நான்... எஸ்.நம்பி நாராயணன்
மாலத்தீவு ஸ்பை ஆபீசர்களுக்கு முக்கிய இராணுவ ரகசியங்களைக் கொடுத்ததாக 1994ல ஒரு புகார் கிளம்பி... அதை எதிர்த்து 25 வருஷங்கள் போராடி... குற்றமற்றவன்னு நிரூபிக்கப்பட்டு ஒரு ராக்கெட் சயின்டிஸ்ட் வெளில வந்தானே... அந்த நம்பி நாராயணன் நான்தான்.
 அப்பாவின் திடீர் மறைவுதான் என் வாழ்க்கையிலே ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்குச்சு. ஒரே நாள்ல அத்தனை கதவுகளும் அடைச்சா எப்படி இருக்கும்..?இப்படியான தருணங்களை என் வாழ்க்கைல ஒருமுறை இல்லை ரெண்டு முறை அனுபவிச்சிருக்கேன்.
 பிறந்தது திருவனந்தபுரத்துல. அப்பா பேரு சங்கரலிங்கம். அம்மா பேரு செல்லம்மாள். அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் சொந்த ஊர் திருநெல்வேலி.
அப்பாவும் அவருடைய அண்ணனும் சேர்ந்து ஆயில் பிஸ்னஸ் செய்திட்டிருந்தாங்க.
 வியாபார நோக்கமா கேரளாவுக்கு வந்த தமிழர்கள் நாங்க. நான் பிறந்து ஒரு சில நாட்களி லேயே, அதாவது 45, 50 நாட்கள்ல மறுபடியும் குடும்பத்தோடு நாகர்கோவிலுக்கு வந்துட்டோம். நாகர்கோவில், பாறைக்காமடை ஆரம்பப்பள்ளிலதான் என் பள்ளிப்படிப்பு ஆரம்பமாச்சு. இப்ப அந்த ஸ்கூல் இல்ல. ஒரு ஹெட்மாஸ்டர், ரெண்டு டீச்சர்ஸ். மாணவர்கள் தரைல உட்கார்ந்து பாடங்களை கவனிப்போம்.
6, 7, 8ம் வகுப்புகளை கவர்மெண்ட் டிரெயினிங் ஸ்கூல்ல முடிச்சேன். திரும்ப 9ம் வகுப்புல இருந்து டிவிடி ஹை ஸ்கூல். அப்புறம் எஸ்டி இந்து காலேஜ்ல கல்லூரிப் படிப்பு. அடுத்ததா மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரில இன்ஜினியரிங். இதுவரை வாழ்க்கை ரொம்ப சுகமாதான் போச்சு. என் கூடப் பிறந்தவங்க சரஸ்வதி, சொர்ணம், மாணிக்கம்னு மூணு அக்கா. அப்புறம் நான். எனக்குப் பிறகு தங்கை இலங்காமணி.
வீட்டுக்கு நான் ஒரே ஆண்மகன். ராஜா மாதிரி வளர்ந்தேன். செல்லம், சேட்டைகள் எல்லாம் அதிகம். கேட்டதை எல்லாம் அப்பா வாங்கிக் கொடுத்தார். எங்க வீட்லயே பட்டப்படிப்பு முடிச்ச முதல் ஆள் நான்தான். இன்ஜினியரிங் சேர்ந்த ஆறாவது மாசத்துல அப்பாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அடுத்து என்ன செய்யணும்னு தெரியல. இன்ஜினியரிங் கல்லூரில சேருவதற்கு முன்னாடி இருந்த நம்பி நாராயணன் வேற... அப்பா காலமானபிறகு இருக்கிற நம்பி நாராயணன் வேற.
வாழ்க்கைல எந்தப் பிடிப்பும் இல்லாமப் போனது அப்பதான். கேட்டதெல்லாம் சுலபமா கிடைச்சுட்டு இருந்த நேரத்துல எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டா எப்படி இருக்கும்? இப்படியான சூழல்லதான் மொத்த குடும்பமும் சிக்குச்சு.
இதுக்குப் பிறகுதான் வாழ்க்கையை ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டேன். எப்படியாவது படிச்சு நல்ல வேலைல நான் உட்கார்ந்தா மட்டும்தான் எங்க குடும்பம் பிழைக்க முடியும். இது புரிஞ்சதும் கல்லூரி வாழ்க்கைக்கே உரிய எந்த சந்தோஷத்துலயும் பங்கேற்காம படிப்பு படிப்பு படிப்புனு மாறினேன். ஒண்ணு தெரியுமா..? படிப்புல இன்ட்ரஸ்ட்டே இல்லாதவன் நான்.
