லவ் ஸ் டோரி-சமூகத்தை ஒட்டுமொத்தமாக நேசிக்கிறவங்க காதலில் தீவிரமா இருக்கிறார்கள்!நீலகண்டன் - அமுதா இருவரும் தமிழ்ப் பதிப்பக உலகில் ‘கறுப்புப் பிரதிகள்’ என அறியப்படுகிற நன்னூல் வெளியீட்டாளர்கள். நட்பும், காதலும் மிகக்கொண்டு இணைந்து வாழும் அறிவார்ந்த இணையர். தந்தை பெரியாரின் கொள்கையில் காலூன்றி தமிழ்ப்பரப்பில் வாழ்கிறார்கள்.
திருமணம், குழந்தைப்பேறு தவிர்த்து பரஸ்பர மரியாதையில் மகிழ்ந்து, கூடி வாழ்ந்து பேருவகையில் திளைக்கிறார்கள். இருவரின் புரிதல்களுடன் இதோ அவர்களின் லவ் ஸ்டோரி.

நீலகண்டன்:

பயணம் முடியிறதுக்கு முன்னாடியே பயணத்தைப் பத்திப் பேச நேர்ந்திருக்கு. காதல்னா சினிமா கற்பிச்ச, கண்டு, கேட்ட உணர்வுகளோடுதான் நானும் ஆரம்பிச்சேன். கொஞ்ச காலத்துக்குள்ளே சீரியஸான வாசிப்புத்தளம், இயக்கம்னு போய்க்கிட்டு இருந்தேன்.

80களில் அறிமுகமான கவிதையின் அமைப்பு இப்போ இல்லை. அதுமாதிரியே இப்ப காதலும் வேற மாதிரியா வந்து நிக்குது. காதல் என்பது கண்டிப்பாக கல்யாணத்தில் போய் முடியணும் என்பதைத்தாண்டி நான் எடுக்கிற முடிவுகள், அவர் எடுக்கிற முடிவுகள் விவாதத்திற்கு உட்பட்டு இருக்கணும்னு நினைச்சேன்.

பெரியார் இயக்கத்தில் இருந்ததால் ‘குடும்ப வாழ்க்கைக்கு என்ன லட்சியம் இருக்கிறது’ என பெரியார் திரும்பத் திரும்ப கேட்டுக்கிட்டே இருந்ததை புரிந்துகொள்ள முடிந்தது. காதலிக்கிறவர்கள் பொதுவாழ்க்கையில் இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்தாலும் பொதுத்தன்மையிலிருந்து விலகி, குடும்பத்தோடு ஐக்கியமாகி விடுகிறார்கள். குழந்தை பெறும் இயந்திரமாக மாறிடுறாங்க.

எனக்கிருந்த காதல் என்ற ரொமாண்டிசத்தைக் கலைத்தவர் பெரியார்தான். காதல் உணர்வுகளை அவர் தாக்கவே இல்லை. அதுபற்றிய பொது பிம்பங்களைக் கலைச்சிருக்கார். நாகம்மை இறந்தபோது நினைவுக்குறிப்புகளில் அவர் அத்தனை காதலையும் கொட்டு கிறார். அன்பு நிறைந்து பெரும் சித்திரமாக அது பெருகி வழியுது.

அதேமாதிரி அண்ணல் அம்பேத்கர், ரமாபாய் மீது வைத்திருந்த காதலும், சவிதா மீதான காதலும் அன்பால் நிரப்பப்பட்டிருக்கு. காரல் மார்க்ஸ் - ஜென்னி யின் காதல் பத்தி சொல்லவே வேண்டியதில்லை. அவர் ஒருபடி மேலே போய் ‘உன்னை வர்ணிக்க முடியாது. வேண்டுமானால் ஒரு வயலின் கொண்டு வா. வாசித்துக்காட்டுகிறேன்...’னு சொன்னார்.

சமூகத்தை ஒட்டுமொத்தமாக நேசிக்கிறவங்க, காதலில் தீவிரமாக இருக்கிறார்கள்... இருந்திருக்கிறார்கள் என்பதே உண்மை.எது எப்படியிருந்தாலும் சரி... ‘உனக்காக நான் எப்பவும் இருக்கேன்’ங்கற அந்த ஒரு விஷயம் எந்த உறவையும் உயிர்ப்பிக்கும். அமுதாவின் அண்ணன் தமிழமுதன் ‘மௌன அம்புகள்’னு ஓர் இலக்கியப் பத்திரிகை நடத்திக்கிட்டு இருந்தார். அதற்கு துணையாக இருப்பது என்று இருக்கப்போய், அவரோட நட்பு, அரசியல், உரையாடல்கள்னு போகுது.

