ரத்த மகுடம்-96பிரமாண்டமான சரித்திரத் தொடர்

உள்ளத்தில் பொங்கிய அனைத்து உணர்ச்சிகளையும் உள்ளுக்குள்ளேயே சிறைப்பிடித்தபடி இயல்பான முகத்துடன் தன் முன்னால் நின்ற காஞ்சி கடிகையின் ஆச்சார்யரை ஏறிட்டார் விக்கிரமாதித்தர்: ‘‘புரியவில்லை ஆச்சார்யரே... சற்று விளக்க முடியுமா..?’’எவ்வளவு தடுத்தும் தன் கண்களில் வழியும் ஆச்சர்யத்தை அந்த ஆச்சார்யரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவருக்குத் தெரிந்து சாளுக்கிய மன்னர் எது ஒன்று குறித்தும் மீண்டும் சொல்லும்படி கேட்டதில்லை. விளக்கும்படியும்.

எப்போதும் சொல்ல வரும்போதே அதன் உட்பொருளை உணர்ந்து விடுபவர் அவர். அப்படிப்பட்டவர் எதற்காக தன்னை மீண்டும் சொன்னதையே சொல்லும்படி கேட்கிறார்..?எழுந்த வினாவுக்கு விடை தேட முற்படாமல் மன்னரின் வேண்டுகோளுக்கு அடிபணிந்தார் ஆச்சார்யர்: ‘‘காணாமல் போயிருப்பது சிறைச்சாலை தொடர்பான சுவடிகள் மன்னா...’’‘‘அதாவது கட்டடக் கலை சார்ந்த சிற்ப சாஸ்திர சுவடிகள்... அப்படித்தானே..?’’

‘‘ஆம் மன்னா... மயன் சாஸ்திர சுவடிகள்... எல்லா தேசத்து நகர அமைப்புகளும், வீதி அளவுகளும், சந்தைகளின் இருப்பிட எல்லைகளும் கிட்டத்தட்ட ஒன்றுதான். போலவே மாட மாளிகைகளின் வெளித் தோற்றங்களும். ஆனால், அந்தந்த தேசங்களின் பண்பாட்டு, கலாசாரங்களுக்கு ஏற்ப அந்தந்த நகர உருவாக்கங்கள் நுணுக்கமான முறையில் மாறுபடும். குறிப்பாக மாட மாளிகைகள் மற்றும் அரண்மனைகளின் உட்புறங்கள் தேசத்துக்கு தேசம் மாறுபடும்...’’‘‘ம்... வாதாபிக்கும் காஞ்சிக்கும் இருக்கும் மாறுபாடுபோல்...’’

‘‘காஞ்சிக்கும் மதுரைக்கும் இருக்கும் மாறுபாடு போலவும்!’’ அழுத்திச் சொன்னார் ஆச்சார்யர்: ‘‘இதற்கு அழுத்தம் கொடுக்கக் காரணம், ஒரே தமிழகப் பரப்பு என்றாலும் காஞ்சி மாநகரும் மதுரை மாநகரும் பலவிதங்களில் வேறுபட்டது என்பதைச் சொல்லத்தான்...’’
‘‘புரிகிறது ஆச்சார்யரே...’’

‘‘பொதுவில் அனைத்தும் கட்டட - சிற்ப - மயன் சாஸ்திரத்தில் வரும் என்றாலும் இதற்குள்ளேயே ஆலயங்கள், வீதிகள், மாளிகைகள், மாடங்கள், மண்டபங்கள்... என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி உட்பிரிவுகள் உண்டு. பயிலும் வித்யார்த்திகளும் பொதுவானவற்றை பொதுவாகத் தெரிந்துகொண்டு தங்களுக்கு விருப்பமான விஷயத்தில் சிறப்புப் பயிற்சி பெறுகிறார்கள். எனவேதான் கோயில் சிற்பிகள் மாட மாளிகைகளை நிர்மாணிப்பதில்லை. அதற்கென இருப்பவர்களே அதை அதை செய்கிறார்கள்...’’

