லவ் ஸ்டோரி -13 பெண்களை காதலிச்சிருக்கேன்னு வெளிப்படையா சொல்லித்தான் என் மனைவியை மணமுடிச்சேன்!
காதல் பத்தி நான் கணிச்சு சொல்ற அளவுக்கு காதல் பலவீனமானதில்ல. அது கடல் மாதிரியே உலகத்தை முக்கால்வாசிக்கு மேலே கையில் எடுத்திருக்கு. கிராமங்கள்ல சிறுதெய்வச் சிலைகளுக்கு கண் திறக்குற வைபவம் நடக்கும். அது ஒரு நிகழ்வு. கண் திறந்தா அது தெய்வமாகிடும்.
அதுமாதிரி இந்த உலகத்தை நாம் பார்க்குற வினாடியே காதல் தொடங்குது. பெண் மீதான முதல் கவன ஈர்ப்பே, இந்த உலகத்தின் மீதான கண் திறப்புதான். என்னோட பால்யம் நிறைய கேள்விகளுக்கு பதில் கிடைக்காத பருவம். இந்த வாழ்க்கையை மறக்கடிக்க, கடக்க பல வழிகள் இருந்துச்சு. நான் தேர்ந்தெடுத்தது பெண் வழி. அம்மா, அக்கா, அண்ணி, தங்கையைப் பார்க்கிறேன். ஆனா, ஒரு பொண்ணு பின்னாடி போய் அவள் சாப்பிடுறதை, தலை பின்றதை, பல் துலக்குறதை, குளிக்கிறதை, சர்ச்சுக்கு நடந்து போறதைப் பார்க்கணும்னு ஏங்க வைக்கிறதே… அது என்ன? பிரியமான பெண் எப்படி தூங்குவாங்கிறதை பார்க்கத் துடிக்கிறது கூட காதலின் தொடக்கம்தான். நாம் இல்லாத விநாடிகள்ல அவள் எப்படி வாழ்றாங்கிற நினைவே வேறொரு உலகத்திற்கு என்னைக் கூட்டிட்டுப் போகுது.
அப்ப நான் ஆடு, மாடு மேய்ச்சிக்கிட்டு கூலி வேலைக்கும் போறேன். எவ்வளவு வேலையிருந்தாலும், அதை மறக்கக்கூடிய ஒரு பொண்ணு முகம் இருக்கு. வேறான உலகம்னு நம்ப வைக்கிற காதல் இருக்கு.எனக்கு நிறைய இடர்கள். நீங்க வாழ்ந்துதான் பதில் கண்டுபிடிக்கணும். நிறைய பெண் தோழிகள் தேவைப்பட்டாங்க. துயரங்களை மறக்கடிக்க அவங்ககிட்டே பேசினா போதும். என்னால் எந்த ரகசியத்தையும் ஒரு ஆண்கிட்டே வைச்சுக்க முடியாது.
என்னை சுவாரஸ்யப்படுத்துகிற, கனிவாக்குகிற ரகசியம் எந்த ஆணிடமும் இருந்ததாக நான் நம்பவேயில்ைல. என் எல்லா ரகசியங்களும் தோழிகளிடமே இருந்திருக்கு. அவர்கள் சொல்லக் கூடிய ஒவ்வொரு வார்த்தையும் என்னை அழகாக்கியிருக்கு. அறிவான மாற்றங்கள் நடந்திருக்கு. ஒரு பெண்ணிடம் பேசுவதற்கு பிரத்யேகமாக ரெடியாகிறேன் இல்லையா, அப்படி எந்த ஆணிடமும் பேச நான் ரெடியானதே கிடையாது. ஒரு பெண்கிட்டே பேச என் ஒட்டுமொத்த அறிவையும் நான் பயன்படுத்தியிருக்கேன். என் குறைந்தபட்ச அழகை பெரிய அழகென நம்பியிருக்கேன்.
நான் பத்தாவது ஃபெயிலாகிட்டேன். நல்ல மாணவன்தான் நான். பத்தாவது மட்டும் பாய்ஸ் ஸ்கூல்ல சேர்த்துட்டாங்க. எங்க அண்ணன்கிட்ட, ‘பாய்ஸ் ஸ்கூல்ல சேர்த்தா எப்படி பாஸாக முடியும்’னு கேட்டேன். காலையிலிருந்து மாலை வரை ஆண்களையே பார்த்துட்டு இருக்கிற வாழ்க்கை. எந்த பட்டன் கழண்டாலும், பசங்க பட்டன் போடமாட்டாங்க. எவன்கிட்டேயும் அமைதி இருக்காது.
