மிஷ்கின் Vs விஷால் இது கோலிவுட் கொரோனாகொேரானாவை விட கோலிவுட்டில் பற்றி எரியும் பரபரப்பு மிஷ்கின் - விஷால் பிரச்னைதான். ‘துப்பறிவாளன்’ படத்தின் ரிலீஸுக்குப் பிறகு, ‘அண்ணன்டா… தம்பிடா...’ என ஒருவருக்கொருவர் கட்டியணைத்த காம்பினேஷனில் இப்போது விரிசல்.
மிகுந்த எதிர்பார்ப்புகளோடு ரொம்பவே சாஃப்ட்டான சூழலில் ‘துப்பறிவாளன் 2’ படப்பிடிப்பு லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், சென்ற வேகத்தில் ‘பேக்கப்’ ஆனது யூனிட்.

சென்னை திரும்பிய மிஷ்கின், விஷாலின் மீது அனல் கக்கினார். பதிலுக்கு விஷாலும் கோபத்தில் கொதித்தெழுந்தார். இருவரும் மாறி மாறி முஷ்டியை உயர்த்த என்ன காரணம்? சம்பந்தப்பட்டவர்களின் வட்டாரங்களில் துப்பறிந்தால்... ஆஃப் த ரெக்கார்டாக மடமடவென்று வெள்ளம் போல் செய்திகளைக் கொட்டுகிறார்கள்:

‘‘‘துப்பறிவாளன் 2’ தொடங்கும்போதே, விஷாலின் நண்பர்கள் அவரை எச்சரித்தார்கள். ‘மிஷ்கின்கிட்ட பவுண்டட் ஸ்கிரிப்ட்டை கேட்டு வாங்குங்க. முழுக்க படிச்சுட்டு அப்புறம் டிசைட் பண்ணுங்க. லண்டனுக்கு போகலாம்னு மிஷ்கின் சொல்ற சீசன் தப்பா இருக்கு. வெயில் குறைவா இருக்கற நேரத்துல மிஷ்கின் ஷூட் நடத்தலாம்னு சொல்றார். அப்புறம் அங்க எங்கெல்லாம் ஷூட் பண்ணப் போறீங்களோ அங்க எல்லாம் 20 நாட்களுக்கு முன்னாடியே பர்மிஷன் வாங்கணும்.

ஸோ, மிஷ்கின்கிட்ட லொகேஷன் டீடெயில்ஸை வாங்குங்க... பர்மிஷன் ஆக்டிவிட்டியை தொடங்குங்க...’ என நடைமுறை சார்ந்து பலவற்றை சொல்லி விஷாலை எச்சரித்திருக்கிறார்கள்...’’ என கோபத்துடன் பேசத் தொடங்கியது விஷால் தரப்பு.‘‘ஏன்னா, மூணு முறை லொகேஷன் பார்க்கப் போறேன்னு தயாரிப்பாளரான விஷால்கிட்ட பணத்தை வாங்கிட்டு மிஷ்கின் லண்டன் போயிட்டு வந்திருக்கார். அதனாலதான் ஸ்பாட் டீடெயில்ஸை கேட்கச் சொன்னாங்க.

ஆனா, தன் உடன் பிறவாத அண்ணனா மிஷ்கினை நினைச்சதால தன் நலம் விரும்பிங்க சொன்ன எதையும் விஷால் காதுல வாங்கிக்கலை. ‘மிஷ்கின் எல்லாத்தையும் சரியா பண்ணுவார்’னு நம்பிக்கையோடு பதில் சொன்னார்.அதுக்கு தகுந்த மாதிரி மிஷ்கினும் ‘தம்பி... தம்பி’னு விஷாலுக்கு ஐஸ் வைச்சு ‘எல்லாம் பக்காவா ரெடிப் பா...’னு நம்ப வைச்சு யூனிட்டை லண்டனுக்கு கிளம்பச் சொன்னார்...’’ சொல்லும்போதே விஷாலின் உள்வட்டத்தைச்  சேர்ந்த அவருக்கு குமுறுகிறது. அதை அடக்கியபடி தொடர்ந்தார்:  

