ரத்த மகுடம்-90



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

சிந்தனை தடைப்பட தலையை மட்டும் திருப்பினார் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்.‘‘என்ன..?’’ என்பதற்கு அறிகுறியாக அவரது புருவங்கள் உயர்ந்தன.‘‘நமது போர் அமைச்சர் ஸ்ரீராமபுண்ய வல்லபரிடம் இருந்து செய்தி வந்திருக்கிறது...’’ காவலர் தலைவன் பயபக்தியுடன் தெரிவித்தான்.
அவன் கையில் எந்த ஓலையும் இல்லாததை விக்கிரமாதித்தர் கண்டுகொண்டார்: ‘‘வரச் சொல்...’’ உத்தரவுக்கு அடிபணிந்து அவரை வணங்கிவிட்டு வெளியேறினான் காவலர் தலைவன்.

மீண்டும் சாளரத்துக்கு வெளியே தன் பார்வையைத் திருப்பினார் சாளுக்கிய மன்னர். அவரால் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. நாட்டைப் பறிகொடுத்த பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மன், இன்னமும் மறைந்து திரிகிறார். பல்லவ நாட்டை மீட்பதற்கான எந்த நடவடிக்கையிலும் அவர் இறங்கவில்லை.அப்படியும் சொல்ல முடியாது.

படைகளை அவர் திரட்டி வருவதாக ஒற்றர்கள் தெரிவிக்கிறார்கள். ஆங்காங்கே பாசறைகள் அமைக்கப்பட்டும் வருகின்றன. சாளுக்கிய நாட்டைத் தாக்கவும் தன் படையின் ஒரு பிரிவை அனுப்பினார். அப்போரில் பல்லவ மன்னர் தோல்வியும் அடைந்தார்.

இவை அனைத்துமே சாளுக்கிய மன்னருக்கு விளையாட்டாகத் தெரிந்தது. பல்லவ மன்னரின் மனதில் என்னதான் இருக்கிறது..? எதற்காக இப்படி போக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்..? இந்த வினாதான் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரைக் குடைந்துகொண்டிருந்தது. இதில் ஏதோ செய்தி இருக்கிறது. குறிப்பாக சாளுக்கியர்களான தங்களுக்கு. அது என்ன..? பல்லவர்களின் உபதளபதியும் சோழ இளவரசனுமான கரிகாலன் எதற்காக காஞ்சிக்கு வந்தான்... இப்பொழுது எதற்காக மதுரைக்கு சென்றிருக்கிறான்..? காஞ்சியில் இருந்தபோது கடிகைக்கு ஏன் சென்றான்..?

அர்த்த சாஸ்திர ஓலைச்சுவடியில் சிவகாமி குறித்த மர்மம் இருப்பதாகச் சொல்லி அங்கு அவனை அனுப்பியதும், தான்தான்... ஆனால், உண்மையில் தன் வார்த்தைக்கு கட்டுப்பட்டுதான் கடிகைக்கு கரிகாலன் சென்றானா..? அர்த்த சாஸ்திர சுவடிகளை அவன் எடுத்ததாக வேளிர்களின் தலைவனாக தன்னால் ‘முடி’சூட்டப்பட்ட பாலகன் சொல்கிறான்... ஆனால், எடுத்த சுவடிகளை இப்பொழுதுவரை அவன் படிக்கவேயில்லை என்கிறாள் சிவகாமி.
என்ன நடக்கிறது... பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மனும் கரிகாலனும் என்ன நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்..? என்ன சூது இதற்குள் புதைந்திருக்கிறது..?

தொடரும் வினாக்களின் அடிவேரைக் காண சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் முற்பட்டபடி திரும்பினார்.
அதேநேரம் ராமபுண்ய வல்லபரிடம் இருந்து செய்தியைத் தாங்கியபடி மதுரையில் இருந்து வந்த வீரனும் அவரது அந்தரங்க அறைக்குள் நுழைந்தான். அவரை வணங்கினான்.‘‘செய்தி என்ன..?’’

‘‘பாண்டிய மன்னரை விரைவில் நம் பக்கம் இழுத்துவிடலாம் என போர் அமைச்சர் ராமபுண்ய வல்லபர் தெரிவித்தார்...’’
‘‘அதாவது இன்னமும் பாண்டிய மன்னர் பிடி கொடுக்கவில்லை... அப்படித்தானே..?’’

