கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-55



அச்சம் தவிர்க்கும் அஞ்சு நரசிம்மர்

திருவாலி நகரமே திருவிழாக் கோலம் பூண்டுவிட்டது! திருவாலி நரசிம்மனே கதி என்று வாழ்ந்து வந்த பூர்ண மகரிஷியை உய்விக்க அவரது மகளாக வளர்ந்து வந்தாள் மகாலட்சுமி. அவள் தக்க பருவம் அடைந்தவுடன் அவளைத் தேடி வந்து விட்டான் மாயவன்.

அவன் வருகிறான் என்றால் சொல்லவா வேண்டும்? ஈரேழு உலகத்தில் இருப்பவர்களும், ஆதி தம்பதிகளின் கல்யாணத்தை பார்க்கக் கூடி விட்டார்கள்.
திருவாலி மாநகரமே தேவலோகம் போல ஆகிவிட்டது. ஊரை தங்கத்தால் இழைத்து விட்டான் தேவ சிற்பி விஸ்வகர்மா! அனைத்து உலகமும் திருவாலியில் கூடிவிட்டதால், அவர்களுக்கு வயிறார உணவிடும் பொறுப்பை எடுத்துக் கொண்டான் அக்னி! வருணன் ஊரையே பன்னீரால் மெழுகி சந்தனத்தால் கோலமிட்டான். இந்திரன் ஊரெங்கும் முத்துப் பந்தல் விரித்தான்.

இப்படி நடந்த கோலாகலங்களை ஒவ்வொன்றாகச் சொன்னால் ஒரு யுகம் போதாது. அனைவரும் எதிர்பார்த்த அந்த சுபத் தருணம் வந்தது. கூடி இருந்த கூட்டமெல்லாம் இடையில் வழிவிட்டு ஒதுங்கி நிற்க, கருடன் குடை பிடிக்க, பரமேஸ்வரன் கைத்தலம் பற்ற, பிரம்மா பூர்ண கும்பம் ஏந்த, வேதியர்களும் முனிவர்களும் வேதம் ஓத, கந்தர்வர்கள் இனிய கானம் செய்ய... வந்தே விட்டான் ஆலி மணவாளன்!

இடையில் அழகாக ஒரு பீதாம்பரம். கடல் வண்ணத் திருமேனியின் ஜோதியில் அணிந்திருந்த அனைத்து ஆபரணங்களும் ஒளி இழந்துவிட்டன. காது வரை நீண்ட தாமரைக் கண்கள்... என்று மாப்பிள்ளையின் அழகே அழகு. நமது பூர்ணவல்லியும் அவனுக்கு சளைத்தவளா என்ன? ஏற்கனவே அவள் பேரழகி. இதில் பார்வதியும் சரஸ்வதியும் சேர்ந்து அலங்கரித்திருப்பதால் சொல்லவும் வேண்டுமா? தங்கச்சிலை போல மின்னினாள் அவள்.
பூர்ண மகரிஷியை கையில் பிடிக்க முடியவில்லை. அவர் செய்த பூஜா பலன் எல்லாம் பலித்துவிட்ட சுப நாள் அல்லவா இது?

கல்யாண மண்டபத்துக்கு, மாப்பிள்ளை வந்ததும் கையைக் கூப்பிக்கொண்டு ஓடினார். வேதமே தேடி காண முடியாத மாயவனை மாப்பிள்ளையாக அடையும் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்! பாலும் பழமும் தந்து அந்த பரம்பொருளை உபசரித்தார்! தன் திருமகளை மணக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அந்தக் கள்வன் வந்ததே அதற்குத்தானே! உடன் சம்மதம் தெரிவித்துவிட்டான்!

