உலகெங்கும் 40 முதல் 70% மக்களை கொரோனா தாக்கும்!



ஷாக் கொடுக்கிறார் ஆராய்ச்சியாளர்

இப்போதைய உலக வைரல் என்ன என்பது அடிக்கடி இன்றைய ஜென் Z தலைமுறையினர் கேட்கும் கேள்வி. இன்றைய தினத்தில் கொரோனா என்ற வைரஸ்தான் உலக வைரல். சீனாவின் ஹூபே மாகாணத்தில் திடீரென உருவான இந்த வைரஸ் தொற்று இன்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.

இதுவரை உலகம் முழுதும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இதனால் சுமார் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.
இந்த கொடூர தொற்று நோய்க்குப் பலியானவர்கள் எண்ணிக்கை மூன்றாயிரத்தைத் தொடப் போகிறது. இதில் பெரும்பாலானவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக, இதன் பிறப்பிடமான ஹூபே மாகாணத்தவர்கள்.

*கொரோனா என்பது என்ன?

கொரோனா என்ற சொல்லுக்கு க்ரீடம் அல்லது ஒளிவட்டம் என்று பெயர். சூரியனைச் சுற்றிலும் உருவாகும் ஒளிவட்டத்தை கொரோனா என்பார்கள். இந்த வைரஸின் வெளிவட்டத் தோற்றத்தில் இது போன்ற அமைப்பிருப்பதால் இதனை கொரோனா வைரஸ் என்கிறார்கள். கடந்த 2019ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் இது கோவிட் 19 (COVID 19) என்றும் அழைக்கப்படுகிறது.

கோவிட் 19 சுவாசப் பாதையில் உருவாகும் மோசமான தொற்று. ஒரு கட்டத்தில் நுரையீரலையே முடக்கி செயல் இழக்கச் செய்யும். சார்ஸ் (SARS), மெர்ஸ் (MERS) போன்ற ஒரு தொற்றுநோய்தான் இது என்றாலும் அவற்றைவிட தீவிரமானது. சாதாரண சளி போல எந்தவிதமான அறிகுறியும் காட்டாமல் தொடங்கி திடீரென தீவிரமடையும் இயல்புடையது. நோய் முற்றிய நிலையிலேயே கண்டுபிடிக்க இயலும் என்பது இதன் சவால்களில் ஒன்று.

*பரவும் கொரோனா

ஆரம்பத்தில் சீனாவில் உருவான இந்நோய் மெல்ல கொரியா, ஜப்பான், மலேஷியா, சிங்கப்பூர் என்று பரவி ஆப்பிரிக்காவுக்கும் பிறகு ஐரோப்பாவுக்கும் நுழைந்தது. இப்போது அமெரிக்க கண்டத்துக்கும் பரவி யிருப்பதாக பதற்றம் எழுந்துள்ளது. ஆசிய நாடுகளிலும் வேகமாகப் பரவிய இது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் சென்ற மாதமே நுழைந்துவிட்ட கொரோனாவால் ஈரான் போன்ற நாடுகள் பீதியில் உறைந்துள்ளன. அங்கும் இத்தாலியிலும் அதிகமானவர்களுக்குப் பரவியுள்ளது. ஈரானில் உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

*சீனாவின் அதிரடி

இந்த கோவிட் 19 வைரஸை கட்டுப்படுத்துவதில் வேறு எந்த நாட்டைவிடவும் சீனா பல அதிரடிகளைச் செய்துவருகிறது. இதுவரை தொற்றுநோய்களைக் கையாள்வதில் இருந்த பல பழைய முறைகளை முற்றிலும் மாற்றி ஒரு முன்மாதிரியாக சீனா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
பொதுவாக, இப்படியான தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அரசுப் பொது மருத்துவமனையின் சிறப்பு வார்டில் அனுமதித்துதான் சிகிச்சை தருவார்கள்.

ஆனால், சீனாவோ உடனடியாக - சுமார் இரண்டே வாரத்தில் - ஹூபே மாகாணத்துக்கு வெளியே ஒரு பிரமாண்ட மருத்துவமனையைக் கட்டியது.
இதுபோல மேலும் பல இடங்களில், நகரங்களுக்கு வெளியே மக்கள் நடமாட்டமற்ற இடங்களில் கோவிட் 19 வைரஸ் சிறப்பு மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இங்கு, நோயாளிகளுக்கு ஊசி, மருந்திடுதல் உட்பட அனைத்துப் பணிகளுக்கும் முதன்முறையாக ரோபோக்கள் பயன்படுத்தப்
படுகின்றன. அதிநவீன சிகிச்சைகள் தரப்படுகின்றன. இந்த புதிய முயற்சிகளுக்கு நல்ல பலனும் கிடைத்துவருவது குறிப்பிடத்தக்கது.