‘‘அப்படியில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக தங்களிடம் அவர் தெரிவிக்கச் சொன்னார்... நம் இளவரசர் விநயாதித்தர் தன் கடமையை சரிவர ஆற்றியிருப்பதாகவும், விரைவில் நல்ல செய்தி தங்களை வந்தடையும் என்றும் தெரிவித்தார்...’’
‘‘நல்லது... இப்போதைய என் மனநிலைக்கு இச்செய்தி ஆறுதல் அளிக்கிறது...’’
‘‘தங்களை உற்சாகப்படுத்தும் செய்தியும் இருக்கிறது மன்னா...’’

விக்கிரமாதித்தர் கேள்வியுடன் அவனைப் பார்த்தார். கணத்தில் அவர் முகம் பிரகாசமடைந்தது. உதட்டிலும் புன்முறுவல் பூத்தது. ‘‘சிவகாமி என்ன சொல்லி அனுப்பினாள்..?’’

வீரன் மீண்டும் அவரை வணங்கினான். ‘‘அதங்கோட்டாசான் இருக்கும் இடத்தை, தான் அறிந்துவிட்டதாக உங்களிடம் நம் ஒற்றர் படைத்தலைவி தெரிவிக்கச் சொன்னார்!’’

அதுவரை பிடிபடாமல் இருந்த ஆழம், துல்லியமாகத் தெரியத் தொடங்கியதும் வியப்பின் எல்லைக்குச் சென்றார் சாளுக்கிய
மன்னர் விக்கிரமாதித்தர். ‘‘அதங்கோட்டாசான்... அதங்கோட்டாசான்...’’ முணுமுணுத்தார். ‘‘இன்னமுமா அவர் உயிருடன் இருக்கிறார்..?’’
‘‘இல்லை மன்னா... அதங்கோட்டாசான் மறைந்து பல ஆண்டுகள் ஆகின்றன என்ற பேச்சும் அடிபடுகிறது...’’ நிதானமாகச் சொன்னார் பாண்டிய அமைச்சர்.

‘‘இதை நீங்கள் நம்புகிறீர்களா அமைச்சரே..?’’ மாறாத அமைதி
யுடன் கேட்டார் பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மர்.
‘‘அடிபடும் பேச்சைக் குறிப்பிட்டேன் மன்னா...’’
‘‘வதந்திகளின் ஊற்றே பேச்சுதானே..?’’
‘‘உண்மையின் பிறப்பிடமும் அதுதானே மன்னா...’’

வாய்விட்டுச் சிரித்தார் அரிகேசரி மாறவர்மர்:  ‘‘அதாவது அதங்கோட்டாசான் மறைந்துவிட்டார் என்கிறீர்கள்...’’
‘‘அப்படியும் ஒரு கோணம் இருக்கிறது என்கிறேன் மன்னா...’’
‘‘எனில், வேளிர்களின் தலைவனாக சாளுக்கிய மன்னரால் ‘முடி’சூட்டப்பட்ட பாலகன், தனது ரகசியப் படைக்கு அதங்கோட்டாசான்தான் வாள் பயிற்சி அளித்து வருகிறார் என்கிறானே..?’’
‘‘அதை முழுக்க நம்ப வேண்டாம் என்கிறேன் மன்னா...’’

‘‘அவன் சொல்வதையா..?’’
‘‘அவனையே!’’ நிதானத்தைக் கைவிடாமல் அதேநேரம் அழுத்தமாகச் சொன்னார் பாண்டிய அமைச்சர்.
பழுத்த பழமாக தன் வயதை ஒத்த அந்த முதியவரை உற்றுப் பார்த்தார் பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மர்: ‘‘சிவகாமி யார்... அவள் எந்தப் பக்கம் இருக்கிறாள்... என்ற குழப்பம் சாளுக்கியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையில் நிலவுவதுபோல் பாண்டியர்கள் பக்கமும் ஒரு நிலையாமை சர்ச்சை என்னும் பெயரில் உலாவ வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா அமைச்சரே..?’’
‘‘அந்தப் பார்வையுடனும் அணுகுவது நல்லது என்கிறேன் மன்னா...’’

