சிறுகதை - பர்சைத் தொலைத்தவன்...



கடை வீதியில் நடக்க இடம் இல்லை. ஒரே தள்ளுமுள்ளுதான். பாக்கெட் வைக்காத சட்டையைப் போட்டுக் கொண்டு பர்ஸ், மொபைலைக் கைப்பையில் வைத்துக்கொண்டு போவது ஒருவித அசௌகர்யம்.அப்போதுதான் என் மொபைல் சிணுங்கியது. நடைபாதையில் கடை பரப்பி இருந்தார்கள். கிடைத்த இடைவெளியில் ஒதுங்கி நின்று பைக்குள் துழாவி ஃபோனை எடுத்தேன். வீட்டிலிருந்துதான். எடுக்கத் தாமதித்த நிமிடத்தில் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

‘‘என்ன..?’’ என்றேன் நானே அழைத்து.‘‘கொய்யாப்பழம் கிடைச்சா வாங்கிட்டு வாங்க...’’அட... இதைச் சொல்லவா ஃபோன். கடை வீதிக்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டுத்தான் கிளம்பி இருந்தேன். அப்போதே சொல்லி இருக்கலாம். அல்லது மகளின் ஆசையாக இருக்கலாம்.
வழக்கமான இடத்தில் கொய்யாப்பழ வியாபாரியைக் காணவில்லை. சற்றுத் தள்ளி ஒரு சைக்கிளின் கேரியரில் கூடையில் கொய்யாப்பழங்கள். இரண்டு பழங்கள் அழகாய் ஒரு பூ போல நறுக்கப்பட்டு.

அவைதான் என்னை ஈர்த்தன. வெள்ளை நிறத்திலேயே பார்த்து அலுத்துப் போயிருந்த கண்களுக்கு ரத்தச் சிவப்பில் கொய்யா.
‘‘எப்படிங்க..?’’‘‘கிலோ நூறு ரூபா...’’வியாபாரியின் முகத்தைப் பார்த்தேன். ஒரு புன்முறுவலில் இன்னொரு கொய்யா போல பூ முகம். எடை போடும்போது 1115 காட்டியது. எடுத்தால் 925க்குத் தாவியது முள். எடுத்த பழத்தைப் போட்டுவிட்டார்.

‘‘வெள்ளை கலர்ல சாப்பிட்டு அலுத்துப் போச்சு. ரொம்ப நாளைக்கு அப்புறம் செவப்பா...’’நெகிழிப் பையில் போட்டுக் கொடுத்தார். பணத்தைக் கொடுத்து விட்டு நகர்ந்து அந்த நெரிசலில் நீந்தி வெளியே வந்தேன். கையில் ஏதோ குறைந்த உணர்வு. கைப்பை.‘‘பை வச்சிருக்கீங்களா..?’’ என்று கேட்டார் கொய்யாப்பழக்காரர். ‘‘இருக்கு... ஆனா, பர்ஸ், ஃபோன் வச்சிருக்கேனே...’’எடுத்துக் காட்டியதும்தான் நெகிழியில் போட்டுக் கொடுத்தார். அதை வாங்கிய ஜோரில் கைப்பையை விட்டு விட்டேன். ஒரு கொய்யாப்பழம் வாங்கத் துப்பில்லை... பர்ஸைத் தொலைச்சாச்சு. சட்டென்று குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய குடும்பம்.