ஒருத்தனை அமைதிப்படுத்துற சரியான வார்த்தையைக் கொண்டுவர இங்கே ஒரு பெண் தேவைப்படுது. பசங்க வருவாங்க. போவாங்க. பெஞ்சு மேலே உட்காருவாங்க. குளிக்க மாட்டாங்க. என்னால அங்க படிக்க முடியலை. அப்புறம் கோ-எஜுகேஷன் மாற எல்லாம் மாறுச்சு. இன்னொரு பாலினம்தான் என்னை புரிஞ்சிக்க முடியுது. நிறைய தோழிகள். நிறைய காதலிகள். யாரும் என்னைத் திட்டிப் போனதில்லை. 13 பெண்களை காதலிச்சிருக்கேன்னு வெளிப்படையா சொல்லித்தான் என் மனைவியை மணமுடிச்சேன்.
யாரையெல்லாம் இன்னொரு தடவை பார்க்கணும்னு தோணுதோ அவங் ெகல்லாம் காதலிகளே! ஒரு பெண்ணின் கையைப் பிடிக்கிறப்பதான் அமைதியா உணர்ந்திருக்கேன். என்னை மாத்திய ஆண் யாருமே கிடையாது. ஆசிரியரா இயக்குநர் ராம் சார் இருக்கார். அவர் டீச்சர் மாதிரி. பயம், மரியாதை இருக்கு. அது வேறே. என்னை சுதந்திரமா உருவாக்கின ஆண் கிடையவே கிடையாது. பெண், தோழி, காதலிகளால் உருவாக்கப்பட்டவன் நான். ‘எப்பப்பார்த்தாலும் பொண்ணுங்ககிட்டதான் பேசுவியா, பழகுவியா’னு வீட்டுல அடிச்சிருக்காங்க.
தனியா இருந்து ஆடுவேன், பாடுவேன், சூரியனை வெறிச்சுப் பார்ப்பேன். இதை எல்லோரும் பைத்தியக்காரத்தனம்னு சொன்னப்ப, பெண்கள் மட்டுமே அதை ரசிச்சாங்க. ஆண்கள்கிட்ட சொன்னா, ‘போடா லூசு’ன்னாங்க. பெண்கள் அதுக்குள்ள இருக்கிற மனநிலையைப் புரிஞ்சுக்கிட்டாங்க.
என்னை உருவாக்கியதில் பெரும்பங்கு தோழிகளுக்குரியது. எல்லா தோழிகளையும் நான் காதலிகளாகவே பார்த்திருக்கேன். எனக்கு தோழிகளும், காதலிகளும் அதிகம். இரண்டு பேருமே வெளிப்படையா இருந்திருக்கோம். பிரிஞ்சு போகும் போதும், தொலைஞ்சு போகும் போதும் யாரும் யாரையும் திட்டிக்காம போயிருக்கோம். பழி சுமத்தாம போனதாலேயே அவங்க காதலிகள்.
நான் அவங்களைவிட்டு எந்த சமயம் விலகணும்னு அவங்களுக்கே தெரியும். இவன் ஒரு இடத்துல இருக்கக்கூடிய ஆள் கிடையாதுனு நம்பி, கொஞ்ச நாள் இருந்திட்டுப் போனாங்க. இவன் நடந்துக்கிட்டே இருக்குற ஆளுனு என்னை வழியனுப்பி வைச்சாங்க. யாரும் நீ இங்க இருந்தேயாகணும்னு கையைப் பிடிச்சு உட்கார வைக்கலை.
அதுதான் பெரிய கிஃப்ட். கட்டிப்பிடிச்சு, முத்தமிட்டு அனுப்பி வைச்சவங்களே அதிகம். நான் என் முதல் காதலியிடம் பேசிய வார்த்தைகள் இப்ப கூட நல்லா ஞாபகம் இருக்கு. சுனாமியைப் பத்தி, அது எழுப்பிய பெரிய அலைகள் பத்தி, கடவுள் இயேசு பிறந்தநாள் அன்னைக்கு மனிதர்களைக் கொல்ல வந்த அதன் துணிச்சல் பத்தினு எங்க முதல் பேச்சு அமைஞ்சது.