‘‘ம்...’’
‘‘அப்படி ஒவ்வொரு தேசத்தின் சிறைக்கூடங்களும் அந்தந்த தேசத்தின் அறநெறிகளுக்கும் தர்மங்களுக்கும் ஏற்ப மாறுபடும்... அதுமட்டுமல்ல...’’ நிறுத்தினார் ஆச்சார்யர்.‘‘சொல்லுங்கள்... ஏன் நிறுத்திவிட்டீர்கள்..?’’ விக்கிரமாதித்தர் தூண்டினார்.
‘‘மன்னர் தவறாக எண்ணக் கூடாது... உதாரணத்துக்காகத்தான் ஒன்றைச் சொல்லப் போகிறேன்...’’
‘‘பாதகமில்லை... மனதில் இருப்பதை வெளிப்படுத்துங்கள்...’’

‘‘நன்றி மன்னா... ஒவ்வொரு தேசத்தின் சிம்மாசனத்திலும் அமரும் மன்னரின் விருப்பத்துக்கு ஏற்ப அவரது காலத்தில் சிறைச்சாலை
களில் சிற்சில மாற்றங்களும் ஏற்படுத்தப்படும்...’’‘‘தண்டிக்கும் முறையைக் குறிப்பிடுகிறீர்களா..?’’‘‘அதையும் சேர்த்தே சொல்கிறேன்... உதாரணமாக, ராஜத் துரோக வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்டவர்கள் சில தேசங்களில் பாதாளச் சிறையில் அடைக்கப்படுவார்கள்... வேறு சில தேசங்களில் ஐந்தடுக்கு பாதுகாப்புடன் சிறை வைக்கப்படுவார்கள்... இப்படி அடுக்கிக் கொண்டே செல்லலாம்...’’‘‘ம்...’’‘‘காஞ்சி கடிகையில் காணாமல் போயிருக்கும் சுவடிகள் சிறைச்சாலைகளின் அமைப்பை துல்லியமாகப் படம் வரைந்து பாகங்களைக் குறித்திருக்கும் சுவடிகள் மன்னா... எந்தெந்த நகரங்களில் இருக்கும் எந்தெந்த சிறைகள் எப்படிப்பட்ட பொறி அமைப்புகள் கொண்டவை... என்பதை எல்லாம் விளக்குபவை...’’

சில கணங்களில் யோசனையில் ஆழ்ந்த விக்கிரமாதித்தர், சட்டென கேட்டார்: ‘‘அவை பழைய சுவடிகள்தானே..?’’
‘‘ஒருவகையில் ஆம் மன்னா... ஆனால், அவை புதிய சுவடிகளும் கூட...’’புருவங்களை உயர்த்தி எப்படி என்பதுபோல் ஆச்சார்யரைப் பார்த்தார் சாளுக்கிய மன்னர்.‘‘பாரத தேசத்தில் இருக்கும் எந்த நாட்டு சிறைச்சாலையும் எந்த அமைப்பில் மாற்றி அமைக்கப்பட்டாலும் அவை உடனுக்குடன் கடிகைக்கு தெரிய வரும். அந்த மாற்றங்களை புதியதாக ஓர் ஓலையில் எழுதி முந்தைய கட்டுடன் இணைத்துவிடுவோம்...’’

சொன்ன ஆச்சார்யரை நெருங்கி வந்து உற்றுப் பார்த்தார் விக்கிரமாதித்தர்: ‘‘இது ராஜத் துரோகமல்லவா..? ஒரு மன்னர் தன் நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்ப செய்யும் ஒரு மாற்றத்தை இப்படி பகிரங்கமாக இன்னொரு நாட்டின் கடிகையில் ஆவணப்படுத்தலாமா..?’’
‘‘கூடாதுதான் மன்னா... ஆனால், சாஸ்திரங்கள் இதை அனுமதிக்கின்றன... எப்படி ஒவ்வொரு நாட்டு தர்மங்களும் நியாயங்களும் ஆவணப்படுத்தப்பட்டு மற்ற தேசத்தவர்களுக்கும் வழிகாட்டியாக காலவெள்ளத்தில் மாறுகிறதோ... அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகிறதோ...

