மலைக்கள்ளன்கிழக்கு-மேற்குத் தொடர்ச்சி மலைகளை சூறையாடும் அதிமுக அரசு

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயையும், அந்த சூட்டின் வடுவையும் அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடியாது.

ஆனால், கடந்துவிட்டோம். இந்நிலையில் அதேபோன்றதொரு ஆபத்தை தமிழகமும் எதிர் கொள்கிறது... சிலரது பேராசையால் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன... அதற்கு தெரிந்தோ தெரியாமலோ நாம் அனைவரும் துணை போகிறோம்...இப்படியொரு வெடிகுண்டை எடுத்து வீசுகிறார் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். வேறெந்த மாநிலத்துக்கும் இல்லாத சிறப்பு, தமிழகத்துக்கு உண்டு. அதுதான் மேற்கு - கிழக்குத் தொடர்ச்சி மலைகள்.

பல்வேறு சிறப்புகளும், மகத்துவங்களும் கொண்ட இந்த மலைகளைப் பாதுகாக்க, நிரந்தர அமைப்பை உருவாக்க, மத்திய - மாநில அரசு களுக்கு உத்தரவிட வலியுறுத்தி, தொடர்ந்து இயற்கைக்காக குரல் கொடுத்து வரும் திமுக செய்தித் தொடர்பாளரான கே.எஸ்.ராதாகிருஷ்ணன், இதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மாதவ் காட்கில் மற்றும் கஸ்தூரிரங்கன் குழுக்கள் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், கிழக்கு - மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள மரங்கள், விலங்கினங்கள், பிற இயற்கை வளங்களைப் பாதுகாக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்க நிரந்தர அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்:

“இமயத்தைவிட மேற்குத்தொடர்ச்சி மலைகள் காலத்தால் மூத்தது. இந்த மலைத்தொடரில் 126 ஆறுகள், பல சிற்றாறுகள், 29 பெரிய அருவிகள், சுனைகள், 50க்கும் அதிகமான அணைக்கட்டுகள் மற்றும் கொடைக்கானல், உதகை, மூணார், நீலகிரி போன்ற பல மலை வாசஸ்தலங்கள், பசுமை நிறைந்த காடுகள் அமைந்துள்ளன.  

அதனாலேயே 2011ம் ஆண்டு உலகின் பாரம்பரியமிக்க சின்னமாக மேற்குத் தொடர்ச்சி மலையை யுனெஸ்கோ அறிவித்தது.
குஜராத் மாநிலத்தில் தொடங்கி, மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், கேரளம் என விரிந்து தமிழகத்தின் குமரிமுனை வரை 1200 கிமீ தொலைவுக்கு சங்கிலித் தொடராக நீண்டு தென்னிந்தியாவுக்கே பாதுகாப்பு அரணாக மேற்குத் தொடர்ச்சி மலை விளங்குகிறது.

அப்படிப்பட்ட இயற்கைப் பொக்கிஷத்தை நிர்வாகமும் பொதுமக்களும் முறையற்ற வகையில் பயன்படுத்தி வருகிறார்கள்...’’ பெருமூச்சுவிடும் ராதாகிருஷ்ணன், தொடர்ந்தார்:

“மேற்குத் தொடர்ச்சி மலைகள் போலவே கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் பழமையானவை. இதற்கான சான்றுகள் இலக்கியங்களிலேயே உள்ளன.
இலங்கையில் ஆரம்பிக்கும் இம்மலைகள், கடலடியில் நீண்டு இந்திய மண்ணில் நெல்லைச்சீமை வல்லநாட்டிலிருந்து தொடங்கி, சாயமலை, காரிசாத்தான், கரட்டுமலை, கழுகுமலை, கோவில்பட்டி நாலாட்டின்புதூர் குன்று, திருப்பரங்குன்றம், நாகமலை, அழகர்கோயில், யானைமலை... எனப் படர்ந்து தெற்கில் தொடங்கி கொல்லிமலை, பச்சைமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலையிலிருந்து ஆந்திரம், ஒரிசா, மேற்கு வங்கம் வரை விரிந்
திருக்கிறது.

