சரவணகுமார் to அபி சரவணன்



‘‘நான் சென்னை வருவேன்... சினிமால நடிப்பேன்... ஹீரோவாவேன்...னு எல்லாம் கனவு கூட கண்டதில்ல. சொந்த ஊர் மதுரை. என் ரியல் நேம் சரவணகுமார். ப்ளஸ் டூ முடிச்சதும் ஐடில சேர்ந்தேன். அங்க ஒரு சீனியர் என்னை திட்டினார்னு டிப்ளமோ படிக்க போனேன். அங்கயும் ஒருத்தர் என்னை திட்டினதும், பிஇ மெக்கானிகல் என்ஜினியரிங்ல சேர்ந்து டிகிரி முடிச்சிட்டேன்!

அப்புறம், எம்பிஏ பண்ணினேன். ஃபைவ் டிஜிட் சம்பளத்துல ஒரு நல்ல வேலைல இருந்தேன். அங்க ஒரு அதிகாரி என் குவாலிஃபிகேஷன், வயசு கூட இல்லாதவர், என்னைப் பார்த்து ‘உங்க ஹீரோயிசத்தை எல்லாம் நீங்க சினிமால காட்டுங்க’னு ஆவேசமா பேசிட்டார்.
நானும் அதே ஸ்பீடுல, ‘சினிமால ஹீரோ ஆகறேன் பாரு’னு சவால் விட்டுட்டு, கோலிவுட் வந்துட்டேன்...’’ டாப் கியரில் பேச ஆரம்பிக்கிறார் அபி சரவணன்.

ஒன்றரை டஜன் படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும், சமீபத்திய படம் ‘மாயநதி’ ரிலீஸ் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி. தவிர சசிகுமாரின் ‘கொம்புவச்ச சிங்கமடா’விலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். ‘‘‘நீங்கதான் சார் ஹீரோ’னு ஒருத்தர் உசுப்பேத்தினார். அவர் படம் எடுப்பார்னு கொண்டு வந்த பணத்தையெல்லாம் கொடுத்து ஏமாந்தேன். கைல இருந்த பணமெல்லாம் போச்சு. ஃபைவ் டிஜிட் சம்பளமும் போச்சு. சினிமாவும் ஏமாத்திடுச்சு.

ஆனாலும், விரக்தி அடையலை. என்னை ஏமாத்தின சினிமாலயே ஜெயிச்சு காட்டணும்கிற முடிவோட இருந்தேன். அந்த இக்கட்டான சூழல்ல நண்பர் அபி ஞானம் உதவினார். அந்த அன்பின் காரணமா அவர் பெயர்ல இருந்த அபியை என் பெயரோட சேர்த்து அபி சரவணன் ஆகிட்டேன்.
நண்பர்களால ‘அட்டகத்தி’, ‘குட்டிப் புலி’ல சின்னச் சின்ன ரோல்கள் பண்ணினேன். ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ல கதாநாயகன் ஆனேன்.

எஸ்.ஏ.சி. சாரோட ‘டூரிங் டாக்கீஸ்’, ‘பட்டதாரி’, ‘சாயம்’னு படங்கள் போச்சு. மலையாளத்துலயும் ‘பிரிட்டீஷ் பங்களா’, ‘திங்கள் முதல் வெள்ளி வரை’னு சில படங்கள் நடிச்சிட்டேன். இப்ப ரிலீஸாகுற ‘மாயநதி’ல நல்ல ரோல்...’’ ஆனந்தமாகிறார் அபி சரவணன்.

‘மாயநதி’யில் என்ன ஸ்பெஷல்?அழகான கதை இருக்கு. அந்தக் கதைல நானிருக்கேன். ப்ளஸ் டூ முடிச்சிட்டு, டாக்டராகணும்னு நினைக்கறா ஒரு பொண்ணு. அவ டாக்டர் ஆக முடிஞ்சதா என்பதுதான் படத்தோட கதை.

‘சீடன்’ இயக்குநர் சுப்ரமணிய சிவா, என் நண்பர் செல்வா... இவங்க மூலமா இந்தப் படத்து ஆடிஷன்ல கலந்துகிட்டேன். செலக்ட் ஆனேன்.

இந்தப் படத்துல ஆட்டோ டிரைவரா நடிக்கறேன். இந்தப் படம் கமிட் ஆன அடுத்த நாளே, மதுரைக்கு போயிட்டேன். அங்க ஆட்டோ டிரைவரான நண்பர் மாரிகிட்ட ஆட்டோ ஓட்டக் கத்துக்கிட்டு, ஆர்டிஓ ஆபீஸ்ல போய் ஓட்டிக் காட்டி லைசென்ஸ் வாங்கினேன்.

அப்புறம், சென்னைல முகத்துல கர்ச்சீப் கட்டிக்கிட்டு ஷேர் ஆட்டோ ஓட்டினேன். அப்ப சம்பாதிச்ச காசை எல்லாம் பொக்கிஷமா வைச்சிருக்கேன்.
இந்தப் படத்தின் இயக்குநர் அசோக் தியாகராஜன், நிஜமாவே ஒரு டாக்டர். மாயவரத்துல பல வருஷங்களா பிராக்டீஸ்  பண்ணிட்டு இருக்கார். எந்த சர்ச்சைக்குரிய விஷயங்களும் இல்லாம, நல்ல மனிதர்கள், பாசிட்டிவ் சிந்தனையோட ஒரு படம் பண்ணியிருக்கார். இந்தப் படம் வழியா எனக்கு ஒரு நல்ல அண்ணனா அவர் கிடைச்சிருக்கார்.

