மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும்!



இந்தியத் தேர்தல்களில் ஈவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் 2009ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அன்று முதல் கட்சிக்காரர்களும் அரசியல் விமர்சகர்களும் இந்த இயந்திரத்தின் மேல் தொடர்ச்சியாக குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.
பிரபல பத்திரிகையாளரான பிரணாய் ராய், ‘‘இந்தியாவில் பயன்படுத்தும் ஈவிஎம்களில் இன்டர்நெட், வைஃபை மற்றும் வெளித் தொடர்புகளுக்கான வசதி இல்லாததால் வாக்குச் சீட்டுகளைக்  களவாடமுடியாது...’’ என்று, தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், ‘உயிர்மை’ பதிப்பகம் வழியே தமிழில் வெளியிடப்பட்ட ‘வாக்கு எந்திர சூழ்ச்சி மக்களாட்சியின் வீழ்ச்சி’ என்னும் புத்தகத்தை எழுதிய பத்திரிகையாளரான அய்யநாதன், இந்த இயந்திரத்தின் முக்கியமான பகுதி ஒரு சிப். இதுதான் தேர்தல் மோசடிகளுக்கு மூலகாரணம் என்கிறார்.
‘‘இந்தியாவில் பயன்படுத்தப்படும் சிப் - ஜப்பான், அமெரிக்கா போன்ற சில வெளிநாட்டுக் கம்பெனிகளிலிருந்து வாங்கப்படுகிறது.

இதில்தான் பிரச்னை. ஒரு தொழில்நுட்பம் என்றால் அதை பரிசோதிக்கக்கூடிய வசதி இருக்கும். ஆனால், இந்த சிப்பை யாராலும் பிரித்துப் பார்க்கமுடியாதபடி இந்திய அரசு மாஸ்க் செய்துள்ளது. அதாவது சீல் வைத்துள்ளது. இதுதான் சந்தேகத்தைக் கிளப்புகிறது. சிப்பில் என்ன இருக்கிறது என்று சொல்ல முடிந்தால்தான் அது இன்டர்நெட்டால், வைஃபையால் இணைக்கப்பட்டு மோசடிகளைச் செய்யமுடியுமா முடியாதா என்று சொல்லமுடியும்...’’ என்று ஆரம்பித்த அய்யநாதனிடம், ‘மின்னணு வாக்குகளை செக் செய்வதற்காக இருக்கும் விவிபேட் எனும் காகித முறை ஏன் இந்தப் பிரச்னைகளைத் தீர்க்கவில்லை..?’ என்றோம்.

‘‘இந்திய அளவில் நடக்கும் பாராளுமன்றத் தேர்தலில் 10 லட்சத்து 60 ஆயிரம் வாக்குச் சாவடிகள் இருக்கின்றன. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 17 லட்சத்து 30 ஆயிரம் விவிபேட்கள் வாங்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், பயன்படுத்தப்பட்ட விவிபேட்களின் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டால் சொற்பமே.

உதாரணமாக, தமிழகத்தின் ஒரு பாராளுமன்றத் தொகுதிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகள் வரும். ஒரு சட்டமன்றத் தொகுதியில் 200க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் இருக்கும். ஆனால், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கே 5 விவிபேட்கள்தான் பயன்படுத்தப்பட்டன. அதாவது ஒரு பாராளுமன்றத் தொகுதியில் வெறும் 30 விவிபேட்கள்தான் பயன்படுத்தப்பட்டன.

இது இப்படி இருக்க ஈவிஎம்மில் பதிவான வாக்கையும், விவிபேட் வாக்கையும் எல்லா சட்டமன்றத் தொகுதிகளிலும் எப்படி சரிபார்ப்பது? அதிலும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பல தொகுதிகளில் ஈவிஎம்மில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கைக்கும் விவிபேட் எண்ணிக்கைக்கும் சமனாகாத நிலைதான் இருந்தது...’’ என்கிற அய்யநாதன் பழைய பேப்பர் பேலட் என்று சொல்லப்படும் காகித முறையிலான வாக்கு முறைக்கும் ஈவிஎம்முக்குமான வேறுபாடுகளைப் பட்டியலிட்டார்.

‘‘வாக்குச்சாவடியைக் கைப்பற்றும் குற்றச்செயலுக்கான தீர்வாகத்தான் ஈவிஎம்மைக் கொண்டு வந்தோம் என்கிறார்கள். அன்றாவது ஏதோ ஒருசில இடங்களில் மட்டுமே கைப்பற்றும் முறை இருந்தது. ஆனால், இன்று மொத்தமாக கைப்பற்றும் முறையைத்தான் பார்க்கிறோம்.
வாக்காளர் பதிவு செய்த வாக்கு சரியாகப் போய்ச் சேர்ந்ததா என்பதைச் சோதித்துப் பார்க்க பழைய முறை உதவியாக இருந்தது. நான் போடும் ஓட்டில் இருந்த சீரியல் நம்பரையும், வாக்கு எண்ணும் அதிகாரியின் கையில் உள்ள சீட்டின் மறுபகுதியில் உள்ள சீரியல் நம்பரையும் வைத்து நான் போட்ட ஓட்டுக்கான ஆதாரத்தை சோதிக்கலாம்.

