100% வைணவ சம்பிரதாயப்படி பரதம் ஆடும் இஸ்லாமியர்!



ஜாகிர் உசேன், பரதத்தில் முக்கியமான  கலைஞர். சித்ரா விஸ்வேஸ்வரனின் வழிகாட்டுதலில் மேலும் மலர்ந்து அடுத்த தலைமுறை நடனக் கலைஞர்களில் சிறந்தவராகி, சுயமான வெளிப்பாட்டுத் திறமையும் கலந்து ஒளி வீசுகிறார். நாட்டியக்கலைக்கு அதிகம் தொடர்பில்லாத சமூகத்தில் பிறந்தும், ஆண்கள் குறைவான இடம் பிடிக்கும் பரதத்தில் நுட்பமான வீச்சில் வெளிப்படுவதும் பெரும் ஆச்சர்யம். இருபத்தேழு ஆண்டுகால அனுபவம் அவரது வார்த்தைகளில் வெளிப்படுவது நிஜம்.

நீங்கள் பரதத்தை ஏற்று கற்று, அதில் படிகள் முன்னேறி சிறப்பான வரிசையில் இருக்கீங்க. எப்படி இந்த ஆர்வம்..?

எங்கள் குடும்பத்தில் பரதத்தில் நின்று நிலை பெற்றவர்கள் யாரும் கிடையாது. நானே குழந்தைப் பருவத்தில் நாட்டியக்கலைக்கு வருவேன் என நினைத்துப் பார்த்தது கிடையாது. சினிமாவில் பத்மினியும், வைஜெயந்திமாலாவும் ஆடுகிற டான்ஸ் பார்த்ததும் ஆர்வமாகி விட்டது. அதில் விதிமுறைகள், பாணிகள், வெவ்வேறு வகைகள் இருப்பது எதுவும் தெரியாது. நடனம் ஆடுவதற்கான சூழ்நிலை எதுவும் என் வீட்டில் கிடையாது.

இந்த பூமியில் என்னென்னவோ நடக்கும். அதன் ஆதி, அந்தம் பார்க்கப் புகுந்தால் நமக்கு ஒன்றும் புரியாது. எங்கேயோ ரைஸ்மில்லை பார்த்துக் கொண்டிருந்த விஜயகாந்த், நண்பர் ராவுத்தரைக் கூட்டிக் கொண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தார். ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் சாம்ராஜ்யத்தை நிறுவி, நடித்து, அரசியல் வரைக்கும் வந்துவிட்டார்.

இந்த ரஜினிகாந்த் பஸ் கண்டக்டர்தான். இன்றைக்கு அவர் அரசியலுக்கு வரப்போகிறாரா? இல்லையா? என்பதே இத்தனை வருஷமாய் செய்தியாகவே கிடக்கிறது. இந்த அஜித் பேசவே மாட்டேங்கிறார், இருக்கிற இடமே தெரியலை. ஆனால், எவ்வளவு ஃபேன் ஃபாலோயிங். அதுமாதிரி நாம் எல்லோருமே இயற்கையின் தேர்ந்தெடுப்பு.

இதுதான் சரின்னு வந்திட்டேன். இருபத்தேழு ஆண்டுகளாக நடனமாடுகிறேன். 100 சதவீதம் வைணவ சம்பிரதாயத்தின்படி நான் ஆடுகிறேன். எனக்குப் பிடித்த கடவுள் ஆண்டாள்தான். என்றைக்கும் ஆண்டாளின் பாசுரங்களுக்கு அடிபணிந்தே ஆடுகிறேன். நாட்டிய உலகமும், ஆன்மீகமும் என்னைத் தக்க வைத்துக் கொள்கிறது. எந்தப் பின்புலமும் இல்லாத என்னை நாட்டிய உலகம் கொண்டாடுகிறது. என் குரு சித்ரா விஸ்வேஸ்வரனும், வளர்த்த ரேவதி சங்கரனும் என்னை இதுவரை வழிநடத்தி அழைத்து வந்திருக்கிறார்கள்.

கலையில் மதத்திற்கு இடமில்லை. ஏ.ஆர். ரஹ்மான் முஸ்லீம் என்பதை அனைவரும் நினைவில் கொள்வதில்லை. அவர் மிகச்சிறந்த இசைக்கலைஞர். அவ்வளவுதான். உஸ்தாத் பிஸ்மில்லா கானுக்கு பாரத ரத்னா கொடுத்து கௌரவித்தார்கள். அவர் தன்பாட்டுக்கு இயல்பாக வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலில் உட்கார்ந்து ஷெனாயில் கரைந்தார்.

