நான்...சுபா
Congratulations..!
இந்த ஒற்றை வார்த்தைதான் சுபாவுக்கு ஆரம்பப் புள்ளி. நாங்கள் இணைந்து எழுதிய முதல் சிறுகதை பத்திரிகையில் அச்சானதைப் பார்த்தவுடன் இருவரும் இதே சொல்லைத்தான் ஒரே நேரத்தில் தந்தியாக ஒருவர் மற்றவருக்கு அனுப்பினோம்! ஒரே நேரத்தில் இருவரும் தந்தியைப் பெற்றோம்! சுரேஷ் - பாலா என்கிற பாலகிருஷ்ணன் ஆகிய இருவர், சுபாவாக இப்படித்தான் பிறந்தோம்.
1979ல் ஆரம்பித்த சுபாவின் பயணம், 40 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது.‘என்ன... எழுத்தாளனாகி ஜோல்னா பை மாட்டிகிட்டு வேலையில்லாம திரியப் போறீங்களா..?’ இதுதான் எங்கள் அப்பாக்களின் கேள்வி. இதற்கு பயந்தே வீட்டுக்குக் கடிதப் போக்குவரத்து கூட இல்லாமல் எப்படி கதை அனுப்புவது என்று யோசித்த காலம் உண்டு. இன்று நினைத்தால் சிரிப்பு வருகிறது.எல்லா விஷயங்களிலும் இருவருக்கும் ஒரே கருத்திருந்தது. ‘வங்கி வேலைதான்’ என இருவரும் முடிவு செய்தோம்.
கதை குறித்து மாறி மாறி பேசி விமர்சனம் செய்து, எழுதி, திருத்தி முழுமையாக உருவாக்கியபின் அது சுரேஷ் எழுதியதா அல்லது பாலா எழுதியதா என்பது எங்களுக்கே மறந்துவிடும். சுபா எழுதியது என்பது மட்டுமே மனதில் பதியும்! எங்களை இணைத்தது பிரெசிடென்சி கல்லூரி. ‘தமிழில் முதல் மதிப்பெண்...’ என முதல்முறையாக பாலகிருஷ்ணனை புரொஃபசர் எழுப்பினார். ‘என்ன தமிழில் முதல் மதிப்பெண்ணா...’ என சுரேஷ் லேசாக பொறாமை அடைந்தார்.
‘இன்னொருவரும் தமிழில் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறார்...’ என அதே புரொஃபசர் சுரேஷை எழுப்பினார்.‘என்ன தமிழில் முதல் மதிப்பெண்ணா...’ என பாலகிருஷ்ணன் லேசாக பொறாமை அடைந்தார்! அந்த நொடியில் எங்கள் இருவருக்குள்ளும் தமிழ் மீது காதல் இருப்பதை பரஸ்பரம் உணர்ந்தோம். அதுவரை வகுப்பில் சும்மா பார்த்து, சிரித்த நாங்கள் இதன் பிறகு நண்பர்களானோம். இதன் பிறகு சுரேஷின் வீட்டில் பாலாவும் ஒரு மகன்; பாலா வீட்டில் சுரேஷும் ஒரு மகன் ஆனோம்.
இருவருக்கும் வேதியியல் பிடிக்காது. கெமிஸ்ட்ரி வகுப்பு நடக்கையில் இருவரும் வெளியேறி கல்லூரி தோட்டத்துக்கு சென்றுவிடுவோம். படித்த நாவல்கள், கதைகள், பார்த்த திரைப்படங்கள் என பேசுவோம்.‘தினமணி கதிர்’ பத்திரிகையில் நாவல் போட்டி ஒன்றை நடத்தினார்கள். எங்களில் ஒருவர் தனியாக நாவல் ஒன்றை எழுதி அனுப்பி, அது தேர்வாகவில்லை. பின்னர் இருவரும் அதே நாவலை படித்துப் பார்த்தபோது எங்களால் மூன்று பக்கங்களைத்தாண்ட முடியவில்லை.
அப்போதுதான் எல்லாமே நாவலாகி விடாது என்பது இருவருக்கும் புரிந்தது. அந்த நொடியில் இனி, ‘நாமே விமர்சகர்; நாமே டிக்டேட்டர்’ என முடிவு செய்தோம்.இந்த சமயத்தில் ‘கல்கி’யில் ஒரு போட்டியை அறிவித்தார்கள். அந்தப் பத்திரிகையில் வந்து கொண்டிருந்த ஒரு மர்மத் தொடரின் க்ளைமாக்ஸை கண்டுபிடிக்கச் சொல்லி அறிவித்தார்கள். யாரும் அந்த க்ளைமாக்ஸை ஊகிக்காததால், அறிவித்த பரிசுத் தொகைக்கு ஒரு சிறுகதைப் போட்டியை நடத்தினார்கள்.
