நியூஸ் சாண்ட்விச்கடவுளுக்கு ஆபத்து என்று கூறும் கூட்டத்தை நம்பாதே

நடிகர் விஜய் - விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடந்த சில சம்பவங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன. அதில் நடிகர் விஜய் சேதுபதி, ‘கொரோனாவை விட கொடிய நோய், மதத்தின் பேரால் மக்களைப் பிரிப்பதே. இங்கு மனிதனைக் காக்க மனிதன்தான் வரவேண்டும். மேலேயிருந்து யாரும் வரமாட்டார்கள். கடவுளுக்கு ஆபத்து என்று கூறும் கூட்டத்தை மட்டும்
நம்பிவிடாதீர்கள்’ என்று பேசினார். சமூக வலைத்தளங்களில் இதுவே இப்போது வைரல்!

இலங்கையில் கட்சிகள் ரத்து? புர்காவிற்கு தடை?

இலங்கையில் கடந்த ஆண்டு, ஈஸ்டர் பண்டிகையையொட்டி நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கடுத்து, தேசியப் பாதுகாப்பு கண்காணிப்புக் குழு, அரசிடம் சில கோரிக்கைகளை வைத்துள்ளது. அதில், உலகில் பல இடங்களில் உடல் உருவத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. அதேபோல் இலங்கையிலும், முழுமையாக அடையாளம் தெரியாமல் உடலை மறைக்கும் உடையான புர்காவிற்கு தடைவிதிக்குமாறு கோரியுள்ளனர்.
போலவே இனம், மதம் போன்ற அம்சங்களின் அடிப்படையில் இயங்கி வரும் கட்சிகளை ரத்து செய்யுமாறும், தேர்தல் அமைப்பினரிடம் கூறி
இருக்கின்றனர்.

பத்து வருடங்களாக தொடரும்

சிரியா போர்

2011ம் ஆண்டில் தொடங்கிய சிரியா போர், இன்றும் தொடர்கிறது.இந்த பத்து ஆண்டுப் போரில், பல லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர். பலர் தங்கள் வீடுகளை இழந்து வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்திருக்கின்றனர். படிப்பைத் தொடரமுடியாமல், படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு 80 சதவீத மக்கள் தொகையினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர்.

இத்தாலியில் கொரோனா... ஒலிக்கும் இளையராஜா இசை!

சீனாவையடுத்து, இத்தாலியில் கொரோனா தொற்றுநோயால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, இதுவரை சுமார் 1800 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 25,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் மக்கள், தங்கள் பால்கனியில் பாதுகாப்பாக நின்றுகொண்டு, பாடல்கள் பாடி பொழுதைக் கழிக்கின்றனர்.

அதில் சிலர், இளையராஜாவின் ‘இஞ்சி இடுப்பழகி’ பாடலைப் பாடும் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலாகியது. இத்தாலியின் விமானப்படை, மக்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதத்தில் வானில் சாகச நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கியுள்ளது.

பறக்கும் கேமராவில், மக்களை வீட்டுக்குப் போகச் சொல்லும் ஸ்பெயின்

ஸ்பெயின் நாட்டில் கொரோனா தொற்றுநோய் பாதித்ததில், அவசரகால நிலை அறிவிக்கப்பட்டு, 46 மில்லியன் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், சிலர் விடுமுறை நாட்களில் வெளியே சுற்றுவது போல, பார்க்குகளிலும் தெருக்களிலும் ஒன்றாகச் செல்வதைப் பார்த்த அரசு அதிகாரிகள், ட்ரோன் கேமரா மூலம் அவர்களை ‘தயவுசெய்து வீட்டிற்குச் செல்லுங்கள்’, ‘பாதுகாப்பாக இருங்கள்’, ‘மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள்’ என்று வலியுறுத்தி வருகின்றனர்.

ஸ்வேதா கண்ணன்