக் குற்றம் சாட்டினாலும் தன் பேச்சு சாமர்த்தியத்தால் அதிலிருந்து அவள் தப்பித்து விடுவாள்... அதனால்தான் சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தலைவியாகவே அவள் நியமிக்கப்பட்டாள்...’’
‘‘...’’
‘‘அப்படிப்பட்டவள் கரிகாலன் தொடர்ந்து தன்னை ‘ஆள்காட்டி... ஒற்றர்... பாண்டியர்களையே அழிப்பாள்...’ என்றெல்லாம் அடுக்கடுக்காக குற்றம்சாட்டியபோது - இதை அவமானப்படுத்தியபோது என்று குறிப்பிடுவதே சரி - ஏன் அமைதியாக நின்றாள்..?’’‘‘தாங்கள் சந்தேகப்பட இதுதான் காரணமா குருநாதா..? திகைப்பினாலும் பேச்சிழந்து அவள் நின்றிருக்கலாமே..?’’‘‘சாமான்ய மக்களுக்கு உன் வாதம் பொருந்தும் விநயாதித்தா... முக்கியமான காரியத்தை நிறைவேற்ற எதிரி நாட்டுக்குள் ஊடுருவியிருக்கும் ஒற்றர்களுக்கு... அதுவும் ஒற்றர் படைத் தலைவிக்கு இது பொருந்தாது...

திகைப்பையும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கணந்தோறும் எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்களே முக்கியமான காரியங்களுக்கு வேவு பார்க்க அனுப்பப்படுவார்கள்... சிவகாமி நம்மால் அனுப்பப்பட்ட ஆயுதம்... அதுவும் அதன் தரத்தை எல்லா வகையிலும் சோதித்த பிறகே நாம் பல்லவர்கள் மீது ஏவினோம்... அப்படியிருக்க அன்று சிவகாமி அமைதியாக இருந்தது பலத்த சந்தேகத்தைக் கிளப்புகிறது விநயாதித்தா... தவிர காஞ்சி சிறைச்சாலை முதல் எல்லா இடங்களிலும் கரிகாலனும் அவளும் சேர்ந்தே இருந்திருக்கிறார்கள்; பயணப்பட்டிருக்கிறார்கள்...’’
‘‘புரிகிறது குருநாதா...’’

‘‘ஒன்று கரிகாலன் மீதுள்ள மையலில் சிவகாமி சாளுக்கியர்களுக்கு துரோகம் செய்ய முடிவெடுத்திருக்க வேண்டும்... அல்லது...’’ நிறுத்திய ராமபுண்ய வல்லபர் அருகில் வந்து சுற்றிலும் பார்த்துவிட்டு விநயாதித்தனின் செவியில் மெல்ல முணுமுணுத்தார்... ‘‘ஏதோ ஒரு காரணத்துக்காக... அதுவும் நமக்கு சாதகமாக அமைய... அவள் சிறைக்குச் சென்றிருக்க வேண்டும்...’’ ‘‘அழைத்தீர்களா மன்னா...’’ தலைமை மருத்துவர் பவ்யமாக கேட்டார்.

‘‘ஆம்... மருத்துவரே...’’ நிதானமாகச் சொன்னார் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்: ‘‘சிவகாமிக்கு நீங்கள் பூசிய தைலப் பூச்சு எந்தச் சூழலிலும்
அகலாது அல்லவா..? தெரியும்... சில நாட்களுக்கு முன் இதுகுறித்து நாம் பேசினோம்... நீங்களும் விளக்கம் அளித்தீர்கள்... இப்போது அவசியம் ஏற்பட்டிருப்பதால் மீண்டும் கேட்கிறேன்...’’‘‘காரணமில்லாமல் எதையும் நீங்கள் வினவ மாட்டீர்கள் என்று தெரியும் மன்னா... விளக்குவது என் கடமை...’’ தலைவணங்கிய மருத்துவர் உறுதியுடன் சொல்லத் தொடங்கினார்:

‘‘ஓவியத்தில் எந்தப் பெண்ணின் உருவத்தை நீங்கள் காண்பித்தீர்களோ அதே பெண்ணின் தோற்றத்தைத்தான் ‘சிவகாமி’யிடம் வரவழைத்திருக்கிறோம்... அதுவும் ஒன்றுக்கு மூன்று முறை தைலம் பூசியிருக்கிறோம்... சாளுக்கியர்களின் தைல ரகசியம் பிரபஞ்சம் எங்கும் புகழ்பெற்றது. அதற்கு அஜந்தா குகை ஓவியங்களே சாட்சி. நம் தைலத்தை முறியடிக்கும் தைலத்தை எந்த தேசமும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை... இனியும் கண்டுபிடிக்க முடியாது...’’
‘‘உறுதியாகச் சொல்கிறீர்களா..?’’