ஸ்கூலுக்கு போக அடம் பிடிச்சிருக்கேன். சயின்டிஸ்ட் அளவுக்கெல்லாம்... ம்ஹும். யோசிச்சது கூட கிடையாது. அப்போதைய சட்டப்படி 5 வயசானா கட்டாயக் கல்வி. அப்படிதான் வம்படியா ஸ்கூல்ல திணிக்கப்பட்டேன்.ஆனா, வகுப்புல சொல்லிக் கொடுப்பதை புரிஞ்சுக்கற ஆற்றல் எனக்கு இருந்தது. அதனாலதான் பொறியியல் வரை வர முடிஞ்சுது. இந்நிலைலதான் படிப்புல முழு கவனமும் செலுத்த ஆரம்பிச்சேன். கஷ்டமான கம்பிரஸ்ஸர் புராஜெக்ட்டை நான் ஒருத்தனா சிறப்பா செய்து முடிச்சேன். செய்யும்போதே படிப்பு முடிச்சதும் இது எனக்கு நல்ல பெயரையும் வேலையும் வாங்கித் தரும்னு தெரியும். ஈடுபாட்டோடு டிசைன், ஃபேப்ரிகேஷன், அசெம்பிளிங், டெஸ்ட்டிங் அத்தனையும் நானே செய்தேன்.
என் படிப்புக்கு நிறைய உதவிகள் செஞ்சதும், அறிவுரைகள் சொல்லி என்னை வழி நடத்தினதும் கோதண்டராமன் சார்தான். அவருக்கு நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கேன். என்னை முழுமையா வடிவமைச்சதில் அவருக்கு மிகப்பெரிய பங்குண்டு. எந்த நேரத்துல எந்த சந்தேகம் கேட்டாலும் பொறுமையா விளக்குவார். நானும் கல்லூரில சும்மா இல்ல, யூனியன் ஜாயின்ட் செக்கரட்டரி... கொஞ்சம் பிரைட் ஸ்டூடண்டும் கூட.
மேற்கொண்டு அமெரிக்காவுல இருக்கற டாப் அஞ்சு காலேஜஸ்ல ஏதாவது ஒண்ணுல ராக்கெட் தொழில்நுட்பம் பத்தி படிக்கணும்னு ஆச. இந்த நேரத்துல அம்மாவுக்கு இதய பிரச்னை ஆரம்பிச்சது. நானே அவங்களை பார்த்துக்க வேண்டிய நிலை. அதனால கிடைச்ச அட்மிஷனை அம்மாகிட்ட காட்டாம கரூர் பக்கத்துல சுகர் ஃபேக்டரில வேலைக்கு சேர்ந்தேன். மூணு வருஷங்களுக்கு அப்புறம்தான் வேலை நிரந்தரமாகும். ஆனா, சேர்ந்த மூணாவது மாசத்துலயே என்னை நிரந்தரமாக்கிட்டாங்க.
ஆனாலும் படிக்க முடியாத ஏக்கம் உள்ளூர இருந்துகிட்டே இருந்தது. வேலையும் பிடிக்கல. அம்மாவுக்கு உடம்பு சரியில்லாதப்ப லீவு கேட்டேன். எனக்கு மேல இருந்த சீனியர் பட்டப்படிப்பு படிக்காதவர்... லீவு தர மாட்டேன்னு சொன்னார். உடனே ராஜினாமா கடிதம் எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டேன்.
வேலை இல்லாம வீட்ல சும்மா இருந்தேன். அம்மா உடல்நிலை மோசமாச்சு. கூட இருந்து அவங்களைப் பார்த்துட்டு இருந்தேன். ஒருநாள் கடைல இருந்து ஏதோ பொட்டலம் கட்டி வாங்கிட்டு வந்தேன். அந்தக் காகிதத்துல TERLSல (Tumba Equatorial Rocket Launching Station) வேலை வாய்ப்பு இருப்பதும், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் குறித்த தகவலும் இருந்தது. ஆக்சுவலாஅன்றுதான் விண்ணப்பிக்க கடைசி தேதி.