அவனை வரவேற்று உபசரித்து மணவறையில் நிறுத்தினார் பூர்ண மகரிஷி! அவரது அருந்தவப் புதல்வியை ரம்பையும் ஊர்வசியும் மணவறைக்குக் கொண்டு வந்து நிறுத்தினார்கள்! அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்! பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ!? நான்கு கண்களும் ஆயிரம் கதைகள் பேசின.மாயவனின் தன்னகரில்லா அழகில், தான் பூமிக்கு வந்த காரியத்தையே மறந்து போனாள் திருமகள்.

ஆனால், அவளது ஆசை அவனது செயல் அல்லவா? அவன் எப்படி மறப்பான்? அவளது எண்ணத்தைப் பூர்த்தி செய்யத்தானே இன்று மாப்பிள்ளையாகி இருக்கிறான்? இந்தத் திருமணமும் அவன் ஆடும் ஒரு நாடகம்தானே!

அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, வேள்வித் தீயை வலம் வந்து, மங்கள நாணை கழுத்தில் அணிவித்து, திருமகளை முறையாக மணந்தான் மாயவன்.
அன்று பாற்கடலில் அவள் உதித்தபோது முறையான கல்யாணத்தைக் காண முடியவில்லையே என்று தவித்த தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், பக்தர்களுக்கும் இந்தக் காட்சி கண்கொள்ளா விருந்தாக அமைந்தது.

பெரும் பாக்கியசாலியான பூர்ண மகரிஷி, தனது மகளின் கைகளை மாலவனின் கைகளில் வைத்து, ‘‘உன் கையில் என் பிள்ளை... உனக்கே அடைக்கலம்...’’ என்று சொல்லி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். தரிசித்தவர்களும்தான். திருமணம் இனிதே நடந்தேறியது. பூர்ண மகரிஷியை அழைத்தான் மாயவன். அவரும் வந்து பவ்யமாக நின்றார்.

அவரது கூப்பிய கரங்களை விலக்கியபடியே மாயவன் பேச ஆம்பித்தான்: ‘‘மாமா! உடனே கல்யாண ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்! ஊர்வலம் முக்கியமாக தேவராஜபுரம் வழியே செல்லவேண்டும். அதிலும் முக்கியமாக நீங்களும் தேவர்களும் தந்த சீர்வரிசையான இந்தப் பொற்குவியல் ஊர்வலத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்! நினைவில் இருக்கட்டும் தேவராஜபுரம் மற்றும் பொற்குவியலின் அணிவகுப்பு! சரிதானே?’’ கேட்ட பூர்ண மகரிஷிக்கு ஏன் இவர் அந்த இரண்டை மட்டும் இப்படி அழுத்திச் சொல்கிறார் என்று விளங்கவே இல்லை. யோசித்தபடியே தலையசைத்தார்.

ஊர்வலத்துக்கான ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடந்தேறின. முன்னிலையில் மணப் பெண்ணும் மணமகனும் நின்று கொண்டார்கள். கந்தர்வர்கள் மங்கள வாத்தியம் முழங்க, அரம்பையர்கள் ஆட, தேவ மாதர்கள் சீர்வரிசை எந்தி நடக்க... ஊர்வலம் வெகு ஜோராக மெல்ல மெல்ல நகர்ந்தது.
ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை தன்னருகில் இருக்கும் பிரம்மனிடமும் ஈசனிடமும் ‘‘தேவராஜபுரம் வந்துவிட்டதா?’’ என்று கேட்டுக் கொண்டே பெருமாள் வந்தார்.

பெருமாட்டிக்கு தேவராஜபுரத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று விளங்கவே இல்லை. குழப்பத்தோடு மாயவனைப் பார்த்தாள். அவரோ மர்மப் புன்னகை பூத்தார்!ஒரு வழியாக தேவராஜபுரம் வந்து சேர்ந்தது. அவ்வளவுதான்... ‘‘நிறுத்துங்கள் ஊர்வலத்தை...’’ விண்ணைப் பிளந்தபடி கம்பீரமாக ஒரு குரல் ஒலித்தது.அடுத்த கணம் பல புரவிகள் பாய்ந்து வரும் ஒலி அங்கிருந்தவர்களின் செவியைத் துளைத்தன.திடுக்கிட்டு நின்ற ஊர்வலம், சுற்றும் முற்றும் பார்த்தது.

