கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-48
உயர் கல்வியில் உயர வழி வகை செய்யும் உத்தமர்
காவிரி ஆற்றின் கரை, வண்டு பாடவும் மயில் ஆடவும், மான்கள் துள்ளவும் வெகு ரம்மியமாக இருந்தது. பல வண்ண மலர்கள் கரையோரம் பூத்துக் குலுங்கி, காவிரி அன்னைக்கு மலரஞ்சலி செய்தது போல தோற்றம் அளித்தது. வாழையும், பலாவும் குலை தள்ளி தேன் சிந்திக் கொண்டிருந்தது.
எங்கும் பச்சைப் பசேல் என்று வளமையைப் பறைசாற்றிய அந்தப் பூஞ்சோலையில் நடந்து கொண்டிருந்தார் சதாசிவ பிரம்மேந்திர யோகி. பூரணமாக அந்த இறைவனோடு இரண்டறக் கலந்த உன்னத நிலையை எய்தி, அந்த மாயக் கண்ணனை மனதாரப் போற்றியபடி நடந்து கொண்டிருந்தார் அவர்.
‘பிரம்மத்தின் கழலினைப் பற்று! ஓ மனமே! மயில் பீலியை சிரத்தில் சூடியவன், திருமகளின் நெஞ்சணையில் துயில்பவன். (அவரைப் போன்ற) யோகிகள் என்னும் சகோர பட்சிகள் அருந்தும் நிலவொளி போன்றவன். அந்த கண்ணன் கழலினைப் பற்று ஓ மனமே!’ ( ‘மானஸ சஞ்சரரே பிரம்மனி ’ என்ற அவரது கீர்த்தனையின் தமிழாக்கம்) அவரது இதழ்கள் மெல்ல ஓர் அற்புத கானம் பாடிக் கொண்டிருந்தது.
சாமா ராகத்தில் அவர் பாடிய இந்தப் பாடலுக்கு அந்த பூஞ்சோலையில் இருந்த வண்டுகள் ‘ஆமா சாமி’ போட்டன. இந்த அற்புத இன்னிசையைக் கேட்டு வண்டுகளே மயங்கும் போது மனிதனைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? அவரை பல நாட்களாகப் பின்தொடரும் அந்த சின்னஞ்சிறு சிறுவனும் மயங்கித்தான் போனான். அவன் மயக்கத்தில் இருந்து விடுபடும் முன் அவர் வேறொரு பாட்டை பாட ஆரம்பித்து விட்டார்.
‘எல்லாம் பிரம்ம மயம்! எனில் நான் எதைத்தான் பேச! எதற்கு பேச! யாரிடம் பேச! பேசும் நானும் கேட்கும் நீயும் அந்தக் கண்ணன் என்னும்போது...’ ( ‘சர்வம் பிரம்ம மயம் ரே ரே’ என்ற அவரது கீர்த்தனையின் தமிழாக்கம்).வேதமும், புராணங்களும் பல இடங்களில் மறைத்துச் சொன்னதை இப்படி போட்டு உடைத்து விட்ட அந்த அருந்தவசியை நோக்கி கை குவித்தான் அந்தச் சிறுவன்.
புராணங்களில் சுகப் பிரம்ம மகரிஷி, இவரைப் போல ஒரு மோன நிலையை அடைந்ததாக படித்திருக்கிறான், பலர் சொல்ல கேட்டும் இருக்கிறான். ஆனால், இன்றோ அவரைப் போல ஒரு மகானை நேரில் காண நேரும் என்று அவன் சற்றும் சிந்தித்துக் கூட பார்க்கவில்லை. கண்ணனின் தாமரை மலர் தாளில் ஒழுகும் ஆனந்தம் என்னும் தேனைப் பருகி, மயங்கிக் கிடக்கிறார் இந்த யோகி என்பதை, அவரைக் கண்ட மாத்திரத்திலேயே உணர்ந்தான் அந்த பாலகன்.
அவர் அருந்தும் அந்த ஞானாம்ருதத் தேனை, தானும் பருக வேண்டும் என்ற அவா அவன் உள்ளத்தில் எழுந்தது. உள்ளத்தில் உதித்த அவா, ‘இந்த யோகியைத் தொடர்ந்து போடா...’ என்று அவனை உந்தவே, அவனும் பல நாட்களாக அவரைத் தொடர்கிறான். அவரோ இவனைக் கண்டு கொள்ளவே இல்லை. பொறுத்துப் பார்த்த அவனுக்கு இன்று பொறுமை முற்றும் நீங்கி விட்டது.
சதாசிவரைப் பின்தொடர்ந்த அவன் வேகமாக நடந்து அவருக்கு எதிரே சென்று நின்று வணங்கினான். ஆசி வழங்குவார் என்று எண்ணிய அவனுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. அவரும் இந்த சிறு பாலகனை பதிலுக்கு வணங்கினார்!பாலகனுக்கு வெலவெலத்து விட்டது.