முயற்சி செய்து பார்ப்போம்னு அடுத்த நாளே அங்க போனேன். ஏன்னா அவங்க கேட்டிருந்த எல்லா குவாலிஃபிகேஷன்ஸும் எனக்கு இருந்தது. கடற்கரை ஓரத்துல ஒரு சின்ன கம்பெனி. இப்ப இருக்கிற மாதிரி இஸ்ரோ ஹரிகொட்டா மாதிரியான பெரிய அளவு ஆபீஸ் இல்ல. அங்கதான் அப்துல் கலாம் அவர்களை முதன் முதலா மீட் பண்ணினேன். நாங்க ஐவர் குழு. அப்துல்கலாம் எனக்கு சீனியர். ரெண்டு பேரும் ஒரே டீம்தான். அப்ப தலைவரா இருந்த விக்ரம் சாராபாயை 1966ல் திருவனந்தபுரத்தின் தும்பா ஈக்குவடோரியல் ராக்கெட் ஏவுதள நிலையத்துல சந்திச்சேன் (இப்ப இஸ்ரோ). அப்ப கலாம் பேலோட் ஒருங்கிணைப்பாளரா இருந்தார்.
அங்க சேர்ந்து கொஞ்ச நாட்கள்ல மேல்படிப்பு படிக்கலாம்னு நினைச்சேன். ஐவி லீக் - அதாவது அமெரிக்க டாப் அஞ்சு பல்கலைக்கழகங்கள்ல எதாவது ஒண்ணுல - நான் சேர்ந்தா ‘உனக்கு லீவு தரேன் படி’னு சாராபாய் சொன்னார். அதன்படியே நாசா ஸ்பேஸ் கிராண்ட்ல கூட்டு உறுப்பினரா சேர்ந்தேன். சாராபாய் எனக்கு ஒன்றரை வருஷம் லீவு கொடுத்தார். ஆனா, பத்தே மாதங்கள்ல கோர்ஸை முடிச்சிட்டேன்.
1969ம் வருஷம் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் லூய்கி க்ரோக்கோ தலைமைல கெமிக்கல் ராக்கெட் புரப்பெல்லர் படிப்புல மாஸ்டர் முடிச்சேன். அங்கேயே வேலை கிடைச்சது. கிரீன் கார்ட் கொடுக்கறேன்னு சொன்னாங்க.
ஆனா, நான் லிக்விட் புரப்பெல்லர் எக்ஸ்பெர்ட்டா இந்தியாவுக்கு திரும்பினேன். எனக்கு அமெரிக்கால வேலை பார்க்க விருப்பமில்ல. சாராபாய் ஐயாவும் போன் செய்து, ‘உடனே இங்க ஓடி வந்துடு’னு சொன்னார். மறுபடியும் இந்திய ஸ்பேஸ் சென்டர். லிக்விட் எரிபொருள் ராக்கெட் டெக்னாலஜியை முதல் முறையா அறிமுகப்படுத்தினேன். அதுவரை இந்தியா ராக்கெட் சயின்ஸ்ல லிக்விட் எரிசக்தி தொழில்நுட்பம் கிடையாது. இன்னைக்கு லிக்விட் எரிபொருள் டெக்னாலஜி இல்லாம எந்த ராக்கெட்டுமே கிடையாது!
இப்ப கடைசியா ஏவப்பட்ட ‘சந்திராயன் 2’ வரை நான் கொடுத்த உழைப்பு இருக்குனு நினைக்கிறப்ப சந்தோஷமா இருக்கு. அந்த லிக்விட் டெக்னாலஜி இன்ஜினுக்கு விக்ரம் சாரா பாய் பெயருக்கு மரியாதை செய்யும் விதமா விகாஸ்னு பெயர் வெச்சேன். இன்னைக்கு விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர், அவருக்கு சிலையெல்லாம் இருக்கு. ஆனா, நான் அப்பவே அவருக்கு மரியாதை செய்துட்டேன். ஆனா... யோசிச்சுப் பார்க்கறேன்... அமெரிக்க குடியுரிமை... அங்க நினைச்சுப் பார்க்க முடியாத சம்பளத்துல பெரிய வேலை... இதையெல்லாம் உதறிட்டு இந்திய தேச குடிமகனா, இந்தியாவுக்கு உழைக்க வந்தேன்...
அப்படிப்பட்ட என் மேல மாலத்தீவு ஸ்பை ஆபீசர்களுக்கு முக்கிய இராணுவ ரகசியங்களைக் கொடுத்ததா 1994ல ஒரு புகார்... ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இல்ல... 25 வருஷங்கள் கோர்ட், கேஸ்னு அலைஞ்சேன். நியாயம் என் பக்கம் இருந்ததால என் மேல சுமத்தப்பட்ட புகார் ஆதாரமற்றதுனு தீர்ப்பாச்சு.
