முழு மஹாபாரதத்தையும் தமிழில் மொழிபெயர்த்த தமிழன்!



மகாபாரதத்தை தமிழில் முழுமையாக மொழிபெயர்த்திருக்கிறார் அருட்செல்வப் பேரரசன். வெறுமனே இலக்கியப் பெருமிதம் பேசித் திரியாமல் ஏழு வருடங்களாக இரவு பகல் பாராமல் இந்த அருட்பணியைச் செய்து முடித்திருக்கிறார்.  இத்தகைய மொழிபெயர்ப்பை செய்யத் தூண்டியது எது?
வீடுதான். அப்பாவும் அம்மாவும் சதா மகாபாரதம் குறித்து பேசிய வண்ணம் இருப்பார்கள். அது கிட்டத்தட்ட விவாதம்தான். கேட்டுக் கேட்டு அதில் ஆர்வம் வந்துவிட்டது. அப்பாவும் அம்மாவும் தமிழ் ஆசிரியர்கள். திட்டுவதும் அன்பு காட்டுவதும் கூட மகாபாரதத்தை மேற்கோள் காட்டித்தான். அப்பொழுதுதான் ராஜாஜியின் ‘வியாசர் விருந்து’ புத்தகம் எனக்கு படிக்கக் கிடைத்தது. படித்தவுடன் அப்பா, அம்மா எழுப்பும் விவாதங்களில் எனக்கு கூடுதல் கேள்விகளும் எண்ணங்களும் முளைத்தன.

பிறகு கிசாரி மோகன் கங்குலியின் ஆங்கில மகாபாரதத்தை முழுமையாகப் படித்து முடித்தபிறகு அது குறித்த சில விவாதங்களில் சுலபமாக ஈடுபட முடிந்தது.சமயங்களில் எனக்கு சாதகமாக இருந்த பகுதிகளை உடனடியாக மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறேன். யாரும் அதை எளிதில் ஏற்றுக்கொண்டதில்லை.

தமிழில் முழுமையான மகாபாரதம் இல்லாததே இப்படி தவறான கருத்துக்கள் உருவாக வாய்ப்பாக இருக்கிறது. நம் பிள்ளைகளுக்கு யார் இவற்றை சொல்லிக்கொடுக்கப் போகிறார்கள்? ஏன் நாமே ஒவ்வொரு அத்தியாயமாக மொழி பெயர்க்கக் கூடாது என்ற எண்ணத்தில் விளையாட்டாகத் தொடங்கியதே இந்தப் பணி.இருந்தும் இவ்வளவு பெரும் பணியைச் செய்து முடிப்பது சாதாரணமானது இல்லை…

என் நண்பர் ஜெயவேலன் எப்பொழுதும் உற்சாகப்படுத்தியபடியே இருந்தார். ‘இணையத்தில் அனைவரும் படிக்கும் வண்ணம் இருப்பது நல்லது. தொடங்கியதை செய்து முடித்துவிடுங்கள்’ என்றார். அவர்தான் வலைத்தளத்தை நிர்வகிப்பது என உதவிக்கொண்டேயிருக்கிறார்.

மொழிபெயர்ப்பின் தொடக்கத்திலேயே எழுத்தாளர் ஜெயமோகன் அறிமுகம் செய்து வந்தார். குறைந்த பார்வையாளர்களைக் கொண்டிருந்த மகாபாரதம் வலைப்பூ அதன்பிறகு அடுத்தகட்ட வளர்ச்சி பெற்றது. அவரின் ‘வெண்முரசு’ நாவலின் வெளியீட்டு விழாவில் என்னையும் கூப்பிட்டு கௌரவித்தார்.

எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, பா.ராகவன், பி.ஏ.கிருஷ்ணன் போன்றவர்கள் இந்த வலைப்பூ பற்றி முகநூலில் எழுதி வந்திருக்கிறார்கள். இவர்களைப் பற்றி குறிப்பிடாமல் எனது பணி நிறைவடையாது.

இதில் நீங்கள் பட்ட சிரமங்கள் என்ன?

இதில் சில பகுதிகள் கதை நகராத பகுதிகள். அதில் தத்துவ விசாரணைகளும் அதன் விளக்கங்களும் நிறைந்திருக்கும். அதில் பொருள் உணர்ந்துகொள்வது கடினமான பணி. சமயங்களில் கங்குலியின் ஆங்கிலம் கடுமை காட்டும். அடுத்தாற்போல் கும்பகோணம் மகாபாரதப் பதிப்பின் மணிப்பிரவாள நடையும் மூச்சுத் திணறல் ஏற்படுத்தும். அப்பொழுது ஆங்கில அகராதியை வைத்துக் கொண்டு சொல் சொல்லாகப் பிரித்து ஆய்வு செய்து பொருள் கொள்ள வேண்டும்.

மேலும் இவை குறித்த சில நம்பிக்கைகள் உண்டு. விராட பர்வம் படித்தால் மழை பெய்யும் என்பார்கள். விராட பர்வத்தை முடித்தபோது கோடையாக இருந்தும் மழை பெய்தது. ஆங்கில மொழிபெயர்ப்பை முடித்த பிரதாப் சந்திர ராய், அநு சாஸனம் முடிக்கும் தருவாயில் இறந்து போனார். சரியாக அநு சாஸனம் முடிக்கும் தருவாயில் என் தந்தையும் இறந்தார்.