இந்த நேரத்தில் நாங்கள் படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக காத்திருந்தோம். ‘கல்கி’ சிறுகதைப் போட்டியில் பங்கேற்பது என முடிவெடுத்தோம். அதுவும் எப்படி..? ‘உனக்கு போட்டியா நானும் எனக்குப் போட்டியா நீயும் இருக்க வேண்டாம்... சேர்ந்தே எழுதலாம்...’ என முடிவெடுத்து எங்கள் இருவர் பெயரிலும் இருக்கும் முதல் எழுத்தை (‘சு’ரேஷ் - ‘பா’லா) இணைத்து ‘சுபா’ என்கிற பெயரில் சிறுகதை எழுதி அனுப்பினோம். அதற்கு மூன்றாம் பரிசு கிடைத்தது. வாழ்த்துகளுடன் ரூ.100க்கு செக், வீட்டுக்கு வந்தது. அவ்வளவுதான். இருவர் வீட்டிலும் கொந்தளித்துவிட்டார்கள். ‘கதை எழுதி வீணா போகப் போறீங்க...’ என திட்டினார்கள்.
எங்களுக்கோ பரிசு கிடைத்த மகிழ்ச்சி. அதேநேரம் வீட்டுச் சூழலை மனதில் கொண்டு வேலை கிடைக்கும் வரை கதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்ப வேண்டாம் என முடிவெடுத்தோம். அதற்காக எழுதுவதை நிறுத்தவில்லை. எங்களுக்குள் பேசி, விவாதித்து, எழுதி, திருத்தம் செய்து சேமித்தோம்.1976 முதல் 1979 வரை இந்தக் கதை சேகரிப்பு தொடர்ந்தது.
இந்த வேளையில் பாலாவுக்கு கோவை பெருந்துறையில் பேங்க் ஆஃப் பரோடாவில் வேலை கிடைத்தது. அங்கு அவர் சென்றார். எங்கள் நட்பு, கடிதம் வழியாகத் தொடர்ந்தது. பக்கம் பக்கமாக கடிதம் அனுப்புவோம். வீட்டில் இருப்பவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள்; அச்சப்படவும் செய்தார்கள். ‘பக்கம் பக்கமா அப்படி என்னதான்டா எழுதிப்பீங்க...’ என்று விசாரித்தார்கள். ஏ4 சைஸ் காகிதத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் கடிதமும் கதைகளும் எழுதி மாறி மாறி அனுப்புவோம். ஒருவர் எழுதியதை மற்றவர் திருத்தி எழுதி அனுப்புவோம். இருவரும் ஏற்ற டிராஃப்ட்டை காப்பி எடுப்போம். அப்போது ஜெராக்ஸ் கிடையாது. எல்லாம் கைகளால்தான்.
எப்பொழுதாவது பயன்படும் என நம்பிக்கையோடு எங்களுக்கான ‘ஸ்டோரி பாங்க்’கை உருவாக்கினோம்.ஒருநாள் விட்டு ஒருநாள் கண்டிப்பாக ஒருவருக்கு மற்றவர் எழுதிய கடிதம் வந்துவிடும்! தவறினால், தவறியவரைத் திட்டி மறுகடிதம் அனுப்புவோம்.இருவருக்கும் அப்போது 23 வயது. காதலிகளிடம் இருந்து இப்படி கடிதம் வரவேண்டிய வயது!
இந்த நேரத்தில் சுரேஷுக்கும் சிண்டிகேட் வங்கியில் வேலை கிடைத்தது. குன்னூரில் பணி. கோவையில் பாலா. குன்னூரில் சுரேஷ். இடைப்பட்ட தூரம் குறைவு என்பது எங்களுக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அதிக நாட்கள் நீடிக்கவில்லை. குன்னூருக்கு சுரேஷ் வந்த 56வது நாளில், சென்னையில் இருந்த வங்கியில் சுரேஷுக்கு வேலை கிடைத்தது! இந்த வேலை மட்டுமல்ல... அப்போது எதற்கெல்லாம் விண்ணப்பித்திருந்தோமோ அத்தனையில் இருந்தும் எங்களுக்கு வேலை கிடைத்தது!