‘‘இது கோகினூர் வைரம் தொடர்பான சப்ஜெக்ட். அதனாலதான் லண்டன்ல ஷூட் பண்ணணும்னு மிஷ்கின் பிடிவாதமா இருந்தார். விஷாலும் அவர் மேல இருந்த நம்பிக்கைல லண்டன்ல பெருமளவு படப்பிடிப்பு நடத்த சம்மதிச்சார்.இவ்வளவு கான்ஃபிடென்ட்டோடு யூனிட்டை லண்டனுக்கு கூட்டிட்டுப் போன ஓர் இயக்குநர் என்ன செய்யணும்... பக்காவா ப்ளான் பண்ணி மடமடனு ஷூட் செய்யணும் இல்லையா..?

உள்ளூர்லயே ஒருநாள் ஷூட்டுக்கு எவ்வளவு செலவாகும்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். அப்படியிருக்கிறப்ப லண்டன்ல ஒவ்வொரு நாளுக்கும் படப்பிடிப்பு நடத்த எவ்வளவு செலவாகும்னு மிஷ்கினுக்கு தெரிய வேண்டாமா..? தன்மேல நம்பிக்கை வைச்சு விஷால் பணமும் போட்டு நடிக்கவும் செய்யறாரே... அதுக்கு நேர்மையா நாம நடந்துக்கணும்னு அவர் நினைக்க வேண்டாமா..?

மிஷ்கின் அப்படி எல்லாம் நினைக்கவேயில்லை... அண்ணன் மாதிரி தன் மேல பாசம் காட்டின விஷாலை எப்படி எல்லாம் கழுத்தறுக்கலாம்னுதான் யோசிச்சிருக்கார்.பொதுவா தயாரிப்புத் தரப்பு என்ன செய்யும்..? ‘மறுநாள் எங்க ஷூட்... எத்தனை சீன்... லொகேஷன் எங்க..?’ இதையெல்லாம் டைரக்டர் டீம்ல கேட்கத்தானே செய்வாங்க..? அப்பதானே மறுநாள் படப்பிடிப்புக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய முடியும்..?

அப்படித்தான் தயாரிப்பாளரான விஷால் தரப்பு மிஷ்கின் டீம்கிட்ட டீடெயில்ஸ் கேட்டாங்க. கோ டைரக்டர் உட்பட டைரக்‌ஷன் டீம்ல இருந்த எல்லாரும் திருதிருனு விழிச்சாங்க. யாருக்கும் எதுவும் தெரியலை. மிஷ்கின் அவங்ககிட்ட எதுவும் சொல்லலை. ஏன்னா, மிஷ்கினுக்கே மறுநாள் என்ன எடுக்கப் போறோம்னு ஐடியாவே இல்ல!பொறுத்துப் பொறுத்துப் பார்த்த விஷால், அப்பக் கூட கோபப்படாம மிஷ்கின்கிட்ட சாஃப்ட்டா ‘ரெண்டு நாள் பிரேக் விடலாம்... அதுக்குள்ள எல்லாத்தையும் ரெடி பண்ணுங்க’னு சொன்னார்.

ஆனா, ரெண்டு நாள் பிரேக்குக்குப் பிறகும் பழைய குருடி கதவைத் திறடி கதையா மிஷ்கின் அதேமாதிரி ப்ளானிங்கே இல்லாமதான் நின்னார்!’’ மூச்சுவிடாமல் பேசிய விஷாலின் உள்வட்ட நண்பர், ஜன்னலுக்கு வெளியே வானத்தை வெறித்தபடி சில நொடிகளுக்குப் பின் தொடர்ந்தார்:
‘‘ப்ளானிங்கே இல்லாத மிஷ்கினால பல கோடிகள் லாஸ்... ஆனாலும் தன் கோபத்தை அடக்கிக் கிட்டு அசோசியேட் டைரக்டரா இருக்கற மிஷ்கினின் தம்பியைக் கூப்பிட்டார். ‘நாளைக்கு எங்க ஷூட்..?’ இதைத்தான் விஷால் கேட்டார். அசோசியேட் சரியா பதில் சொல்லலை. அப்ப வார்த்தைகள் தடிச்சு வாய்த் தகராறு ஆச்சு.