திரும்ப ஓடு... மறுபடியும் நெரிசல். தள்ளுமுள்ளு. பஸ் ஸ்டாண்டிலிருந்து கோயிலுக்கு நேர் சாலை. வருகிற கூட்டம் எல்லாம் அதே வழியில்தான். சீசனுக்குத் தகுந்தாற்போல் மனிதர்கள். எப்போதும் கோயிலுக்குப் போகிற டூரிஸ்ட்கள். அவர்கள் இலக்கு முன்னே ஓடும் முதல் நபரைப் பார்வையிலிருந்து நீக்காமல் தொடர்வது. விட்டால் வேறு வழி இல்லை. ரயில் வண்டி போல இடைவெளி இல்லாமல் கை கோர்த்து ஓடுவார்கள்.
ஒரு வழியாக சமாளித்து கொய்யாப் பழ சைக்கிள் நின்ற இடத்திற்கு போனால்... அவரைக் காணோம். நான் வாங்கும்போதே மூன்று கிலோவுக்கும் குறைவாய்த்தான் இருந்தது. அதற்குள் வியாபாரம் முடிந்து போய் விட்டாரா.. வாடிக்கையாய்க் கடை போடுபவரை எனக்குத் தெரியும். இவரை இன்றுதான் பார்த்தேன். எந்த ஊரோ... என்னவோ... எங்கே என்று தேட.

ஆர்வமாக ஆசைப்பட்டு வாங்கிய கொய்யா இப்போது கனத்து எரிச்சலூட்டியது. தூக்கி விசிறி விடலாம்போல. ஆனால், அதுதான் இப்போது எனக்கு சாட்சி. அதைக் காட்டித்தான் பர்ஸைக் கேட்க வேண்டும்.கோலப்பொடி கடை பரப்பி இருந்த ப்ளாட்பார நபரிடம் கேட்டேன். ‘‘இங்கே ஒருத்தர் கொய்யாப் பழம் வித்துக்கிட்டு இருந்தாரே...’’‘‘கோலப் பொடி வேணுமா..?’’‘‘கொய்யா...’’

அவர் என்னை அலட்சியப்படுத்தி, வாங்குபவரைத் தேட ஆரம்பித்தார். கூட்டம் என்னைத் தள்ள ஆரம்பித்தது. எந்தப் பக்கமும் போக முடியாது. கோலப் பொடிக்காரர் என்னை வியாபாரத்திற்கு இடைஞ்சலாகப் பார்க்க ஆரம்பித்தார்.

கொஞ்சம் தள்ளி ஓர் இடம் கிடைத்தது. பர்ஸ், ஃபோன் இல்லாமல் வீட்டிற்குப் போக முடியாது. அரை மணி... ஒரு மணி நேரம்... நகர்ந்து முன்பின் போய்த் தேடலாம் என்றால் மனசு ஒப்பவில்லை. நான் நகர்ந்த நேரத்தில் அவர் எங்கிருந்தோ வந்து விட்டால்... மனம் குயுக்தியாக யோசிக்க ஆரம்பித்து விடும் இம்மாதிரி இக்கட்டான நேரங்களில்.கோலப்பொடிக்காரர் திடீரென ஒரு கரிசனத்தில் என்னைப் பார்த்தார்:

‘‘அந்தாளை இதுக்கு முன்னால பார்த்ததில்லை... பழம் வேணுமா..? அதோ அங்கே இருக்கு பாருங்க...’’
காட்டிய திசையில் வெள்ளை நிறக் கொய்யாப் பழங்கள். ‘‘இல்லை... அவரைத்தான் பார்க்கணும்...’’‘‘பாக்கி சில்லறை வாங்காம போயிட்டீங்களா?’’
யூகத்தில் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போவார் என்று தோன்றியது. இதுவும் ஒருவித யுக்தி. தொணப்பினால் இடத்தைக் காலி செய்வேன் என்கிற எதிர்பார்ப்பு.

பதில் சொல்லாமல் தெருவின் இரு பக்கமும் பார்த்துக் கொண்டிருந்தேன் என்னைச் சபித்தபடி. இனி எதுவும் வாங்கப் போவதில்லை. எத்தனை பிரியம் இருந்தாலும்.சட்டென்று மனம் குறக்களி வித்தை காட்டியது. எல்லாம் இவளால்தான். நான் பாட்டுக்கு வந்திருப்பேன். வழியில் ஒரு போன் செய்து தேவை இல்லாமல் ஒரு சங்கடத்தை உருவாக்கி விட்டாள். என் அஜாக்கிரதை அவளால்தானே உருவானது?

