பத்து நிமிடங்கள்
நேரில் பார்க்கும்வரை யாராலும் நிச்சயம் நம்ப முடியாது.நான்காம் வகுப்பு படிக்கும் ஹரியும் ஒன்றாம் வகுப்பு படிக்கும் தீபிகாவும் சேர்ந்து ஆடும் தத்ரூபமான அந்த நடனத்தை எவ்வளவுதான் விளக்கிச் சொன்னாலும் நேரில் பார்க்காமல் நம்புவது கடினம்.
எங்கே எப்போது பார்த்தார்கள் என்று தெரியவில்லை. நாக்கை வெளியே நீட்டி பற்களால் கடித்தபடி ஆடும் அந்தக் குத்தாட்டத்தை அவர்கள் வீடிருந்த தெருவில் வைத்துப் பார்த்திருக்கலாம். எப்படியும் மாதத்திற்கொரு சவ ஊர்வலம் தெருவில் போகும். ஆனால், இவ்வளவு உன்னிப்பாக கவனித்து அப்படியே ஆட எப்படி முடிந்தது என்றுதான் தெரியவில்லை.
இத்தனைக்கும் நாங்கள் குடியிருந்தது முதல் மாடியில்.இதற்கு முன்னால் இருந்த வீட்டில் இந்த பிரச்னை இல்லை. அங்கிருந்தது தண்ணீர் பிரச்னை. கூடவே காய்கறி, மளிகை எது வாங்க வேண்டுமென்றாலும் கணிசமான தூரம் போய்வர வேண்டும்.இந்த வீட்டிற்கு வாடகை கொஞ்சம் அதிகம் என்றாலும் எல்லாமே பக்கத்தில் இருந்தது. பக்கம் என்றால் வெறும் பத்து நிமிட நடையில் இருந்தது.
காய்கறி மார்க்கெட், மளிகை சாமான்கள் வாங்க சூப்பர் மார்க்கெட், பிரதி ஞாயிறு கோழி வாங்க இறைச்சி கடை எல்லாமே பக்கத்தில் இருந்தன, முடிவெட்டும் சலூன் உட்பட.எல்லாவற்றிலும் முக்கியமானது ஹரியும் தீபிகாவும் படிக்கும் பள்ளியும் பக்கத்திலேயே, வெறும் ஐந்து நிமிட நடையில், போய்ச் சேர்ந்து விடும் வகையில் அமைந்ததுதான். ஒன்பது மணி பள்ளிக்கு எட்டு ஐம்பதுக்கு வீட்டைவிட்டு கிளம்பினால் போதும்.
ஒரு நாளின் பெரும் படபடப்பான நேரம் காலையில் பள்ளிப்பேருந்தில் பிள்ளைகளை ஏற்றிவிடும் தருணம்தான். அந்த படபடப்பு அறவே இல்லாமல் போனதில் மனைவிக்கு பெரும் ஆறுதல்.டிபன் பாக்ஸில் சாப்பாடு, பாட்டிலில் தண்ணீர் நிரப்பி, ஸ்கூல் பாகில் வைத்துவிட்டால் போதும். அவர்களாகவே நடந்து பள்ளிக்கு போய்விடுவார்கள். சில நாட்களில் அவர்களோடு நானும் ஒரு நடை பள்ளி வரை போய் வருவேன். எல்லாவகையிலும் வசதியான வீடு. ஒரே குறை இந்த சவ ஊர்வலம்.