ஊர்வலத்தை நிறுத்தச் சொன்ன மனிதர், ‘ஆடல் மா’ என்ற பெயர் கொண்ட வெண் புரவியில், ஆயிரக்கணக்கான குதிரைகள் சூழ அங்கு வந்து ஊர்வலத்தைச் சுற்றி வளைத்தார். அவரது திருமுகத்தைப் பார்த்ததும் தாயாரின் இதழ்கள் சற்றும் தாமதிக்காமல் ‘‘அட... திருமங்கை மன்னன்...’’ என்று மெல்ல மொழிந்தது. பல நாட்களுக்கு முன் வைகுண்டத்தில் ‘விஷ்ணு பக்தி’ என்னும் பித்துப் பிடித்து திருடனாகிவிட்ட திருமங்கை மன்னனைக் காத்தருளுங்கள் என்று பரந்தாமனிடம் விடாமல் கேட்டுக் கொண்டிருந்தாள் பெருமாட்டி.

‘‘அவரது கர்ம வினை முடிந்ததும் அது நடக்கும்...’’ என்று பல முறை சொல்லிப் பார்த்த மாயவன் பொறுமையை இழந்தார். ‘‘திருமங்கை மன்னனுக்கு அருள வேண்டும் என்றால் நீ பூமிக்குச் சென்று பூர்ண மகரிஷியின் மகளாகப் பிறந்து வளர்ந்து வா!’’ என்று தனது தேவிக்கு கட்டளையிட்டார்.
அதன்படியே அவள் பிறந்து வளர்ந்து இன்று மாயவனை மணந்தும் இருக்கிறாள். இப்போது மாயவன் சொன்ன வாக்கை காக்க வேண்டாமா? ஆகவே திருமங்கை மன்னனை தடுத்தாட்கொள்ளப் போகிறார் என்பதும் நொடியில் அவளுக்கு விளங்கியது.

‘‘அனைவரும் உங்களது ஆபரணத்தைக் களைந்து இதோ இந்த மூட்டையில் இடுங்கள்...’’ என்று கர்ஜித்தார் திருமங்கை மன்னன்.
ஊர்வலத்தில் இருந்தவர்கள், மாயவனிடமே திருட்டா... என்று அதிர்ந்து போனார்கள்! அவர்களை மாதவனின் கண்ணசைவு நடப்புக்குக் கொண்டு வந்தது. ‘திருமங்கை மன்னன் சொல்வது போல செய்யுங்கள்’ என்று கண்ணாலேயே கட்டளையிட்டார் அந்தக் கள்வன்!
கூட்டமும் அப்படியே செய்தது. அத்தனை பொற்குவியலையும் ஒரு மூட்டையாகக் கட்டினர்.

‘‘அப்பாடி! இன்றோடு அரங்கனுக்கான திருப்பணியில் பணப் பற்றாக்குறை தீர்ந்தது...’’ என்று திருமங்கை மன்னனின் மனம் பொருளின் அளவை கணக்குப் போட்டபடி பூரித்தது. மூட்டையை ஒற்றைக் கையால் தூக்கினார். தூக்க முடியவில்லை. இரண்டு கையாலும் முயன்றார். ம்ஹூம்... முடியவே இல்லை. தனது பலம் அனைத்தையும் பயன்படுத்தியும் திருமங்கை மன்னனுக்கு தோல்வியே கிடைத்தது.