ஒரு கட்டத்துல நேரடியா மிஷ்கின் கிட்டயே, ‘எந்த ப்ளானிங்கும் இல்லாததால பணம்தான் வீணாகுது... கடனுக்கு வாங்கித்தான் படம் எடுக்கறேன்... வட்டிதான் ஏறுது’னு விஷால் வருத்தத்தோடு சொன்னார்.அதுக்கு தெனாவெட்டா மிஷ்கின், ‘என் சம்பளத்துல கழிச்சுக்குங்க’னு அலட்சியமா சொன்னார். இதுக்குப் பிறகாவது ஒழுங்கா ஷூட்டிங் நடக்கும்னு பார்த்தா... மிஷ்கின் பழையபடி பெப்பெப்பேனு ப்ளானிங்கே இல்லாம நின்னார்.

கடுப்பான விஷால், ‘உங்க பேமென்ட்ல இப்படியே கழிச்சுட்டுப் போனா கடைசில உங்களுக்கு சம்பளம்னு எதுவுமே மிஞ்சாது’னு எதார்த்தத்தை சொன்னார்.இந்த இடத்துல இப்ப உலவிக்கிட்டு இருக்கற கிசுகிசுவை தெளிவுபடுத்திடறேன். ‘துப்பறிவாளன்’ சமயத்துல மிஷ்கின் சம்பளம் ரூ.3 கோடி. ‘துப்பறிவாளன் 2’வுக்கு அவர் சம்பளம் ரூ.4 கோடி. இதை தெளிவா பேசிட்டுதான் படத்தையே விஷால் ஆரம்பிச்சார். ஏன்னா, இது நடக்கிறப்ப நானும் கூட இருந்தேன். அதனாலதான் உறுதியா சொல்றேன்...’’ அழுத்தமாகச் சொன்ன அந்த விஷாலின் உள்வட்ட நபர், ‘‘சரி... விஷயத்துக்கு வரேன்...’’ எனத் தொடர்ந்தார்:

‘‘லண்டன்ல இருக்கற ஹீத்ரு ஏர்போர்ட்ல படப்பிடிப்பு. இதுக்கு ஒருநாள் வாடகையே பல லட்சம். பொதுவா வெளிநாட்ல ஏர்போர்ட்ல ஷூட் நடத்தறப்ப அங்கதான் படப்பிடிப்பு நடத்தினோம்னு ரசிகர்களுக்கு தெரிவிக்க லாங் ஷாட்ல ஷூட் பண்ணுவாங்க இல்லையா..?
மிஷ்கின் அப்படிச் செய்யலை. மாறா ஃப்ளைட் டயர்ல ஆங்கிள் வைச்சு ஒரு ஆக்‌ஷன் ப்ளாக்கை எடுத்தார். அதே மாதிரி லண்டன் அரச குடும்பத்துக்கு சொந்தமான பிரமாண்ட பண்ணை வீட்டை வாடகைக்கு எடுத்து ஒரு காட்சியை ஷூட் பண்ணினார். இப்பவும் எக்ஸ்டீரியர் எடுக்கலை. பதிலா டைனிங் டேபிள்ல ஆங்கிள் வைச்சு எடுத்தார்.

விஷாலால தாங்க முடியலை. ‘ஃப்ளைட் டயரையும், பண்ணை வீட்டு டைனிங் டேபிளையும் எடுக்கணும்னா எதுக்கு லண்டன் வரணும்... சென்னைலயே எடுக்கலாமே’னு கேட்டார்.ஏற்கனவே ரூ.13 ப்ளஸ் கோடி செலவான வருத்தத்துல இருந்ததால தன்னையும் மீறி சில வார்த்தைகளை விஷால் விட்டுட்டார். பதிலுக்கு மிஷ்கின் பல மடங்கு எகிறினார். இதுல அசோசியேட் டைரக்டரா இருந்த மிஷ்கினின் தம்பி, விஷாலை அடிக்க கையை ஓங்க... பதிலுக்கு விஷாலும் கையை ஓங்கினார். ஆனா, மிஷ்கினின் தம்பியை விஷால் அடிக்கலை.

