கனவு, லட்சியத்தோட வாழற எல்லாருக்குமே இந்தப் படம் இன்ஸ்பிரேஷனா இருக்கும்!
‘உய்ய்ய்ய்ய்’ என உறுமியபடி உயரத்துக்கு வந்து சக்கரங்களை மடித்துக் கொள்கிறது பிரம்மாண்ட அலுமினியப் பறவை!
அதற்கு சற்று கீழே ஓடியபடி போஸ்டரில் கைகளை விரித்து நிற்கிறார் செம கியூட் சூர்யா. ஜீன்ஸ் இளைஞர்கள் பரபரக்கும் 2டி அலுவலகத்தில் ‘சூரரைப் போற்று’ திருப்தியாக வந்த சந்தோஷத்தில் இருக்கிறார் டைரக்டர் சுதா கொங்கரா. ‘இறுதிச் சுற்றி’ல் அதிரடி வெற்றி காட்டியவர். தமிழ் சினிமாவின் இப்போதைய முக்கியமான எதிர்பார்ப்புக் கேள்வி ‘எப்படி இருக்கும் ‘சூரரைப் போற்று’?’
கொரோனாவின் தாக்கத்தில் கைகுலுக்குவதற்குப் பதிலாக சுதாவின் அசலான புன்னகை. அடுத்து குளிர் அறையில் சூர்யா சாட்சியாகப் பேட்டி. ‘‘அதிகம் இளையவர்களால் நிரம்பியிருக்கு நம்ம நாடு. மொத்த ஜனத்தொகையில் 65% பேர் 16 - 35 வயதில் இருக்காங்க. நமக்குத்தான் அதிகம் இன்ஸ்பையர் செய்கிற கதைகள் வேண்டும். இது அது மாதிரியான கதை.
ஒரு கனவோட, லட்சியத்தோட வாழ்ற எவருக்கும் இது ஒரு இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி. இதில் சூர்யாவோட வாழ்க்கை அப்படி. ஒருத்தன் கிராமத்தில் இருந்து புறப்பட்டு வர்றான். அவன் டாட்டாவோ, பிர்லாவோ அம்பானியோ கிடையாது. எந்தப் பின்புலமும் இல்லை. ஏரோப்ளேன் வாங்கப் போறேன், ஒரு ரூபாய் காசில் பறக்க வைக்கிறேன்னு சொல்லி செய்தான்.
இந்தியாவில் பண்ணாங்க. இந்தக் கதையை ஸ்கிரிப்ட்டா எழுதும்போது பிடிச்சது. யாராலும் கனவு காண முடியும். இது கற்பனை கிடையாது. நடக்க முடியாத விஷயம் கிடையாது. ஃபேன்டஸியும் இல்லை. இது நடந்தது. நான் எடுத்துச் சொல்றேன். நம்ம மத்தியில இருந்துகிட்டே ஒருத்தன் பண்ணிட்டான். அவன் செய்யும்போது நாம எல்லோரும் ஏன் செய்யக் கூடாதுன்னு ஒவ்வொருத்தரையும் இதில் நான் கேட்கிறேன். சிம்பிள். அவ்வளவுதான்...’’ புன்னகைக்கிறார் சுதா கொங்கரா.
சூர்யாவே இதை தயாரிச்சது எப்படி? 44 பக்கம் ஒன்லைன் மாதிரி இந்தக் கதையை கொடுத்திட்டு ‘இறுதிச் சுற்று’ ஷூட்டிங் போயிட்டேன். கிட்டத்தட்ட மறந்தே போயிட்டேன். ஒருநாள் ராத்திரி பதினோரு மணிக்கு ஒரு மெசேஜ் வந்து காத்திருந்தது. ‘இப்பதான் உங்க ஸ்கிரிப்ட்டை ஒரே மூச்சில படிச்சேன். ரொம்ப நல்லா இருக்கு. இந்தக் கதையை சொல்லியே ஆகணும்.
பேசலாம்’னு இருந்தது. மறுநாள் காலை ஆறு மணிக்குப் பேசினார். அப்புறம் நிறைய நிகழ்ந்தது. இந்தப் படம் பெரிய படம். ஃப்ளைட் வேற. இது வேற உலகம். யாருக்குமே இங்கு ஒரு ஏரோப்ளேன் விலை தெரியாது. ரெண்டாவது கை மாறினாலே நானூறு கோடி ஆகும். இவர் ஏரோப்ளேன் கம்பெனி ஆரம்பிக்க ஏர்ஃபோர்ஸிலிருந்து வரும்போது ஆறாயிரம் பென்ஷன் பணம் மட்டும் இருந்தது. இந்த நடைமுறையைச் சுவாரஸ்யமா சொல்லணும். வகுப்பெடுக்கிற மாதிரி போர் அடிக்காம சினிமாவா சொல்லணும்.
மூணு வருஷங்களா பல வெர்ஷன் எழுதினேன். படம் எடுக்கிறது அைதவிட கஷ்டமா இருந்தது. 56 லொகேஷன்ஸ். 150 பேர் யூனிட் இறங்கி அந்த இடம் பழகறதுக்குள்ள வேலை முடிஞ்சி அடுத்த இடம் கிளம்பியிருப்போம். நிறைய நடிகர்கள் பட்டாளம். டைரக்டர் பாலா ‘இறுதிச் சுற்று’ பார்த்து கட்டிப்புடிச்சிட்டு ‘எனக்கு பாக்சிங்னா ஒண்ணுமே தெரியாது, அதக்கூட ஃபீல் பண்ண வெச்சிட்டியே’ன்னு சொன்னார். அப்படித்தான் இதிலும் நடக்கும். அவ்வளவு விஷயத்தை எளிமையா சொன்னதுதான் கடினமாகிவிட்டது. இதுக்குப் பிறகு இவ்வளவு கஷ்டமா ஒரு படத்தை இனிமேல் பண்ண மாட்டேன்னு தோணுது.