திரும்ப ஸ்பேஸ் சென்டர். ஆனா, அத்தனை வருஷங்கள் பட்ட கஷ்டம், பிரச்னைகள்னு ரொம்ப நொந்து போயிட்டேன். என் குடும்பம் ரொம்ப பாதிக்கப்பட்டது. குறிப்பா என் மனைவி, குழந்தைங்க. அவங்க வெளி உலகமே தெரியாதவங்க. என்ன நடக்குதுனு தெரியாம அதீத அதிர்ச்சிக்கு ஆளாகிட்டாங்க.
திரும்ப ஸ்பேஸ் சென்டர்ல வேலைக்கு சேர்ந்தும், வழக்குல ஜெயிச்சும்... பழைய ஆர்வம் இல்ல. மனசு முழுக்க ரணம். மறுபடியும் வழக்குத் தொடுத்தேன். அந்த வழக்குகூட மறுபடியும் போடக் காரணம் எனக்கு நஷ்டஈடு வழங்கணும்னு இல்ல... இனிமே யாரையும் தவறான புகார்ல கைது செய்துடக் கூடாதுனுதான் மொத்தம் 19 வழக்குகள் போட்டேன்.
விளைவு... இப்ப ஒன்றரை கோடி ரூபா அளவுக்கு நஷ்டஈடு கொடுக்க கேரள அரசு முன்வந்திருக்கு. எப்பவோ எனக்குக் கொடுத்திருக்க வேண்டிய பத்மபூஷண் விருதும் இப்ப கிடைச்சி ருக்கு. மொத்தத்துல என்மேல எந்தக் களங்கமும் இல்லனு வரலாற்றுல இப்ப பதிவாகியிருக்கு.
எங்க தவறு நடந்ததுனு சொன்னா... அது பெரிய புத்தகமா மாறும். வேண்டாம்... சுமத்தப்பட்ட புகார் ஒண்ணுமில்லனு ஆகியிருக்கு இல்லையா... அந்தளவுக்கு தெரிஞ்சா போதும்.
என் மனைவி, குழந்தைகள் பத்தி சொல்றேன். பெருசா பொண்ணு தேடி எல்லாம் அலையலை. பார்த்தது ஒரேயொரு பொண்ணுதான். அவங்க மீனா. பார்த்ததுமே பிடிச்சுடுச்சு. நல்ல நாள் பார்த்து திருமணம் செய்துகிட்டோம்.
எங்களுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. பேரு சங்கரகுமார். கேஸ் ஏஜென்சி வைச்சிருக்காரு. பொண்ணு கீதா, பெங்களூர்ல மான்டி சூரி ஸ்கூல்ல டீச்சரா இருக்காங்க. மாப்பிள்ளை சுப்பையா அருணன், இஸ்ரோவுல வேலை பார்க்கறார். ‘மங்கல்யான்’ புராஜெக்ட் டைரக்டர் அவர்தான். அவரும் பத்மபூஷண் விருது வாங்கியவர்தான்.
எனக்கு பேத்தி, பேரனும் இருக்காங்க. பேத்தி எம்பிபிஎஸ் படிச்சுட்டு மேற்கொண்டு பெங்களூர்லயே போஸ்ட் கிராஜுவேஷன் படிக்கறா. பேரன், ஸ்கூல்ல படிக்கறான்.என் வாழ்க்கை சுவாரஸ்யமானதா இல்லையானு தெரியலை... ஆனா, நிறைய பேரு படமா எடுக்கலாம்னு கேட்டு வர்றாங்க.
பெருசா ஆர்வம் காட்டலை.ஆனா, நடிகர் மாதவன், என் வாழ்க்கைக் கதையை முழுசா கேட்டுட்டு அவரே ஸ்கிரிப்ட் எழுதிட்டு வந்தார். அவ்வளவு அற்புதமா, சுவாரசியமா எழுதி இருந்தார். அவர் நம்பி நாராயணனாகவே வாழ்ந்தார். படமும் முடிஞ்சிருச்சு. நான் பார்த்துட்டேன். பிரம்மாண்டமா வந்திருக்கு. கூடிய சீக்கிரம் ரிலீஸ் ஆகும். கடைசியா நான் சொல்ல விரும்புவது ஒண்ணுதான். வேலையோ வாழ்க்கையோ போராட்டமோ எதுவாயிருந்தாலும் உங்ககிட்ட உண்மையும், அந்த உண்மையை சொல்லக் கூடிய தைரியமும் இருந்தா... கண்டிப்பா என்னைக்கு இருந்தாலும் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்!
செய்தி: ஷாலினி நியூட்டன்
படங்கள்: நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா
|