பெண்கள் நடத்தும் மொபைல் டீக்கடை!



இனி வாடகையோ கரண்ட் பில்லோ கட்ட வேண்டாம். அவ்வளவு ஏன், நாள் முழுக்க ஆள் இல்லாத கடையில் டீ ஆத்தவும் வேண்டாம். வந்துவிட்டது எலக்ட்ரிக் ரெட்ரோஃபிட் ஆட்டோ ரிக்‌ஷா. அதாவது நடமாடும் டீக் கடை! அதுவும் முற்றிலும் பெண்களே நடத்தும் தேநீர்க் கடை!
‘‘பொறுங்க... இப்போதைக்கு நடமாடும் டீக்கடை மட்டும்தான்... ஆனா, கூடிய சீக்கிரத்துல மொபைல் சாப்பாட்டுக் கடை, மொபைல் ஐஸ் க்ரீம், ஜூஸ், மொபைல் பியூட்டி பார்லர், மொபைல் காய்கறி, பழக்கடைகள்னு வரிசையா அறிமுகப்படுத்த திட்டம் வெச்சிருக்கிறோம். குறிப்பா இதுல பெண்களும் திருநங்கைகளும் மட்டுமே பணிபுரிவாங்க...’’ என ஆச்சர்யம் கொடுக்கிறார் எம்.ஆட்டோ உரிமையாளர் மன்சூர் அலிகான்.

‘‘உண்மைல வண்டில பயணம் செய்து செய்ய முடிகிற எல்லா தொழிலுக்குமானதாதான் இந்த ஆட்டோவை உருவாக்கி இருக்கோம். முழுக்க முழுக்க பேட்டரில இயங்கக் கூடிய இந்த ஆட்டோவை சாதாரணமா ஸ்கூட்டி ஓட்டத் தெரிஞ்ச பெண்கள் கூட இயக்கலாம்.

இப்ப எங்ககிட்ட ஆட்டோ ஓட்டுகிற பெண்கள், திருநங்கைகளே சவாரி நேரம் போக மத்த நேரங்கள்ல இந்த மொபைல் டீக் கடைகளையும் நடத்தறாங்க...’’ என்ற மன்சூர் அலிகான், இரு வருடங்களுக்கு முன்பே இந்த வண்டியை தாங்கள் டிசைன் செய்துவிட்டதாகச் சொல்கிறார்.

‘‘இந்த ஆட்டோவை வைச்சு டீக் கடை தொடங் கலாம்னு எங்க கூட பார்ட்னர் ஆனாங்க கில்லி சாய் குழு. அதுக்குப் பிறகுதான் பெண்களே நடத்தும் மொபைல் டீக் கடை என்கிற கான்செப்ட் வந்தது. பேட்டரில இயங்கறதால இதுக்கு பெட்ரோல் செலவில்லை. ஒருமுறை சார்ஜ் செய்தா 100 கிமீ வரை ஓடும். பராமரிப்பு செலவும் குறைவு.

வண்டிக் குள்ளயே கடை அமைப்பை உருவாக்கியிருக்கோம். அதுவும் ரிமோட் சிஸ்டத்துல. அதனால ஒரேயொரு பொண்ணு யார் உதவியும் இல்லாம ஆட்டோவை ஓட்டிக்கிட்டு போய் தேவையான இடத்துல நிறுத்தி கடை போட முடியும்! அவ்வளவு சுலபமான சிஸ்டம்.

சுயமா நிற்க நினைக்கற எந்த பெண்ணும், திருநங்கைகளும் எங்களை அணுகலாம். எதிர்பார்த்ததை விட இப்ப இது நல்லா ஒர்க் அவுட் ஆகியிருக்கறதால விரைவில் மாற்றுத்திறனாளிகளும் இப்படி வண்டி ஓட்டி கடை போடற மாதிரி அடுத்த கட்டத்துக்கு நகர இருக்கோம்...’’ என்கிற மன்சூர் அலிகான், ரூபாய் 6 முதல் 8 லட்சத்துக்குள் ஒவ்வொரு பெண்ணும் இந்த மொபைல் டீக் கடையை ஆரம்பிக்கலாம்
என்கிறார்.

‘‘உடனே மூலதனத்துக்கு எங்க போறதுனு பயப்பட வேண்டாம். அரசு பெண்களுக்கு அளித்திருக்கிற சுய தொழிலுக்கான லோன் ப்ரொபோசல்களை பயன்படுத்தலாம். இதுக்கும் நாங்க உதவத் தயாரா இருக்கோம்.  ஐடி பார்க் இருக்கற ஏரியால இயங்கற டீக் கடைகள் பெரும்பாலும் காலையும் மாலையும்தான் பிசியா இருக்கும். மத்த நேரங்கள்ல அவ்வளவா ஆட்கள் இல்லாம காத்து வாங்கிட்டு இருக்கும். வாடகையும் மின் கட்டணமும் வேஸ்ட்டா செலவாகும்.

இதுக்கெல்லாம் இந்த மொபைல் டீக் கடை தீர்வா இருக்கும். பிசியான நேரங்கள்ல மட்டும் அங்க ஆட்டோ ஓட்டிட்டு போய் ஓரமா நிறுத்தி கடை போடலாம். பீக் அவர் முடிஞ்சதும் கடையை மூடிட்டு ஆட்டோவை ஸ்டார்ட் செஞ்சு வேற இடங்களுக்கு போய் கடை போடலாம்...’’ எதார்த்தமாகச் சொல்லும் மன்சூர் அலிகான், டெஸ்லா பேட்டரி கார்களில் இருக்கக்கூடிய டெக்னாலஜியையே இந்த ஆட்டோவிலும் பயன்படுத்தி இருப்பதாகச் சொல்கிறார்.

‘‘ரோட்டோர வேன்களில் கடை நடத்தற மக்கள் சரியான லைசன்ஸ் அல்லது அனுமதி கிடைக்காம திண்டாடுவதுண்டு. இந்த சிக்கலும் இந்த நடமாடும் டீக் கடைல கிடையாது. ஏன்னா, தமிழக அரசே இந்த முயற்சியைப் பாராட்டி அனுமதி கொடுத்திருக்கு! அதனால எந்த சாலையோரப் பிரச்னைகளும் இதுல இல்ல...’’ புன்னகையுடன் அப்துல்கனி முடிக்க, கில்லி சாய் உரிமையாளர் வில்லியம் ஜெயசிங் தொடர்ந்தார்:

‘‘இப்ப 50 டீக் கடை ஆட்டோக்கள் வெற்றிகரமா இயங்கிட்டு இருக்கு... அடுத்த மூணு வருஷங்கள்ல தமிழகம் முழுக்க இதை கொண்டு செல்லப் போறோம். இதன் வழியா பெண்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கப் போறோம்...’’ என நம்பிக்கை யுடன் சொல்கிறார் ஜெயசிங்.

செய்தி: ஷாலினி நியூட்டன்

 படங்கள்:ஆ.வின்சென்ட் பால்