அப்படி சிற்ப - கட்டடக் கலைகளையும் சொல்லலாம்... அதேநேரம் எப்படி அர்த்த சாஸ்திரம் உள்ளிட்ட ராஜ தந்திரங்கள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கற்பிக்கப்படுகிறதோ அப்படி சிற்பம் - கட்டடக் கலைகளில் ஏற்படுத்தப்படும் மேம்பாடுகள் அந்தந்த துறை மாணவர்களுக்கு மட்டுமே கற்பிக்கப்படும்... இதிலும் சில நியதிகளை கடிகைகள் பின்பற்றுகின்றன...’’
‘‘என்ன விதிகள் ஆச்சார்யரே..?’’

‘‘கட்டடக்கலை பயிலும் எல்லா மாணவர்களுக்கும் பொதுவான அமைப்புகள் மட்டுமே கற்பிக்கப்படும் மன்னா... ஒவ்வொரு தேசத்தின் ரகசியங்களாகவும் இருக்கும் கட்டட நுணுக்கங்கள் ஒருபோதும் அந்த தேசத்தைச் சேர்ந்த வித்யாதிபதிகளுக்குக்கூட கற்பிக்கப்பட மாட்டாது...’’
‘‘ம்...’’

‘‘தொடர்புள்ள தேசத்தின் மன்னர் தன் கைப்பட ஓலை எழுதிக் கொடுத்தால் மட்டுமே அந்த தேசம் தொடர்பான கட்டடக்கலை ரகசியங்கள் கற்பிக்கப்படும்... அதுகூட யாருக்கு கற்பிக்கலாம் அல்லது யார், சம்பந்தப்பட்ட அந்த சுவடிகளைப் பார்வையிடலாம் என அந்த மன்னர் சொல்கிறாரோ அந்த மாணவருக்கு மட்டுமே சொல்லித்தரப்படும் அல்லது அந்த நபர் மட்டுமே பார்வையிட அனுமதிப்படுவார்...’’
‘‘ம்...’’

‘‘இந்த வகையில் காஞ்சி கடிகையில் இருந்த சிறைச்சாலை தொடர்பான சுவடிகள் அனைத்தும் இன்றிருக்கும் அனைத்து தேசத்து ரகசியங்களையும் உள்ளடக்கியவை. அவை பழமையானவைதான்... ஆனால், எந்த தேசத்திலும் சிறைக்கூடங்களில் புதியதாக எந்த மாற்றங்களும் செய்யப்படாததால் அவை புதிய சுவடிகள் என்றும் சொல்லலாம்...’’

விக்கிரமாதித்தர் எதுவும் பேசாமல் தன் கரங்களை பின்புறம் கட்டியபடி குறுக்கும் நெடுக்கும் நடந்தார்.ஆச்சார்யர் மரியாதை நிமித்தமாக தன் கரங்களை தன் மார்பில் கட்டியபடி அமைதியாக நின்றுகொண்டிருந்தார்.‘‘ஆச்சார்யரே...’’ அழைத்த சாளுக்கிய மன்னர் சாளரத்துக்கு வெளியே தன் பார்வையைச் செலுத்தினார்: ‘‘காஞ்சி கடிகையில் பாரத தேசத்தின் அனைத்து நாடுகளைச் சேர்ந்த சிறைச்சாலைகளின் ரகசியங்களும் இருக்கிறதா..?’’
‘‘கடல் கடந்த தேசத்தின் சிறைக்கூட வரைபடங்களும் அங்குண்டு மன்னா...’’