சரியாக இந்த சமயத்தில் திரு. சாவியை ஆசிரியராகக் கொண்டு புதிதாக ‘குங்குமம்’ வாரப் பத்திரிகை பிறந்தது!அதுவரை ‘ஆனந்த விகடன்’, ‘குமுதம்’, ‘கல்கி’ என ஒருசில வாரப் பத்திரிகைகளே இருந்தன. ‘குங்குமம்’ பத்திரிகையின் தொடக்கம் எங்களைப் போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு பெரும் உத்வேகத்தை அளித்தது.
மூன்று வருடங்களாக நாங்கள் எழுதி எங்கள் ‘ஸ்டோரி பேங்க்’கில் சேமித்து வைத்திருந்த சிறுகதைகளை எல்லாம் ஒவ்வொரு பத்திரிகைக்கும் அனுப்பத் தொடங்கினோம். இப்படி நாங்கள் அனுப்பியது 20 கதைகள். அதில் 19 திரும்பி விட்டன. ஒரு கதை மட்டும் திரும்பவில்லை. ‘மிஸ்’ஸாகி இருக்கும் என போஸ்ட் மாஸ்டரை உலுக்கினோம்!
1979 தீபாவளிக்காக சென்னைக்கு வந்த பாலா, விடுமுறை முடிந்து கோவைக்குக் கிளம்பினார். பாரிஸில் இருந்த தன் வங்கியின் கிளைக்கு நந்தனத்தில் இருந்து சுரேஷ் புறப்பட்டார். பேருந்தில் ஒருவர் ‘தினமணிகதிர்’ படித்துக் கொண்டிருந்தார். அட்டையைப் பார்த்ததும் சுரேஷுக்குள் ஸ்பார்க். ‘இது நம் கதை அல்லவா..?’ பரபரப்புடன் அவரிடமிருந்து கேட்டு வாங்கிப் பார்த்தார். மாருதி ஓவியத்துடன் ‘அவர்கள் வயதுக்கு வரவில்லை’ சிறுகதை ‘சுபா’ என்கிற பெயரில் பிரசுரமாகி இருந்தது!
உடனே பேருந்தை விட்டு இறங்கி, ‘Congratulations..!’ என பாலாவுக்கு தந்தி அடித்தார்! இதேநேரம் கோவை, பெருந்துறையில் இருந்த தன் வங்கி கிளைக்குள் நுழைந்த பாலா, அங்கிருந்த ஒரு நண்பரின் வழியே ‘தினமணிகதிரி’ல் சிறுகதை வெளியாகி இருப்பதை அறிந்தார்!உடனே கடைக்குச் சென்று பத்திரிகையை வாங்கிப் பார்த்து விட்டு கையோடு போஸ்ட் ஆபீஸ் சென்று சுரேஷுக்கு தந்தி அடித்தார். ‘Congratulations..!’
இரு தந்திகளும் க்ராஸ் ஆகி ஒரேநேரத்தில் இருவர் கைகளுக்கும் சென்றன! வேலையில்லா இளைஞர்களின் மனநிலையை அச்சிறுகதை பிரதிபலித்தது. இவர்களைப் புரிந்துகொள்ளும் வகையில் பெரியவர்கள் வயதுக்கு வரவில்லை என்பதுதான் கதைக் கரு. எங்கள் இருவரின் வாழ்க்கையில் இருந்தும் எடுக்கப்பட்ட கதை இது!எங்களில் ஒருவர் தன் வீட்டில் சின்னதாக புலம்பி இருந்தால் கூட எங்கள் நட்பு இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான். வெற்றி, தோல்வி, லாபம், நஷ்டம்... என சகலத்தையும் சமமாகப்பகிர்ந்து வருகிறோம்.
இதன் பிறகு அடுத்த சிறுகதை, ‘சாக்கடை சன்னிதானங்கள்’ மணியன் செல்வம் ஓவியத்துடன் ‘சாவி’யில் பிரசுரமானது.மெல்ல மெல்ல ‘சுபா’வுக்கு அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது. ஆனாலும் இருவர் வீட்டிலும் பயம் தெளியவில்லை. ஒருவேளை பத்திரிகை ஆபீஸிலிருந்து கடிதம் வந்தால் வீட்டில் கோபப்படுவார்களோ என்று நினைத்து பாலாவின் வங்கி முகவரியைக் கொடுத்தோம்.