கோபத்துடன் தனது உடைவாளை உருவி, நேராக மாயவனின் சங்குக் கழுத்தின் அருகில் அதை வைத்தார்: ‘‘ஒழுங்கு மரியாதையாக என்ன மந்திரம் போட்டாய் என்று சொல்லிவிடு! ஏன் என்னால் இந்த மூட்டையை தூக்க இயலவில்லை..?’’ மாலவனையே மிரட்டினார் மங்கை மன்னன்.
நடப்பது எதுவும் விளங்காமல் கூட்டமே திக்பிரமை பிடித்து நின்றது.

மாலவன் மெல்ல நகைத்தபடியே ‘‘சொல்கிறேன் பொறு! முதலில் கழுத்திலிருந்து வாளை எடு...’’ என்றார். வாளை நீக்கினார் ஆழ்வார். ‘‘உட்கார் கீழே...’’ கட்டளை பிறந்தது. தன்னையும் அறியாமல் திருமங்கை மன்னன் அதற்கு அடிபணிந்தார்.‘‘கையைக் கட்டி வாயைப் பொத்து!’’கட்டுப்பட்டார் மங்கை மன்னன். மாயவன் உள்ளம் பூரித்தபடியே மந்திரத்தை ஆழ்வார் காதில் ஓதினார்!கண்ணீர் வழிய கதையைக் கேட்டுக் கொண்டிருந்தார் நாகராஜன்.
அவரது மனைவி ஆனந்தவல்லி தன் கைகளைக் குவித்து பரவசத்தில் இருந்தாள்.

மழலையின் மொழியில் மாயவன் லீலை என்றால் கசக்குமா என்ன! அவர்கள் ஆனந்தப் பரவசம் அடைந்ததைக் கண்ட கண்ணன் தானும் மகிழ்ந்தபடி கதையைத் தொடர்ந்தான். ‘‘அவரோட காதுல பெருமாளே நாராயண நாமத்தை ஓதினார்! அவர் வாயால உபதேசம் கேட்ட ஆழ்வார்,‘கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்’னு அற்புதமா பாசுரம் பாடினார்... பக்தன் கஷ்டப்படறதைப் பார்க்கப் பொறுக்காம அவனுக்காக சிபாரிசு செய்து பூமில பிறந்த திருமகளை சொல்றதா..? இல்ல... தக்க தருணத்துல அவரை வந்து காப்பாத்தின திருவாலி மணவாளன் - அந்த நரசிம்மரை சொல்றதா..?’’ சொல்லும்போதே கண்ணனின் குரல் தழுதழுத்தது.

‘‘பிரமாதம் கண்ணா...’’ கையைத் தட்டிய நாகராஜன், அவனை அள்ளி அணைத்தார்.தன் பங்குக்கு கண்ணனின் கன்னத்தில் முத்தமிட்டாள் ஆனந்தவல்லி: ‘‘திருமங்கை ஆழ்வாருக்காக மணக்கோலம் பூண்ட பெருமாளை திருநகரில வணங்கலாம்! ஆழ்வாருக்காக திருமகள் அவதாரம் செய்த இடமான திருவாலில லட்சுமி நரசிம்மரை சேவிக்கலாம்! கூடவே அந்த ஊரைச் சுத்தியே அஞ்சு நரசிம்மர் இருக்கார்!

இந்த அஞ்சு நரசிம்மர் கோயில்ல ஒண்ணு, குறையலூர் என்ற ஊர்ல இருக்கு! அங்கதான் திருமங்கை ஆழ்வார் தினமும் ஆயிரம் திருமால் அடியாருக்கு உணவு வழங்கினார். இந்த அஞ்சு நரசிம்மரையும் வணங்கினா வாழ்க்கைல எந்தக் கஷ்டமுமே வராது! திருடனா இருந்து ஆழ்வாரா மாறின திருமங்கை ஆழ்வாரே இதுக்கு சாட்சி!’’ பூரித்தபடியே ஆனந்தி அடுக்கினாள்.