அங்கேதான் இருந்தார் அமுதா. தெளிவும், உறுதியும், அறிவும், கூடவே அன்பும், பொதுப்புத்தி இல்லாமலும் இருந்திட்டாலே பெண்கள் என்னை ஆச்சர்யப்படுத்துவாங்க. நம்மால் ஒரு வழக்கமான வாழ்க்கை வாழ முடியாது. வழக்கமா இல்லாமல் சாதாரணமா லுங்கி - சட்டையோட அமுதாவை கலங்கரை விளக்கத்திற்குக் கூட்டிட்டுப் போய் என் காதலைச் சொல்லப் பார்த்தேன். கடைசியில் அவங்க வீட்டுப் படியிலதான் சொல்லி முடித்தேன்!

அமுதா:

எங்க வீட்டில் ஐந்து பெண்கள். ஒரு அண்ணன். பெண்களில் நான் மட்டுமே படிச்சவ. கவிதைதான் ஈர்ப்பு. தந்தை பெரியார் அறிமுகம் கிடைக்குது. எங்க அப்பா பார்க்கிற பையனை மணக்கக் கூடாதுன்னு தீர்மானமாக இருந்தேன்.

அப்பா 18ம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்க வேண்டிய மனிதர். அவர் கூட்டி வருகிற மாப்பிள்ளைகளைப் பார்த்தால் சிரிப்புதான் வரும். அவர்களுக்கு எப்படி இருந்தால் பிடிக்குமோ, அதற்கு மாறாக டிரஸ் பண்ணிக்குவேன். வாயாடியாக அவங்ககிட்டே பேசுவேன். போயிடுவாங்க.
என்னையவிட இரண்டு வயசு பெரிய அக்காவுக்கு கல்யாணமாகி, ரொம்பவும் கஷ்டப்பட்டாள். என்னோட ஓடியாடிக்கிட்டு இருந்தவ கண்ணு முன்னாடி கஷ்டப்படும்போது எனக்கு ஒரே பதட்டமா இருந்தது.

அண்ணனைப் பார்க்க வருகிறவர்களை எல்லாம் ‘அண்ணா’ என்றே அழைப்பேன். இவரை மட்டும் அப்படி அழைக்கலை. அப்பா தேர்ந்தெடுக்கிற ஆண் வேண்டாம். கடவுள் நம்பிக்கையுள்ளவரும் தேவையில்லை. கவிதை, இலக்கியங்களில் ஈடுபாடு வேண்டும். சாதாரண கணவன் போலில்லாமல், சண்டை, அடிதடி, சச்சரவு இல்லாத ஆணே வேண்டும்.

இது எல்லாவற்றுக்கும் பொருத்தமாக, இணக்கமாக இருந்தார் நீலகண்டன். என்னால் அவரிடம் காதல் சொல்ல முடியாது. அண்ணனும், அவரும் கொண்டிருக்கும் மாறாத அன்பு என்னாகுமோ என்ற கவலை. அவர்கள் நட்பு உடைந்தால் அதுக்கு நான் காரணமாவேனோ என்ற அச்சம்.
அவரே சொல்லட்டும் என இருந்தேன். நினைத்த மாதிரியே நீல்ஸ் சொல்லிவிட்டார். பொறுத்துத்தான் நானும் சரின்னு சொன்னேன்.

நீலகண்டன்:

சமூகம், இயக்கம் என கிளம்பியதில் வீட்டில் பெரிய அளவில் நான் புறக்கணிக்கப்பட்ட காலம். அதனோட நீட்சி, யாராவது நம்மிடம் அன்பு செலுத்த மாட்டார்களான்னு தேடல். நான் முழுக்க முழுக்க அரசியல் பிராணி. 90களின் காலம் ரொம்ப கொந்தளிப்பு. இப்ப இருக்கிற மோசமான சூழ்
நிலைகளின் தொடக்கம் அதுதான். மண்டல் கமிஷன், பாபர் மசூதி இடிப்பு எல்லாம் நடக்குது. இசைவா இருந்த இஸ்லாமியர்களிடம் சங்கடமும், அச்சமும் கலந்து விடுகிறது.