கதாநாயகியா வெண்பா நடிச்சிருக்காங்க. ஏற்கெனவே ரெண்டு படங்கள்ல நடிச்சிருக்காங்க. பவதாரிணி இசையமைச்சிருக்காங்க. ஆடியோ ஃபங்ஷன்ல அவங்களும், யுவன் ஷங்கர் சாரும், ‘ப்ரோ நல்லா நடிச்சிருக்கீங்க... சினிமாவுல உங்களுக்கு நல்ல ஃப்யூச்சர் இருக்கு’னு சொன்னாங்க. அவங்களுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிக்கறேன்.

கேரளா, ஒடிசானு புயல் பாதிச்ச இடங்களுக்கு போய் உதவுறது... ஜல்லிக்கட்டுல மல்லுக்கட்டுறது... பரவை முனியம்மால தொடங்கி பலருக்கும் மருத்துவ உதவி பண்றதுனு உங்களைப் பத்தி நிறைய செய்திகள் வருது. நீங்க பண்றது எல்லாமே சின்ன பட்ஜெட் படங்கள்... பண உதவி சாத்தியமாகறது எப்படி?

நல்ல கேள்விதான். என்னோட லைஃப்ல நான் உதவி செய்யற காலகட்டத்தை ஜல்லிக்கட்டுக்கு முன், ஜல்லிக்கட்டுக்கு பின்னுனு பிரிக்கலாம். ஒருமுறை நண்பரின் பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லத்துல கொண்டாடினேன். அங்க பார்த்த விஷயம் ரொம்ப பாதிச்சது.

அந்த நிமிடத்துல இருந்து ஆதரவற்றோருக்கு உதவ ஆரம்பிச்சேன். வறுமைல வாடும் விவசாயிகள் சிலருக்கு வாழ்வாதாரத்துக்குத் தேவையான கறவைப்பசு - கன்னுக்குட்டி வழங்கியிருக்கேன். சென்னை மழைவெள்ளம், வர்தா, ஓகி புயல்னு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஓடோடி உதவியிருக்கேன். எல்லாத்துக்குமே மனிதாபிமானம்தான் காரணம்.

நான் நடிச்ச படங்களின் லிஸ்ட் போட்டா, இருபது தாண்டும். இப்பவும் அஞ்சு படங்கள்ல நடிச்சிட்டிருக்கேன். ஒரு படத்துக்கு ஒரு லட்சம் சம்பளம்னு கணக்கு வச்சாக் கூட, என்னால உதவி செய்ய முடியும்னு உங்களுக்கு புரிஞ்சுடும். சில படங்களுக்கு மூணு லட்சம், எட்டு லட்சம் கூட சம்பளம் வாங்கியிருக்கேன். என் சம்பளத்துல பாதியை உதவிகள் செய்ய எடுத்து வைப்பேன்.

இப்ப கோடி கோடியா செலவு பண்ணி ஜல்லிக்கட்டு நடத்தறாங்க. அதால உயிரிழப்புகள் நேருது. ஸோ, போட்டி நடத்தறவங்க வீரர்களுக்கு இன்ஸூரன்ஸ் வசதியும் செய்து கொடுக்கணும்னு வேண்டுகோள் வைக்கறேன்.

எவ்ளோ பெரிய போராட்டத்துக்குப் பிறகு ஜல்லிக்கட்டை நடத்த ஆரம்பிச்சிருக்கோம்னு உங்களுக்கே தெரியும். அப்படிப்பட்ட ஒரு வீர விளையாட்டுல உயிரிழப்புகள் நேரக் கூடாதுனு விரும்பறேன். காயங்களால் பாதிக்கப்படும் வீரர்களுக்கும் அந்த இன்ஸூரன்ஸ் பணம் கிடைத்தால், அவங்க வாழ்வாதாரமும் வறுமையில்லாம ஓடும்.

‘கொம்பு வச்ச சிங்கமடா’ல என்ன பண்றீங்க?
அந்த படம் கிடைச்சதுக்கு காரணம், இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் அண்ணன். அவரோட ‘குட்டிப் புலி’க்கு முன்னாடி ஒரு ஃபங்ஷன்ல அண்ணனை (எஸ்.ஆர்.பிரபாகர்) பார்த்து, உங்க படத்துல ஒரு ஃபிரேம்ல நடிக்கற சான்ஸ் கிடைச்சா சந்தோஷப்படுவேன்னு சொன்னேன்.

மறுநாளே என்னைக் கூப்பிட்டு ‘குட்டிப் புலி’ல படம் முழுவதும் ட்ராவல் ஆகற ரோல் கொடுத்தார். இப்ப ‘கொம்புவச்ச சிங்கமடா’லயும் படம் முழுக்க வர்றேன். ‘இந்தப் படம் உனக்கு ஒரு திருப்புமுனையா அமையும்’னு சொல்லியிருக்கார். அவர் வார்த்தை பலிக்கும்னு நம்பறேன்! l

மை.பாரதிராஜா