ஓவியத்துக்காக கடலில் குதித்த 54 வயது சென்னைப் பெண்!



‘சாதிக்க வயது தடையில்லை’ என்பதற்குச் சாட்சியாக நம் முன் நிற்கிறார் உமா மணி. ஓவியர், ஸ்கூபா டைவர் என பன்முகங்கொண்ட இவருக்கு வயது 54. உமாவின் கடல் சாகசமும் ஓவியமும் தில்லி மீடியாக்களைக் கவர்ந்தது. உடனே அவர்கள் மத்திய அரசாங்கத்துக்கு விண்ணப்பிக்க, தூர்தர்ஷன் உமாவின் சாகசங்களை, ஓவியங்களை ஆவணப்படமாக்கிவிட்டது.

‘கோரல் வுமன்’ என்னும் அந்த ஆவணப்படம் உலகத் திரைப்பட விழாக்களில் விருதுகளை அள்ளிக்குவித்து வருகிறது. சமீபத்தில் உமாவின் ஓவியங்களும், ஆவணப்படமும் சென்னையில் ‘திண்ணை டாக்கீஸ்’ நிகழ்வாக அரங்கேறியது. கொடைக்கானலில் மகனுடன் சேர்ந்து இயற்கை விவசாயம் செய்துவரும் உமாவிடம் பேசினோம்.

‘‘செளகார்பேட்டையில் பிறந்து, சைதாப்பேட்டையில் வளர்ந்தேன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்தேன். 89ல் திருமணமானது. கணவர் ஒரு மருத்துவர். அவருக்கு மாலத்தீவில் அரசு மருத்துவர் வேலை கிடைத்ததால் அங்கே போனோம். அடுத்த வருடம் ஓய்வு பெறுகிறார். எனக்கு ஒரு பையன். டூரிஸம் மற்றும் இயற்கை விவசாயம் படித்திருக்கிறான்...’’ என்று அறிமுகப்படுத்திக்கொண்ட உமா ஓவியம் வரைய ஆரம்பித்த பின்னணியை விவரித்தார்:

‘‘முதலில் பொழுதுபோவதற்காக தாளில் ஓவியம் வரைந்தேன். ஒரு நாள் நான் தாளில் வரைவதைப் பார்த்த என் கணவர் கேன்வாசில் வரைவதைப் பற்றிச் சொல்லிக்கொடுத்தார். அவரும் ஒரு ஓவியர். சில கால பயிற்சிக்குப் பின்னே நானும் தொழில்முறை ஓவியர் போல வரைய கற்றுக்கொண்டேன்.
மாலத்தீவில் இருந்தபோது ஃபிரஞ்சு மொழி கற்க ஒரு நிறுவனத்துக்குச் செல்வேன். அங்கே நான் ஓவியம் வரைவதைப் பற்றி அறிந்த ஆசிரியர்கள், வரைவதை விட்டுவிடக்கூடாது என அறிவுறுத்தினார்கள். அதேபோல ஒரே சப்ஜெக்ட்டில் பல ஓவியங்களை வரைந்தால் காட்சிக்கு வைக்கவும் உறுதிகொடுத்தார்கள்.

இதன்படி நான் வரைந்த ரோஜாக்களைக் கண்காட்சியில் வைக்க ஏற்பாடு செய்தார்கள். ஆனால், அந்தக் கண்காட்சி பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை. பிறகு அந்த நிறுவனத்துக்கு வந்த ஒரு ஃபிரஞ்சு பெண்மணி பவளப்பாறைகள் பற்றிய ஒரு ஆவணப்படத்தை எடுத்து அதை திரையிட்டும் காட்டினார். அப்போதுதான் மாலத்தீவில் எந்த வீட்டு ஜன்னலில் இருந்து பார்த்தாலும் காணக்கிடைக்கும் அற்புதமான பவளப்பாறைகளை எப்படி தவறவிட்டோம் என்ற வருத்தம் மேலிட்டது. அன்றிலிருந்து பவளப்பாறைகளை வரைவதை வழக்கமாகக் கொண்டேன்...’’ என்கிற உமாவின் பவளப்பாறை ஓவியங்கள் எதார்த்தமாக இல்லை என்று ஒரு ரசிகர் சொல்லியதும், அதற்காக வெட்கப்பட்டு பவளப்பாறைகளை நேருக்கு நேராகப் பார்த்து ரசிக்கும் வரையில் ஓவியங்கள் வரைவதில்லை என்னும் முடிவுக்கு வந்திருக்கிறார்.