அதிகபட்சம் ஐந்து நிமிடங்களில் எங்கள் வீட்டைக் கடந்து போய்விடும். அது ஒரு பிரச்னையாகவே தோன்றவில்லை. அண்ணனும் தங்கையும் சேர்ந்து ஆடிய அந்தக் குத்தாட்டத்தைப் பார்க்கும் வரை.அது ஒரு ஞாயிற்றுக்கிழமை.மனைவி சமையல் அறையில் வேலையாக இருந்தாள். நான் படுக்கை அறையில் நாவல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது மெலிதான சத்தத்தோடு ஆரம்பித்த சாவு மேளத்தின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து பெரிதாகிக் கொண்டிருந்தது. எப்போதும் போல் இன்னொரு சவ ஊர்வலம் என்று நினைத்தபடியே படித்துக் கொண்டிருந்தவன் காதில் வீட்டு ஹாலில் “தொம்... தொம்...” என்று குதிக்கும் சப்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தபோது, அப்படி ஓர் ஆழ்ந்த நிலையில் ஹரியும் தீபிகாவும் ஆடிக்கொண்டிருந்தனர். அச்சு அசலாய் அப்படியே சவ ஊர்வல குத்தாட்டம்.
சமையல் அறையில் இருந்து ஓடி வந்த மனைவி ‘‘ஏய்… என்ன இது..?’’ என்று போட்ட சப்தம் கூட காதில் விழாமல் சுத்தி சுத்தி ஆடிக் கொண்டிருந்தனர்.கிட்ட நெருங்கி, ஆடிக் கொண்டிருந்த ஹரியைப் பிடித்து நிறுத்தி ‘‘டேய் என்னடா பண்றீங்க..?’’ என்றேன். அப்பவும் லேசாக ஆடியபடியே ‘‘சூப்பர் மியூசிக்பா...’’ என்றவன் கன்னத்தில் அறை விட்டேன்.
‘‘போ... போய்ப் படி... இல்ல வேற ஏதாவது பண்ணு...’’ என்று நான் போட்ட சத்தத்தில் இரண்டு பேரும் சோபாவில் ஒரு மூலையில் போய் உட்கார்ந்தனர்.இனிமேல் இப்படி நடக்காது என்று நினைத்துக்கொண்டிருந்த நினைப்பில் அடுத்த வாரமே மண் விழுந்தது. இந்த முறை நான் அலுவலகத்தில் முக்கியமான மீட்டிங்கில் இருந்தேன்.
அலைபேசியில் மனைவி. அழைப்பைத் துண்டித்தேன். மறுபடி ஒலித்தது. ஏதாவது மிக முக்கியம் என்றால் மட்டுமே இரண்டாவது முறை அழைப்பாள். மீட்டிங் அறையை விட்டு வெளியே வந்து மனைவியை அழைத்தேன்.‘‘என்னாச்சு... ஏதாவது ரொம்ப அவசரமா...? ஒரு மீட்டிங்ல இருக்கேன்...’’ ‘‘மறுபடி ரெண்டும் அதே மாதிரி ஆடிட்டிருக்குங்க...’’“சரி சாயந்திரம் பேசலாம்…” அழைப்பைத் துண்டித்துவிட்டு மீட்டிங் அறைக்குள் போனவன் மனமெல்லாம் அந்த குத்தாட்டமே நிறைந்திருந்தது.மாலை வீட்டுக்குள் நுழைந்ததுமே மனைவி ஆரம்பித்தாள். ‘‘பேசாம வேறு வீடு பார்த்துப் போயிடுவோமா?’’
‘‘இரு... பட்டுனு ஒரு முடிவுக்கு வராத. கொஞ்சம் யோசிச்சு செய்வோம். நினைச்சுப் பாரு... இவ்ளோ வசதியோட இன்னொரு வீடு அமையுமா..?” என்றேன்.“அதுக்கு... இதுங்க ரெண்டும் இப்படி...”“இரு... இரு… கொஞ்சம் யோசிக்க விடு...” டவலோடு பாத்ரூமுக்குள் போனேன். அடுத்த இரண்டு மாதங்கள் யாருமே இறக்காதது பெரும் ஆறுதலாக இருந்தது.வீடு மாற்றும் பேச்சும் அப்படியே அமுங்கிப் போனது.மறுநாள் தீபாவளி. “பட்டாசு வாங்கிட்டு வரலாமாடா?” என்று ஹரியை அழைத்தேன்.“நான் வரல… நீங்களே ஏதாவது வாங்கிட்டு வாங்க...” என்ற ஹரி அலைபேசியில் விட்ட இடத்திலிருந்து விளையாட்டை தொடர்ந்தான்.