என்ன செய்வதென்று தெரியாமல் வாயடைத்து நின்றான். ‘‘கண்ணன் கண்ணனை வணங்கினான். அதற்கு பதிலாக கண்ணன் மீண்டும் கண்ணனை வணங்கினான்...’’ என்ற சதாசிவ யோகியின் குரல் கேட்டுதான் அவனுக்கு சுய நினைவே வந்தது. அந்த வார்த்தைகளில் இருந்த ஆழ்ந்த அர்த்தம், அவன் ஆழ் மனதைத் துளைத்தது. நொடியில் அவர் அடியில் விழுந்து வணங்கினான். ‘‘இந்த ஏழையும் நீங்கள் அடைந்த மெய்ஞானத்தை அடைய, தயவு செய்யுங்கள் சுவாமி! மெய்ஞானப் பெட்டகமாக மிளிரும் தங்களை விட்டால் நான் யாரை சரண் புகுவேன்? மூடன் என்று எனக்கு ஏற்பட்ட அவப் பெயர் நீங்க வேண்டும் சுவாமி. தயை செய்யுங்கள்...’’ கதறினான் அந்த பாலகன்.
அந்தக் குமுறல் அந்த யோகியின் இதயத்தைக் கவர்ந்திருக்க வேண்டும். மெல்ல ஒரு இளநகை பூத்தார். ‘‘நீ இன்று மெய்ஞானப் பெட்டகம் என்று என்னை புகழ்கிறாய். ஆனால், நானும் முதலில் உன்னைப் போல மூடனாகவே இருந்தேன். உடையைக் கூட துறந்துவிட்ட துறவி நான்.
ஒரு முறை என் கைகளை தலையணையாக வைத்து காவிரியின் கரையோரமாகப் படுத்திருந்தேன். அப்போது அங்கு வந்த பெண்கள், என்னைப் பார்த்து என்ன சொன்னார்கள் தெரியுமா? ‘இங்கே பாரடி சங்கதியை! எல்லாம் துறந்த சன்யாசிக்குக்கூட தலையணை வேண்டிக்கிடக்கு. தலையணை இல்லாத போது கையாவது தேவைப்படுது பாரேன்...’ என்று பரிகாசம் செய்தார்கள்.
எனக்கு சுருக்கென்று இருந்தது. உடன் எனது கையை தலையில் இருந்து எடுத்து விட்டேன். வெறும் தரையில் தலைக்கு உயரம் கூட இல்லாமல் படுத்தேன். சிறிது நேரத்திற்கெல்லாம் நீர் எடுக்க வந்த பெண்கள் குடத்தை நிரப்பிக் கொண்டு திரும்பிய படி இருந்தார்கள்.
அவர்கள் கண்களில் நான் தலைக்கு முட்டு கூட இல்லாமல் படுத்திருப்பதுபட்டது. இப்போது அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? ‘அட இங்க பாருடி... சன்யாசினு சொல்றாரு. ஆனா, நம்ம பேசினது அவருக்கு குத்தி இருக்கு...’ என்று என்னை நோக்கிச் சிரித்த படியே சென்றுவிட்டார்கள்.
கேட்ட எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை. என்னதான் செய்ய வேண்டும் என்று விளங்காமல் விழித்துக்கொண்டிருந்தேன்.
அப்போது வந்தார் அந்த மகான். ‘ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள்’ என்பது அவர் திருநாமம். இறை அனுபூதி பெற, இல்வாழ்க்கை தடை என்று சொல்பர்களின் பிடரைப் பிடிப்பது போல வாழ்ந்து காட்டிய உத்தமர்.
சீதா மாதாவின் தந்தை ஜனகரைப் போல இல்லறத்தில் ஞான வாழ்வு வாழ்ந்தவர். இல்லத்து கிணற்றில் கங்கையைப் பொங்க வைத்த புங்கவர். என்னை நோக்கி வந்த அந்த அண்ணல், ‘பிரம்மத்தில் இருந்து உன்னை வேறானவனாக நீ நினைப்பதால்தானே, நீ இல்லாத வேறு ஒருவர் என்று நீ நினைப்பவர், உன்னை ஏதாவது சொல்ல முடிகிறது? உண்மையில் இகழ்வது யார்? இகழப்படுவதுதான் யார்? எல்லாம் அந்த பிரம்மம்தானே! ஆகவே, உன்னை தனித்தவனாக உணரும் ஆணவத்தை, தான் என்ற சிந்தனையைக் கொல். சிவனை நினைத்து சிவனேஎன்று கிட. இந்த சீவனும் சிவனும் ஒன்றே என்பதை உணர்...’ என்று போதித்தார்.