இது எல்லாவற்றுக்கும் பிறகே திவ்யாவைப் பார்த்தேன். நான் காதலிப்பதில், பெண்களோடு பழகுவதில் அவளுக்கு பிரச்னை இருந்ததில்லை. ஒரு பறவையை, கடலை, வனத்தைப் பார்க்குற மாதிரியே நான் பெண்களைப் பார்க்குறேன்னு அவள் நம்புறாள். நான் காதல் வயப்பட்டிருந்தா, சந்தோஷமா இருப்பேன்னு அவளுக்குத் தெரியும். காதல் உணர்வை ரசிக்கிற மனைவி அமைஞ்சது பேரானந்தம். என் முழு வாக்குமூலத்தையும் பகிர்ந்துகிட்டதுல இந்த முழு புரிதல் சாத்தியமாச்சு.
சென்னைக்கு இடம் பெயர்ந்து தனியன் ஆகிறேன். பிளாக்குல எழுத ஆரம்பிச்சப்ப ஒரு வாசகியா வந்தாள் திவ்யா. வாசகி - எழுத்தாளனாக புரிதல் நடக்க, எனது எழுத்துலகம், படைப்புலகம் காக்க இவள் கூட இருந்தா பாதுகாப்புனு நம்புறேன். இயக்குநர் ராமுடன் கோவை செல்ல, சேலத்தில் இவளை வரச்சொல்லி நான் மட்டுமே பார்க்கிறேன். திரும்பும்போது நல்ல வேளையா இயக்குநர் என்னோடு வரல. அவள் கூடவே அவளது அம்மா. அவங்க பொண்ணுக்கு கொடுத்த சுதந்திரம் ரொம்ப அழகு. அன்னைக்கே அவங்க வீட்டுக்குப் போய் தங்குறேன்.
அங்கேயும் அவள் அம்மா, தங்கை மட்டுமே இருக்க, ஆண் இல்லையென்பதே பெரிய சந்தோஷம். அமைதியை சீர்குலைக்கும் ஆண் களின் பார்வையே எனக்குப் பிடிக்காது.நான் கல்யாணத்திற்கான ஆளே கிடையாது. பத்து வருஷத்துக்கு முன்னாலேயே என்மேல் அவங்க குடும்பம் வைச்ச நம்பிக்கை பெரிசு. ஏழு வருஷம் ஒண்ணா ஒரே வீட்டுல வாழ்ந்ேதாம். இது டிஜிட்டல் காலம். நம்மில் யாரையும் நொடியில் சீர்குலைக்க முடியும். கிரியேட்டர்களை, படைப்பு சார்ந்த உலகத்தைப் பதற வைக்கிற காலம் இது. தவறினா சுவத்துல போய் முட்டிக்க வேண்டியிருக்கும்.
எதிரே சுவர் இருக்கணும்னு சொல்லி மீட்க ஒரு துணை வேணும். நடந்தா பள்ளம் இருக்குனு வழியில பிடிச்சு நிறுத்தணும். திவ்யா அதைச் செய்தாள். பெண் குழந்தை நவ்வி எங்களோடு இருக்கிறாள். அம்மா, அக்கா, திவ்யா, அவள் அம்மா, தங்கை என வீடெங்கும் பெண்களே நிறைந்து வழிவது என்னைப் பாதுகாக்கவே. என் சுக துக்கங்களுக்கான காரணங்கள் திவ்யாவுக்கு மட்டுமே புரியும். கண்டுபிடிக்கவும் தெரியும்.
நான் தூங்கிட்டு இருக்கும்போது கூட என் முகம் பார்த்து பிரச்னையின் வடிவத்தை அவளால் புரிந்து கொள்ள முடியும்.
‘பழைய காதலோ புதிய காதலோ ஒரு காதல் உன்னிடத்தில் எப்போதுமிருக்க வேண்டும் அதுதான்உனது ஆப்பிளைஉனக்கு பறித்துக்கொடுக்கும்’ என ஒரு கவிதையை முன்பு நான் எழுதியிருக்கிறேன். என்றென்ைறக்குமான உண்மை கூட அதுதான்!
நா.கதிர்வேலன்
ஆ.வின்சென்ட் பால்
|