திரும்பி வந்த சிறுகதைகளை எல்லாம் மீண்டும் இருவரும் திருத்தி எழுதி ‘குங்குமம்’, ‘ஆனந்த விகடன்’, ‘குமுதம்’ என அனைத்துக்கும் அனுப்பினோம். இந்த நேரத்தில் சாவி சாரிடம் இருந்து கடிதம் ஒன்று வந்தது.
‘அன்புள்ள அம்மணி, உங்கள் கதைகள் சிறப்பாக இருக்கின்றன. உங்கள் புகைப்படம் ஒன்று அனுப்பி வைக்கவும்...’ இப்போதைக்கு அடையாளம் காட்ட வேண்டாம் என இருவரும் முடிவெடுத்து ‘நன்றி’என பதில் அனுப்பினோம். உடனே அவர், ‘இந்த தேதியில் என்னை வந்து சந்திக்கவும்’ என கடிதம் எழுதினார். ஒரு பத்திரிகை ஆசிரியர் கடிதம் எழுதி சந்திக்க அழைக்கிறார் என்றால் அதைவிட எழுத்தாளனுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய வேறு விஷயம் என்ன இருக்கிறது..?
சுரேஷிடம் தெரியப்படுத்திவிட்டு பாலா சென்னைக்கு வந்தார். சாவி சார் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் இருவருமாக அவரை சந்திக்கச் சென்றோம்.ஒரு பெண்ணை எதிர்பார்த்த சாவி சார், எங்கள் இருவரையும் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்தார்! ‘நல்லா எழுதறீங்க... தொடர்ந்து எழுதுங்க...’ என்றார்.பேச்சோடு பேச்சாக அவரிடம், தொடர்கதை கேட்டோம்.
எல்லா சிறுகதை எழுத்தாளர்களுக்கும் இருக்கும் அதே ஆசைதான். அதை வெளிப்படுத்தினோம். உடனே ஒப்புக் கொண்டார்க்ரைம் தொடர். ஆனால், போலீஸ், வழக்கு, கேஸ்... என இருக்கக் கூடாது என முடிவெடுத்தோம். ஒரு டிடெக்டிவ் ஆபீஸரை நாங்களே உருவாக்கி, பெசன்ட் நகர் அட்ரஸ் முதற்கொண்டு கொடுத்துவிட்டோம். நாங்கள் டிடெக்டிவாக இருந்தால் என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்குமோ அதையெல்லாம் அந்த ஹீரோ செய்வதாக எழுதினோம்.
பிரசுரமான தொடர், பெரும் வரவேற்பைப்பெற்றது. எங்களுக்கான வாசகர் வட்டமும் உருவாகத் தொடங்கியது. கடிதங்கள் எங்களுக்கு வரத் தொடங்கின. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், இராணுவத்தில் இருந்தும் எங்களுக்கு வாசகர் கடிதம் வந்ததுதான்! இதற்குள் பாலாவும் சென்னைக்கு மாற்றலாகி வந்துவிட்டார்.பின், ‘கல்கி’யில் மாதமொரு மாவட்டம் செய்தோம். வாசகர்களை நாங்களே நேரடியாகச் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டு எழுதினோம். இதற்கு எங்களுடன் போட்டோகிராஃபராக வந்தவர்தான் இன்று புகழ்பெற்ற திரைப்பட இயக்குநராக வலம் வரும் கே.வி.ஆனந்த்! அன்று முதல் இன்று வரை நாங்கள் மூவரும் ஒன்றாகப் பயணிக்கிறோம்.
இதன் பின் ‘கல்கி’யில் ‘ஜெயமன்மதன்’ என்கிற பெயரில் சினிமா விமர்சனம் எழுதினோம். திரைக்கலைஞர்களைப் பேட்டி எடுக்கத் தொடங்கினோம். தில்லி திரைப்பட விழாவுக்குச் சென்று கட்டுரை எழுதினோம். அங்கு இயக்குநர் கே.பாக்யராஜைச்சந்தித்தோம். ‘திரைக்கதை வசனம் எழுதுவீங்களா’ என அவர் கேட்க, தலையாட்டினோம். அப்படியே அதை மறந்தும்விட்டோம். ஒருநாள் இரவு 9 மணிக்கு அசிஸ்டெண்ட் டைரக்டர் ஒருவர் எங்களைத் தேடி வந்தார். ‘நாளை காலையில் ரயில். பாக்யராஜ் சார் உங்களை வரச் சொன்னார்’ என்றார்.