அவர் போதித்த வழியில் நான் நிற்பதால்தான் உன்னை வணங்கினேன். எனக்கு அவர் செய்த உபதேசத்தை உனக்கு நான் செய்துவிட்டேன். இனி உன் பாடு. வருகிறேன்...’’கருணை பொங்க பகர்ந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் சதாசிவர். ஆனால், அந்த பாலகன் அவரை விடவில்லை. மீண்டும் பின் தொடர்ந்து சென்று அவர் எதிரே நின்றான்.
அவர் என்ன என்பது போல பார்த்தார். ‘‘உள்ளங்கை நெல்லிக்கனி போல பரந்த வேதங்களின் சாரத்தைச் சொல்லி விட்டீர்கள். ஆனால், யோகத்தைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே! தயை கூர்ந்து யோக ரகசியத்தையும் சொல்லி அருளுங்கள் சுவாமி...’’ கை குவித்து தண்டனிட்டான் பாலகன். அவர் மெல்ல சிரித்தார். தனது வலது கையை அவனை நோக்கி நீட்டினார். அவன் விழித்தான். ‘‘ம்! இதைப் பற்றிக் கொள்...’’ கட்டளையிட்டர்.
மறுவார்த்தை பேசாமல் அவனும் அதைப் பற்றிக் கொண்டான். ‘‘கண்களை மூடிக்கொள்...’’கீழ்ப்படிந்தான் பாலகன். சில நொடிகளில் ‘‘கண்களைத் திற...’’ சதாசிவரின் குரல் ஒலித்தது. இதற்காகவே காத்திருந்தவன் போல நொடியில் கண்களைத் திறந்தான் அந்த பாலகன்.
அவன் முன்னே முன்னைப் போல காவிரி ஓடிக் கொண்டிருந்தது. ஆனால், முதலில் கண்டது போல தனியாக ஓடவில்லை! ‘நீ ஏன் தனியாகப் போகிறாய்? இரு நானும் வருகிறேன்...’ என்று சொல்வது போல, கூடவே இன்னொரு நதியும் ஓடிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட அந்த பாலகன் நடப்பது புரியாமல் குழம்பினான். மெல்ல சுதாரித்து திரும்பினான். அங்கு அவன் கண்ட காட்சி அவனை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அதே காவிரி ஆற்றின் கரையில், சிருங்கேரி சாரதா பீட அதிபதி சச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகளுக்கு, நெரூர் கிராமத்தைச்சேர்ந்த ஒரு முதியவர் சதாசிவ பிரம்மேந்திரரின் சரிதத்தை சொல்லிக் கொண்டிருந்தார்.
மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தார் ஆச்சாரியாள். ‘‘ஆஹா! ஆதி சங்கரரின் அத்வைத தத்துவத்தை வாழ்ந்து காட்டிய மகான். அவர் வாழ்ந்த இந்த மண்ணில் இருப்பதையே பெரும் பேறாகக் கருதுகிறேன்...’’ விழிகளில் நீர் சொரிய, தன்னையும் அறியாமல் கை குவிய, உள்ளத்தில் அந்த யோகியின் மீது உதித்த நன்மதிப்பால் நா தழுதழுக்க மொழிந்தார் ஸ்வாமிகள்.
அப்போது அருகில் நின்றிருந்த ஒரு பண்டிதரை ஆச்சாரியருக்கு சுட்டிக் காட்டினார் அந்த முதியவர். ‘‘அந்த யோகியின் பின், திரியாய் திரிந்து ஞானத்தைக்கற்ற அந்த பாலகனின் வம்சத்தை சேர்ந்தவர்தான் இவர்...’’ அந்த புதிய நபர் சுவாமிகளை வணங்க, கண்ணெதிரே கேட்டுக் கொண்டிருந்த கதையின் ஆதாரம் நிற்கக் கண்டு ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றார் ஸ்வாமிகள்.
‘‘இன்னிக்கும் அந்த பையனோட வம்சம் நெரூர்ல இருக்கறதா சொல்லுவாங்க...’’ என்றபடியே அருகில் இருந்த சொம்பு நீரைக் குடித்தார் நாகராஜன். கதை கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணன் முகத்திலும், கண்ணன் முகத்திலும் ஆச்சரியம் தாண்டவமாடியது. ‘‘மை காட்... உண்மையான சன்யாசினா என்னனு இப்பதான் புரியுது தாத்தா...’’ சிலிர்த்தான் கிருஷ்ணன்.
‘‘போலிகளைப் பார்த்தே வளர்ந்திருக்கீங்க இல்லையா..? அப்படிதான் இருக்கும்...’’ புன்னகைத்தாள் நாகராஜனின் மனைவியான ஆனந்தவல்லி. இதைக் கேட்ட கண்ணனுக்கு நொடியில் பொறி தட்டியது. ‘‘ஆமா தாத்தா... அப்புறம் என்ன ஆச்சு..?’’
(கஷ்டங்கள் தீரும்)
ஜி.மகேஷ்
ஓவியம்: ஸ்யாம்
|