‘‘அவர் சொல்லியதும் எனக்கு இழிவாகப் போய்விட்டது. அதுவரை பவளப்பாறைகளை வெறும் நிழற்படங்களாகப் பார்த்துதான் வரைந்திருக்கிறேன் என்ற உண்மை உறைத்தது. இனி பவளப்பாறைகளை வரைய வேண்டும் என்றால் நேரடியாகப் பார்த்து வரைய கற்றுக்கொள்ளவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். மாலத்தீவுகளில் கரையை ஒட்டிய பகுதிகளில் உள்ள பவளப்பாறைகள் வீட்டிலிருந்தபடியே தெரியும். ஆனால், மேலும் பாறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால் ஆழ்கடலுக்குள் செல்லவேண்டும்.

பவளப்பாறைகளை நேரடியாகப் பார்க்காமல் வரைய மாட்டேன் என்று சபதமிட்டிருந்ததால் 45 வயதில் நீச்சல் கற்றுக்கொண்டேன். பிறகு டைவிங் கற்றேன். நீச்சலை பயமில்லாமல் கற்றுக்கொண்டால் டைவிங்கை இலகுவாகக் கற்றுக்கொள்ளலாம். ஆனால், கடலில் நீந்துவதற்கும் நீச்சல் குளங்களில் நீந்துவதற்கும் வித்தியாசம் உண்டு. கடலில் நீர் கனமாக இருக்கும். தவிர, அலை இருப்பதால் நீச்சல் கடினமாக இருக்கும். கடலில் நீந்த கற்றுக்கொண்டால் தண்ணீர் பயம் போய்விடும்....’’ என்கிற உமா டைவிங்குக்கான சான்றிதழ் படிப்பும் படித்திருக்கிறார்.

‘‘டைவிங் சான்றிதழ் படிப்பில் முதலில் 5 அடி, 10 அடி என்று பயிற்சி கொடுத்துவிட்டு கடைசியாகத்தான் ஆழ்கடலுக்குள் கூட்டிச் செல்வார்கள். கடைசி டைவிங்கின்போது கடலில் குதிக்க பயந்தேன். ஆனால், நீச்சல் பயமில்லாததால் சுதாரித்துக்கொண்டு குதித்தேன் இதில் 60அடி ஆழத்துக்குச் சென்றேன். டைவிங்கின்போது நம் முதுகில் 40 கிலோ ஆக்சிஜன் சிலிண்டர் இருக்கும். டைவிங் சூட் வேறு. மட்டுமல்ல, நீரின் மேல் வந்துவிடாமல் இருப்பதற்காக 4 கிலோ எடை கொண்ட இரும்பு நங்கூரமும் இருக்கும்.

இதுதான் நம்மை அந்த ஆழத்திலிருந்து மேலே வராமல் தடுக்கும் கருவி. அத்துடன் நம் கையில் கம்ப்யூட்டர் பொருத்தப்பட்ட ஒரு வாட்ச்சும் இருக்கும். எந்த திசையில் செல்கிறோம், சிலிண்டரில் எவ்வளவு ஆக்சிஜன் இருக்கிறது போன்ற கணக்கீடுகளை எல்லாம் இந்த கம்ப்யூட்டர் வாட்ச் நமக்கு கணித்து கொடுக்கும்...’’ என்கிற உமா பவளப்பாறைகளைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்:

‘‘பவளப்பாறைகளை விலங்கும் செடியும் சேர்ந்த ஒரு கலவை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், அதற்கு உயிர் உண்டு. கடலுக்கு ஒரு சுவர் போன்றவைஇவை. அதன் மேல் பகுதிதான் வளர்ச்சியுறும். அதுவும் வருடத்துக்கு ஒரு இன்ச்தான் வளரும். கீழ்ப்பகுதி கால்சியம் கார்பனேட் என்னும் சுண்ணாம்பு. இந்த சுண்ணாம்புதான் கெட்டியாகி கடலின் அடியாழத்தில் ஒரு சுவராக அமைகிறது. இது கடல் அரிப்புகளைத் தடுக்கும் ஆற்றலுடையது. முக்கியமாக அலைகளைத் தடுப்பதன் மூலம் இது நடக்கும்.

உதாரணமாக, 2004ல் சுனாமி வந்தபோது மாலத்தீவில் ஒரு தீவு மட்டுமே அதிகமாக பாதிக்கப்பட்டன. மற்ற தீவுகள் எல்லாம் இந்தப் பாறைகளால் தடுக்கப்பட்டன.அதேபோல மீன்களின் வீடு மற்றும் அவை முட்டை போடுவதும், குஞ்சுகளை வளர்த்தெடுப்பதும் இந்தப் பாறைகளில்தான் நடக்கும்.
மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உயிர் ஊட்டுவது இரத்தம் என்றால் இந்த பாறைகளுக்கு ஒருவகை பிசின்.

இதுதான் பாறைகள் வளர்வதற்கு உதவுகிறது. பாறைகள் அழிந்தால் மீன் இருக்காது...’’ என்று சொல்லும் உமா அவரைப் பற்றிய ஆவணப்படத்துக்காக நடந்த முயற்சிகளைக் கூறினார்.‘‘என்னைப் பற்றி தில்லி என்டிடிவி நிருபர் பிரியா கேள்விப்பட்டு தொடர்பு கொண்டார். நானே பவளப்பாறைகள் பற்றி ஆவணப்படம் ஒன்று எடுக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், நடக்கவில்லை.

சரி, வேறு ஒருவர் செய்கிறார் என்று அவருக்கு ஓகே சொன்னேன். அப்போதே கொடைக்கானலுக்கு வந்து செட்டிலாகிவிடும் யோசனையும் இருந்தது. 2017ல் கொடைக்கானலுக்குக் குடிவந்தோம்...’’ என்கிற உமா தமிழ்நாட்டில் பவளப்பாறைகளின் நிலை குறித்தும் பேசினார்:
‘‘இந்தப் படத்துக்காக தூத்துக்குடி, இராமேஸ்வரம், இராமநாதபுரம் என்று போனோம். தூத்துக்குடியில் பவளப்பாறைகள் இருந்தாலும் கடலில் சாக்கடை கலப்பால் பாறைகள் சிறப்பானதாக இல்லை.

தூத்துக்குடியில் டைவ் எல்லாம் செய்தேன். நீருக்கு அடியில் படம் பிடிக்கும் கேமரா எல்லாம் கொண்டுவந்து படம் பிடித்தார்கள். ஆனால், தூத்துக்குடியின் சாக்கடை கடலில் டைவ் செய்ததால் அடுத்து மூன்று நாளைக்கு காய்ச்சலில் படுத்தேன்.

அதேபோல இராமேஸ்வரம் பாறைகளும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் குளித்துவிட்டு எறியும் துணிகள், சோப்புகள் மற்றும் குப்பைகளால் கெட்டுக்கிடக்கிறது. இதில் ஓரளவு தப்பித்தது இராமநாதபுரம் பாறைகள்தான்...’’ என்கிற உமாவை தமிழர்கள் கண்டுகொள்ளவில்லை என்பதைவிட பவளப்பாறைகளைப் பற்றிய கரிசனம் தமிழர்களுக்கு வரவில்லையே என்பதுதான் வருத்துகிறது!

டி.ரஞ்சித்