கிழக்குத் தொடர்ச்சி மலைகள் காலத்தால் மேற்குத் தொடர்ச்சி மலைகளைவிட பழமையானவை. ஆனாலும் மேற்குத் தொடர்ச்சிமலையைப் போல தொடர்ச்சியாக இல்லாமல் துண்டு துண்டாகக் காணப்படுகின்றன...” என்ற கே.எஸ்., இப்போது ஏன் பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது பற்றி விளக்கினார்:

‘‘இயற்கை வளங்கள் அமைந்த இம்மலைகளின் வளத்தை படிப்படியாக சில சுயநலவாதிகள் அழிக்கத் தொடங்கியுள்ளனர். பேராசை சக்திகளால் இந்த பசுமை நிறைந்த மலைகள் மொட்டையடிக்கப்பட்டு வருகின்றன. மரங்களை வெட்டி வனத்தின் பசுமையை அழித்தார்கள். குவாரிகள் என்ற பெயரில் மலையைத்துண்டாடினார்கள். ராட்சத குழாய்களைக் கொண்டு சுவைநீரையும் திருடத் தொடங்கினார்கள். பண்ணைவீடுகள், தங்கும் விடுதிகள் என வணிக ரீதியில் மேற்குத் தொடர்ச்சி மலையையே கபளீகரம் செய்து வருகின்றனர்.

மனிதர்கள் காடுகளை நோக்கிப் புறப்பட்டதும், காடுகளிலுள்ள விலங்குகள் நாட்டை நோக்கி வரத் தொடங்கின. இவர்கள் செய்த சுயநலக் கூத்துகளால், புவி வெப்பமயமாகி பருவமழை பொய்த்து. ஓசோன் படலத்தில் வாயு விரிவடைந்தது. கடலும், மலையும், தரையும் தவிர இயற்கையில் யாரும் நிரந்தரம் கிடையாது. நிலையான இயற்கைக் கொடைகளைப் பாதுகாத்தால்தான், தான் வாழும் காலத்தில் மனிதன் நிம்மதியாக இருக்க முடியும்.

ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டுச் செல்லும்போது ஆறாயிரம் குளங்கள் இங்கிருந்தன. இன்று அதில் பாதி கூட இல்லை! இது குறித்தும் வழக்கு தொடுத்திருக்கிறேன்.இயற்கையை மீறி நம்மால் ஏதும் செய்யவோ அசைக்கவோ முடியாது. மரங்களை வெட்டுவதற்கான உரிமையை யார் கொடுத்தது? இயற்கையோடு ஒருங்கிணைந்து போவதுதான் நமது கடமை.  

இந்த அவலங்களை எல்லாம் தீர்க்க வேண்டுமென்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தாலும், வணிக நோக்கமுள்ள ஆதிக்க சக்திகள் அரசாங்கத்தின் உதவியுடன் காட்டையும் மலைகளையும் சுரண்டுகிறார்கள்.இந்த பூமியில் வாடகைக்கு வசிக்கத்தான் நாம் வந்திருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்காகவே, மாதவ தனஞ்சய காட்கில் தலைமையிலும், கஸ்தூரிரங்கன் தலைமையிலும் மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாப்பை ஆராய குழுக்கள் அமைக்கப்பட்டன. 2011ம் ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலை தொடர்பாக, காட்கில் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து கஸ்தூரிரங்கன் குழுவின் மற்றொரு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அவர்களின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை2013ம் ஆண்டு, ஏப்ரல் 15 அன்று கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு, தங்கள் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் சில பரிந்துரைகள்:

* மேற்குத் தொடர்ச்சி மலையின் 37% வனப்பகுதியை சுற்றுச்சூழல் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும். சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கட்டடங்கள் கட்டுவது, குவாரிகள், அணைகள், மின் உற்பத்தி திட்டங்கள், தொழிற்சாலைகள், அணுமின் நிலையங்கள் அமைக்கத் தடை விதிக்கப்பட வேண்டும்.

* 20,000 சதுர கிமீ தொலைவுக்கு காட்டைச் சுற்றி கட்டுமானங்களே இருக்கக் கூடாது. 50,000 ஹெக்டேருக்கு மேல் வீடுகள் அமையக் கூடாது. புதிதாக எந்த நிலத்துக்கும் பட்டா வழங்கக் கூடாது. வனநிலங்களை வேறு பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது...