‘‘அவை அனைத்தும் காணாமல் போயிருக்கிறதா..?’’
‘‘இல்லை மன்னா... தமிழக சிறைக்கூடங்களின் ரகசியங்கள் அடங்கிய சுவடிகள் மட்டுமே மறைந்திருக்கின்றன...’’
கேட்டதும் முடிச்சிட்ட விக்கிரமாதித்தரின் புருவங்கள் சட்டென்று உயர்ந்தன: ‘‘கடைசியாக அந்த சுவடிகள் இருந்த பகுதிக்கு யார் சென்றது..?’’
‘‘கரிகாலன் மன்னா!’’சாளுக்கிய மன்னரின் உதடுகளில் புன்முறுவல் பூத்தது. ஆனால், அவர் நயனங்களில் அனல் தெறித்தது: ‘‘நல்லது ஆச்சார்யரே... தகவல் சொன்னதற்கு நன்றி... காணாமல் போன சுவடிகள் விரைவில் உங்கள் கடிகைக்கு வந்து சேரும்...’’

‘‘அது அவ்வளவு முக்கியமில்லை மன்னா... எங்கள் ஆச்சார்யரில் ஒருவருக்கு அந்த சுவடிகளில் இருந்த விஷயங்கள் அனைத்தும் மனப்பாடம். இன்னும் இரண்டொரு நாட்களில் புதியதாக அவற்றை எழுதி கடிகை நூலகத்தில் சேர்ப்பித்து விடுவார்... நான் வந்தது தங்களுக்கு தகவலைச் சொல்ல...’’
‘‘இதே தகவல் பாண்டிய மன்னருக்கும் தெரிவிக்கப்படுமா..?’’

‘‘கண்டிப்பாக மன்னா... அவர்கள் தேசத்து சிறைக்கூட ரகசியங்கள் அடங்கிய சுவடியும்தானே மறைந்திருக்கிறது..? எனவே அவர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டியது எங்கள் கடமை... என்னைப் போலவே வேறொரு ஆச்சார்யர் மதுரைக்கு சென்றிருக்கிறார்...’’விக்கிரமாதித்தர் எதுவும் சொல்லவில்லை. வந்த ஆச்சார்யர் மரியாதையுடன் அவரை வணங்கிவிட்டு விடைபெற்றார்.அதன் பிறகு யாரையும் சந்திக்காமல் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார் சாளுக்கிய மன்னர். தன் முன்னால் இருந்த சதுரங்கப் பலகையில் காய்களை முன் பின்னாக நகர்த்தத் தொடங்கினார்.
ஒரு நாழிகைக்குப் பின் காவலர் தலைவன் அவர் இருந்த அறைக்குள் நுழைந்தான்: ‘‘மன்னா...’’

கோபத்துடன் அவனை ஏறிட்டார்: ‘‘நான்தான் யாரையும் இப்போது சந்திக்கப் போவதில்லை என்றேனே... எதற்காக என்னைத் தொந்தரவு செய்கிறாய்..?’’‘‘ஒற்றர் படை உபதலைவர் உங்களைச் சந்தித்தே ஆகவேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறார்... அவசரமாம்...’’
‘‘ஒற்றர் படை உபதலைவரா..? சரி... வரச் சொல்...’’காவலர் தலைவன் வெளியேறிய அடுத்த கணமே புயலென சாளுக்கிய ஒற்றர் படை உபதலைவன் நுழைந்தான்: ‘‘வணக்கம் மன்னா... சமீபத்தில் கடல் கடந்து பறக்கும் திறமை வாய்ந்த சில புறாக்களை அரபு வணிகர்களிடம் இருந்து ஒருவர் வாங்கியிருக்கிறார்...’’‘‘எத்தனை புறாக்கள்..?’’

‘‘சரியாக பதினைந்து மன்னா... ஆனால், தற்சமயம் அவரிடம் பத்து புறாக்கள் மட்டுமே இருக்கின்றன...’’
‘‘மீதமுள்ள ஐந்து..?’’
‘‘மதுரையில் பறந்திருக்கிறது!’’
‘‘அரபு வணிகரிடம் இருந்து வலுவான பதினைந்து தூதுப் புறாக்களை வாங்கியவர் யார்..?’’
‘‘தங்களால் வேளிர்களின் தலைவனாக முடிசூட்டப்பட்ட
கடிகை பாலகன்!’’