‘‘கண்ணா... நான் ஒண்ணு சொல்றேன்... செய்வியா?’’ நாகராஜன் கேட்டார்.‘‘இதென்ன கேள்வி தாத்தா..? என்ன செய்யணும்னு சொல்லுங்க... கண்டிப்பா செய்யறேன்...’’ உறுதியுடன் சொன்னான் கண்ணன்.‘‘கதை சொல்லணும்!’’ அழுத்தமாகச் சொன்னார் நாகராஜன்.‘‘தாத்தா...’’ கண்ணன் தன் கண்களை அகல விரித்தான்.

‘‘ஆமா கண்ணா... உன் வாழ்நாள் முழுக்க பெருமாள் பெருமையை நீ பரப்பிக்கிட்டே இருக்கணும்... அதுக்கு உபன்யாசம்தான் சரியான வழி... இதோ... இன்னிக்கி உன் ஃப்ரெண்ட் சுரேஷ் அழுதுகிட்டே தன் வீட்டு கஷ்டத்தை சொன்னப்ப அது சரியாக நீ கதை சொன்ன பார்த்தியா... எந்தக் கோயிலுக்குப் போய் மனசார வணங்கினா அந்தக் கஷ்டம் தீரும்னு சொன்ன பார்த்தியா... சுரேஷ்கிட்ட சொன்ன மாதிரியே இப்ப எங்ககிட்ட அதே கதையை சொன்ன பார்த்தியா... அதேமாதிரி உன் காலம் முழுக்க கேட்கறவங்களுக்கு சொல்லிக்கிட்டே இரு...’’‘‘தாத்தா...’’ தழுதழுத்தான் கண்ணன்.

‘‘இருக்கறதுலயே பெரிய சந்தோஷம் அடுத்தவங்க கஷ்டப்படறதைப் பார்த்து கண் கலங்கறதும் அது தீர வழி சொல்றதும்தான் கண்ணா... உபன்யாசம் என்பது இதுதான்... பெருமாள் அருளால உனக்கு நல்லா உபன்யாசம் பண்ண வருது... விடாம அதைச் செய்...’’ என்றபடி கண்ணனின் கன்னத்தில் நாகராஜனும் முத்தமிட்டார்.திகைத்த கண்ணன் சட்டென எழுந்தான்: ‘‘பாட்டி... இப்படி வந்து தாத்தா பக்கத்துல நில்லுங்க...’’மறுக்காமல் நாகராஜனின் அருகில் வந்து ஆனந்தவல்லி நின்றாள்.

‘‘கதை சொல்லி என்னை வளர்த்தது நீங்கதான்... இந்த விஷயத்துல நீங்கதான் என் குரு... இப்ப அதுக்கு தட்சணையா என்னை வாழ்நாள் முழுக்க உபன்யாசம் பண்ணச் சொல்றீங்க... எப்பவும் பெருமாள் என் கூட இருக்கறதாதான் நான் நம்பறேன்... அதனால இதையும் பெருமாள் சொன்னதாவே எடுத்துக்கறேன்...

கண்டிப்பா என் காலம் முடியற வரைக்கும்... என் உடம்புல தெம்பு இருக்கற வரைக்கும்... பெருமாள் பெருமையை இந்த உலகத்துக்கு சொல்லிக்கிட்டே இருப்பேன்... எல்லாருடைய எல்லா கஷ்டங்களும் தீர எந்தெந்த கோயிலுக்குப் போகணும்னு வழிகாட்டிக்கிட்டே இருப்பேன்... இது உங்க ரெண்டு பேர் மேல ஆணை...’’சொல்லிவிட்டு இருவரது கால்களிலும் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தான் கண்ணன். அடுத்த நொடி சொல்லி வைத்ததுபோல் நாகராஜனும் ஆனந்தியும் கண்ணனும் ஒரே குரலில் ஓங்கி உச்சரித்தார்கள்... ‘‘ஓம் நமோ நாராயணாய!’’

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்