ஐடியாலஜிக்கலாகவே காதல் ஒரு சந்தோஷம்தான். நான் அமுதாவோட ஐக்கியம் ஆகிவிடுகிறேன். சார்பியல் தத்துவத்தோட உன்னதமான விஷயமே
காதல்தான்.கல்யாணம் செய்துக்க வேண்டாம்; குழந்தைகள், மாமியார், மருமகள்னு நடத்துகிற விதத்துக்கு உள்ளே போகவே வேண்டாம்னு உறுதியாக இருந்தேன். அமுதாவின் உறுதியும் அத்தகையதே. காதலிக்கிற காலத்தில் எங்கள் உடனிருந்து யாராவது பார்த்திருந்தால் ஆச்சரியத்தை தாங்கியிருக்க முடியாது. எங்கள் உரையாடல்கள் எல்லாமே கருத்தியல் சார்ந்தவைதான்.

என்னைப் பொறுத்தவரை மனித மனம் நுட்பமானது. உணர்வுபூர்வமான இணை யுணர்வை அது புரிந்துகொள்கிறது. ஜனரஞ்சகமாக கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகிவிட்டது என அதையே சொல்கிறார்கள்.எங்க அம்மாவை, அப்பா சரியாகவே நடத்தியதில்லை. பெரும் குடிகாரராக வாழ்ந்து, உழைக்கும் அம்மாவை சித்திர வதைப்படுத்தினார். காய்கறி கடையில் இருக்கும் அம்மாவை, போதையில் வந்து பொதுவெளியில் அடித்துத் துவைக்கும் அப்பாவை நானே அடித்திருக்கிற துர்ப்பாக்கியம் எனக்கு நிகழ்ந்திருக்கு.

ஊரே பகைக்க, ‘அப்பாவை அடிச்சிட்டான் பாரு’ன்னு பேச்சைக் கேட்டுருக்கேன். அதற்குப் பதிலாக அம்மாவைக் காப்பாத்தியிருக்கேன். அமுதா அம்மாவும், என் அம்மாவும் அவங்கவங்க குடும்பத்தைத் தூக்கி சுமந்திருக்காங்க. இப்பவும் அம்மாவுக்கு நான் கல்யாணமே செய்துகொள்ளாமல் இருக்கிறதும், சேர்ந்து வாழ்வதாகச் சொல்லப்படுவதும் புரியவே இல்லை. ஆனால், தன்னை விடவும், அமுதா தன் மகனைப் பார்த்துக்கொள்கிறாள் என்பது மட்டும் புரிகிறது. அதிகாரத்திற்குப் பதிலாக என் அம்மாவும் அமுதாவும் அன்பால் இணைந்திருக்கிறார்கள்.

அமுதா:
ஏன் ஆண்பிள்ளை போல் தோற்றமும், உடைகளும் என கேட்கிறார்கள். பெரியார் கற்றுக்கொடுத்த பாடம் அப்படி. அவரைப் படித்துவிட்டு அவரைப் பின்பற்றாவிட்டால் எப்படி? குழந்தைப் பேறு பெண்களின் சுயேசைக்கு பெரும் கேடு என்பதைக் கடைப்பிடிக்கிறேன். பெரியார்தான் என் அப்பா. இறுதிக்காலத்திற்கு உங்கள் இருவரையும் பார்த்துக்கொள்ள யாரும் வேண்டாமா என்கிறார்கள்.

சின்னக்குத்தூசி அய்யாவைப் பார்த்தோம். அவரைத்தான் தெரியும். அவரது உறவினர்கள்  யாரையாவது பார்த்திருக்கிறோமா? அவர் இறந்தபோது பக்கத்தில் இருந்தவர்கள் யார்? அவர் இறப்பிற்குப் பிறகு வந்த ஒன்றிரண்டு உறவினர்கள் கூட கணநேரத்தில் கிளம்பிப்போயிட்டாங்க. அங்கு அவர்களுக்கு இடம் இல்லாதது அவர்களுக்குப் புரிந்தது.

சமூகத்திற்குப் பயன்பட்டால் மக்கள், நண்பர்கள் நம்மை கவனித்துக்கொள்வார்கள். நண்பர்களே எங்களின் உலகம். அவர்களின் பிடியிலேயே நாங்கள் இருக்கிறோம். குழந்தைகள் இருந்தால் நாங்கள் அவர்கள் வசமாவோம். அவர்களும் எங்கள் சொத்துக்களைத்தான் கவனத்தில் வைப்பார்கள். அதனால் இந்தக் குழந்தை பிறப்பையெல்லாம் நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோம். சமூகத்திற்கான எங்களின் பணியும், உரையாடலும் தொடர்கிறது.

செய்தி: நா.கதிர்வேலன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்