டாக்டர் த்ரிஷா!



த்ரிஷாவின் 60வது படம் என்ற சிறப்பை பெறுகிறது ‘பரமபதம் விளையாட்டு’. இப்படத்தின் தயாரிப்பாளர் கே.திருஞானம், இப்படத்தை இயக்கி அசத்தியிருக்கிறார். ‘‘நான் இயக்குநர் ஆனதே, எதிர்பாராமல் நிகழ்ந்ததுதான். பூர்வீகம், தஞ்சாவூர். என் நண்பர் ஒருத்தர் படம் பண்ணிட்டு இருந்தார். அவரோட படத்துக்கு ஃபைனான்ஸ் பண்ண சென்னைக்கு வந்தேன். அதே வேகத்துல அந்தப் படத்துக்கும் தயாரிப்பாளரானேன். சூழல் அப்படி.
வந்த புதுசுல சினிமா பண்றது ஜாலியான விஷயம் போலிருக்குனு நினைச்சிருக்கேன். அப்புறம், படம் ரிலீஸ் ஆனதும் உண்மை என்னான்னு உணர்ந்தேன். ஏன்னா, போட்ட காசு எதுவுமே கைக்கு திரும்பி வரல!

ஆனாலும் நம்பிக்கை இழக்கல. சினிமாவை சின்ஸியரா பண்ணியிருந்தா, தப்பிச்சிருக்கலாம்னு உணர்ந்தேன். சின்ன வயசுல இருந்து படங்கள் பார்த்து வளர்ந்த அனுபவத்துல, எனக்கும் ஒரு கதை தோணுச்சு. புரொட்யூசர் கவுன்சிலில் இருந்த என் நண்பர்கள்கிட்ட கதையை சொன்னேன்.

பொதுவாகவே நான் ஒரு கதை சொல்ல ஆரம்பிச்சா, கேட்கறவங்களுக்கு அந்த சீன் கண் முன்னாடி வந்து போகும். அப்படி ஒரு விஷுவல் எஃபெக்ட்டோட கதை சொல்வேன். என் ப்ளஸ்ஸும் அதான்.

நண்பர்கள் என் கதையை பாராட்டினாங்க. தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் சார் உட்பட, கவுன்சில்ல உள்ள நண்பர்கள் எல்லாருமே படம் பார்த்துட்டாங்க. ‘உங்ககிட்ட இப்படி ஒரு மேக்கிங் எதிர்பார்க்கல’னு பாராட்டி என்னை என்கரேஜ் பண்ணினாங்க...’’ ரிலீஸ் பரபரப்பிலும் ஒரு டன் உற்சாகத்தில் தெறிக்கிறார் கே.திருஞானம். டிரெய்லர்ல பரபரப்பான அரசியல் சம்பவம் ஒண்ணு இருக்கே..?

இந்த ‘பரமபதம் விளையாட்டு’ பொலிடிகல் ஆக்‌ஷன் த்ரில்லர். டிரெய்லர்ல உள்ள அரசியல் விஷயம், படத்துல பத்து நிமிஷங்கள் மட்டுமே வரும். ஆனா, கதை வேற வேற விஷயங்கள்ல த்ரில்லரா பயணிக்கும். த்ரிஷா இதுல டாக்டரா வர்றாங்க. எதிர்பாராமல் புலிவாலைப் பிடிச்சிடறாங்க. அதிலிருந்து எப்படி தப்பிக்கிறாங்கனு பரபரப்பா சொல்லியிருக்கோம்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இந்தக் கதைல த்ரிஷா தவிர நந்தா, ரிச்சர்ட் (இப்ப பெயரை ரிஷிரிச் என்று மாற்றியிருக்கிறாராம்), ஏ.எல்.அழகப்பன், வேல ராமமூர்த்தி, விஜயவர்மா, பேபி மானஸினு பலரும் நடிச்சிருக்காங்க.டெக்னீஷியன் டீமும் பக்காவா அமைஞ்சுடுச்சு. ஆர்.டி.ராஜசேகரோட உதவியாளர் ஜே.டி., ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். ‘டிக் டிக் டிக்’ பிரதீப் எடிட்டிங் படத்தின் விறுவிறுப்பை கூட்டியிருக்கு. இசை அம்ரீஷ் கணேஷ். இதுவரை அவர் ஒரு டஜன் படங்களுக்கு இசையமைச்சிருந்தாலும், ‘இதுதான் என் முதல் படம்’னு சொல்லி சந்தோஷப்பட்டார். அந்தளவுக்கு பின்னணி இசையில் அவர் கவனம் செலுத்தியிருக்கார்.