இந்தப் பிரச்னைக்குப் பிறகு மிஷ்கின் ‘பேக்கப்’ சொன்னார். இதெல்லாம் போன வருஷம் டிசம்பர்ல நடந்தது. அந்த மாசமே மொத்த யூனிட்டும் லண்டன்ல இருந்து சென்னை திரும்பிட்டாங்க. மிஷ்கின் மட்டும் லண்டன்லயே இருந்து பொங்கலுக்கு அப்புறம் சென்னை வந்தார். அறிக்கையும் வெளியிட்டார்.

ஆனா, அதுக்கு முன்னாடியே விஷால்கிட்ட, ‘இந்தப் படத்தோட டைரக்டர் செத்துட்டார்னு நினைச்சுக்கோ... அப்படி ஒரு சூழல்ல நீ என்ன செய்வியோ அதைச் செய்’னு லார்டு லபக்குதாஸ் மாதிரி வார்த்தையை விட்டுட்டார்.இதனாலதான் விஷால் கோபத்தின் உச்சிக்கே போய், ‘சரி... படத்தை இனி நானே டைரக்ட் பண்ணிக்கறேன்’னு கட் அண்ட் ரைட்டா சொல்லி அன்று மாலையே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.
நீங்களே யோசிச்சுப் பாருங்க... ‘துப்பறிவாளன் 2’ல நடிக்கிற மற்ற நடிகர், நடிகைகள்... டெக்னீஷியன்ஸ்னு ஏன் யாருமே மிஷ்கினுக்கு ஆதரவா பேசலை..? இதுல இருந்தே நியாயம் யார் பக்கம்னு தெரியலையா..?’’ படபடவென்று பேசி கேள்வியுடன் முடித்தார் விஷாலின் உள்வட்ட நண்பர்.  
சரி... மிஷ்கின் தரப்பு என்ன சொல்கிறது..?

இதற்கான ஒரே பதில், பூசி மெழுகுகிறார்கள் என்பதுதான். குறிப்பாக, ‘விஷாலே படம் டைரக்ட் பண்ணுவதில் தனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை’ என மிஷ்கின் என்ஓசி கொடுத்ததை அவரது நண்பர்களும் நலவிரும்பிகளும் ரசிக்கவில்லை.

இத்தனைக்கும் இண்டஸ்ட்ரியில் விஷாலுக்கு எதிர்ப்பு அதிகம். தயாரிப்பாளர் சங்கம் / நடிகர் சங்கம்... ஆகிய இரண்டிலும் விஷாலுக்கு எதிராக பலர் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களாலும் வெளிப்படையாக இப்பொழுது மிஷ்கினை ஆதரிக்க முடியவில்லை. ஏனெனில் விஷால் தரப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையாக இருக்கின்றன!

எனவேதான் மிஷ்கின் என்ஓசி கொடுத்ததை எதிர்க்கிறார்கள். ‘அவன் சும்மாவே ஆடுவான்... இதுல நீ வேற பெரிய இவன் மாதிரி நீயே டைரக்ட் பண்ணிக்கோனு எழுதிக் கொடுத்துட்ட... இப்ப அவன் டைரக்டராகவும் ஆகப் போறான்... உதவி இயக்குநரா இருந்து நடிகனான அவனால ‘துப்பறிவாளன் 2’வை நிச்சயம் இயக்க முடியும். ஒருவேளை படம் வெற்றி பெற்றுட்டா அப்புறம் அவன் இயக்குநர் சங்கத் தேர்தல்லயும் போட்டியிட வருவான்... இதெல்லாம் தேவையா... எல்லாம் உன்னால வந்தது...’ என மிஷ்கினைக்  காய்ச்சியிருக்கிறார்கள்.