இந்த அறிக்கையில், அமைதிப் பள்ளத்தாக்கு, வருசநாடு போன்ற பல வனப்பகுதிகள் மிகவும் எச்சரிக்கையாகவும், கடுமையாகவும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.கஸ்தூரி ரங்கன் அறிக்கையை விட, மாதவ காட்கில் அறிக்கையில் இருக்கும் பரிந்துரைகள் இன்னும் கடுமையானவை.

இந்தக் குழுக்களின் பரிந்துரைகளை நிறைவேற்றக்கூடாது என்று கேரளா உட்பட பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. ஏனெனில் அவர்களில் சிலரது வாழ்வாதாரங்கள் மரங்களை வெட்டுவதிலும், குவாரிகள் அமைப்பதிலும், உல்லாச விடுதிகளை அமைப்பதிலும்தான் அடங்கியிருக்கின்றன! இதைச் செய்பவர்கள் அனைவருமே அதிகார வர்க்கத்தினர்.

எனவே தங்களுக்கு பணம் கொழிக்காது என்ற சுயநலத்தில் இந்த அறிக்கைகளை நிறைவேற்ற விடாமல் நெருக்கடி கொடுக்கின்றனர்...’’ என்ற கே.எஸ்.ராதாகிருஷ்ணன், இந்த அறிக்கைகள் குறித்து உங்கள் கருத்து என்ன என்று மாநில அரசிடம் கேட்டிருக்கிறார்.‘‘மூன்று நான்கு வருடங்களாகியும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் பதிலளித்த நிலையில் தமிழகம் மட்டும் இன்றளவும் பதில் அளிக்கவில்லை. மக்கள் நலன் பற்றியும், இயற்கையின் முக்கியத்துவம் பற்றியும் அதிமுக அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை என்பதையே இது உணர்த்துகிறது.  

கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கிடைக்க நாம் போராட வேண்டியிருக்கிறது. அம்மாநிலத்தில் மணல் அள்ளக்கூடாது. எனவே தமிழகத்திலிருந்து அவர்கள் மணலை அள்ளுகிறார்கள்! ஆந்திரா, கர்நாடகாவிலும் இதே நிலைதான்.       
 
இந்த மலைகளில் இருக்கிற பெரும்பாலான அடர்ந்த காட்டுப் பகுதிகள், தமிழ்நாடு வனத்துறை சட்டம் 1982 மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972ன் படி வனத்துறையால் பாதுகாக்கப்படுகின்றன. சில பகுதிகள் தமிழ்நாடு மலைப்பிரதேசங்கள் (மரங்களைப் பாதுகாத்தல்) சட்டம் 1955ன் கீழ் உள்ளன. ஆனால், இந்த சட்டங்கள் எல்லாம் ஏட்டளவில் மட்டுமே இருக்கின்றன.

எனவே, தனியார் வசம் உள்ள இடங்களில் இருக்கும் மரங்களைப் பாதுகாப்பது சவாலாக இருக்கிறது. சட்டங்களிலும் அரசாங்க விதிகளிலும் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி மரங்களை சல்லிசாக வெட்டுகிறார்கள். இதனால் பசுமையான கிழக்குத் தொடர்ச்சி மலைப்
பகுதியே இன்று தரிசாகக் காட்சியளிக்கிறது. இதன் விளைவாக அப்பகுதிகளிலுள்ள நீரோடைகள் வறண்டு, பல்லுயிர்களும் படிப்படியாக மறைந்து வருகின்றன.

காபி, தேநீர், பழத்தோட்டங்கள் இம்மலைகளில் பெரிய அளவில் உள்ளன. சந்தனம் உள்ளிட்ட நறுமணமுள்ள மதிப்புமிக்க மரங்கள் சட்ட
விரோதமாக அகற்றப்படுகின்றன. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இருந்தபோதிலும், வேட்டையாடுதல் தொடர்கிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் காகித அளவிலேயே இருக்கின்றன. எனவே, நீதிமன்றம் தலையிட்டு காடுகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்க மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்...” அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

அன்னம் அரசு