ஆக்‌ஷன் போர்ஷனை ஏற்காடு, பொழிச்சலூர் ஃபாரஸ்ட், தாம்பரம் தாண்டி ஒரு ஃபாரஸ்ட் ஏரியானு பல இடங்கள்ல ஷூட் பண்ணியிருக்கோம். ஸ்டன்னர் சாம், டேன்ஜர் அணியின் ஃபைட்ஸ்ல த்ரிஷா ஆக்‌ஷன் குயினாவே மாறிட்டாங்க.இயக்குநரா யார்கிட்டயும் ஒர்க் பண்ணாத உங்கள த்ரிஷா எப்படி நம்பினாங்க?த்ரிஷா எனக்கு அறிமுகமில்ல. அப்பாயின்ட்மென்ட் வாங்கி அவங்ககிட்ட கதை சொன்னேன். மேக்கிங் எப்படி இருக்கும்னு விளக்கினேன். இம்ப்ரஸ் ஆகிட்டாங்க. உடனே ஷூட்டிங் கிளம்பிட்டோம்.

முதல் ரெண்டுநாள் நம்பிக்கையில்லாமதான் இருந்தாங்க. அப்புறம், ஒர்க்கை பார்த்துட்டு, ஹேப்பியாகிட்டாங்க. இதுல வேற ஒரு த்ரிஷாவை பார்க்கப் போறீங்க. சில சீன்ஸ் ஷூட் பண்ணும்போது, ஒன்மோர் போனா சிறப்பா வரும்னு தோணும். அதை த்ரிஷாகிட்ட சொல்லலாமா... சொன்னா பண்ணுவாங்களானு ஒரு அறிமுக இயக்குநரா எனக்குள் தயக்கம் இருந்தது.

ஆனா, என் முகத்தைப் பார்த்தே, ‘ஒன்மோர் போனா பெட்டரா வருமா!’னு அவங்களே கேட்பாங்க!ஒருநாள் ஷூட்டப்ப கேஷுவலா, ‘இது என் அறுபதாவது படம்’னு சொல்லி சந்தோஷப்பட்டாங்க. பொழிச்சலூர் காட்டுல நைட் ஷூட். ஒரு கேங் அவங்க காலை கட்டிப் போட்டு வெறும்தரைல இழுத்துட்டு போகணும். அந்த கரடுமுரடான காட்டுல பூச்சிக்கடி, கொசுக்கடினு எதையும் பொருட்படுத்தாம நடிச்சுக் கொடுத்தாங்க. படத்தோட செகண்ட் ஆஃப்ல ஒரு மர்டர் போர்ஷன் இருக்கு. கண்டிப்பா அந்த ப்ளாக் பேசப்படும்.

தயாரிப்பாளர் டூ இயக்குநர்... டிராவல் எப்படி இருக்கு?
ஹேப்பிதான். பணமிருந்தா தயாரிப்பாளராகலாம். ஆனா, டைரக்‌ஷன் அப்படியில்ல. இன்ச் பை இன்ச் வேலை இருக்கு. ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி... போயிட்டு வந்த பின்னாடி... பப்ளிசிட்டி, ரிலீஸ்னு ஏகப்பட்ட வேலை இருக்கு.

ஆனா, இது நானே ஆசைப்பட்ட துறை. ஸோ, இஷ்டப்பட்டு ஒர்க் பண்ணியிருக்கேன். நந்தா, ரிஷிரிச்சுக்கு பதிலா, ரெண்டு பெரிய ஹீரோக்கள் இந்தக் கதைல நடிக்க வேண்டியது. அவங்க ஒரு விஷயம் சொன்னாங்க. ‘இதுல நாங்க நடிச்சா, எங்க இமேஜுக்கான ஃபைட்ஸ் வைக்க வேண்டியிருக்கும்.

கதையை மாற்றம் பண்ண வேண்டியிருக்கும். அதனால நாங்க நடிக்கலை... இது த்ரிஷாவுக்கு பொருந்தற கதையா வந்தாதான் படம் நிற்கும்’னு சொன்னாங்க!அடுத்தும் டைரக்‌ஷன்தான். ரெண்டு ஹீரோக்கள்கிட்ட கதை சொல்லியிருக்கேன். ஏப்ரல்ல ஷூட் போறதா ப்ளான். தொடர்ந்து இயக்குவேன்.

மை.பாரதிராஜா