இதையடுத்துதான் பூர்ணாவின் வெப் சீரீஸ் ஃபங்ஷனில் மறுபடியும் விஷாலை ஒருமையில் திட்டினாராம் மிஷ்கின்.
இந்நிலையில் விஷாலின் நண்பரும் நடிகருமான ஒருவரால்தான் இவ்வளவு பிரச்னையும் என்கிறார்கள் சிலர். டைரக்‌டர் - ஹீரோக்கிடையே அந்த நபர்தான் கம்யூனிகேஷன் ஒர்க்கை கவனித்து வந்தாராம். சின்ன பிரச்னை இப்படி பூதாகரமாக வெடிக்க அவரே காரணம் என இந்தத் தரப்பு குற்றம்சாட்டுகிறது.

இதனிடையே இப்போது இன்னொரு தகவலும் கசிகிறது. படத்தின் சண்டைக்காட்சிகளை மிஷ்கினே ஷூட் செய்ய விரும்புவதாகவும், விஷாலுக்கு தூது அனுப்பியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

எம்ஜிஆர் முதல் அஜீத் வரை

‘‘இயக்குநரும் ஹீரோவும் முரண்படுவது காலம்காலமாக நடக்கறதுதான். ‘ஜூபிடர் பிக்சர்ஸ்’ காலத்தில் இருந்தே இந்தப் பிரச்னை இருந்துட்டுதான் இருக்கு. ஆனா, இயக்குநரிடம் கோபித்துக்கொண்டு வெளிப்படையாக படம் இயக்கியவர்கள் குறைவு. மிஷ்கின் விவகாரத்துல ஹீரோவே தயாரிப்பாளரா இருக்கறதால விஷாலே படம் இயக்குவது சாத்தியமாகி இருக்கு.

எம்ஜிஆர் - சிவாஜி காலத்துலயும் இயக்குநரோடு ஹீரோக்கள் முரண்பட்டிருக்காங்க. ஆனா, அப்ப அந்த இயக்குநர்கள் அதை சாமர்த்தியமா ஹேண்டில் பண்ணி, பிரச்னை பெருசாகாம பார்த்துக்கிட்டாங்க. ஒரு கமர்ஷியல் பிதாமகர் இயக்குநருக்கும் கூட ரஜினி - கமல் படங்கள்ல கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கு. இயக்குநர் மேல கோபப்பட்டு பல மாதங்களா ஒருத்தர் முகத்தை திருப்பிட்டு இருந்தார். ஆனா, அப்பக்கூட அவரும் சரி... அந்த கமர்ஷியல் இயக்குநரும் சரி... மீடியாகிட்ட தங்கள் பிரச்னையை எடுத்துட்டுப் போகலை. செய்தியாளர்கள் கேள்வி கேட்டப்ப கூட, ‘அவரா..? தங்கமானவராச்சே’னுதான் பதில் சொன்னாங்க. இதன் வழியா தங்களுக்குள்ள பிரச்னையை முடிச்சுக்கிட்டாங்க.

‘திருடாதே’ கதைல எம்ஜிஆருக்கு அதிருப்தி. அதனால ஷூட்டே பாதிக்கப்பட்டது. படமே டிராப் ஆகற நிலை. ஆனா, இயக்குநர் ப.நீலகண்டன் அதை பக்குவமா கையாண்டார். ‘திருடாதே’ படமும் சக்சஸ். எம்ஜிஆர் - ப.நீலகண்டன் காம்பினேஷனும் பல வருஷங்கள் தொடர்ந்தது.

அதேபோல ‘நம்மவர்’ சமயத்துல அதன் இயக்குநர் சேது மாதவனும் ஹீரோ கமலும் முரண்பட்டாங்க. ‘இனி படத்தை இயக்கமாட்டேன்’னு சேதுமாதவன் போயிட்டார். எஞ்சிய போர்ஷனை கமல்தான் இயக்கினார். ஆனாலும் படம் வெளியானப்ப ‘இயக்கம்: சேதுமாதவன்’னு டைரக்டருக்கு உரிய கவுரவத்தைக் கொடுத்தார்.

அஜீத் படத்தை தொடர்ந்து சிவா இயக்கவும்; அடுத்தடுத்து விஜய் படத்தை அட்லீ டைரக்ட் செய்யவும் என்ன காரணம்..? புரிதல்தான்...’’

- என்கிறார் திரையுலக அனுபவஸ்தர் ஒருவர்.

எம்.இக்னேஷியஸ்