எப்போது கடைவீதிக்குக் கிளம்பினாலும் எவ்வித ஆயத்தமும் இல்லாமல் வரவேண்டியது... போதுமான பணம் இருக்கா... பை இருக்கா... எந்த யோசனையும் இல்லை. வந்ததும் யானையை வாங்குவது மாதிரி ஒரு பீதியைத் தர வேண்டியது. எப்படிம்மா முடியும்... கிளம்பறச்சயே யோசிக்க மாட்டியா... கேட்டால் போச்சு. பார்க்கும் போதுதானே தோணுது...

ஒரு பொருள் இல்லை என்றால் அதைத் தவிர்த்து குடும்பம் நடத்திய காலங்கள் மலையேறிப் போச்சு. அதை வாங்கிக் கொண்டு வந்தால்தான் ஆச்சு என்கிற பிடிவாத மனிதர்களோடு வாழ்க்கை. மனம் தறி கெட்டு ஓட ஆரம்பித்தது புரிந்தது. கொஞ்ச நேரம் முன்பு வரை நான் இயல்பாக இருந்தேன். டவுனுக்குப் போய் விட்டு திரும்பி இருந்தேன். இன்று ஞாயிறு. தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்த ஒரு சந்திப்பு கைகூடி இருந்தது.
சாப்பாடு ஆனதும் கிளம்பிப் போனேன். தினசரி பரபரப்பில் தொலைத்த மகிழ்ச்சியை மீட்டெடுத்திருந்தேன். படிக்கத் தவறிய புத்தகங்கள்... போகத் தவறிய இலக்கிய நிகழ்வுகள்... எல்லாம் பேசித் தீர்த்தோம்.

‘‘முன்னாடியாச்சும் லெட்டர் போட்டுக்கிட்டோம். உன் கைப்பட ரெண்டு வரி பார்த்தாலும் காதல் கடிதம் மாதிரி இருக்கும்...’’ நண்பர் சிரித்துக் கொண்டே சொன்னார்.‘‘இப்போ ஃபோன்ல மெசேஜ் பண்ணக் கூட மறந்து போவுது...’’‘‘அந்த மெசேஜ்ல உயிர் இல்லை. கடமைக்கு... அதுவும் அவசரத்துல பிழையோட...’’வெளியே போய் தேநீர் அருந்தினோம். மீண்டும் வந்து அரட்டை. ‘‘இதை எடுத்துட்டு போறியா..? நான் படிச்சாச்சு...’’ என்று ஒரு புத்தகத்தை நீட்டினார்.

மறுத்துவிட்டேன். இந்த மாசம் வாசிப்பு கொஞ்சம் சிரமம். ஆபீசில் டென்ஷன். நல்ல வேளை, வாங்கிக் கொண்டு வரவில்லை. அந்த புத்தகத்தையும் சேர்த்துத் தொலைத்திருப்பேன்.எதிரே கொய்யாப்பழம் விற்ற பெண்மனி இந்தப் பக்கம் வந்தார். கோலப்பொடிக்காரருக்குப் பின்னால் மூடி வைத்திருந்த கூடையைத் தூக்கிக் கொண்டு போக.‘‘இன்னிக்கு நல்லா போணியாவுது... உன் காட்டுல மழை...’’ கோலப் பொடிக்காரர் சிரித்தார்.
‘‘இந்த மாசம்தான்... வெளியூர் ஜனங்க வருதுல்ல...’’‘‘ஏம்மா... இங்கே சைக்கிள்ல ஒருத்தரு கொய்யாப்பழம் வித்துக் கிட்டிருந்தாரே...’’ என்றேன் பதற்றமாக.‘‘பழம் வேணுமா..? கிலோ எம்பதுதான்...’’‘‘அவருக்கு அந்தாள்தான் வேணுமாம்...’’