ஆனால், ஈவிஎம்மில் நான் போடும் ஓட்டுக்கான ஆதாரமே இல்லை. விவிபேட் சமனாகாதபோது வேறு என்ன ஆதாரத்தை நம்புவது? நான் ஒரு ஈவிஎம்மில் ஒரு வேட்பாளருக்காக பொத்தானை அழுத்துகிறேன் என்றால் அது சாவடி அதிகாரியின் மேஜையில் இருக்கும் மெமரி யூனிட் எனப்படும் ஞாபக மின்னணுக் கருவியில் போய் சேமிக்கப்படவேண்டும்.

பொத்தானை அழுத்தும்போது லைட் எரிவதெல்லாம் ஓர் ஆதாரமில்லை. போடும் ஓட்டு சேமிப்புக் கருவியில்தான் போய்ச் சேருகிறது என்பதை நிரூபிக்க எந்தவித டெக்னிக்கல் ஆதாரமும் இல்லை. மெமரி கருவி ஒரு வேட்பாளருக்கு மொத்த வாக்குகள் எத்தனை கிடைத்தது என்பதை மட்டுமே சொல்லும்.

ஈவிஎம்மிலிருந்து மெமரி யூனிட்டுக்குப் போகும் ஒயரில் இருக்கும் மோசடிகளைக் கண்டுபிடித்ததால்தான் கர்நாடகாவின் மனித உரிமையாளர் கெளரி லங்கேஷ் கொல்லப்பட்டதாக ஒரு விமர்சனம் கூட உண்டு...’’ என்கிற அய்யநாதன் இந்திய தேர்தல்களில் ஈவிஎம்மின் ஆரம்பம், சர்ச்சைகள், எதிர்காலம் பற்றிப் பேசினார்:

‘‘2009ல் காங்கிரஸ் கட்சிதான் முதன்முதலில் இந்த இயந்திரத்தை அறிமுகப்படுத்தியது. அந்த தேர்தலில் காங்கிரஸ் முந்தைய தேர்தலைவிட அதிக இடங்களைப் பெற்று ஜெயித்தது. அப்போது பாஜகவைச் சேர்ந்த அத்வானி ஈவிஎம்மை எதிர்க்க, சுப்ரமணிய சுவாமி வழக்கே போட்டார்.
அத்வானி வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு இந்தியா திரும்பியதும் விவிபேட் பற்றிய பாசிடிவ்வான கருத்தைத் தெரிவித்தார். அதன்பிறகே சுப்ரமணியசுவாமியின் வழக்கில் ஈவிஎம்மோடு விவிபேட்டையும் இணைக்க நீதிமன்றமும் அரசும் ஒப்புக்கொண்டது.

பிறகு 2014 முதல் பாஜகதான் ஈவிஎம்மை முறைகேடாகப் பயன்படுத்தி அமோக விளைச்சலை அனுபவிக்கிறது. 2014 தேர்தலில் பெரிதாக இந்த இயந்திரத்தில் மோசடி நடைபெறவில்லை. ஆனால், கடந்த வருடம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இது பெரிய அளவில் தவறான வழியில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

12 வட மாநிலங்களில் இந்த மோசடியை பாஜக அரங்கேற்றியிருக்கிறது. 2018ல் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக படுதோல்வியுற்றது. ஆனால், பாராளுமன்றத் தேர்தலில் இந்த மூன்று மாநிலங்கள் உட்பட மேலும் 9 மாநிலங்களில் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி வெற்றிக்கனியை பாஜக பறித்துள்ளது. இது எப்படி சாத்தியம் என்பதுதான் என்னைப் போன்றவர்களின் கேள்வி.  

2014 - 2019 காலகட்டத்தில் வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி ஏற்றம், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு போன்ற பிரச்னைகளால் மொத்த நாடே சீரழிந்து கிடந்த நிலையில் மீண்டும் தாங்கள் ஜெயிப்பதற்காக ஈவிஎம் மூலம் பாஜக மோசடி செய்துள்ளது...’’ என்கிற அய்யநாதன், மாநில தேர்தல் மற்றும் மத்திய தேர்தல் ஆகியவற்றுக்கிடையே இன்றைய காலத்தில் வித்தியாசமில்லை என்கிறார்.

‘‘இதற்கு உதாரணமாக தமிழகத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி ஜெயித்ததைச் சொல்லலாம். ஆக, ஒரு மாநிலத்தில் தன் பலம், பலவீனத்தை நம்பியே பாஜக அரசு இந்த இயந்திரங்களைப் பயன்படுத்துகிறது. ஓரளவு பலம் இருக்கும்; ஆனால், கூடுதலாக இடம் வேண்டும் என்றால் மோசமான இயந்திரத்தைப் பயன்படுத்துவது, ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்றால் நல்ல இயந்திரத்தைப் பயன்படுத்துவது என சந்தேகம் கிளம்பாத வகையில் பாஜக இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது என்றே சந்தேகிக்கிறோம்.   

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்திய அரசும், தேர்தல் ஆணையமும் ஈவிஎம் பற்றி மக்களுக்கு முழுமையான உண்மைகளைச் சொல்லி சந்தேகங்களைத் தீர்க்க வேண்டும்... இல்லையெனில் மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பாக இருக்காது... மாறாக, பாஜக நினைப்பதே தேர்தல் முடிவாக வெளியாகும்...’’ அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார் அய்யநாதன்.   

டி.ரஞ்சித்