உலகின் முதல் காட்டு நகரம்!இன்று உலகின் முக்கிய பிரச்னைகளில் ஒன்று பருவநிலை மாற்றம். அதனால் வெப்பமயமாதல் மற்றும் காற்று மாசுபாடு அதிகரித்து மக்களின் வாழ்க்கைச் சூழலே பாதிப்புக்குள்ளாகிறது. இதைக் கட்டுப்படுத்த பல நாடுகளும் பல வழிகளில் திட்டம் தீட்டி செயலாற்றி வருகின்றன. சீனாவும் தன் பங்குக்கு ஒரு காட்டு நகரத்தை உருவாக்கப் போகிறது. இந்த நகரின் ப்ளூ பிரிண்ட் இணையத்தில் வெளியாகி செம வைரலாகிவிட்டது.  

தென் சீனாவில் உள்ள குவாங்ஷி மலைப்பகுதிகளில் வீற்றிருக்கிறது லைசௌ என்ற நகரம். இங்கேதான் அமையப் போகிறது உலகின் முதல் காட்டு நகரம். இதற்கு முன் இத்தாலியிலிருக்கும் ஒரு காட்டில் அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டியிருந்தனர். அதை முன்மாதிரியாக வைத்தே இந்த காட்டு நகரம் உருவாகிறது.

சுமார் 175 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரியப்போகும் காட்டு நகரத்தின் கட்டமைப்பு முடிந்துவிட்டால் சுமார் 30 ஆயிரம் பேர் இங்கே தாராளமாக வசிக்க முடியும். வீடு, ஹோட்டல், அலுவலகம், மருத்துவமனை, பள்ளி என அனைத்து வகையான கட்டடங்களும் மரங்களால் சூழ்ந்திருக்கும். அதாவது வீட்டின் பால்கனி, மொட்டை மாடி என எல்லா இடங்களிலும் மரங்களை வைப்பார்கள்.

நூறு வகையான 10 லட்சம் மரங்கள் இந்நகரத்தை அலங்கரிக்கப்போகின்றன. இந்த மரங்கள் வருடத்துக்கு 10ஆயிரம் டன் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி 900 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும். புகையை வெளிவிடாத எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமே இங்கே அனுமதி. சூரிய வெப்பத்தின் மூலம் எடுக்கப்படும் மின்சாரத்தையே இங்கு பயன்படுத்தப் போகிறார்கள். இந்த வருடம் காட்டு நகரத்தின் கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்போவதாக சொல்லியிருந்தார்கள். கொரோனா வைரஸின் தாக்கத்தால் இதுவும் தள்ளிப் போகிறது.

த.சக்திவேல்