ஆண்டாள் பாசுரங்களை வைத்து ஆடுவதற்காக எந்த இந்துவும் என்னைக் கோபித்துக் கொள்ளவில்லை. என் சமூகத்திலிருந்தும் எனக்கு எந்த எதிர்ப்பும் கிடையாது. என்னை யாரும் ஒதுக்கி வைக்கவில்லை. நான் முஸ்லீம் என்பதற்காக பத்து பதினைந்து மேடைகளில்தான் ஆடியிருக்க முடியும். ஆனால், இத்தனை வருடங்களாக ஆடிக்கொண்டு இருக்கிறேன். எல்லா முக்கிய பண்டிகைகளிலும் என்னை ஆட வைக்கிறார்கள். நான் எல்லா மதத்தினருக்கும் பிரியப்பட்டவனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

இன்னமும் பரதம் ஏன் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு நிற்கிறது?
200 வருஷத்திற்கு முந்திய நடனம்தான் இன்றைக்கும் நடைமுறையில் இருக்கிறது. தேவதாசிகளிடமிருந்து கைவரப்பெற்ற கலைக்கு ரொம்ப நாளைக்கு முன்பு வரை டாக்குமென்டேஷன் கிடையாது. ஆங்கிலேயருக்குப் பின்பு கேமரா கைவரப் பெற்றபிறகுதான் அதற்கான ஆதாரங்களைக் கண்டோம். யார் யாருக்கு இந்தக் கலையில் ஆர்வம், ஈடுபாடு, இதில் தேர்ந்த நடன வகையில் யார் முன்னிற்கிறார்கள் என்றெல்லாம் நமக்கு ஆதாரங்கள் கிடையாது.

நாட்டியத்தில் முப்பெரும் தேவியர்களான பத்மா சுப்ரமணியம், சித்ரா விஸ்வேஸ்வரன், சுதாராணி ரகுபதி போன்றவர்கள் கலையை மேல் எழுப்பிக் கொண்டு போனார்கள். இன்னமும் பாரம்பர்ய வகை நடனத்திற்கு கட்டுப்பட்டுத்தான் இருக்கிறோம். நடனத்திற்கு செங்கல், மண், சிமெண்ட் எல்லாம் பாரம்பர்யம்தான். நிறையப் பேர் நிகழ்கால சம்பவங்களைக் கொண்டு சேர்த்து, பரதத்தை நிகழ்காலத்தில் புதுப்பிக்க முடியாதா எனக் கேட்கிறார்கள். அது அவ்வளவு சுலபமான வேலையில்லை.

ராக லட்சணங்களில் நீங்கள் வார்த்தைகளை மட்டும்தான் மாற்றலாம். டி.எம். கிருஷ்ணா புறம்போக்கு என்றெல்லாம் பாடினார். யாரும் வழிமொழியவில்லை. மக்களைத் தன் வசம் இழுக்க இன்னும் பரதக்கலை முயலணும். அறிவார்ந்த சமூகம் சேர்த்து எல்லோரையும் சினிமா அழைத்துப் போய்விட்டது. மக்களுக்கு நிம்மதி இல்லை. பண மதிப்பிழப்பு செய்து மக்களை காசு இல்லாதவர்களாக்கி விட்டார்கள். கலைகள் மக்களின் உதவியால்தான் வாழும். அவ்வளவு கவலைகள் கழுத்தைப் பிடித்தால் எப்படி நிம்மதியாக மக்கள் வந்து உட்காருவார்கள்? மக்கள் வாழ்வாதாரம் செழித்தால்தான் கலையும் செழிக்கும்.

பொதுவாக கர்நாடக இசை, பரதம் ஆகியவற்றில் எல்லாம் ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான் ஆதிக்கம் செய்கிறார்கள் என்ற ஒரு குறை ரொம்ப நாளாக இருக்கே… அவங்கதான் அதிகம் பேர் வர்றாங்க. தொடக்கத்திலிருந்து கலையைப் போஷிக்கிறதிலும், வளர்த்து எடுக்கிறதிலும் தொடர்ந்து ஆர்வமாக இருக்காங்க. மத்தவங்க இதில் தொடர்ந்து செயல்பட்டாலும் யாரும் அவர்களின் இடத்தைப் பறிக்கமுடியாது. தொடர்ந்த இசை மீதான கவனிப்பும், கூர்மையும், பார்வையாளர் கூட்டமும் அவர்களிடம் அதிகப்படியாக இருந்ததால் நீங்கள் குறிப்பிட்டது நடந்தது.

இங்கே யார் வேண்டுமானாலும் வரட்டும். நல்லது நடந்தால் சரிதான். இப்போ நிறைய கலைஞர்கள் எல்லா பக்கமிருந்தும் வந்தாச்சு. முன்னாடி கொஞ்சம் பேர்தான் இருந்தாங்க. அவங்களுக்கும் இசையில், நடனத்தில் நல்ல பெயர் இருந்தது. இப்போ நல்ல பெயர் எடுக்கிறது சிரமம். வழிமுறை வழிமுறையாக வந்ததால், அதில் அவங்களுக்கு  சௌக்யமான சங்கதிகள், சரளம் எல்லாமே கைவரப் பெற்றது.

இசை, பரதம் எல்லாம் பொதுச் சொத்து. எல்லோரும் வாங்க. உங்கள் வித்தையைக் காட்டினால், அதுவும் வித்யாசமாக, பூர்ணமாக இருந்தால் எல்லோரையும் மக்கள் கொண்டாடித் தீர்ப்பாங்க. என்னையெல்லாம் அப்படித்தான் வச்சிருக்காங்க. குருகுல வாசத்தில் இருந்து படிச்சவங்க எல்லாரும் கஷ்டப்பட்டு, குருக்களுக்கு சேவை செய்ய ரெடியாக இருந்து கத்துக்கிட்டாங்க. ஆனால், நல்ல பரதம், அருமையான இசை எல்லாமே பகவான் கொடுக்கிறது என்றுதான் முடிக்க வேண்டியிருக்கும்!

நா.கதிர்வேலன்

ஆ.வின்சென்ட் பால்