காஸ்ட்லி செல்லம்ஸ்வீடுகளில் அதிகமாக வளர்க்கப்படும் செல்லப்பிராணி நாய்தான். அமெரிக்காவில் நாய் வைத்திருப்பவர்கள் ஆண்டுதோறும் தங்களின் நாயைப் பராமரிக்க 70 ஆயிரம் ரூபாயை செலவிடுகிறார்கள்!உலகின் விலையுயர்ந்த அனைத்து வகையான நாய் இனங்களும் அங்கேதான் இருக்கின்றன. அந்த விலையுயர்ந்த  நாய்களில் முத்தான மூன்று இனங்கள் இதோ...

செயின்ட் பெர்னார்டு

பெரிதாக வளரும் நாய் இனங்களில் முக்கியமானது இது. மென்மைக்காக பெயர் பெற்றது. ஆல்ப்ஸ் மலை வழியாக ரோம் செல்லும் பயணிகள் தங்குவதற்காக ஒரு விடுதியை நடத்தி வந்தவர் புனிதர் பெர்னார்டு. அவரின் நினைவாக இந்தப் பெயரை சூட்டியிருக்கிறார்கள். குறைந்த மற்றும் அதிக முடியுடன் இந்த நாய் இனம் கிடைக்கிறது. இதன் அதிகபட்ச எடை 85 கிலோ. விலை ரூ.70 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை. பயிற்சி அவசியம்.

ஆஃப்கன் ஹூண்ட்

பழமையான நாய் இனங்களில் முக்கியமானது ஆஃப்கன் ஹூண்ட். பல நூறு வருடங்களாக ஆசிய மலைப்பகுதிகளில் வாழ்கின்றவர்கள் தங்களது அந்தஸ்தின் அடையாளமாகக் கருதி ஆஃப்கன் ஹூண்டை வளர்த்தனர். அத்துடன் அவர்கள் வேட்டைக்குச் செல்லும்போது இந்த நாய்தான் பாதுகாப்புத் துணை.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்தில் வசிக்கும் உயர்குடிகளிடையே பிரபலமாகி அவர்களின் குடும்பத்தில் ஓர் அங்கமாகிவிட்டது.
உலகப் புகழ்பெற்ற ஓவியர் பிகாஸோவின் செல்லக்குட்டி ஆஃப்கன் ஹூண்ட்தான். விலை ரூ.1,15,000லிருந்து ஆரம்பிக்கிறது. வாரத்துக்கு இரண்டு முறை குளிக்க வைக்கத் தனியாக செலவு செய்ய வேண்டும்.

கேன் கார்ஸோ

கிரீஸை தாய்வீடாகக் கொண்டது கேன் கார்ஸோ. நாய் விளையாட்டுகளில் ஜாம்பவானான இந்த நாய் ஒழுக்கத்திலும் கெட்டிக்காரனாகத் திகழ்கிறது. மேற்கத்திய நாடுகளில் உள்ள பண்ணை வீடுகளில் பாதுகாவலனாக இதை வளர்க்கின்றனர். முறையான பயிற்சியும் தினமும் ஏதாவது ஒரு வேலையும் கொடுக்க வேண்டும். 28 இன்ச் வரை உயரம் கொண்ட இந்த நாயின் அதிகபட்ச எடை 50 கிலோ. இதன் விலை ரூ.1,15,000லிருந்து ஆரம்பிக்கிறது.

த.சக்திவேல்