‘‘குருநாதா...’’
குரல் கேட்டு ஆழ்ந்த சிந்தனையில் இருந்து விடுபட்டார் ராமபுண்ய வல்லபர்: ‘‘என்ன விநயாதித்தா... இன்னமும் சிவகாமியை பாண்டிய மன்னர் விசாரிக்கவில்லையே என்று யோசிக்கிறாயா..? நான்தான் இன்னும் சில நாட்களுக்கு விசாரணை நடைபெறாது என்றேனே..?’’
‘‘சிவகாமி குறித்து பேசுவதற்காக தங்களைத் தேடி வரவில்லை குருநாதா...’’
‘‘பிறகு..?’’

‘‘இன்று பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மரை ஒருவர் சந்தித்திருக்கிறார்...’’
‘‘யார்..?’’
‘‘காஞ்சி கடிகையைச் சேர்ந்த ஆச்சார்யர் ஒருவர்...’’
ராமபுண்ய வல்லபரின் கண்கள் சட்டென ஒளிர்ந்தன: ‘‘என்ன விஷயமாக..?’’

‘‘கடிகை நூலகத்தில் இருந்த சில சுவடிகள் காணாமல் போயிருக்கிறதாம்... அவை அனைத்தும் தமிழக சிறைச்சாலை குறித்த ரகசியங்கள் அடங்கிய சுவடிகளாம்...’’‘‘என்ன சொல்கிறாய் விநயாதித்தா..? எப்படி அவை மறைந்தனவாம்..?’’
‘‘தெரியவில்லை குருநாதா... ஆனால், கடைசியாக அந்த சுவடிகளை சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் சொல்லி பார்வையிட்டது கரிகாலன் என்கிறார் அவர்...’’

துள்ளி எழுந்தார் ராமபுண்ய வல்லபர்: ‘‘தமிழக சிறைச்சாலை ரகசியங்கள் அடங்கிய சிற்பச் சுவடிகள்... கரிகாலன்...’’ முணு
முணுத்தவர் சாளுக்கிய இளவரசனைக் கட்டிப் பிடித்தார்:‘‘புரிகிறதா விநயாதித்தா... காஞ்சி சிறையில் கரிகாலனின் தந்தையான சோழ மன்னரை நான் அடைத்து வைத்திருந்தேன்... அவரை மீட்க கரிகாலனும் சிவகாமியும் காஞ்சி சிறைக்குச் சென்றார்கள்... இப்போது சிவகாமி மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறாள்...

காஞ்சி, பல்லவர்களின் தலைநகரம்... மதுரை, பாண்டியர்களின் தலைநகரம்... காஞ்சி சிறைக்கு அன்று கரிகாலனுடன் சிவகாமி சென்றாள்... இன்று மதுரை சிறையில் அவளே அடைபட்டிருக்கிறாள்... இரு தேசத்து சிறைச்சாலை ரகசியங்களும் அடங்கிய சுவடியை கரிகாலன் களவாண்டிருக்கிறான்... துண்டு துண்டாக இருக்கும் இவை அனைத்தையும் முடிச்சிட்டுப் பார்... விளங்காமல் நாம் தவித்த அனைத்துக்கும் விளக்கம் கிடைக்கும்!’’

‘‘சிவகாமியைச் சந்தேகிக்கிறீர்களா குருநாதா..? அவள் நம் ஒற்றர் படைத் தலைவி...’’‘‘இப்போது கேள்வியே அவள் எந்த தேசத்து ஒற்றர் படைத் தலைவி என்பதுதான்!’’‘‘குருநாதா..!’’‘‘நீயே சொல் விநயாதித்தா... சிவகாமியும் கரிகாலனும் காதலர்களா அல்லது ஒருவரையொருவர் வீழ்த்த முற்படும் இரு தேசத்து ஒற்றர்களா..?’’

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்