நாங்கள் வங்கியில் பணிபுரிவது யாருக்கும் தெரியாது. நாங்களும் காட்டிக்கொண்டதில்லை. உதவி இயக்குநர் சென்றதும் இருவரும் கலந்தாலோசித்து அவரவர் வங்கியில் விடுமுறை தெரிவித்துவிட்டு மறுநாள் பாக்யராஜ் சாருடன் ரயிலில் புறப்பட்டோம். ஒரு வாரம் வரை அவருடனேயே ஷூட்டிங் ஸ்பாட், வசனம் என பறந்தது. மெல்ல பாக்யராஜ் சாரிடம், நாங்கள் வங்கியில் பணிபுரியும் விஷயத்தைச்சொல்லி, லீவில்தான் இப்போது வந்திருக்கிறோம் என்றோம்.
அதிர்ச்சியடைந்தவர் உடனே எங்களுக்கு ரயிலில் டிக்கெட் போட்டு சென்னைக்கு அனுப்பினார்! இதன் பிறகு எங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரது சினிமாக்களில் கதை இலாக்காவில் பங்கேற்கத் தொடங்கினோம். கதை எழுதி வந்த எங்களை, சினிமாவுக்கு கதை எழுத வைத்தவர் கே.பாக்யராஜ் சார்தான்.
அதற்கான நுணுக்கங்களை அவரே எங்களுக்கு சொல்லித் தந்தார். இன்று கே.வி.ஆனந்த், சுந்தர்.சி., மோகன்ராஜா, விஷ்ணுவர்தன்... என பிரபலமான இயக்குநர்களுடன் எல்லாம் நாங்கள் பணிபுரிகிறோம் என்றால் அதற்குக் காரணம் பாக்யராஜ் சாரின் குருகுலம்தான்.
முதல் முறையாக ‘திரைக்கதை வசனம்’ என எங்களுக்கு டைட்டில் கார்டு போட்டவர், எங்கள் நண்பர் கே.வி.ஆனந்த்.
இன்று வரை எங்கள் நட்பு அதே அன்புடனும் இறுக்கத்துடனும் தொடர, எங்களுக்கு அமைந்த குடும்பமும் ஒரு காரணம். நாங்கள் எப்படியோ அப்படியே எங்கள் மனைவிகளும் தோழிகளானார்கள். மகள்கள் மீடியா, எழுத்து ஆர்வம் எனச் செல்ல, மகன்கள் கம்ப்யூட்டர், கூகுள் என பயணப்படுகிறார்கள்.
எங்களுக்கு நாங்களே விமர்சகர், நாங்களே டிக்டேட்டர். அதனால்தான் எங்களால் எழுத்தாளர் முதல் திரைப்பட திரைக்கதை வசனகர்த்தா வரை இணைந்தே பயணிக்க முடிகிறது.என்ன களத்தில் இருக்கிறோமோ அந்தக் களத்தின் விதிமுறைகளைப் பின்பற்றினாலே போதும்.
எந்தப் பிரச்னையும் வராது. இதைத்தான் நாங்கள் வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கிறோம். குடும்பத்துக்கான விதிமுறைகளையும், வங்கி விதிமுறைகளையும், எழுத்து / சினிமா விதிமுறைகளையும் ஒன்றுடன் ஒன்று குழப்பிக் கொள்ளாமல் அந்தந்த இடத்தில் அந்தந்த விதிமுறைகளைப் பின்பற்றுகிறோம்.
20 வருட சர்வீஸ் முடிந்ததுமே இருவரும் விருப்ப ஓய்வு பெற்றுவிட்டோம். எழுத்துதான் சுபாவின் அடையாளம். இதுவரை நாங்கள் பெற்றிருக்கும் அனைத்து விஷயங்களுக்கும் எழுத்தே காரணம். சுரேஷின் அப்பா பெயர் தண்டபாணி. அம்மா, பார்வதி. மனைவி, ஜெயந்தி.
பாலகிருஷ்ணனின் அப்பா பெயர் நரசிம்மன். அம்மா, கமலம். மனைவி, யசோதா. மகள்கள் வைஜெயந்தி, கிருத்திகா. மகன்கள் கமல்குமார், சுஜய்கிருஷ்ணா.சுபாவாக 40 வருடங்கள் கடந்து சுபமாக சென்று கொண்டிருக்கிறோம்!
ஷாலினி நியூட்டன்
ஆ.வின்சென்ட் பால்
|