‘‘சத்தியமாகச் சொல்கிறேன் மன்னா... நம்மால் வடிவமைக்கப்பட்ட ‘சிவகாமி’க்கு எந்த நோய் வந்தாலும்... அதற்கு மருந்தாக எந்தக் குளிகையை எந்த மருத்துவர் கொடுத்தாலும்... ஏன், ‘சிவகாமி’யின் தேகத்தில் காயம் ஏற்பட்டு அதற்காக எந்த தைலத்தை அவள் உடலில் யார் பூசினாலும்... நாம் பூசிய தைலம் அகலாது... உதிராது...’’

தலையசைத்தார் விக்கிரமாதித்தர்: ‘‘நல்லது மருத்துவரே... தங்களை சிரமப்படுத்தியதற்கு...’’‘‘அதெல்லாம் ஒன்றுமில்லை மன்னா... இது என் கடமை...’’ சாளுக்கிய மன்னரை வணங்கிவிட்டு விடைபெற்றார் மருத்துவத் தலைவர்.ஆழ்ந்த யோசனையுடன் தன் கையில் இருந்த ஓலையை மீண்டும் படித்தார் விக்கிரமாதித்தர். மதுரையில் நடைபெற்று வரும் விஷயங்களை எல்லாம் ஒன்றுவிடாமல் அதில் ஸ்ரீராமபுண்ய வல்லபர் எழுதியிருந்தார். படிக்கப் படிக்க கேள்விகள்தான் முளைத்தன.குறுக்கும் நெடுக்குமாக நடந்தவர் சட்டென அறையை விட்டு வெளியே வந்தார்.வெளியில் நின்றிருந்த காவலர்களின் தலைவன் ஓடோடி வந்தான்.

‘‘புரவி வேண்டும்...’’சில கணங்களில் அவரது புரவியை அழைத்து வந்து நிறுத்தினார்கள். ‘‘யாரும் என்னைப் பின்தொடர வேண்டாம்...’’ கட்டளையிட்டுவிட்டு புரவியின் மீது ஏறிய விக்கிரமாதித்தர், காற்றைக் கிழித்தபடி மேற்குத் திசை நோக்கிப் பறந்தார்.‘‘அது சரியாக வருமா குருதேவா..?’’ அதிர்ச்சியுடன் கேட்டான் விநயாதித்தன்.‘‘ஏன் சரியாக வராது... சிவகாமி குற்றவாளியல்ல... குற்றம்சாட்டப்பட்டவள்தான் என்று சில கணங்களுக்கு முன் நீதானே கூறினாய்..?’’ பட்டென்று சொன்னார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.‘‘அதில்லை குருதேவா...’’

‘‘இங்கே பார் விநயாதித்தா... சிவகாமியை நாம் சந்தித்துப் பேசியே ஆக வேண்டும்... அவள் நம்மைச் சேர்ந்தவளா அல்லது பல்லவர்களின் ஆளா என்பதை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்... முதலில் சேதாரம் இன்றி அவளை வெளியே எடுக்க வேண்டும்... ஏனெனில் சாளுக்கியர்களின் எதிர்காலமே இதில் அடங்கியிருக்கிறது...’’விநயாதித்தனுக்கும் விபரீதம் புரிந்தது: ‘‘சரி குருதேவா... இரணதீரனைச் சந்தித்து நாம் இருவரும் பாதாளச் சிறைக்குச் சென்று சிவகாமியைச் சந்திக்க அனுமதி வாங்குகிறேன்... ஆனால், இதற்கு பாண்டிய தரப்பு ஒப்புக் கொள்ளுமா..?’’

‘‘பொதுவாக குற்றம்சாட்டப்பட்டு பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டவர்களை மற்றவர்கள் சந்திக்க அனுமதி வழங்க மாட்டார்கள்... என்றாலும் ராஜாங்க விஷயத்தில் எப்போதுமே விலக்குகள் உண்டு... அவள் நம்மைச் சேர்ந்தவள் என பாண்டிய இளவரசனிடம் நாமே அறிமுகப்படுத்தி இருக்கிறோம்... அதனால் இரணதீரனுக்குமே இது தனி மனித பிரச்னை அல்ல... இரு தேசங்கள் சம்பந்தப்பட்டது என்று தெரியும்... தவிர பாண்டியர்களுக்குமே இந்த வழக்கு சங்கடம் தரக் கூடியதுதான்... எனவே நடைமுறையை மாற்றி சிவகாமியை நாம் சந்திப்பதற்கு பாண்டிய தரப்பு ஒப்புக் கொள்ளும்...’’