‘‘சற்று விளக்க முடியுமா..?’’
‘‘அறிந்த தங்களுக்கு அடியேன் அறிவிக்க வேண்டுமா..? சோதிக்காதீர்கள் மன்னா... வேளிர்கள் என எவருமே இன்று இல்லை என்பதும் அக்குலம் பாண்டிய பல்லவ அரச குலத்துடனும் இரு நாட்டு படைகளுடனும் இரண்டறக் கலந்துவிட்டன என்பதும் தங்களுக்குத் தெரியாதா..? என்றோ எப்பொழுதோ பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த வேளிர் இனம் மீண்டும் இன்று இப்பொழுது உயிர்பெற்று எழும் என்பது நம்பும்படியாகவா இருக்கிறது..?’’

‘‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் அதை நம்புகிறாரே..?’’
‘‘அவரை அப்படி நம்ப வைத்தவர்கள் பல்லவர்களாகவும் இருக்கலாம் அல்லவா..?’’
‘‘அமைச்சரே..!’’

‘‘மன்னா! உங்கள் ஊகம் சரி! கரிகாலனால் ஏற்பாடு செய்யப்பட்டவன்தான் அந்த பாலகன்! கரிகாலன் சொல்படியே சாளுக்கிய மன்னரைச் சந்தித்து வேளிர்களின் தலைவனாக அவன் மாறியிருக்கிறான்! காஞ்சியை பல்லவர்கள் ஆண்டபோது அங்குள்ள கடிகையில் அப்பாலகன் பயிலவேயில்லை என்பதும், சாளுக்கியர்களின் வசம் காஞ்சி சென்றபிறகே அந்தப் பாலகன் கடிகையில் மாணவனாக சேர்ந்தான் என்பதும் உலகம் அறிந்த செய்தியல்லவா!’’

‘‘அந்த பாலகனை கடிகையில் சேர்த்தது சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர்தான் என்பதும் உண்மைதானே..? அமைச்சரே... பல்லவர்களையும் பாண்டியர்களையும் வீழ்த்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆள சாளுக்கியர்கள் நினைக்கிறார்கள். போலவே பல்லவர்களும் பாண்டியர்களான நாமும் நினைக்கிறோம். இதற்காக மூவருமே மூவருடனும் நட்பும் பாராட்டுகிறோம்... பகைமையையும் வெளிப்படுத்துகிறோம்...’’
சட்டென பாண்டிய அமைச்சர் தன் மன்னரை வணங்கினார்: ‘‘அடியேன் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் மன்னா..?’’

‘‘மதுரை காவலைப் பலப்படுத்துங்கள். நகரை விட்டு வெளியேறும் மக்கள் அனைவரும் அத்தாட்சியை வாயிலில் காண்பிக்க வேண்டும் என வீரர்களிடம் சொல்லுங்கள்...’’
‘‘எதற்காக மன்னா..?’’
‘‘நமக்கே தெரியாமல் பல்லவப் படை நம் மண்ணில் பயிற்சி எடுத்து வருகிறது அமைச்சரே! அதங்கோட்டாசான் அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்!’’
‘‘மன்னா...’’

‘‘அதங்கோட்டாசான் இறக்கவில்லை! பிறப்பில் இருந்தே அவரை அறிந்தவன் நான்... அப்படியிருக்க அவர் மறைவு எனக்குத் தெரியாமலா போய்விடும்?!’’

கண்விழித்த சிவகாமி, நிலவறையில், தான் இருப்பதை உணர்ந்தாள். மயக்கத்தின் பிடியில் சில நாழிகை, தான் இருந்ததை உணர அவளுக்கு அதிக கணம் பிடிக்கவில்லை. சுவர் எழுந்து தன்னை இழுத்த நபர் கண்டிப்பாக கரிகாலன் இல்லை என்பதை தொடுகையில் இருந்தே அறிந்துவிட்ட அவள், தன்னைக் காப்பாற்றியதும் மயக்கமடைய வைத்து தன்னை உறங்க வைத்ததும் யாராக இருக்கும் என யோசித்தபடியே சுற்றிலும் பார்த்தாள்.

கண்ட காட்சியில் அவள் நயனங்கள் விரிந்தன.அகண்ட மீசை கொண்ட முதியவர் ஒருவரின் மேற்பார்வையில் கட்டிளம் காளைகள் வாள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்!
 
(தொடரும்)

கே.என்.சிவராமன் ஓவியம்: ஸ்யாம்