‘‘யாரு பார்த்தாங்க..?’’ அலட்சியமாகச் சொல்லிவிட்டுப் போய் விட்டார். போட்டி வியாபாரியைப்பற்றிக் கேட்டால் இவ்வளவுதான் எதிர்பார்க்க முடியும்.மனம் ஒரு விசித்திரப்  பிராணி. இன்னொரு தடத்தில் திடீரென பயணிக்கத் தொடங்கியது. ஒரு வேளை கூடையில் நான் வைக்காமல் கீழே போட்டிருந்தால்...ஏற்கனவே எடுத்த படத்திற்கும் இப்போது எடுத்த படத்திற்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது போல் குழப்ப ஆரம்பித்தது. ரீப்ளே ஓட்டிப் பார்த்தால் இரண்டுக்குமே சம வாய்ப்பு இருப்பது போல். கூடையில் என்று இதுவரை நினைத்த சௌகர்யம் தொலைந்து விட்டது. தலைவலி மண்டையைப் பிளக்க ஆரம்பித்தது.

கோலப்பொடிக்காரர் இன்னொரு ஷீட்டைப் பிரித்து வியாபாரத்தைப் பெருக்க ஆரம்பித்தார். நான் நின்ற இடம் அவருக்குத் தேவைப்பட்டது. பாதையில் கடை போடலாமா என்கிற கோபம் என்னை எதில் கொண்டு விடுமோ! அறிவு விழித்துக்கொண்டு எதிர்த் திசையில் போய் நிற்கச் சொன்னது. ஒரே இடத்தில் இவ்வளவு நேரம் நின்றாகி விட்டது. நானும் ஒரு கடை போட்டிருந்தால் லாபம் பார்த்திருப்பேன்.

நேரம் ஓடியதுதான் மிச்சம். இனி காத்திருப்பது வீண் என்று மனச்சாட்சி மெல்லத் தன் முனகலைப் பதிவு செய்தது. போச்சு. பர்ஸில் இருந்த பணம் அவுட். அது போகட்டும். புத்திக் கொள்முதல். ஆனால், மொபைல்? நம்பரை ப்ளாக் செய்வது... சேகரித்து வைத்த தகவல்களை மீண்டும் தேடுவது... ஆயாசமானது. கண்களில் பார்வை மங்கியது. தடுமாறி எவரையோ மிதிக்க இருந்தேன்.

இந்தப் பக்க நடைபாதையில் அந்தப் பெண்மணி. என்ன வைத்தாலும் எழுபதுக்கு மேல். பக்கத்தில் நின்ற எனக்கே அனல் அடித்தது. சுருண்டு படுத்திருந்தார். ‘‘என்னம்மா... காச்சலா..? இப்படிக் காயுது...’’ என்னையும் மீறி பதற்றத்தில் குனிந்து நெற்றியில் கை வைத்துப் பார்த்தேன். ‘‘ஆசுபத்திரி போகலியா?’’

ஏதோ முனகினாள். அடுத்த தெருவில் நான் வாடிக்கையாகப் போகிற டாக்டர். அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி ஏற்றிக் கொண்டேன். டோக்கன் கொடுக்கிற பெண் பாட்டியைப் பார்த்ததும் உடனே உள்ளே அனுப்பி விட்டாள்.ஊசி போட்டு மாத்திரை எழுதிக் கொடுத்தவரிடம் கடன் சொன்னேன். அவருடைய மருந்துக் கடையிலேயே மாத்திரையும் வாங்கி அதே ஆட்டோவில் பாட்டியின் வீட்டுக்குப் போனோம்.

பேத்தி ஒருத்தி இருந்தாள். தகவலைச் சொல்லிவிட்டு ஆட்டோவில் வீட்டுக்குப் போனேன். ‘‘கொஞ்சம் நில்லுங்க... பணம் எடுத்துக்கிட்டு வரேன்...’’
வீட்டு வாசலில் புது ஜோடிச் செருப்பு. யார் வந்திருக்காங்க..?‘‘இதோ அவரே வந்துட்டாரு...’’என் மனைவி கையில் என் கைப்பை பர்சுடனும் மொபைலுடனும். எதிரே கொய்யாப்பழக்காரர்.‘‘பாவம்... விசாரிச்சு கொண்டு வந்தாரு... காபி குடிங்கன்னா வேணாம்னு...’’