*அச்சுறுத்தலா… ஆறுதலா?

ஹார்வார்டு பல்கலைக் கழகத்தின் ஆய்வு மருத்துவர் மார்க் லிப்சிட்ச், கொரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வு செய்துவருகிறார். அவர் சமீபத்தில் இந்த வைரஸ் பரவல் தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்து கடும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. அதாவது, கொரோனா வைரஸ் இந்த ஆண்டுக்குள் உலகெங்கும் 40 முதல் 70% மக்களுக்குப் பரவ வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார் லிப்சிட்ச்.

ஆனால், இப்படிப் பரவினாலும் பெரும்பாலானவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் சொல்கிறார். சார்ஸ் போன்ற ஒரு நோய்தான் இதுவும் என்று சொல்லும் இவர், அதிக வெப்பநிலை கொண்ட மூன்றாம் உலக நாடுகளில் இந்த நோய்த் தொற்று பரவினாலும் சாதாரண சளி அல்லது காய்ச்சல் போல தாக்கிவிட்டு நகர்ந்துவிடும். ஏற்கெனவே இப்படி சார்ஸுக்கு நிகழ்ந்துள்ளது. எனவே பெரிதாக அச்சப்படத் தேவையில்லை என்கிறார்.
பலருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்கிய எளிய அறிகுறி கூடத் தெரியாது. ஏனெனில் இந்த வைரஸின் உயிர்த்திறன் குறைவுதான். இதன் இனப்பெருக் கத் திறனும் குறைவு என்கிறார் லிப்சிட்ச்.

*கொரோனாவும் உலகமும்

வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் நாட்டுக்கு வருவதை சவுதி அரேபியா நிறுத்தி வைத்துள்ளது. இதனால் ஜூலை மாதம் தொடங்கும் ஹஜ் புனித யாத்திரை பாதிக்கப்படுமா என்பது தெரியவில்லை.ஈரான் மக்கள் தேவையில்லாத பயணங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் டெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் வெள்ளிக் கிழமை வழிபாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து ஆஸ்திரேலியா வரும் பயணிகளுக்கான கட்டுப்பாட்டை அந்நாடு நீட்டித்துள்ளது.இத்தாலியில் இதுவரை 17 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 11 நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.கிரீஸில் அனைத்து திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜப்பானில் பள்ளிகள் மூடப்பட்டிருப்பது 13 மில்லியன் குழந்தைகளைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே, மார்ச் முதல் வாரங்களில் இந்த கொரோனா தொற்று பரவலை தடுப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் எனத் தெரிவித்தார்.சீனாவில் சுமார் 200 மில்லியன் மாணவர்களை இணையத்தின் மூலம் பாடம் பயில அரசு அறிவித்துள்ளது.ஈரானில் இதுவரை 245 கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரானின் அண்டை நாடுகள் தங்களின் எல்லையை மூடியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், லெபனான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் எஸ்தோனியா ஆகிய நாடுகளில் ஈரானிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் இதுவரை 1262 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிங்கப்பூரில் 12 வயது மாணவர் ஒருவர் உட்பட 96 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவில், இத்தாலியில் இதுவரை 650 பேருக்கு தொற்று இருப்பதாக கண்டியறியப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.அல்ஜீரியா, டென்மார்க், ரொமானியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் இத்தாலிக்கு பயணம் செய்தவர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பிரான்ஸில் இதுவரை 38 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு இருவர் உயிரிழந்துள்ளனர்.
பிரிட்டனில் மொத்தம் 16 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.நெதர்லாந்திலும் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்நபர் சமீபமாக இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஒருவருக்கு வைரஸ் தொற்று எவ்வாறு வந்தது என்பது தெரியவில்லை என்கிறார்கள். பாதிக்கப்பட்டவர் சமீபத்தில் எங்கும் பயணம் மேற்கொள்ளவும் இல்லை. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலும் இல்லை என்கின்றனர் அதிகாரிகள்.

இளங்கோ கிருஷ்ணன்