சூர்யா எப்படி நடிச்சார்? மிடில் கிளாஸ் பையன். இருபது வருஷத்துக்கு முன்னாடி இருந்த சூர்யாவா மாறணும். ‘என்னால பண்ண முடியுமா’ன்னு கேட்டார். ‘முடியும். 25 வருஷத்துக்கு முன்னாடி 65 கிலோமீட்டர் வண்டி ஓட்டிட்டுப்போன சூப்பர்வைசர் சரவணனா மாறணும்’னு சொன்னேன்.
இதோ நீங்க உட்கார்ந்திருக்கிற இடத்துல உட்கார்ந்துதான் மொத்த ஸ்கிரிப்ட்டையும் ரீடிங் முடிச்சோம். அதே முடி, ஸ்டைல்னு வாழ ஆரம்பிச்சார். அந்த அறுபது நாட்களிலேயும் கேரக்டரை விட்டு வெளியே வரவேயில்லை. நான் ஏதாவது மறந்து சொல்லிட்டாகூட இந்த கேரக்டர் இதைப் பண்ணுமான்னு நினைவுபடுத்துவார்.
தன் மனதின் எந்தப் பகுதியின் ஆழத்துக்குப்போய் இந்த நடிப்பை எடுத்துட்டு வந்தார்னு தெரியல. So real. அவன் தோற்றுப்போகிற மாதிரி ஒரு சமயம் ஒரு இடத்தில் நடக்கும். உலகத்து சோகத்தையெல்லாம் வாரியெடுத்து முகத்தில் கொண்டுவந்து சேர்த்த மாதிரி செய்தார். ஒரே டேக்கில் ஓகே. படத்தில் அவர் பேரு நெடுமாறன் ராஜாங்கம். அவன்தான் மாறா!அந்தப் பொண்ணு அபர்ணா முரளி... முகமே கவனிப்பு பெறுது…
ப்ரில்லியன்ட். இந்தப் படத்தில் ஓர் இடம் இருக்கு. அந்த இடத்தை சரியாக பண்ணிட்டால் போதும், படத்துக்கு ஓகே பண்ணிடலாம்னு நினைச்சோம். ஆனால், அவங்க பிரிச்சி மேய்ஞ்சிட்டாங்க. டப்பிங்கில் மதுரைத்தமிழ் பேசி அசத்திட்டாங்க. இப்ப எங்கிட்ட உலகத்துலேயே எந்த ஆர்ட்டிஸ்ட் உங்களுக்கு பிடிக்கும்னு கேட்டா, அபர்ணா பக்கம்தான் கையைக் காட்டுவேன், எனக்கே நடிப்பைப்பத்தி சொல்லிக் கொடுக்குது. வேற லெவல் பொண்ணு.
மோகன்பாபு முக்கியமான கேரக்டரில் வர்றார். பரேஷ் ராவல் முதல் தடவையா தமிழில் நடிக்கிறார். செம ஆக்டர். ஊர்வசி சொல்லவே வேண்டாம், தீனி போட்டு மாளாது. காளி வெங்கட் நான் எடுக்கிற கடைசிப் படத்துலகூட நடிக்கணும்னு நெனைக்கிறேன். அப்படிப்பட்ட நடிகர். ஜி.வி.பிரகாஷ் சொன்னபடி படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே பாடல்கள் கொடுத்திட்டார். ஒளிப்பதிவாளர் நிக்கத் பொம்மியோட ஒரு கேமரா ஒர்க்கை பார்த்தேன். அவர சென்னைக்கு வரவழைச்சு கதை சொன்னா வானம், ஃப்ளைட், கிராமம், சென்னை, டில்லின்னு இவ்வளவு லொகேஷன்ஸ் இருக்கு, ஜாலி ஜாலின்னு சொல்லிட்டு எங்ககூட வந்து சேர்ந்துட்டார்.
ஏன் பெண் இயக்குநர்கள் ரொம்பக் குறைவா இருக்காங்க..? நூறு ஆண்கள் வந்தா பெண்கள் எத்தனை பேர் வர்றாங்க. மொத்தப் படங்களில் 90% படங்கள் வெற்றி அடைய மாட்டேங்குது. இது ரொம்பக் கஷ்டமான இடம்.
நேசமா, மோகமா, காதலா நிலைச்சி நின்னாதான் இங்க ஓரளவு எல்லாம் சரியா வரும். முதல்ல காசு பணத்தை மறந்துடணும். என்னுடைய முதல் படம் சரியா போகலை. ஆறு வருஷங்களுக்குப் பிறகு ‘இறுதிச் சுற்று’. அதுக்கும் பட்ஜெட் ஐந்து கோடி போட்டு வெச்சிருந்தேன். யாரு அஞ்சு கோடி கொடுப்பாங்கன்னு சொன்னவங்கதான் அதிகம்.
மனசு சரியில்லாம மணிரத்னம் சாரை பார்க்கப்போனேன். இப்படியெல்லாம் சொல்றாங்கன்னு அவர்கிட்ட புலம்பினேன். அவர்தான் ’உன்னால் முடியும், செய்’னு ஊக்கம் கொடுத்தார். நேரடியா குறிக்கோள் மட்டும் கணக்கா இருந்தா எல்லாம் சரியா வரும்னு நினைக்கிறேன்!
நா.கதிர்வேலன்
|