“நான் வரேன்பா...” என்ற மகளோடு, வீட்டைவிட்டு வெளியே வந்து, டூ வீலரை எடுத்தேன்.டூ வீலரின் முன்னால் அவள் உட்கார்ந்து கொள்ள வண்டியை ஆன் செய்தபோது அந்தச் சத்தம் வந்தது. பழக்கமான சத்தம்.யாரோ ஒருத்தரின் இறுதி ஊர்வலம் தெருமுனையில் திரும்பி எங்கள் வீட்டுப் பக்கம் வந்து கொண்டிருந்தது.
அலைபேசி விளையாட்டில் இருக்கும்போது நாலைந்து முறை கூப்பிட்டாலும் அசைந்து கொடுக்காத ஹரி, வெளியே வந்து மாடியில் இருந்தபடியே ஊர்வலத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.நான் தீபிகாவையும் ஹரியையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஊர்வலத்தையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்த தீபிகா என் பக்கம் தலையை உயர்த்தி ‘‘அப்பா... ஒரு நாள் உங்களையும் இப்படித்தானே தூக்கிட்டுப் போவாங்க?’’ என்றாள்.
ஒன்றாம் வகுப்பு படிக்கும் பெண்ணிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை கொஞ்சமும் எதிர்பார்க்காததால் அப்படியே தூக்கி வாரிப் போட்டது எனக்கு. என்ன சொல்வது என்று தெரியாமல் ‘‘தெரியலேம்மா..’’ என்றேன்.சொல்லிவிட்டு யோசித்தபோது ஒன்று தோன்றியது. இந்த வீட்டிலிருந்து சுடுகாடு கூட பத்து நிமிட நடை தூரம்தான்.
நோ வருத்தம்!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி + சிவா காம்பினேஷன் படப்பிடிப்பில் பிசியாகிவிட்டார் கீர்த்தி சுரேஷ். டோலிவுட்டிலும் 3 படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் கீர்த்தி. இதற்கிடையே கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் ‘பென்குயின்’ படத்தையும் முடித்துக்கொடுத்து, ரிலீஸுக்கு காத்திருக்கிறார். ஸோ, பாலிவுட் வாய்ப்பு நழுவியதில் கீர்த்திக்கு வருத்தம் எதுவும் இல்லை என்கிறது அவரது வட்டாரம்!
கிளுகிளுப்பில் பால்!
இந்தியில் அனுராக் காஷ்யப் இயக்கிய ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ வெப் சீரீஸ் இப்போது தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது. அதில் அமலாபால் அசத்தவிருக்கிறார். கிளுகிளுக்க வைக்கும் சீரீஸ் என்பதால், செம ஃபிட் லுக்கில் ஜொலிக்க ஃபிட்னஸில் கூடுதல் கவனம் செலுத்துகிறார் அமலாபால். இதற்காக மும்பையில் உள்ள எஃப்.45 ஜிம்மில் (ரகுல் ப்ரீத் சிங்கின் ஃபேவரிட் ஜிம்) பேன்ட் லிஃப்ட், வெயிட் லிஃப்ட்டிங்கில் வியர்க்க விறுவிறுக்கிறது பேபி!
ஸ்லிம்சிகா!
ராப்பகலாக ஜிம்மில் இழை இழையென இழைத்ததில், படு ஸ்லிம்மாகி விட்டார் ஹன்சிகா. இப்போது சிங்கப்பூரில் ரிலாக்ஸ் ஆகிக் கொண்டிருக்கும் ஹன்சி, அங்குள்ள யுனிவர்சல் ஸ்டூடியோவிற்கும் விசிட் அடித்து மகிழ்ந்துள்ளார்.
செல்வராஜ் ஜெகதீசன்
|