கொஞ்ச நாள் இந்த மொழிபெயர்ப்பு நின்றேவிட்டது. மூடநம்பிக்கை என்று கொண்டதெல்லாம் நடைமுறையில் நடக்கும் போது ஏற்படும் தடுமாற்றம் சாதாரணமானதல்ல. எதுவும் நம் கையில் இல்லை என்பது இறுதியில் தெரிகிறது. இந்த முழு மகாபாரதத்தைப் பொறுத்து அனைத்தும் என் ஒருவன் கையிலேயே நடந்தது. எவரும் படிக்கும் வகையில் இணையத்தில் கிடைக்கிறது.
மகாபாரதத்தில் உங்களைக் கவர்ந்தது எது?

துரியோதனன், கர்ணன், சகுனி போன்ற பாத்திரங்களின் தன்மை கொண்டவர்களை அன்றாட வாழ்க்கையில் சந்திப்பது சுலபம்தான். ஆனால், பஞ்ச பாண்டவர்கள் போன்ற ஆளுமைகளைக் காண்பதரிது. என்னிடம் உள்ள குணங்களை வைத்து துரியோதனன், கர்ணன், சகுனி, சிசுபாலன் போன்ற பாத்திரங்களுடன் பொருத்திப் பார்க்க முடிந்தது. ஆனால், பாண்டவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கத் துணிந்ததில்லை.

யுதிஷ்டிரன் அறமே வடிவமானவன். நல்லோரில் ஈடு இணை இல்லாதவன். பீமன் பலம் நிறைந்தவன். வலுவானவர்களில் ஒப்பற்றவன். அர்ஜுனன் வாழ்நாள் முழுவதும் பயிற்சி, ஆயுதங்கள் தேடல் என அலைந்தவன். நகுலன் பேரழகன். கால்நடை வளர்ப்பதில் ஒப்பற்றவன். சகாதேவன் சாத்திர ஞானம் மிக்கவன். அறிவில் சிறந்தவன்.

இவர்கள் அனைத்துக் காரியங்களிலும் முரண்பட்டாலும் அண்ணன் தலைமையில் ஒற்றுமை காக்கின்றனர். கௌரவர் களுடன் அன்புடனே பாண்டவர்கள் இருந்தனர். காட்டுக்கு துரத்தப்பட்ட பிறகும் அவர்கள் கந்தர்வனிடம் சிக்கிக்கொண்ட துரியோதனனை மீட்கிறார்கள்.

இப்படி உடன்பிறந்தோர் ஒற்றுமை, குடும்ப ஒற்றுமை, குல ஒற்றுமை அனைத்திலும் பாண்டவர்கள் ஒற்றுமையைப் பேணுகிறார்கள். இது என்னைக் கவர்ந்துவிட்டது. வேற்றுமையில் ஒற்றுமை காண விரும்பும் ஒவ்வொருவரும் பாரதம் படிக்க வேண்டும்.பணியின் நிறைவில் உங்கள் மனம் நிறைந்திருக்கிறதா?

நான் கணினி வரைகலைத் தொழில் செய்து வருவதால் இரவு ஒன்பது மணி வரை அதிலேயே இருப்பேன். பிறகு இரவு 11 முதல் 2 மணி வரை மொழிபெயர்ப்புக்கு நேரம் ஒதுக்கினேன். ஏறக்குறைய 86,000 சுலோகங்கள், 2116 அத்தியாயங்கள், 100 உப பர்வங்கள், 18 பர்வங்களைக் கொண்ட மொழிபெயர்ப்புப் பணி இது. ஏழு வருடங்கள் எடுத்துக் கொண்டது. இது 16000 பக்கங்கள் கொண்ட மொழிபெயர்ப்பு.

ஜெயமோகன் இதோ மொழிபெயர்ப்பு நிறைவடையும் நேரத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். கோழிக்குஞ்சை பாதுகாக்கும் தாய்க்கோழி மாதிரி ஜெயமோகன் என்னை அரவணைக்கிறார். ஜெயமோகனும், ஜெயவேலனும் ஆதார மூங்கில்களாக இருக்கின்றனர்.

பல மகாபாரதங்கள் இருந்தாலும் ம.வீ.ராமானுஜாச்சாரியாரின் கும்பகோணம் பதிப்பு முழுமையானது. நான் செய்திருப்பது கங்குலியின் மஹாபாரதத்தைச் சேர்ந்தது. குறிப்பெடுக்கவும் ஆய்வு மேற்கொள்ளவும் தற்கால எளிய மொழிநடையில் செய்திருக்கிறேன்.

மகாபாரதத்தின் தொடர்ச்சியாக ‘ஹரிவம்சம்’ மொழிபெயர்க்கலாம் என்றிருக்கிறேன். முழு மகாபாரதம் இன்னும் அச்சு வடிவில் புத்தகங்களாக வெளிவரவில்லை. அதற்கான முயற்சிகளிலும் இனி ஈடுபட வேண்டும். அந்தக் காலத்தில் கணினி கூட இல்லாமல் நூலகம் நூலகமாக அலைந்து திரிந்த முன்னோர்களை வணங்குகிறேன். அவர்கள் அனுபவித்த இன்னல்களை கொஞ்சம் கூட அனுபவிக்காத எனக்கு அவர்களின் பணியினை நினைக்கும் போது அவர்கள் கடவுளாகத் தோன்றுகிறார்கள்!

நா.கதிர்வேலன்

ஆ.வின்சென்ட் பால்