தாராள பிரபுசந்தர்ப்ப சூழ்நிலைகளால் விந்து தானம் செய்பவராக மாறும் ஹரிஷ் கல்யாணின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களும், அதன் பிறகான மாற்றங்களுமே ‘தாராள பிரபு’.எஸ். அதேதான். இந்தியில் வெளிவந்து வசூல் மழையோடு, பெரும் கவனத்திற்குள்ளான ‘விக்கி டோனர்’தான். அதைத் தமிழுக்கு மாற்றங்களுடன் மொழி பெயர்த்ததில் பளிச் டிக் அடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து.

தமிழ் சினிமா அதிகமும் கண்டுகொள்ளாத பகுதிதான் கதை. கலகல சீன்களுடன் அம்மா, பாட்டி என குடும்ப உறுப்பினர்களின் இன்ப துன்ப பகிர்தல்களை உள்ளது உள்ளபடி சொல்கிறது படம். ஒரிஜினலுக்கு சற்றும் குறையாத சுவாரஸ்யத்துடன் அதைப் பதிவு செய்து கவனம் ஈர்க்கிறார் இயக்குநர்.

ஹரிஷ் கால்பந்தில் ஆர்வமாக, அதிலிருந்தே அவருக்கு வேலை வாய்ப்பிற்கான சூழல் உருவாகிறது. அந்த வேளையில் டாக்டரான விவேக், அவரது வேலைக்கான சில ஏற்பாடுகளுக்காக தேடுதல் வேட்டை நடத்துகிறார். அவரது பார்வையில் ஹரிஷ் பட, அவரது மன மாற்றத்திற்கான வேலையில் ஈடுபடுகிறார். தன் முயற்சியில் வெற்றி பெறும் விவேக், அதில் பல மாற்றங்கள் காணும் ஹரிஷ், இடையில் ஏற்படும் காதல்... விளைவான அடுத்த திருப்பங்களே துறுதுறு பயணம்.

ஹரிஷ் கல்யாண் மிகவும் நம்பகமான வளர்ச்சி. அவரது உருக்கமும், நெருக்கமும், விட்டேத்தியாக இருக்கும் பாவனையும் இயற்கை. தன்யாவை சந்திக்கிற முதல் பார்வையிலும், காதலித்து உருகும்போதும், நன்றாக முன்னேறியிருக்கிறார். தியேட்டர் வரைக்கும் வந்து தன்யாவிடம் காதல் கொள்ளும் போதிருக்கும் அந்த ஆரம்பத் தயக்கங்கள் அழகு.

தமிழுக்கு அறிமுகம்தான். ஆனாலும் நடை, உடை, கடைக்கண் பார்வை என தன்யா மகா வசீகரம். சற்றே தடித்த உதடுகளில் காதலும், சோகமும், சரசமும் பிழிபடுகிறது. ஹரிஷ் உடன் நெருங்கும் பதத்திலும், உதட்டு ஒட்டுதலிலும் நெஞ்சைக் கிள்ளி அள்ளுகிறது பொண்ணு.     விவேக் கொஞ்சம் காமெடியில், நீடித்த குணசித்திரத்தில் மனதிற்குள் வருகிறார். இறுதிக்கட்டங்களில் அவரிடம் இத்தனை பாந்தத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. காலமும், அனுபவமும் தந்த கனிவு போல.

அனுபமா குமார், சச்சு மற்றும் தன்யாவின் குடும்பங்கள் வித்தியாசப்பட்டு ஈர்க்கிறது. முற்றிலும் மாறுபாடான பழக்கவழக்கம் என்றாலும் அன்பில் ஒன்றுவது ஈர்ப்பு. கலகல கதையின் உருக்க கடைசி அத்தியாயத்தை ஹரிஷ், தன்யா, விவேக் என சிரமேற்கொண்டு சுமக்கிறார்கள்.பக்கத்து வீட்டில் நடப்பதை வேடிக்கை பார்ப்பதைப்போல நெருக்க உணர்வைத் தருகிறது செல்வகுமாரின் கேமிரா. ஏழெட்டு இசையமைப்பாளர்கள் சேர்ந்து ஆளுக்கொன்றாக மெலடிகளில் பின்னியிருக்கிறார்கள்.வித்தியாசமாக கதை சொல்லி, பக்குவமாக திருப்பங்கள் தந்திருப்பதால் இந்த ‘தாராள பிரபு’ ஈர்க்கிறார்.

குங்குமம் விமர்சனக் குழு