சொல்லிக்கொண்டே இருந்தவளின் கையைப் பற்றிக் கொண்டேன்... அவருக்கு நன்றி சொல்லக் கூடத் தோன்றாமல்.
‘‘என்னை மன்னிச்சுரும்மா...’’புரியாமல்தான் அவள் என்னைப் பார்த்தாள். புரியா விட்டால் என்ன... இப்போது என் அமைதி மீண்டு
விட்டது.

சைவ சிங்

திடீரென சைவத்துக்கு மாறியிருக்கிறார் ரகுல் ப்ரீத்சிங். டயட்டில் கூட முட்டை சேர்த்து வந்தவர், இப்போது சுத்த சைவம் என்பது ரகுலுக்கே ஆச்சரியமாக இருக்கிறதாம். ‘‘எந்த பிளானிங்கும் பண்ணாம சைவத்துக்கு மாறிட்டேன். மும்பையில் ஷூட்டிங் என்றால் வீட்டில் இருந்தே சாப்பாடு வந்துடும். ஆனா, வெளிநாடு போனாதான் திண்டாட்டமாகிடும். அங்கே ஃப்ரெஷ் காய்கறி, பழங்களை விட கிரில்டு சிக்கனும், ஃபிஷ்ஷும்தான் எளிதா கிடைக்கும்.  ஆனாலும் என் கொள்கையில் உறுதியா இருப்பேன்!’’ என்கிறார் நம்பிக்கையாக!

லவ்லி டே!

ஆனந்தத்தில் பளபளக்கிறார் அடா சர்மா. பிரபுதேவாவின் ‘சார்லி சாப்ளின் 2’ ஹீரோயின். ‘‘காதலர் தினத்தை எப்படி கொண்டாடுனீங்க..?’’ என அடாவிடம் கேட்டால், அதிர அதிர சிரிக்கிறார். ‘‘வழக்கத்துக்கு மாறா அன்னிக்கு ரொம்ப அமைதியா இருந்தேன். ஒரு பிளேட் இட்லி ஆர்டர் பண்ணிட்டு, பீட்சாவா நினைச்சு சாப்பிட்டேன்..! அப்புறம் ஒரு மியூசிக் புரோக்ராமுக்கு போயிட்டேன். லவ்லி டே...’’ என்கிறார் குறும்புகள் மின்ன!
ச்சே, சைவ கோழியா இருக்கே!

நமஸ்தே டிரம்ப்!

‘நம்புங்கப்பா இது நான்தாம்ப்பா...’ என்கிற ரேஞ்சில் ஆளே மாறிப்போய் புது லுக்கில் இருக்கிறார் அஞ்சலி. தெலுங்கில் பவன் கல்யாணுடன் நடித்து முடித்துவிட்டு, அனுஷ்காவுடன் நடிக்கும் ‘நிசப்தம்’ ஷூட்டிங்கிற்காக அமெரிக்கா பறந்திருக்கிறார் அஞ்சலி. அங்கே சிகாகோ நகரில் டிரம்ப் பெயரில் ஒரு பில்டிங்கை பார்த்ததும் உடனே மகிழ்ந்தவர்... சட்டென அங்கே போட்டோவும் எடுத்து மகிழ்ந்திருக்கிறார்.

ஜாலி டே ஹாலிடே!

டோலிவுட்டில் மின்னும் மும்பை மயில் பிரக்யா ஜெய்ஸ்வால், முதலில் தமிழில்தான் அறிமுகமானார். ‘விரட்டு’வில் எரிக்காவுடன் நடித்திருந்தார்.
அதன்பிறகு தெலுங்கு பக்கம் தாவியதுடன் அங்கேயே சிலுசிலுக்கிறார். இப்போது ஹாலிடே ட்ரிப்பாக இந்தோனேஷியா பறந்தவர் அதன் இயற்கை எழிலில் மனதைப் பறிகொடுத்து திரும்பியிருக்கிறாராம்.

- ரிஷபன்