‘‘அனுமதி கொடுத்து விடு...’’ பட்டென்று சொன்னார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர்.‘‘மன்னா...’’ இரணதீரன் அதிர்ந்தான்: ‘‘நாளை இது குறித்து அரசவை கேள்விகள் எழுப்பாதா..?’’‘‘தகுந்த பதிலை நான் அளிக்கிறேன்...’’மன்னரே சொன்னபிறகு அதை எப்படி மறுக்க முடியும்..? பாண்டிய இளவரசன் தலையசைத்தான்: ‘‘உத்தரவு மன்னா...’’‘‘பாதாளச் சிறையில் இருக்கும் சிவகாமியைச் சந்திக்க யார் யார் அனுமதி கேட்டிருக்கிறார்கள்..?’’
‘‘சாளுக்கிய இளவரசன் மட்டும்தான் மன்னா...’’அரிகேசரி மாறவர்மரின் புருவங்கள் உயர்ந்தன: ‘‘கரிகாலன் கேட்கவில்லையா..?’’
‘‘இல்லை மன்னா...’’

‘‘விசாரணை எப்பொழுது நடைபெறும் என்றுகூட விசாரிக்கவில்லையா..?’’
‘‘இல்லை மன்னா...’’‘‘நம்ப முடியவில்லையே...’’ உதட்டைச் சுழித்த பாண்டிய மன்னர், உத்திரத்தை நோக்கினார்: ‘‘சிவகாமி குறித்தாவது ஏதாவது கரிகாலன் பேசினானா..?’’‘‘இல்லை மன்னா...’’‘‘இல்லை... இல்லை... இல்லை... இதன் எதிர்ப்பதம் ஆம்... ஆம்... ஆம்...’’ தனக்குள்ளேயே முணுமுணுத்தார் பாண்டிய மன்னர்: ‘‘கரிகாலன் எங்கிருக்கிறான்..?’’‘‘நமது அரண்மனையில்தான்...’’‘‘சந்தேகப்படும்படி...’’‘‘எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை... வெளியாட்கள் யாருடனும் பேசுவதில்லை... வேளாவேளைக்கு உண்கிறான்... அடித்துப் போட்டது போல் நன்றாக உறங்குகிறான்...’’
‘‘அதாவது அடுத்த பயணத்துக்கு தயாராகிறான்...’’
‘‘...’’

‘‘சும்மா சொல்லக் கூடாது... ஸ்ரீராமபுண்ய வல்லபரையும் விநயாதித்தனையும் பித்துப் பிடித்து அலைய வைக்கிறான்... கெட்டிக்காரன்தான்... சரி... எப்பொழுது விநயாதித்தனையும் ஸ்ரீராமபுண்ய வல்லபரையும் பாதாளச் சிறைக்கு அனுப்பப் போகிறாய்..?’’
‘‘தந்தையே..!’’‘‘பதறாதே! சிவகாமியைச் சந்திக்க எப்பொழுது அவர்களுக்கு நேரம் ஒதுக்கி இருக்கிறாய் என்று கேட்டேன்!’’
‘‘நீங்கள் குறித்துத் தரும் காலத்தில்!’’‘‘அப்படியானால் இன்றிரவு இரண்டாம் ஜாமத்தில் அவர்களை பாதாளச் சிறைக்கு அனுப்பு... சிவகாமியிடம் அவர்கள் தனிமையில் பேசட்டும்... நீ உடன் இருக்க வேண்டாம்...’’

‘‘சரி மன்னா...’’ சில கணங்கள் இரணதீரன் மவுனமாக நின்றான்: ‘‘இரண்டாம் ஜாமத்தில் ஏதேனும் சிறப்பு உண்டா..?
‘‘உண்டு! அப்பொழுதுதான் நம் மதுரை மாநகரில் கூட்டம் கூட்டமாக புறாக்கள் பறக்கப் போகின்றன..!’’
‘‘அதை நாம்...’’‘‘...தடுக்க வேண்டாம்... வேடிக்கை பார்ப்போம்...’’
‘‘ஏன் அமைதியாக இருக்கச் சொல்கிறீர்கள்..?’’

‘‘பாண்டிய நாட்டைக் காப்பாற்ற!’’
தன் தந்தையை உற்றுப் பார்த்தான் இரணதீரன்: ‘‘புறாக்களைப் பறக்க விடப்போவது கரிகாலனா..?’’
‘‘இல்லை... அதங்கோட்டாசான்!’’

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்